Published:Updated:

யூரோ டூர் - 4 | ஐரோப்பிய நாடுகள் ஏன் மோதிக்கொண்டன, முதலாம் உலகப்போர் உருவாகக் காரணம் என்ன?

முதலாம் உலகப்போர்
News
முதலாம் உலகப்போர்

ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆஸ்திரியா - ஹங்கேரி மற்றும் ஜெர்மனிக்கு எதிராக ஒன்று சேர்ந்தன. எனவே இந்தப் போர் முக்கியமாக triple entente & triple Alliance எனப்பட்ட நேச நாடுகள், மைய நாடுகள் எனும் இரண்டு கூட்டணிகளுக்கு இடையேயான போராக மாறியது.

Published:Updated:

யூரோ டூர் - 4 | ஐரோப்பிய நாடுகள் ஏன் மோதிக்கொண்டன, முதலாம் உலகப்போர் உருவாகக் காரணம் என்ன?

ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆஸ்திரியா - ஹங்கேரி மற்றும் ஜெர்மனிக்கு எதிராக ஒன்று சேர்ந்தன. எனவே இந்தப் போர் முக்கியமாக triple entente & triple Alliance எனப்பட்ட நேச நாடுகள், மைய நாடுகள் எனும் இரண்டு கூட்டணிகளுக்கு இடையேயான போராக மாறியது.

முதலாம் உலகப்போர்
News
முதலாம் உலகப்போர்
உலகில் இன்றுவரை பேசப்படும் பத்து தொன்மையான மொழிகளின் பட்டியலை எடுத்தால் அதில் தமிழ், எகிப்திய மொழி, லிதுவேனியன், பார்சி, அரபு என பல மொழிகள் வரும். ஆனால் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகள் இருக்காது. கி.பி 500-ல் தான் இங்கிலாந்திலேயே ஆங்கிலம் முதன்முதலாக புழக்கத்துக்கு வந்திருக்கிறது. ஸ்பானிஷ் நகரமான டோலிடோவில் உள்ள காஸ்டில் ராஜ்ஜியத்தில் 13-ம் நூற்றாண்டில்தான் நவீன ஸ்பானிஷ் நிலையான எழுத்து வடிவத்தில் நிறுவப்பட்டது என்கிறார்கள். ஆனால், இன்று உலகெங்கும் அதிகம் பேசப்படும் மொழிகள் இவை.
நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு நல்ல வாழ்க்கையை வாழ அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய மொழிகளாக இவை மாறி உள்ளன அல்லது மாற்றப்பட்டுவிட்டன. குறிப்பாக ஆங்கிலம். இது ஏன் என்பதற்கான பதில் 'காலனித்துவம்!'

யூரோ டூர் 3-ம் பகுதியில் தொழில்துறைப் புரட்சியினால் உருவான ஐரோப்பிய ஏகாதிபத்தியம் பற்றி பேசத் தொடங்கினோம். ஏகாதிபத்தியம் காலனித்துவத்துக்கு வித்திட்டது. முதலில் காலனித்துவம் என்றால் என்ன, அது மனித வரலாற்றை, குறிப்பாக இன்றைய நவீன ஐரோப்பாவின் வரலாற்றை எவ்வளவு ஆழமாக பாதித்துள்ளது என்பதை ஒரு சிறு உதாரணம் மூலம் புரிந்துகொள்ளலாம்.

தொழில்துறை
தொழில்துறை

கல்லூரியில் படிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் வகுப்பில் எப்போதும் மேல்தட்டு எலைட் மாணவர்கள் ஒரு குழுவாக, கேங்காக இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் அதுதான் கவனிக்கப்படும். அவர்கள் வைத்ததுதான் சட்டம். அது ஒரு கெத்து கேங்காக ஃபார்ம் ஆகும். அவர்கள்தான் அங்கு முக்கியமானவர்களாகக் கருதப்படுவார்கள். ஏனையவர்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள். மற்றவர்கள் அவர்களின் நிழலின் கீழ் ஒதுங்கிக் கொள்வார்கள். அதுதான் பாதுகாப்பு, அதைவிட்டால் வேறு வழி இல்லை என நினைப்பார்கள். இந்த எலைட் கேங்கின் ஹோம் வொர்க் உட்பட எல்லா வேலைகளையும் மற்றவர்கள் செய்து கொடுப்பார்கள். அந்த வகுப்பில் வேறு யாராவது ஏதாவது செய்தால் அந்த எலைட் கேங்குக்குப் பிடித்தால் மட்டுமே அது எல்லோருக்கும் பிடித்ததாக ஏற்றுக் கொள்ளப்படும்.

