Published:Updated:

யூரோ டூர் 34: ஐரோப்பாவின் பணக்கார முகங்கள்: கிங் மேக்கர் ஜெர்மனி; முடிசூடிய பேரரசு ஐக்கிய ராஜ்ஜியம்!

ஜெர்மனி
News
ஜெர்மனி

புராதன வண்ணமயமான கட்டடக்கலை, அரண்மனைகள், கதீட்ரல்கள், நினைவுச்சின்னங்கள், பரந்து விரிந்த நிலப்பரப்புகள், மலைகள், காடுகள், சுவையான உணவு, பீர் என ஒரு சுவாரஸ்யமான கலவையைக் கொண்ட ஜெர்மனி பகட்டான வரலாற்றையும் கொண்டது

Published:Updated:

யூரோ டூர் 34: ஐரோப்பாவின் பணக்கார முகங்கள்: கிங் மேக்கர் ஜெர்மனி; முடிசூடிய பேரரசு ஐக்கிய ராஜ்ஜியம்!

புராதன வண்ணமயமான கட்டடக்கலை, அரண்மனைகள், கதீட்ரல்கள், நினைவுச்சின்னங்கள், பரந்து விரிந்த நிலப்பரப்புகள், மலைகள், காடுகள், சுவையான உணவு, பீர் என ஒரு சுவாரஸ்யமான கலவையைக் கொண்ட ஜெர்மனி பகட்டான வரலாற்றையும் கொண்டது

ஜெர்மனி
News
ஜெர்மனி

உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பாவில் வாழ்க்கைத் தரம் மிக உயர்வாக உள்ளது. இதற்குப் பிரதான காரணமாக அங்குள்ள மிகச்சிறந்த கல்வித்திட்டம், உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் மயமாக்கல், உயர் உற்பத்தித்திறன், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலான ஊழல், உறுதியான தலைவர்கள் போன்றவற்றைக் காரணமாகச் சொல்லலாம். இதை எல்லாம் தாண்டி ஐரோப்பா செல்வத்தில் மிதப்பதன் பின்னணி என்ன?

அடிப்படையிலேயே ஐரோப்பா பூமியின் சொர்க்கமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதைத் தாண்டி அவர்களிடம் காணப்படும் கொழுத்த செல்வத்துக்கு ஒரு முக்கிய காரணம் காலனி ஆட்சியில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிடம் இருந்து மொத்தமாகச் சுரண்டிக்கொண்டு வந்த செல்வங்கள். இந்தத் திருடப்பட்ட செல்வம் மேற்குலகின் பெரும்பகுதியைப் பணக்காரர்களாக மாற்ற உதவியது என்பது நிஜம். அதே வேளை ஜெர்மனி, இத்தாலி, ஸ்வீடன், டென்மார்க் போன்ற சில நாடுகள் மிகச்சிறிய அளவில் அல்லது ஒரு குறுகிய காலப்பகுதியில்தான் காலனித்துவப் பேரரசுகளை வைத்திருந்தன. ஆனால் அவற்றின் வளர்ச்சியைப் பார்த்தால் அது காலனித்துவத்துக்கு முன்னரும் பின்னருமே பெரும்பாலும் இருந்துள்ளன. சுவிட்சர்லாந்து, பின்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு காலனிகளே இருந்ததில்லை. ஆனால் அவையும் ஐரோப்பாவின் பணக்கார முகங்களாகத் தொடர்ச்சியாக வலம் வருகின்றன.

