மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஐரோப்பா செல்பவர்களுக்கு அது அவர்கள் வாழ்நாள் முழுவதும் அறியாமல் காத்திருந்து கிடைத்த பொக்கிஷம். படிப்பாக இருக்கட்டும், வேலைவாய்ப்பாக இருக்கட்டும், குடியகழ்வாக இருக்கட்டும், எப்போதுமே மக்களின் பிரதான சாய்ஸ் ஐரோப்பா. ஒரு காலத்தில் அமெரிக்காவை நோக்கிப் படையெடுத்த இந்தியர்கள், சீனர்கள் கூட இப்போது தமது பார்வையை ஐரோப்பா பக்கம் திருப்பியுள்ளனர். உலகின் ஏனைய நாடுகளை விட ஐரோப்பாவில் அப்படி என்ன ஸ்பெஷலாக உள்ளது?
வெளியே இருந்து பார்க்கும் போது நமக்கெல்லாம் ஐரோப்பா ஒரு சொர்க்க புரி! உயர்ந்த வாழ்க்கைத் தரம், சிறந்த கல்வி முறை, முறையாகத் திட்டமிடப்பட்ட வரிக் கொள்கை, நவீன இலவச மருத்துவம், சிறந்த வணிக வாய்ப்புகள், மிகவும் வளர்ந்த உள்கட்டமைப்பு, சுவையான உணவு, பகட்டான கலாச்சாரம், வித்தியாசமான காலநிலைகள், திரும்பிய திசையெல்லாம் அழகும் ஆடம்பரமும் என நமது கண்களுக்கு ஐரோப்பா நிச்சயம் ஒரு சொர்க்கம்தான்.

மக்கள் ஒரு புதிய தொடக்கத்தைத் தேடியே ஐரோப்பாவுக்குச் செல்கிறார்கள். அப்படிச் செல்பவர்களுக்கு அந்தப் புதிய தொடக்கம் கிடைத்து விடுகிறதா? நினைத்தவை எல்லாம் அவ்வாறே நிகழ்ந்து விடுகின்றனவா? அவ்வாறு சென்றவர்கள் எல்லாம் வளமாக நலமாக வாழ்கிறார்களா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் யூரோ டூரின் இந்தக் கடைசி சில அத்தியாயங்கள் பதில் சொல்லப் போகின்றன.
எதற்காக ஐரோப்பா?
ஒரு நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழத் தேவையான முக்கிய பத்து விஷயங்களைப் பட்டியலிடச் சொன்னால் அந்தப் பத்து விஷயங்களும் நிச்சயம் ஐரோப்பாவில் இருக்கும். உலகின் ஏனைய நாடுகளை விட ஐரோப்பாவின் பல விஷயங்கள் மிகச் சிறப்பான வகையில் அமைந்துள்ளன என்பதில் சந்தேகமே இல்லை. பொருளாதாரம், ஆரோக்கியம், பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், தனி மனித சுதந்திரம், ஊழலற்ற அரசாங்கம், குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் செலவு செய்யக் கிடைக்கும் குவாலிட்டி டைம் போன்ற ஒரு நாடு மகிழ்ச்சியாக மாறுவதற்குப் பங்களிக்கும் முக்கிய காரணிகள் மொத்தமும் அங்கே உள்ளன. ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் படி உலகின் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் நாடுகளில் முதலிடத்தை கனடா பிடித்துக்கொண்டாலும் அடுத்த எட்டு இடங்களை ஐரோப்பிய நாடுகளே கைப்பற்றுகின்றன.
ஆனால் ஐரோப்பாவும் அது கொடுக்கும் அத்தனை வசதி வாய்ப்புகளும் சலுகைகளும் அனைவருக்குமானதா என்றால் நிச்சயம் இல்லை. ஐரோப்பியருக்கு ஒரு சட்டமும், ஐரோப்பாவுக்குக் குடிபெயர்ந்த ஐரோப்பியர் அல்லாத வெள்ளையருக்கு ஒரு சட்டமும், ஆசிய மற்றும் கறுப்பினத்தவருக்கு ஒரு சட்டமும் எனப் பல வேறுபாடுகள் இங்கும் உள்ளன.