காலனித்துவம் என்பது ஓர் உலகளாவிய கல்லூரி போன்றது. இங்கே, ஐரோப்பாதான் அந்த எலைட் கேங்க். அதன் கீழ் அடிபணிந்திருந்தவர்கள்தான் ‘வளரும் நாடுகள்’ என்று கொஞ்சம் நாகரீகமாகச் சொல்லப்படும் மூன்றாம் உலக நாடுகள். மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் குழு அல்லது நாடு ஏகாதிபத்திய சக்தியாகிறது. அதற்கு அடிபணிந்த நாடு ஒரு காலனியாக மாறுகிறது. காலனித்துவ அரசுகள் தங்கள் சொந்த நலனுக்காக அந்தக் காலனிகளை சுரண்டவும், அவர்களின் கலாசாரம், மதம், மொழி மற்றும் கல்வியைத் திணிக்கவும், அவர்களின் வளங்களை பயன்படுத்தவும் ஆரம்பிக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் தொழிற்புரட்சியின் பின் எழுந்த ஐரோப்பிய ஏகாதிபத்தியம் காலனித்துவத்தில் முடிந்தது. ஐரோப்பா உலகை சுரண்ட ஆரம்பித்தது.

BMW கார் உற்பத்தி தொழிற்சாலை
BMW கார் உற்பத்தி தொழிற்சாலை
பாலசுப்ரமணியம்

இன்று Mercedes-Benz, BMW, Nestle, DHL, L'Oréal, RedBull, Dove என இந்தியா மட்டுமல்ல உலகமே மோகம் கொண்டுள்ள பல முக்கியமான brand-கள் எல்லாமே ஐரோப்பாவுக்குச் சொந்தமானது. நாம் சராசரியாக ஒரு நாளைக்கு பயன்படுத்தும் நுகர்வுப் பொருள்களின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால் அதில் பாதிக்கும் மேல் ஐரோப்பிய brand-களாக இருக்கும். இந்த நிலைக்கு ஐரோப்பா வருவதற்குக் கடந்து வந்த பாதை வழியே பின்னோக்கிச் சென்றால் அந்தப் புள்ளிகள் ஐரோப்பிய மறுமலர்ச்சியோடும், தொழிற்புரட்சியோடும், காலனித்துவத்தோடும் இணையும். தொழில் புரட்சி வெடித்த போது முக்கியமாக மூன்று ஐரோப்பிய நாடுகள் பலம் பெற்றன. பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளும் ஆட்டத்தில் இருந்தாலும் இங்கு நாம் குறிப்பிட்டு ஐரோப்பா என்று பார்ப்பதால் அவற்றை இப்போதைக்கு கொஞ்சம் தள்ளி வைத்து விடுவோம்.

தொழில்துறை புரட்சியின்போது அதிகரித்த உற்பத்திக்கு ஏற்ற மூலப்பொருள்கள் தேவைப்பட்டன. அந்த மூலப்பொருள்களையும் மனித வளங்களையும் பெற்றுக்கொள்ள பலம் பொருந்திய நாடுகள் ஏனைய நாடுகளைக் கைப்பற்றி குடியேறத் தொடங்கின. இதனால் நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரப் போட்டி ஏற்பட்டது. யார் பலம் கூடியவர்கள் என்று அறிய தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்ள ஆரம்பித்தன.

இன்றைய ஐரோப்பாவின் வனப்புக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்ட 19-ம் நூற்றாண்டு அதன் வரலாற்றில் பொற்காலமாகக் குறிக்கப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக உலகெங்கும் வியாபித்த ஐரோப்பிய காலனித்துவம், ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு வித்திட்டது. ஐரோப்பிய ஏகாதிபத்தியம் உலக அரங்கில் ஐரோப்பாவை ஓர் அசைக்க முடியாத வல்லரசாக உருமாற்றியது. உறுதியான ராணுவ மற்றும் பொருளாதார வலிமை கொண்ட நாடுகள் சூப்பர்பவர்களாக விஸ்வரூபம் எடுத்தன. கிரேட் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகள் இந்த வரிசையில் முன்னணியில் இருந்தன. தமக்கு கீழே பல காலனிகளை வைத்திருப்பது அதிக செல்வத்தையும், அதிகார பலத்தையும், கௌரவத்தையும் அவர்களுக்குக் கொடுத்தது. இதனால் நாடுகள் தமக்குள் போட்டியிட்டுக்கொள்ளத் தொடங்கின. அதிகாரங்களுக்கு இடையில் விழுந்த விரிசல் உலகையே பிளவுபடுத்தும் ஒரு மிகப்பெரும் யுத்தத்தில் போய் முடித்தது.

