Published:Updated:

யூரோ டூர் 47: யூகோஸ்லாவியா பிளவு - தலைவனற்ற தேசங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போன வரலாறு!

யூகோஸ்லாவியா
News
யூகோஸ்லாவியா

ஒரு காலத்தில் ஐரோப்பாவுக்கே வெளிச்சம் பாய்ச்சிய யூகோஸ்லாவியா இன்று அதே ஐரோப்பாவின் இருட்டான பக்கங்களுக்குள் பதுங்கிக்கொண்டுள்ளது. இந்த ஐரோப்பிய வரலாறுகள் நமக்குச் சொல்லிச் செல்லும் பாடம் என்ன?

Published:Updated:

யூரோ டூர் 47: யூகோஸ்லாவியா பிளவு - தலைவனற்ற தேசங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போன வரலாறு!

ஒரு காலத்தில் ஐரோப்பாவுக்கே வெளிச்சம் பாய்ச்சிய யூகோஸ்லாவியா இன்று அதே ஐரோப்பாவின் இருட்டான பக்கங்களுக்குள் பதுங்கிக்கொண்டுள்ளது. இந்த ஐரோப்பிய வரலாறுகள் நமக்குச் சொல்லிச் செல்லும் பாடம் என்ன?

யூகோஸ்லாவியா
News
யூகோஸ்லாவியா
ஒரு காலத்தில் அரசியல், பொருளாதாரம், ராணுவம் என அதி பலம் வாய்ந்த ராஜ்ஜியமாக இருந்த யூகோஸ்லாவியா, வெறும் மூன்று ஆண்டுகளில், இன-தேசியவாதத்தின் எழுச்சி, தொடர்ச்சியான அரசியல் மோதல்களால் சிதைந்தது. அதன் விளைவுகள் இன்றுவரை ஐரோப்பாவில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறன.

இரண்டு எழுத்துக்கள், மூன்று நாடுகள், நான்கு மதங்கள், ஐந்து தேசிய இனங்கள், ஆறு குடியரசுகள், ஏழு அண்டை நாடுகளால் சூழப்பட்ட, எட்டு இன சிறுபான்மையினர் கொண்ட ஒரு நாடு என்று யூகோஸ்லாவியா பற்றி அந்நாட்டு ஜனாதிபதி டிட்டோ விவரித்தார். சாதாரணமாக ஒரே மொழியைப் பேசி, ஒரே இன மக்கள் வாழும் ஒரு சிறிய கூட்டுக்குடும்பச் சூழலுக்குள்ளேயே ஆயிரம் பூசல்களும் குழப்பங்களும் காணப்படும் போது, இத்தனை வேறுபட்ட குழுக்கள் வசிக்கும் ஒரு சமுதாயம் எப்படி அமைதி பூங்காவாக இருக்கும்?

பிளவுக்குப் பிள்ளையார் சுழி

யூகோஸ்லாவியாவின் முந்தைய வரைப்படம்
யூகோஸ்லாவியாவின் முந்தைய வரைப்படம்
Cartographer of the United Nations, Public domain, via Wikimedia Commons

யூகோஸ்லாவியா பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டுச் சக்திகளால், குறிப்பாக பெரும்பாலும் ஒட்டமான் பேரரசு மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி பேரரசுகளால் ஆளப்பட்டது. ஆனால் இங்கு வாழ்ந்த பெரும்பாலான மக்கள் ஆஸ்திரியரோ, ஹங்கேரியரோ அல்லது ஒட்டமான்களோ அல்ல. ஸ்லாவிக் பெரும்பான்மையினத்தைக் கொண்ட யூகோஸ்லாவியாவில் ஆரம்பம் முதல் வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையே புகைந்து கொண்டேதான் இருந்தது. குறிப்பாக அப்போது ஸ்லாவ் இனத்தவரின் கை ஓங்கி இருந்தது. ஸ்லாவ் இனத்தவர்கள் தங்களை ஒரு தனித்துவமான இனமாக, அதன் சொந்த கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியத்துடன் சேர்த்துப் பார்த்தனர். எனவே யூகோஸ்லாவியா என்பது ஸ்லாவிக் மக்கள் வசிக்கும், ஸ்லாவிக் மக்களால் ஆளப்படும் ஒரு ஒருங்கிணைந்த மாநிலத்தின் உருவாக்கமாகவே இருந்தது.

ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் தனித்தனி நாடுகளாக ஒன்றிணைந்ததைத் தொடர்ந்தே யூகோஸ்லாவியா எனும் ஒரு நாடு உருவாகும் யோசனை தோன்றியது. ஆனால் இங்குதான் அடிப்படை தவறு நிகழ்ந்தது. இத்தாலியர்கள் மற்றும் ஜெர்மனியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான இன அடையாளத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த யூகோஸ்லாவிய ஒன்றிணைப்பில் பெரும் சிக்கலும் குழப்பமுமே மிஞ்சி இருந்தன.

யூகோஸ்லாவிய தேசம் முக்கியமாக மூன்று அடிப்படைக் கருத்தாக்கத்தில் உருவாக்கப்பட்டது. முதலாவதாக, வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டை விடுவிக்க அனைத்து இன மக்களும் உதவினார்கள் என்ற காரணத்தினால் நாட்டில் உள்ள பல்வேறு இனங்களையும் சமமாக அங்கீகரிப்பது. இரண்டாவது நாடுகளின் பொருளாதாரம் சோசலிசத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டது. மூன்றாவதாக, நாடு பெரிய அளவிலான 6 சமமான குடியரசின் சுயாட்சியுடன் ஆளப்பட்டது. இந்த மூன்றும் யூகோஸ்லாவிய சுதந்திரக் குடியரசின் உருவாக்கத்திற்கு முக்கியமான அடித்தளமாக இருந்தது. அதே போல இதே மூன்று காரணங்களும்தான் இறுதியில் யூகோஸ்லாவியாவின் பிளவுக்கும் காரணமாக அமைந்தன.

ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ
ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ
Unknown author, Public domain, via Wikimedia Commons

உண்மையில் இந்தத் தேசத்தின் வீழ்ச்சிக்கு ஒரே ஒரு காரணத்தை மட்டுமே சொல்லிவிட முடியாது. பல்வேறு பிரச்னைகளின் கூட்டு, தேசத்தின் சரிவுக்குக் காரணமாகிப் போனது. யூகோஸ்லாவியா ஒரு கம்யூனிச நாடாக இருந்ததால் சோவியத் யூனியனுக்கு மிகவும் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. ஆனால் 1948-ல், இரு தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு நாடு சோவியத் யூனியனிலிருந்து அரசியல் ரீதியாக விலகிக் கொண்டது. அதுவரை நாட்டின் பல அம்சங்களைக் கட்டுப்படுத்திய யூகோஸ்லாவிய அரசாங்கத்தில் அதன்பிறகு பிராந்தியங்களில் தனிநபருக்கு அதிக அதிகாரம் வழங்குவது உட்படப் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் ஒன்று மட்டும் மாறாது அப்படியே இருந்தது – அதுதான் யூகோஸ்லாவிய ஜனாதிபதிப் பதவி!

டிட்டோவின் மறைவும் யூகோஸ்லாவியாவின் பிரிவும்

ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ என்ற ஒரு தனி மனிதன் அத்தனை பிளவுகளும் பிரிவுகளும் கொண்ட தேசத்தை ஒற்றை ஆளாக ஒன்றிணைத்தார். அவரது மரணம் வரை யூகோஸ்லாவியா அவர் கைகளுக்குள்ளேயே கட்டுண்டு பாதுகாப்பாக இருந்தது. தனிப்பட்ட முறையில் தேசிய அரசாங்கத்தின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்திய அவர் தேசத்தை நிலையானதாக வைத்திருப்பதில் ஒரு முக்கிய சக்தியாக இருந்தார். ஆனால் ஒரு தேசத்தை வழி நடத்துவதற்கு ஒரு தனி நபரை மட்டும் சார்ந்து நம்பியிருப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. பொதுவாக ஒரு அரசன் இறந்துவிட்டால், ஒரு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் அல்லது பிரதமர் நோய்வாய்ப்பட்டால், அந்தப் பதவியை வேறொருவர் நிரப்புவார். ஆனால் யூகோஸ்லாவியாவோ ஜோசப் டிட்டோவை மட்டுமே நம்பியிருந்தது. 1980-ல் அவர் இறக்கும் வரை, அவருக்குப் பதிலாக ஜனாதிபதியாக யாரும் இருக்கவில்லை.