ஐரோப்பாவின் எல்லா நாடுகளும் செல்வத்தில் கொழிக்கின்றனவா என்றால் இல்லை. அப்படியாயின், ஐரோப்பாவின் பகட்டுக்குப் பின்னால் இருப்பது என்ன என்று பார்த்தால், ஜெர்மனி, UK, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து சுவிட்சர்லாந்து, சுவீடன், நார்வே, டென்மார்க், பெல்ஜியம், ஆஸ்திரியா, அயர்லாந்து, ஃபின்லேண்ட் மற்றும் லக்ஸம்பர்க் போன்ற கொழுத்த பணக்கார நாடுகள் காரணியாகின்றன. இவை ஒன்றிணைந்து சர்வதேச நாணய நிதியத்தின் GDPக்காக சுமார் $14.35 டிரில்லியன்களை வழங்குகின்றன. ஐரோப்பாவின் முதல் ஆறு பெரிய நாடுகள் மட்டுமே இணைந்து 2020-ல் $1 டிரில்லியனுக்கும் (US$) அதிகமான GDP பங்களிப்பை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியுள்ளன.

உலக வங்கியின் நிதி அறிக்கையின் படி ஜெர்மனி $3.8 டிரில்லியன்களையும், யுனைடெட் கிங்டம் $2.7 டிரில்லியன்களையும், பிரான்ஸ் - $2.6 டிரில்லியன்களையும், இத்தாலி - $1.9 டிரில்லியன்களையும், ஸ்பெயின் - $1.3 டிரில்லியன்களையும், நெதர்லாந்து - $913.8 பில்லியன்களையும், சுவிட்சர்லாந்து - $752.2 பில்லியன்களையும் தனிப்பட்ட ஜிடிபி பங்களிப்பாக வழங்கியுள்ளன.

எப்படி ஒரு கிரீடத்தின் நடுவே பதிக்கப்படும் ரத்தினக் கற்கள் அந்தக் கிரீடத்தையே பிரகாசமாக, அழகாக, விலை மதிப்பற்றதாகச் செய்து விடுகின்றதோ அவ்வாறே ஐரோப்பா எனும் கிரீடத்தை ஜொலிக்கச் செய்யும் ரத்தினங்களான ஐரோப்பாவின் எலைட் முகங்கள் இந்த வார யூரோ டூரில்...

ஜெர்மனி:

ஐரோப்பாவின் அதிகார முகம் ஜெர்மனி! உலகின் மிகத் தொன்மையான கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ள ஜெர்மனி, ஐரோப்பாவின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகவும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும் ஐரோப்பாவின் முடி சூடா பிரம்மாவாக, சிம்மாசனம் ஏறி ஆட்சி செய்கிறது.

புராதன வண்ணமயமான கட்டடக்கலை, அரண்மனைகள், கதீட்ரல்கள், நினைவுச்சின்னங்கள், பரந்து விரிந்த நிலப்பரப்புகள், மலைகள், காடுகள், சுவையான உணவு, பீர் என ஒரு சுவாரஸ்யமான கலவையைக் கொண்ட ஜெர்மனி பகட்டான வரலாற்றையும் கொண்டது. ‘The land of poets and thinkers’ எனப் புகழப்படும் ஜெர்மனி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஹ்யூகோ பாஸ், மைக்கேல் ஷூமேக்கர், பீத்தோவன், கார்ல் மார்க்ஸ், சார்லஸ் புகோவ்ஸ்கி, கார்ல் எஃப். காஸ், ஏஞ்சலா மெர்க்கல் என உலகுக்குக் கொடுத்த பிரபலங்கள் ஏராளம்.

டென்மார்க், போலாந்து, செக் குடியரசு, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து எனும் ஒன்பது நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஜெர்மனிக்கு, இந்த நாடுகளிலிருந்து தரை வழியாகவோ, ஃபெர்ரி மூலமாகவோ செல்லலாம். மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், பொறியியல், இயற்கை அறிவியல், கட்டடக்கலை போன்ற பட்டப்படிப்புகளுக்குப் பிரபலமான ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க ஐரோப்பா மட்டுமல்ல, உலக நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வருடந்தோறும் படையெடுக்கின்றனர்.