தொழில்துறை
தொழில்துறை

முதலாம் உலகப் போருக்கு முன்புவரை உலகின் மிகப்பெரிய, பணக்கார மற்றும் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்தியாக இங்கிலாந்து இருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகின் நான்கில் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருந்தது. ‘சூரியன் பிரிட்டனில் மறையாது’ (The Sun never sets on Britain) என்பது 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரபலமான கோஷமாக இருந்தது. 1800-களின் பிற்பகுதியில் உலகின் முக்கால்வாசி நாடுகளை வளைத்துப் பிடித்திருந்தது பிரிட்டன். மறுபக்கம் பிரான்ஸ், ஸ்பானிஷ், போர்ச்சுகல், இத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகளும் தமக்கு கீழான காலனிகளை வைத்திருந்தன.

இந்தக் காலனித்துவத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் பலம்பெற்றன. தமது சாம்ராஜ்ஜியத்தை எதிரி நாடு பறித்துக் கொள்ளக் கூடாது என்பதில் இவை மிகவும் கவனமாக இருந்தன. அதனால் மற்ற நாடுகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நம் நாட்டு அரசியல்வாதிகள் போல தமக்கு சாதகமானவர்களுடன் ஒப்பந்தங்கள் இட்டு கூட்டணி வைத்துக் கொண்டன.

நேச நாடுகளும் மைய நாடுகளும் (Triple entente & Triple Alliance)

ஆங்கிலத்தில் 'Cobelligerent' என்று ஒரு வார்த்தை உண்டு. அதாவது ஒரு தனி நபர் அல்லது ஒரு நாடு தமது பொது எதிரிக்கு எதிராக மற்றொரு சக்தியுடன் இணைந்து போரிடுவதை இது குறிக்கும். உதாரணமாக இந்தியாவுக்கு பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் தகராறு. என்னதான் சீனாவுக்கு பாகிஸ்தானைப் பிடிக்காது என்றாலும் இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுக்குக் கடன் உதவிகளை வழங்கி நல்லுறவை பேணி வருகிறது. அதேபோல சீனா அதன் எதிரி நாடான அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளுடன் கூட்டு சேர்ந்து உறவைப் பலப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளது. இதேபோல தற்காலத்தில் இருக்கும் இன்னொரு மிகப்பெரிய கூட்டணிதான் அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் வடகொரியாவுடன் ரஷ்யா, சீனா, ஈரான், சிரியா மற்றும் கியூபா போன்ற நாடுகளின் ராஜதந்திர கூட்டணி.

தற்போதைய ஐரோப்பிய யூனியன் நாடுகள்
தற்போதைய ஐரோப்பிய யூனியன் நாடுகள்
இதே டெக்னிக்கைதான் 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய தேசங்களும் பின்பற்றின. ஆனால் என்னவொன்று ஐரோப்பிய நாடுகள் அவர்களுக்குள்ளேயே நண்பனையும் எதிரியையும் வைத்திருந்தார்கள். ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிக்கொண்ட இந்த cobelligerent கூட்டணிதான் உலகையே அதிர வைத்த முதல் உலகப்போருக்கு அடிக்கல் நாட்டியது.

ஜெர்மனிக்கும், ஆஸ்திரியா - ஹங்கேரிக்கும் ரஷ்யா பொது எதிரியாக இருந்தது. அதனால் அந்த இரு நாடுகளும் ராஜதந்திர ரீதியாக ஒன்றிணைந்தன. இதனால் 1879-ல் உருவான ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா - ஹங்கேரிக்கு இடையிலான Dual Alliance எனப்படும் இரட்டை கூட்டணியோடு 1882-ல் இத்தாலியும் இணைந்தது. ஏனெனில் வட ஆப்பிரிக்க நாடுகளில், முக்கியமாக துனிசியாவில் காலனித்துவ ஆட்சிக்காக நீண்ட காலம் பிரான்சுடன் போராடிய இத்தாலி இறுதியில் பிரான்சிடம் தோற்றதால் ராணுவ ஆதரவைத் தேடி ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரியோடு இணைந்தபோது அது triple Alliance எனப்படும் ஒரு பலம் பொருந்திய கூட்டணியாக உருவெடுத்தது. ஏற்கெனவே ராணுவ ரீதியாக படை பலத்தோடு இருந்த ஜெர்மனியோடு சேர்ந்த இந்தக் கூட்டணி ஏனைய நாடுகளுக்கு கிலியூட்டியது.