வேலைவாய்ப்பு
உலகில் மிகக்குறைவான வேலையின்மை விகிதாசாரத்தைக் கொண்ட ஐரோப்பா, உலகிலேயே அதிக ஊதியம் வழங்கும் முதல் ஏழு நாடுகளைத் தன்வசம் கொண்டுள்ளது. அப்படியென்றால் இங்கே அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கின்றதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. மருத்துவம், விஞ்ஞானம், ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முறையான பட்டமும், அனுபவமும் உள்ளவர்களுக்கு நிச்சயம் நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அது தவிர இதர துறைகளில் என்றால் ஐரோப்பியருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, எஞ்சிய இடங்கள் மட்டுமே ஏனைய நாட்டவர் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதே போல ஐரோப்பாவுக்கு யார் வேண்டுமானாலும் வந்து வேலை தேட முடியாது. விசிட் விசாவில் வருபவர்கள் எக்காரணம் கொண்டும் வேலை தேட முயற்சி செய்வது கூட தடை செய்யப்பட்டுள்ளது. உயர் கல்விக்காக வரும் மாணவர்கள் வாரத்துக்கு 20 மணி நேரங்களுக்கு அதிகமாக வேலை செய்தால் உடனடியாக அவர்களது ஸ்டூடண்ட் விசா ரத்து செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவர். இது போன்ற கறாரான சட்டங்கள் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் அமுலில் உள்ளன.
ஒரு ஐரோப்பிய நிறுவனம், ஐரோப்பியர் அல்லாத ஒருவரை ஏதேனும் ஒரு வேலையில் அமர்த்த விரும்பினால், முதலில் அவர்கள் அந்தக் குறிப்பிட்ட வேலைக்குத் தகுதியான நபர் அவர்கள் நாட்டிலோ, இல்லை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலோ இல்லை என்பதை அவர்களது நாட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நிரூபிக்க வேண்டும். ஏனெனில் ஐரோப்பியருக்கு முதலிடம் கொடுப்பதில் கறாராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் இந்த விஷயத்தில் மிகக்கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன. ஒரு சில அரச வேலைகளில் ஐரோப்பியர் தவிர யாரும் நிரந்தர ஊழியராக வேலை செய்ய முடியாது போன்ற சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. உதாரணத்துக்கு உலகிலேயே அதிகமான வருமான வரியை அறவிடும் ஐரோப்பாவில், ஐரோப்பிய ஒன்றியத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டும் வரிச்சலுகையுடன் கூடிய அதி உயர் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் இது ஐரோப்பியருக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சலுகை.

அதே போல ஒரு ஐரோப்பியர் எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் சென்று எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வேலை செய்யலாம். அதுவே ஐரோப்பியர் அல்லாதோர் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் சென்று வேலை செய்ய மிகக் கடுமையான விசா கட்டுப்பாடுகளைச் சந்திக்க நேரிடும். உதாரணத்திற்கு 'Work Permit விசா'வில் வரும் ஒருவர் அந்தக் குறிப்பிட்ட கம்பெனியில் மட்டுமே வேலை செய்ய முடியும். ஜெர்மனியில் வேலை செய்யும் ஒரு இந்தியர் நெதர்லாந்தில் வேறு ஒரு நல்ல வேலை கிடைக்கலாம் என்பதற்காக எல்லாம் உடனே கிளம்பி போய்விட முடியாது. அதற்குப் பொருத்தமான அனைத்து விசா நடைமுறைகளையும் அந்தப் புதிய நிறுவனம் மேற்கொண்ட பின்னரே அவர் அந்த நாட்டில் சென்று வாழவோ, வேலை பார்க்கவோ முடியும். ஷெங்கன் விசா வைத்திருக்கும் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல அங்கத்துவ நாடுகளுக்கும் சுற்றுலாப் பயணியாக மட்டும் செல்லலாம். ஆனால் அங்கே நிரந்தரமாகத் தங்குவதற்கோ இல்லை வேலை செய்வதற்கோ முடியாது.
வேலையின்மை சலுகைகள்
சமீபத்தில் கோவிட் தொற்று உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்பின்மை நெருக்கடியை உருவாக்கியது. நமது நாட்டில் கூட பல லட்சம் மக்கள் வேலையை இழந்தனர். ஐரோப்பாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் வரை இந்த அசாதாரண நிலைமைக்குப் பலியாகின. ஆனால் ஐரோப்பாவில் சாதாரணமாக ஒரு நபர் திடீரென்று வேலையை இழக்கும் பட்சத்தில் அந்நாட்டு அரசு அவர்களுக்கு `Unemployment Benefit' எனும் உதவித் தொகையை மாதாமாதம் வழங்குகிறது.
ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வேலையின்மை நலன்கள் குறித்துத் தனிப்பட்ட சொந்த விதிகளை வைத்திருக்கின்றன. ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் குடிமகனுக்கு அவனது சொந்த நாட்டில் 24 மாதங்களுக்கும் வேறு ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் 12 மாதங்களுக்கும் இந்தச் சலுகையைப் பெற முடியும். அதுவே ஐரோப்பியக் குடியுரிமை இல்லாத ஒருவர் வேலையின்மைக்கான உதவித்தொகையை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் உழைக்கும் வருமானத்தில் அதி உயர் வருமான வரியை மாதாமாதம் அவர்களிடம் இருந்து பிடுங்கிக்கொள்கிறது அரசு. இவ்வாறு வசூலிக்கப்படும் பணத்தில் 99% நன்மைகளை அனுபவிப்பது ஐரோப்பியர் மட்டுமே என்பது கசப்பான உண்மை.

கல்வி
டென்மார்க் போன்ற பெரும்பாலான ஐரோப்பிய நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இலவசமாக உயர் கல்வியைக் கற்க முடியும். ஆனால் இதுவும் ஐரோப்பியர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சலுகை. பொதுவாக எந்த ஒரு ஐரோப்பிய நாட்டிலும் உள்ள பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு இரண்டு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உறுப்பு நாட்டுக் குடியுரிமை உள்ளவர்களுக்கு இலவசமாக அல்லது மிக மிகக் குறைந்த கட்டணத்தையும், EU/EEA அல்லாத மாணவர்களுக்கு மிக அதிகமான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. சொல்லப்போனால் ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே வெளிநாட்டு மாணவர்களை நம்பியே உயிர் வாழ்கின்றன. சமீபத்திய europa.eu அறிக்கை சுமார் ஒன்றரை மில்லியன் ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டு மாணவர்கள் ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்கின்றனர் என்கிறது.
மில்லியன் கணக்கான வெளிநாட்டு மாணவர்கள், தமது சொந்த ஊரில் காணி நிலங்களையும், பெற்றோரின் பலவருட உழைப்பையும் அடைமானம் வைத்து செலவு செய்து, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர வருகிறார்கள். அதிர்ஷ்டம் இருப்பவர்கள் மேற்கொண்டு வேலைவாய்ப்பைத் தேடிக்கொள்கின்றனர். ஆனால் நூற்றுக்கு 95%க்கும் அதிகமானவர்கள் தமது படிப்பு முடிந்ததும், மேற்கொண்டு விசா நீட்டிப்புக்குச் சாத்தியமில்லாததால் தாயகம் திரும்பி விடுகின்றனர். இதுவே ஒரு ஐரோப்பிய மாணவனுக்கு, அவனது படிப்பு முடியும் போதே கடல் போல வேலைவாய்ப்பு சந்தையைத் திறக்கின்றது ஐரோப்பா.
மருத்துவம்
என்னதான் ஐரோப்பாவில் இலவச மருத்துவம் என்று சொன்னாலும் அதிலும் அதிக சலுகைகள் ஐரோப்பியர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றன. ஒரு ஐரோப்பிய ஒன்றிய குடிமகன் வேறொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் போது, அது விடுமுறையாக இருக்கட்டும், வணிகப் பயணமாக இருக்கட்டும், அவர் எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்பட்டால், தனது சொந்த நாட்டுக்குத் திரும்பும் வரை காத்திருக்க முடியாத எந்த மருத்துவ அவசரத்திற்கும், அவர் இருக்கும் நாட்டிலேயே இலவசமாக வைத்திய சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
அதுவே ஐரோப்பாவில் நிரந்தர விசாவில் அல்லது நீண்ட கால விசாவில் இருக்கும் வெளிநாட்டவருக்கு அவர் தங்கியிருக்கும் நாட்டில் மட்டுமே இலவச மருத்துவ வசதிகளைப் பெற முடியும். அதுவே குறுகிய கால விசாவில், செல்லும் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக நோய்வாய்ப்பட நேர்ந்தால் எவ்வித இலவச மருத்துவ சேவையும் வழங்கப்படாது. காப்புறுதி இல்லாத பட்சத்தில், தனது மருத்துவச் செலவுக்குத் தலையையே அடைமானம் வைக்க வேண்டிய நிலைக்குக் கூட சில நேரங்களில் தள்ளப்படலாம். இதனாலேயே ஐரோப்பிய விசாவுக்கு விண்ணப்பிக்கும் போதே கட்டாய மருத்துவ காப்புறுதி கோரப்படுகிறது. 'Full Cover Medical Insurance' இல்லாமல் ஒரு நாள் என்ன, ஒரு மணி நேரம் கூட நீங்கள் ஐரோப்பாவுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது.