ஜெர்மனி
ஜெர்மனி

உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான ஜெர்மனி 2020-இல் மட்டுமே 2.9 மில்லியன் கார்களை விற்றது. ஃபோக்ஸ்வாகன், மெர்சிடிஸ். ஆடி, பிஎம்டபிள்யூ என உலகச் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் பிராண்டுகளின் பிறப்பிடமான ஜெர்மனியில் ஆட்டோமொபைல் மற்றும் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் தொடர்பான நிபுணர்களுக்கு மிகச்சிறந்த வேலை வாய்ப்பு உள்ளது. உலகில் அதிகளவான டெக்னாலஜி கண்டுபிடிப்புகள் வெளிவரும் ஒரு நாடு ஜெர்மனி. ஜெர்மானியர்கள் எப்படி இவ்வளவு அதி புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்று பார்த்தால் உலகிலேயே அதிகளவான புத்தகங்களை வெளியிடும் நாடாக ஜெர்மனி முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 94,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஜெர்மனி முழுதும் பரவலாகக் காணப்படும் பொது நூலகங்கள் அவர்களின் வாசிப்பு ஆர்வத்துக்குச் சான்று கூறுகிறது. உலகம் முழுவதும் மூன்றாவது அதிகம் கற்பிக்கப்படும் மொழி என்ற பெருமையையும் ஜெர்மன் பெறுகிறது. நீங்கள் ஜெர்மனியில் வசிக்க மட்டுமல்ல ஜெர்மனியைச் சுற்றிப் பார்க்கக் கூட, சிறிதளவாவது ஜெர்மன் தெரிந்திருக்க வேண்டும் எனும் அளவுக்கு மொழி மேல் அதி தீவிர பற்றுக் கொண்டவர்கள் ஜெர்மானியர்கள்.

சூழலியலிலும் அதிக கவனம் செலுத்தும் ஜெர்மனி காலநிலை மற்றும் எரிசக்தி கொள்கைகளில் உலகிலேயே முன்னணியில் உள்ள நாடு என்னும் பெருமையையும் பெறுகிறது. 2022-ம் ஆண்டிற்குள் அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடிவிட முடிவெடுத்த முதல் நாடும் ஜெர்மனியே!

என்னதான் கொரோனா தொற்று கடந்த இரண்டு வருடங்களில் உலகை முடக்கி இருந்தாலும், சர்வதேச சுற்றுலாப்பயணிகளைக் கவரும் முக்கிய இடத்தில், ஐரோப்பாவில் முதலிடத்தில் ஜெர்மனி நிற்கின்றது. ஹாம்பர்கின் மினியேச்சர் வண்டர்லேண்ட், யூரோபா-பார்க், பெர்லின் சுவர், பேடன்-வூர்ட்டம்பேர்க்கின் பிளாக் ஃபாரஸ்ட் தேசிய பூங்கா, பெர்லின் பிராண்டன்பர்க் கேட், கொலோன் கதீட்ரல் (கோல்னர் டோம்) எனப் பிரபலமான ஜெர்மனியின் அட்ராக்ஷன் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

அரசியல் ஸ்திரத்தன்மைக்காக உலகில் 9-வது இடத்திலும், பொருளாதார கட்டமைப்பில் உலகின் நான்காவது பெரியதும், ஐரோப்பாவின் மிகப் பெரியதுமான ஜெர்மனியின் பொருளாதாரம் உயர்தர உற்பத்தி பொருள்களின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டது. 3.73 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து உலகில் மூன்றாவது பலம் வாய்ந்த இடத்தில் உள்ளது. 2021-ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் ஜெர்மனியின் பங்களிப்புகள் 28 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக இருந்தன.