டிரிப்பிள் அலையன்ஸ் என்பது ஜெர்மனி, ஆஸ்திரியா - ஹங்கேரி மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு ரகசிய ஒப்பந்தம். மே 20, 1882-ல் உருவாக்கப்பட்ட இந்த உடன்படிக்கையின் முக்கியஸ்தராக ஜெர்மனியை ஒன்றிணைத்து, ஜெர்மன் பேரரசை நிறுவியவரும், ஜெர்மனியின் முதல் அதிபருமான ஓட்டோ வான் பிஸ்மார்க் (Otto Von Bismarck) கருதப்படுகிறார். காரணமில்லாமல் பிரான்ஸ் இத்தாலியை தாக்கினால் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா - ஹங்கேரி, இத்தாலிக்கு உதவி செய்யும் என்றும், பிரான்ஸ் ஜெர்மனியை தாக்கினால் இத்தாலி ஜெர்மனிக்கு உதவி செய்யும் என்றும், பிரான்ஸ் அல்லது ரஷ்யாவால் இவற்றில் ஒன்று தாக்கப்பட்டால் மூன்று நாடுகளும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டன.

பிரான்சை ராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்த 1873-ல் ஜெர்மன் Chancellor ஓட்டோ வான் பிஸ்மார்க் போட்ட திட்டமான மூன்று பேரரசரசுகளின் லீக்கில் (The League of the Three Emperors or Union of the Three Emperors) ஆஸ்திரியா - ஹங்கேரி மற்றும் ஜெர்மனியுடன் ரஷ்யாவும் ஆரம்பத்தில் உறுப்பு நாடாக இருந்தது. எனினும் ஆஸ்திரியா - ஹங்கேரியுடன் ரஷ்யாவுக்கு இருந்த நீண்டகால பகை காரணமாகவும், பால்கன் நிலப்பரப்பின் ஆதிக்கத்திற்காக ஆஸ்திரியா - ஹங்கேரியுடன் ரஷ்யா போட்டியில் ஈடுபட்டதன் காரணமாகவும் இந்தக் கூட்டணி தோல்வியில் முடிவுற்று ரஷ்யா வெளியேறியது.

ஓட்டோ வான் பிஸ்மார்க் (Otto Von Bismarck)
ஓட்டோ வான் பிஸ்மார்க் (Otto Von Bismarck)
Pilartz, Jacques | Wikimedia Commons

இந்த அதிரடியான மைய நாடுகளின் கூட்டணியைப் பார்த்து பிரான்ஸ் அதிர்ந்து போனது. ஏனெனில் 1871-ல் நடந்த பிராங்கோ - பிரஷ்யன் போரில் (Franco-Prussian war) பிரான்ஸ் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு பிரான்சின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பிரதேசமான அல்சாஸ் - லோரெய்னை (Alsace-Lorraine) ஜெர்மனிக்கு பறிகொடுத்தது. இது பிரான்சுக்கு மறக்க முடியாத ஒரு அவமானமானது. அத்தோடு ஜெர்மனியின் காலனித்துவ விரிவாக்க வளர்ச்சி, செல்வம் கொழித்த ஆப்பிரிக்காவில் உள்ள பிரெஞ்சு காலனிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து. எனவே ஜெர்மனை இதற்கு மேல் வளர விட்டால் அது தனக்கு எதிரான மாபெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து நிற்கும் என்பதை உணர்ந்த பிரான்ஸ் One man ஆர்மியாக ஜெர்மனியை சமாளிக்க முடியாது என்பதனையும் நன்கு உணர்ந்திருந்தது. அதனால் ஜெர்மனிக்கு எதிராக தன்னோடு கூட்டு சேர ஒரு பொது எதிரியை தேர்ந்தெடுத்தது.