வங்கிக் கடன் வசதிகள்
ஐரோப்பாவில் வீடு வாங்குவது என்பது குதிரைக் கொம்பான விஷயம். அதையும் தாண்டி வீடு வாங்க விரும்பி வங்கிகளின் உதவியை நாடினால், வங்கிகள் கடன் கொடுக்கும் திட்டத்திலும் ஐரோப்பியர், வெளிநாட்டவர் என்று பிரிக்கப்படுகிறது. சாதாரணமாக ஒரு ஐரோப்பியர் வீடு வாங்க வெறும் 5%-ஐ இருப்பாகக் கோரும் ஐரோப்பிய வங்கிகள், ஐரோப்பியர் இல்லாதவர்களிடம் குறைந்த பட்சம் 20% முதலீட்டைக் கறாராகக் கோருகின்றன.
மொழி
சீன மற்றும் ஆங்கில மொழிகளை நீக்கிப் பார்த்தால், உலகின் மிகவும் பிரபலமான மொழிகளான பிரெஞ்சு, ரஷ்யன், ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன் மற்றும் பல மொழிகளுக்கு ஐரோப்பா தாயகமாக உள்ளது.
சுமார் 50 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பா கண்டம் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்தத் தனித்துவமான மொழிகளைக் கொண்டுள்ளது. சில நாடுகளில் இரண்டு அல்லது மூன்று தேசிய மொழிகள் கூட உள்ளன. 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் (EU), 24 மொழிகளை அதன் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் சுமார் 60 சிறுபான்மை மொழிகள் பேசப்படுகின்றன. இருப்பினும், இங்கு அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகள் பட்டியலில் முன்னணியில் இருப்பவை பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளே!
இங்கு எல்லைக்கு எல்லை மொழிகள் மாறுபடும்; பல இடங்களில் அந்தந்த பிராந்திய மொழி தெரியாவிட்டால் அதோ கதிதான். ஒரு நாளை சமாளிப்பதே மிகவும் கடினம் என்றாகிவிடும். பெரும்பாலான நாடுகளின் எல்லைகளில், மொழிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து கிட்டத்தட்ட ஒரு பொதுவான வடிவில் சேருகின்றன. உதாரணத்திற்கு டென்மார்க் மற்றும் ஜெர்மன் எல்லையில் உள்ள மக்கள் கிட்டத்தட்டப் பல வார்த்தைகளை பொதுவாகப் பயன்படுத்துவர். ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியா எல்லையில் இருக்கும் மக்கள் ஜெர்மன் கலந்த ஆஸ்திரியன் மொழியைப் பேசுகின்றனர். அதேபோல ஒரு மொழிக் கிளையின் கீழுள்ள மொழிகள் கிட்டத்தட்ட ஒரே வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்குப் பார்த்தால் ஸ்வீடிஷ் மற்றும் டேனிஷ் மொழிகள் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்.

ஐரோப்பாவில் நீண்ட காலம் வெற்றிகரமாகத் தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால் முதலில் நீங்கள் வசிக்கும் குறிப்பிட்ட நாட்டின் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஐரோப்பிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது மிகவும் சிறப்பு. மருத்துவ ஆவணங்களிலிருந்து, வங்கி, பாடசாலை என அரசு மட்டுமல்லாது தனியார் நிறுவனங்கள் கூட தமது பிரதான மொழியாக அவர்களின் சொந்த மொழியை மட்டுமே பயன்படுத்துகின்றன. சூப்பர் மார்க்கெட் மார்கெட்டிங் விளம்பரத்திலிருந்து, அனைத்து ஆவணங்களும் அந்தந்த மொழிகளிலேயே பிரசுரிக்கப்படுகின்றன. மொழி தெரியாவிட்டால் வேலை வாய்ப்பும் மிகக்கடினமாகி விடுகிறது. வெறும் ஆங்கிலத்தை மட்டுமே வைத்துப் பல இடங்களில் சமாளிக்கவே முடியாது.
விசா நடைமுறைகள்
ஐரோப்பாவுக்கு எப்படிப் போவது என்பது பலருக்கும் இருக்கும் ஒரு கேள்வி. ஐரோப்பாவுக்குள் மட்டுமல்ல, எந்த ஒரு வெளி நாட்டுக்கும் நேர்மையான முறையில் சென்றால் மட்டுமே உங்கள் வாழ்க்கை குறைந்தபட்ச நிம்மதியுடனும், பாதுகாப்புடனும் இருக்கும். அதுதான் சரியான வழியும் கூட. ஆனாலும் ஐரோப்பாவுக்குள் நுழையும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகின்றது.
சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைபவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களின் எதிர்காலம் என்ன? ஐரோப்பிய ஒன்றியம் இவர்கள் தொடர்பாகக் கொண்டிருக்கும் கொள்கைகள் என்ன? அடுத்த வார யூரோ டூரில்...