ஜோசப் டிட்டோ இறந்த பின் ஜனாதிபதி பதவி ஒரு கூட்டு ஜனாதிபதியாக மாற்றப்பட்டது. அதாவது 6 குடியரசு மற்றும் 2 அனாடோமஸ் பிராந்தியங்கள் ஒவ்வொன்றும் 1/8-ஆக ஜனாதிபதி பதவியைப் பகிர்ந்து கொண்டது. ஆனால் முக்கிய முடிவுகள் பெரும்பான்மையை வைத்தே எடுக்கப்பட்டன.
வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ
வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ

இந்த எட்டு பிராந்தியங்களும் தங்களுக்குள் வெவ்வேறு கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்தன. இதில் செர்பியா வலுவான கூட்டாட்சி அரசாங்கத்தை விரும்பியது. கொசோவோ அதிக அதிகாரத்தை எதிர்பார்த்தது. பெரும்பான்மை குடியரசு கொள்கையைக் கொண்டிருந்த ஸ்லோவினியா ஒரு குடியரசை அமைக்க விரும்பியது. தேசத்தின் அதிக செல்வம் படைத்த பணக்கார பிராந்தியங்களாக இருந்த ஸ்லோவினியா மற்றும் குரோஷியா நாட்டின் பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கை எதிர்பார்த்தன. போஸ்னியா ஹெர்ஸகோவினா சுதந்திரமான தனி நாடாக வேண்டும் என்று விரும்பியது. இவை தவிர இந்த பிராந்தியங்கள் தமது இன மற்றும் மொழியை பிரதானப்படுத்த விரும்பின. இதனால் பல இனக்குழுக்கள் உருவாகின. இப்படியாக பல்வேறு அரசியல் சக்திகள் ஒவ்வொன்றும் வெவ்வேறான, எதிரெதிர் அரசியல் இலக்குகளுடன் ஒன்றுக்கொன்று முரணாக இருந்ததால், ஒரு காலத்தில் மிகவும் உறுதியான அரசியல், பொருளாதார, ராணுவ பலத்துடன் ஐரோப்பாவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த யூகோஸ்லாவியா, 1980-களில் நிர்வகிக்க முடியாத ஒரு குழப்பப் பூமியாக மெல்ல மெல்ல ஆட்டம் காணத்தொடங்கியது.

“டிட்டோ இறந்த போது நாங்கள் எல்லோரும் அழுதோம். அவரைப் புதைத்த போது நாங்கள் புதைப்பது டிட்டோவை அல்ல, யூகோஸ்லாவியாவை என்று அப்போது அறிந்திருக்கவில்லை” - கொசோவர் அல்பேனிய அரசியல்வாதியும், கொசோவோவில் உள்ள கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னாள் தலைவருமான Mahmut Bakali அவர்கள் டிட்டோவின் மரணம் குறித்துக் கூறிய உருக்கமான வார்த்தைகள் இவை.

1980-ல் டிட்டோவின் மறைவைத் தொடர்ந்து அதுவரை கட்டுப்பாட்டுக்குள் இருந்த இன பதற்றங்களும், தேசியவாத வேறுபாடுகளும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. தடியெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரனாக மாறிப்போனார்கள். எல்லாருமே தமக்குத் தனி நாடு வேண்டும் என்று போராடத் தொடங்கினர். இவர்களைக் கட்டுப்படுத்த ஒரு முறையான தலைவன் இல்லாததால் யூகோஸ்லாவியாவின் பிளவு ஆழமாகத் தொடங்கியது.

சுதந்திரத்தைப் பெற்றுச் சூனியமாகிப் போன தேசங்கள்

1991, ஜூன் மாதத்தில் ஸ்லோவேனியாவும் குரோஷியாவும் சுதந்திரத்தை அறிவித்தன. அதன் மக்கள்தொகையில் 90% ஸ்லோவேனியர்கள் இருந்தாலும் ஒரு பெரிய சண்டையில், பல நூறு உயிர்களைப் பறிகொடுத்தே அவர்களால் பிரிந்து செல்ல முடிந்தது. அடுத்து கடுமையான போராட்டத்தின் பின், பெருமளவான செர்பிய மக்களை வெளியேற்றி குரோஷியா சுதந்திரத்தை நோக்கி நகர்ந்தது. 1992 ஜனவரியில் மாசிடோனியா சுதந்திரத்தை அறிவித்தது. அதைத்தொடர்ந்து 1992 ஏப்ரலில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா சுதந்திரத்தை அறிவித்தது.