மறுபுறம் Kaiserliche Marine என்ற ஜெர்மன் பேரரசின் ஏகாதிபத்திய கடற்படையின் வேகமான வளர்ச்சியால் பிரிட்டனுக்கும் உள்ளூர உதறல் ஏற்பட்டது. 1890-களில் சிங்கம் மாதிரி சிங்கிளாக, யாரோடும் மிங்களாகாமல் தனித்தே செயற்பட்ட பிரிட்டன், ஜெர்மனியின் பிரமாண்டமான அரசியல், ராணுவ விரிவாக்கத்தை கண்டு சுதாரித்துக் கொண்டது. 19-ம் நூற்றாண்டில் பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவை தனக்கு ஆபத்தான எதிரிகளாக தள்ளி வைத்திருந்த பிரிட்டன், ஜெர்மன் இராணுவத்தின் அசுர வளர்ச்சியினால் அது வரை கொண்டிருந்த கொள்கைகளை தூக்கி தூர எறிந்துவிட்டு எடுத்த ராஜதந்திர மூவ் Entente Cordiale உடன்படிக்கை.

இந்தப் புள்ளியில்தான் அதுவரை எதிரியாக இருந்த பிரிட்டனும் பிரான்சும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் 1904-ல் Entente Cordiale (நட்பான புரிந்துகொள்ளல்) எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தக் கூட்டணியின் நோக்கம் ஜெர்மனியின் அச்சுறுத்தலுக்கு எதிரான இரு நாடுகளின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதாகும். பிரெஞ்சு எழுத்தாளர் ஜோஸ்-அலெய்ன் ஃப்ராலன் (José-Alain) பிரிட்டிஷ்காரரை "எங்கள் மிகவும் அன்பான எதிரிகள்" (our most dear enemies) என்று விவரிக்கிறார்.

ரஷ்யா
ரஷ்யா

ரஷ்யாவை எடுத்துக் கொண்டால் மிகப்பெரிய மக்கள்தொகை காரணமாக அனைத்து ஐரோப்பிய சக்திகளிலும் மிகப்பெரிய மனிதவள இருப்புகள் அதன் வசம் இருந்தன. எனினும் அதன் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. அதேபோல செர்பியா மற்றும் மாண்டினீக்ரோவை ஆஸ்திரியா ஒன்றாக இணைக்கும் என்ற பெரும் பயமும் ரஷ்யாவுக்கு இருந்தது. போஸ்னியா - ஹெர்சகோவினாவை 1908-ல் ஆஸ்திரியா இணைக்க ஆரம்பித்தபோது, இந்தப் பயம் இன்னும் பல மடங்கானது. அதேபோல 1905-ல் ரஷ்ய-ஜப்பானியப் போரில் ரஷ்யாவின் தோல்வி அதன் ராணுவ பலத்தை பற்றிய நம்பிக்கையின்மையை கொடுத்தது. அதனால் ரஷ்யா அதன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த கூட்டணிகளை தேடத் தொடங்கியது.

இதே டெக்னிக்கைதான் 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய தேசங்களும் பின்பற்றின. ஆனால் என்னவொன்று ஐரோப்பிய நாடுகள் அவர்களுக்குள்ளேயே நண்பனையும் எதிரியையும் வைத்திருந்தார்கள். ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிக்கொண்ட இந்த cobelligerent கூட்டணிதான் உலகையே அதிர வைத்த முதல் உலகப்போருக்கு அடிக்கல் நாட்டியது.

இதன் விதிமுறைகள் Triple Alliance-க்கு அப்படியே மாறாக அமைக்கப்பட்டன. அதாவது இந்த நாடுகள் மற்றவர்களின் சார்பாக போருக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆனால், அவை ஒருவருக்கொருவர் தார்மீக அடிப்படையில் ஆதரவளிக்க கடமைப்பட்டுள்ளதாக வரையறை செய்து கொண்டன. அதேவேளை ரஷ்யா அதன் எதிரி நாடுகளான ஆஸ்திரியா-ஹங்கேரியின் அரசியல் எல்லை ஜெர்மனியோடு சேர்ந்து விரிவுபடுவதை விரும்பவில்லை. அதனால் தனக்கு எந்நேரமும் ஆபத்து வரலாம் என அஞ்சிய ரஷ்யா இந்த முக்கூட்டு கூட்டணியின் பொது எதிரியாக இருந்த செர்பியாவுக்கு ஆதரவளிக்க முன்வந்தது. அதாவது இந்த triple Alliance நாடுகள் செர்பியாவை தாக்கினால் ரஷ்யா ராணுவ ரீதியாக உதவுவதாக வாக்களித்தது.