2008-ல் ஏஞ்சலா மேர்க்கெல் (Angela Merkel)
2008-ல் ஏஞ்சலா மேர்க்கெல் (Angela Merkel)

ஓட்டோ வான் பிஸ்மார்க், பால் வான் ஹிண்டன்பர்க், உர்சுலா கெர்ட்ரூட் வான் டெர் லேயன், ஏஞ்சலா மேர்க்கெல் என உறுதியான தலைவர்களினால் ஆளப்பட்ட ஜெர்மனி இன்று வரை ஐரோப்பிய அரசியலில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் மிகவும் வெற்றிகரமாக COVID-19ஐ எதிர்கொண்ட நாடுகளில் இதுவும் ஒன்றானது. ஐரோப்பாவின் innovation leaders எனக் கருதப்படும் ஜெர்மனி, நானோ தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, பொறியியல், அறிவியல் மற்றும் வாகன கட்டுமானம் போன்ற தொழில்களில் தன்னைப் பலப்படுத்தி அசைக்கமுடியா ஜாம்பவானாக வலம் வருகிறது.

இரண்டு உலகப்போர்களில் தூள் தூளாகச் சிதைவடைந்தாலும், பீனிக்ஸ் பறவை போல தன் சாம்பலிலிருந்தே மீண்டு எழுந்து, இன்று ஐரோப்பாவை ஒற்றைக் கையால் தூக்கி நிறுத்தும் பிரமாண்ட அசுரனாக, வளர்ந்து நிற்கும் ஜெர்மனி, ஐரோப்பாவின் கிங் மேக்கர்!

ஐக்கிய ராஜ்ஜியம் (UK):

சமீபத்தில் பிரெக்சிட் மூலம் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியே சென்றாலும், £6.55 பில்லியனோடு ஜெர்மனிக்கு அடுத்தபடியாக பொருளாதார ரீதியில் ஐரோப்பாவின் செழிப்புக்குப் பங்களிப்பு வழங்கும் ஐரோப்பாவின் அசைக்க முடியாத அரசியல் ஜாம்பவான் யுனைடெட் கிங்டம். வெளி விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இங்கிலாந்து ஐரோப்பாவின் ஒரு முக்கிய சொத்தாகும். ஐரோப்பாவின் முக்கிய இரண்டு ராணுவ சக்திகளில் ஒன்றான UK, கணிசமான தொலைதூர ராஜதந்திர நெட்வொர்க்கை கொண்டுள்ளதால் இங்கிலாந்து இல்லாமல், ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கைகள் நிச்சயம் செல்வாக்கு குன்றியதாகவே இருக்கும்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஐக்கிய ராஜ்ஜியம் வடமேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு தீவாகும். 'கிரேட் பிரிட்டன்' மற்றும் 'யுனைடெட் கிங்டம்' இரண்டுமே உண்மையில் வெவ்வேறு நிலப்பரப்புகளைக் குறிக்கின்றன. யுனைடெட் கிங்டம் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தை ஒருங்கிணைக்கிறது, அதே நேரத்தில் கிரேட் பிரிட்டன் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் தீவை மட்டுமே குறிக்கிறது. உண்மையில், the United Kingdom of Great Britain and Northern Ireland என்று அழைப்பதே சரியானதாகும்.

நிதி மற்றும் கலாசாரத்தின் உலகளாவிய செல்வாக்கு மையமாக உள்ள தலைநகர் லண்டனில் 8.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். உலகிலேயே அதிக பில்லியனர்களைக் கொண்ட நகரமான லண்டனில் 80க்கும் மேற்பட்ட உலக கோடீஸ்வரர்கள் வாழ்கின்றனர். உலக வங்கியின் அறிக்கையின் படி 2020-ல் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.708 trillion USD-யாக மதிப்பிடப்பட்டுள்ளது. Cnbc.com-இன் அறிக்கையின் படி 2021-இல் பிரிட்டிஷ் பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடைந்து உள்ளது. 2020-ன் கோவிட் தொற்றுநோய் மற்றும் Brexit சரிவுகளிலிருந்து 9.4% மீண்டு வந்ததுள்ளது என்கிறது இந்த அறிக்கை. ஆக மொத்தத்தில் UK சமீப காலங்களில் முகம் கொடுத்த பொருளாதார சரிவுகளிலிருந்து மீண்டு வருகிறது.