1992-ல் செர்பியப் படைகளால் தாக்கப்பட்ட போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள ஒரு கட்டடம்
1992-ல் செர்பியப் படைகளால் தாக்கப்பட்ட போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள ஒரு கட்டடம்
Mikhail Evstafiev

யூகோஸ்லாவிய குடியரசுகளில் 43% முஸ்லீம், 31% செர்பியன் 17% குரோஷியன் எனப் பெரிய இன வேறுபாடு கொண்ட பிரதேசமாக இருந்த போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் அடுத்த பெரிய போர் வெடித்தது. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியாக்கி, மில்லியனுக்கும் அதிகமானோரை இடம்பெயர்த்து, கடைசியில் சண்டை முடிவுக்கு வந்த போது நாடு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது.

ஏப்ரல் 27, 1992-இல் கடைசியாக எஞ்சியிருந்த செர்பியா மற்றும் மாண்டினீக்ரோ, யூகோஸ்லாவியாவின் புதிய கூட்டாட்சி குடியரசை உருவாக்கின. ஸ்லோபோடன் மிலோசெவிக் அதன் தலைவராக இருந்தார். இருப்பினும், இந்தப் புதிய அரசாங்கம், முன்னாள் யூகோஸ்லாவியாவின் வாரிசு நாடாக நாட்டாமை அமெரிக்காவால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆயினும் இந்த செர்பியா மற்றும் மாண்டினீக்ரோவின் கூட்டமைப்பு 2003 வரை யூகோஸ்லாவியா என்றும், 2003-2006 வரை செர்பியா மற்றும் மாண்டினீக்ரோ ஒன்றியம் என்றும் அழைக்கப்பட்டது.

2006 மே மாதம், மாண்டினீக்ரோ சுதந்திரம் குறித்த வாக்கெடுப்பை நடத்தி, அது குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 4 அன்று செர்பியா மற்றும் மாண்டினீக்ரோவின் கூட்டாட்சித் தலைவர் ஸ்வெடோசர் மரோவிக் தனது அலுவலகத்தைக் கலைப்பதாக அறிவித்தார், அடுத்த நாள் செர்பியா தொழிற்சங்கத்தின் முடிவை ஒப்புக்கொண்டது. ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் ஜூன் 12 அன்று மாண்டினீக்ரோவை அங்கீகரித்தன. செர்பியா குடியரசு 1 நவம்பர் 2000 முதலும், மாண்டினீக்ரோ ஜூன் 28, 2006 முதலும் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளாக இணைந்தன.

ஒரு காலத்தில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த முக்கிய தேசமாக இருந்த யூகோஸ்லாவியாவின் பகுதியாக இருந்த நாடுகள் இன்று அதே ஐரோப்பாவில் வறுமைக் கோட்டின் கீழ் தத்தளிக்கும் தேசங்களாக மாறிப்போனது. ஒரு காலத்தில் ஐரோப்பாவுக்கே வெளிச்சம் பாய்ச்சிய யூகோஸ்லாவியா இன்று அதே ஐரோப்பாவின் இருட்டான பக்கங்களுக்குள் பதுங்கிக்கொண்டுள்ளது. இந்த ஐரோப்பிய வரலாறுகள் நமக்குச் சொல்லிச் செல்லும் பாடம் என்ன?
யூகோஸ்லாவியா
யூகோஸ்லாவியா

30 வருடங்கள் தனது இரும்புக்கரத்தால் சோவியத் எனும் இரும்புக் கோட்டையைக் கட்டி ஆண்ட ஸ்டாலினின் மறைவோடு சோவியத் ஒன்றியம் சிதைந்தது. டிட்டோ எனும் பெருந்தலைவனின் கீழ் உறுதியாக நின்ற யூகோஸ்லாவியா, அவரின் மறைவோடு மறைந்து போனது. டோமாஸ் ஜி. மசாரிக் எனும் அரசியல் சாணக்கியனின் கீழ் ஆழமான அஸ்திவாரம் போட்டு அசையாமல் நின்ற செக்கோஸ்லோவாக்கியா எனும் அற்புத தேசம், அவரின் மறைவோடு முறிந்து போனது.

ஆக, ஒரு தேசத்துக்குத் தலைவன் என்பது அந்த தேசத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதக்கூடிய ஒரு மகா சக்தி. தகுதி இல்லாத தலைவன் அமையும் எந்தத் தேசமும் மேய்ப்பான் இல்லாத ஆடுகள் போலப் பிரிந்து, சிதறிப் போகும் என்பதற்குக் கிழக்கு ஐரோப்பாவின் அழிந்து போன வரைபடங்கள் சாட்சி சொல்லி நிற்கின்றன.

யூரோ டூர் போலாமா?!