ஏற்கனவே ஜெர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான பொருளாதார, ராணுவ, காலனித்துவ போட்டிகள், பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையான நிலத் தகராறு, பால்கன் பகுதிகளில் நிலவிய உறுதியற்ற அரசியல் நிலைப்பாடுகள் போன்ற பல காரணங்களால் புகைந்து கொண்டிருந்த நெருப்பில் பெட்ரோல் ஊற்றியது ஆஸ்திரிய நாட்டு பட்டத்து இளவரசரின் கொலை.

ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்ஸ் பெர்டினாண்ட் | Archduke Franz Ferdinand of Austria
ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்ஸ் பெர்டினாண்ட் | Archduke Franz Ferdinand of Austria
Ferdinand Schmutzer, Public domain, via Wikimedia Commons

ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்ஸ் பெர்டினாண்ட் படுகொலையும், யுத்தமும்!

ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டது அதுவரை ஒன்றை ஒன்று முறைத்துக் கொண்டிருந்த நாடுகளுக்கு இடையே ஒரு மாபெரும் யுத்தம் உருவாகக் காரணமாயிற்று.

காவ்ரீலோ பிரின்சிப் எனும் செர்பியா நாட்டைச் சேர்ந்தவாரால் நிகழ்ந்த இந்தப் படுகொலை ஒரு மாபெரும் யுத்தம் ஆரம்பமாவதற்கு ஆரம்பப் புள்ளியாக மாறியது. ஏற்கெனவே பால்கன் விவகாரங்களில் செர்பியா மீதிருந்த கடுப்பில் அதுவரை ஒரு தக்க தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்த ஆஸ்திரியா, இந்தக் கொலைக்கு பழிவாங்கும் நோக்குடன் செர்பிய மீது போர் தொடுக்கத் தீர்மானித்தது. இருந்தும் செர்பியாவுக்கு பலம் பொருந்திய ரஷ்ய ஆதரவு இருந்ததால் சற்று தயங்கிய ஆஸ்திரியா-ஹங்கேரி, மறைமுகமாக ஜெர்மனியிடம் உதவி கேட்டது. ஜெர்மனி பச்சைக் கொடி கட்டியதும் ஜூலை 28 அன்று செர்பியா மீது போரை அறிவித்தது. ஆஸ்திரியா-ஹங்கேரி போருக்குத் தயாராகிறது என்பதை உணர்ந்த செர்பிய அரசாங்கம் ரஷ்யாவிடம் உதவி கோரியது. ஐரோப்பாவை தன் கைகளுக்குள் அடக்கி வைக்க நினைத்திருந்த ஜெர்மனியை வீழ்த்த பொருத்தமான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த ரஷ்யா, இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.

ஒரு வாரத்திற்குள், ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆஸ்திரியா - ஹங்கேரி மற்றும் ஜெர்மனிக்கு எதிராக ஒன்று சேர்ந்தன. எனவே இந்தப் போர் முக்கியமாக triple entente & triple Alliance எனப்பட்ட நேச நாடுகள், மைய நாடுகள் எனும் இரண்டு கூட்டணிகளுக்கு இடையேயான போராக மாறியது. நேச நாடுகளின் கூட்டணியில் பெல்ஜியம், செர்பியா போன்ற பல நாடுகள் வந்து இணைந்தன. இதில் முக்கியமான கூட்டணி இணைப்பாக ஆகஸ்ட் 1914-ல் ஜப்பானும், ஏப்ரல் 1917-ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன.

முதலாம் உலகப்போர்
முதலாம் உலகப்போர்

மறுபுறம் ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் (Triple Alliance) என அழைக்கப்பட்ட கூட்டணியில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. 1914 அக்டோபரில் ஓட்டோமான் பேரரசும், ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இக்கூட்டணியில் இணைந்தன.

கிட்டத்தட்ட 20 மில்லியன் மனித உயிர்களை காவு வாங்கி, எண்ணற்றவர்களை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் காயப்படுத்திய, ஐரோப்பாவின் சமூக மற்றும் அரசியல் நிலப்பரப்பை மாற்றியமைத்த, பல பேரரசுகளின் வீழ்ச்சிக்கும், புதிய வல்லரசுகளின் எழுச்சிக்கும் காரணமாக இருந்த அந்த மாபெரும் உலக யுத்தத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்!
- யூரோ டூர் போவோம்!