BREXIT
BREXIT

இங்கிலாந்து என்றாலே அரசாட்சியும் அரச குடும்பமும்தான் முதலில் ஞாபகம் வரும். பல நூற்றாண்டு காலமாக உலகத்தையே காலனி ஆதிக்கத்தின் கீழ் கட்டி ஆண்ட இங்கிலாந்தின் அரச குடும்பம் தற்போது மெல்ல மெல்ல அதிகாரம் குன்றி வருகிறது. தற்போதைய அரசி Queen Elizabeth II இந்த வருடம் ஏப்ரல் 21-ல் தனது 96வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். 54 காமன்வெல்த் நாடுகளின் தலைவராக இருந்த இவர், பிரித்தானிய மற்றும் காமன்வெல்த் வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பட்டத்து ராணி என்ற பெருமையையும் பெறுகிறார். இவர் தனக்கு அடுத்த வாரிசாக தன் மகன் சார்லஸ்ஸைத் தேர்ந்தெடுக்காமல், பேரன் வில்லியமை அறிவித்து உள்ளார். இருந்தாலும் இங்கிலாந்தின் ஒரு ஆடம்பர அடையாளமாக மட்டுமே தற்போது உள்ள அரச குடும்பம், Queen Elizabeth II-இன் பின் மொத்தமாக ஆட்டங்காணுமா எனக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆயினும் வின்ஸ்டன் சர்ச்சில், மார்கரெட் தாட்சர், டோனி பிளேர் போன்ற ராஜதந்திரத்தில் பிஹெச்டி பெற்ற தலைவர்களால் வழிநடத்தப்படும் ஐக்கிய ராஜ்ஜியம் உலக அரங்கில் தனது இருப்பை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கிறது.

உலகின் 3வது பெரிய நுகர்வோர் பொருள்கள் நிறுவனமான யுனிலீவர், அலுமினியம், நிலக்கரி, தாமிரம், வைரம், இரும்புத் தாது மற்றும் யுரேனியம் உற்பத்தியில் உலகின் நம்பர் ஒண்ணாக இருக்கும் ரியோ டின்டோ, உலகின் 6வது பெரிய மருந்து நிறுவனம் கிளாக்சோ ஸ்மித்க்லைன், உலகின் மிகப்பெரிய பிளாட்டினம் உற்பத்தியாளர்களான Anglo American, டைஃபூன் போர் விமானம், டொர்னாடோ போர்-குண்டு விமானம், சேலஞ்சர் 2 டேங்க், Queen Elizabeth class விமானம் தாங்கி உட்பட அனைத்து விதமான ராணுவ வாகனங்களையும் தயாரிக்கும் BAE Systems – Aerospace and Defence நிறுவனம் என உலகைக் கைக்குள் வைத்து ஆட்டுவிக்கும் பல முக்கிய நிறுவனங்களின் தாயகமான ஐக்கிய ராஜ்ஜியம், ஆஸ்டன் மார்ட்டின், பென்ட்லி, ஜாகுவார், லேண்ட் ரோவர், லோட்டஸ், மெக்லாரன், மினி கூப்பர், ரோல்ஸ் ராய்ஸ் எனப் பல முக்கியமான கார்களின் உற்பத்தியாளரும் கூட.

ஸ்டீபன் ஹாக்கிங், வில்லியம் ஷேக்ஸ்பியர், சர் ஐசக் நியூட்டன், ஆலன் டூரிங், சார்லஸ் டார்வின் என இங்கிலாந்து உலகுக்கு வழங்கிய மனித பொக்கிஷங்கள் ஏராளம். ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இருக்கும் இங்கிலாந்து, பட்டப்படிப்புகளுக்குச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகில் இரண்டாவது மிகவும் பிரபலமான இடமாக உள்ளது. பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களின் உயர் தரமாகக் கல்விக் கொள்கை உலகளாவிய ரீதியில் பல மாணவர்களை ஒவ்வொரு வருடமும் ஈர்த்துக் கொள்கிறது. ஐரோப்பிய மாணவர்களுக்கு மிக்கக்குறைந்த கட்டணமும், Non-EU மாணவர்களுக்கு மிக அதிக கட்டணமும் வசூலிக்கும் இந்தப் பல்கலைக்கழகங்கள் கூட பிரிட்டனின் செல்வத்துக்கு ஒரு விதத்தில் பங்களிப்பு செலுத்துகின்றன.

என்னதான் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், சமீபத்தைய Brexit மற்றும் COVID-19 தொற்று, இங்கிலாந்து பொருளாதாரத்தைச் சிறிது ஆட்டம் காணச் செய்துள்ளது. 2020-ல் முக்கிய பிரச்னையாக இருந்த கோவிட்-19-ஐ பின் தள்ளியது Brexit கலவரம். தற்போது Brexit பிரச்னை படிப்படியாகப் பிரிட்டிஷ் மக்களின் பார்வையிலிருந்து மறைய, பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைப் பற்றி மக்கள் அதிகம் அலசத் தொடங்கினார். ஏனெனில் பாதுகாப்பும், அகதிகள் வருகையையும் மீண்டும் இங்கிலாந்தில் பூதாகரமாகத் தலைதூக்கி உள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி ஒரு மிகப்பெரிய பிரச்னை இங்கிலாந்தை விடாது கருப்பாகத் துரத்துகிறது. அதுதான் இங்கிலாந்தின் அரசு சுகாதாரச் சேவையான NHS எதிர்கொள்ளும் சவால்கள்.

ப்ரெக்ஸிட்
ப்ரெக்ஸிட்

சமாளிக்க முடியாத பணிச்சுமைகள், சாத்தியம் இல்லாத டார்கெட் எதிர்பார்ப்புக்கள், போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தால் அதிக நேரப் பணி நேரம் என NHS பணியாளர்கள் முன்னெப்போதையும் விட அதிக அழுத்தத்தில் உள்ளனர். அகதிகளுக்கும், கிழக்கு ஐரோப்பியக் குடியேற்றவாசிகளுக்கும் கொடுக்கும் உதவிப்பணத்தை அரசு NHS சுகாதார சேவைக்குப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் மக்களின் பிரச்னையை முதலில் தீர்க்க வேண்டும் என்பது பொதுவான மக்களின் புலம்பலாக உள்ளது. ஒவ்வொரு தடவை ஆட்சிக்கு வரும் அரசும், குடியேற்றவாசிகளைக் குறைத்து, பிரிட்டிஷ் மக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்போம் என்ற வாக்குறுதியையே பிரதானமாகக் கொண்டு ஆட்சிக்கு வருகின்றன.

எது அப்படியோ, யுனைடெட் கிங்டம் என்னும் சமராஜ்ஜியம் அவ்வளவு எளிதாக உடைத்து விடக்கூடியதோ, உடைந்து விடக் கூடியதோ அல்ல. பரம்பரை பரம்பரையாக உலகத்தைக் கட்டி ஆண்ட பரம்பரை. அத்தனை எளிதாக ஆட்டம் கண்டு விடாது. விழுந்தாலும் குதிரை போல உடனே எழுந்து ஓடக்கூடிய வலுவும், தெளிவும், பலமும், வளமும் நிறைந்த ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பா எனும் அழகிய கண்டத்தைப் பிரமாண்டமாக்கும் செல்வச் சீமாட்டி. ஐரோப்பாவின் முடிசூடிய பேரரசு ஐக்கிய ராஜ்ஜியம்!

இவை இரண்டு மட்டுமே ஐரோப்பாவின் அத்தனை செல்வத்துக்கும் காரணமா என்றால் இல்லை. இன்னும் பல கொழுத்த பணக்கார நாடுகள் வரிசையில் உள்ளன. அவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களோடு அடுத்த வார அத்தியாயம்...

யூரோ டூர் போலாமா?!