ஐரோப்பாவுக்கு ஹைடெக் தேசம் என்ற பெருமையை வழங்கும் வளர்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், அந்தப் பிம்பத்தை அப்படியே உடைத்துப் போடும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே புதைந்து போன சில தேசங்களின் மறந்துபோன வரலாறு, ஐரோப்பிய ஏடுகளின் கடைசிப் பக்கங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.
தொலைந்து போன தேசங்கள்
19 மற்றும் 21-ம் நூற்றாண்டுகள் மனித வரலாற்றில், வரலாறு காணாத மாற்றங்களின் காலமாகும். 1807-இல், நெப்போலியன் போர்கள் வெடித்தன. அதுவே 2007-இல், ஸ்மார்ட்போன்கள் உலகை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றன. மனித வரலாற்றில் வேறு எந்த சகாப்தமும் இந்தளவு துரித மாற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. அதிலும் ஐரோப்பா அளவுக்கு வேறு எந்த இடத்திலும் இந்தளவு அதிவேக மாற்றம் நிகழவில்லை.
தொழில்நுட்பம் வளர வளர நாடுகளின் எல்லைகள் மாறி, சில தேசங்கள் சேர்ந்தன, சில தேசங்கள் பிரிந்தன, சில தேசங்கள் காணாமலே போயின. குறிப்பாக 20-ம் நூற்றாண்டில் பண்டைய ராஜ்ஜியங்கள் சிதைந்து, பல புதிய நாடுகள் பிறந்தன. தன்னைப் புதுப்பித்துக்கொள்ளாத எந்தத் தத்துவமாக இருந்தாலும், கொள்கையாக இருந்தாலும், புரட்சியாக இருந்தாலும் அது தோல்வியிலேயே முடியும். அந்த வகையில் இவ்வாறு உருவான சில தேசங்கள் மாற்றிக்கொள்ளாத அவற்றின் பழைமைவாத கொள்கைகளாலும், இன, மத, மொழி துவேஷங்களாலும், ஆரம்பித்த இடத்திலேயே அழிந்து போயின. பழைமை மாறாத சித்தாந்தங்கள் புதிய பிரச்னைகளுக்கும், போர்களுக்கும், பேரழிவுகளுக்கும் வழிவகுத்தன. இக்காலப்பகுதியில்தான் மனித இனம் வரலாற்றில் இல்லாதளவு மிக உயர்ந்த இடப்பெயர்வைக் கண்டது.

இவ்வாறு பிரிந்த, மறைந்த நாடுகள் எல்லாம் பல லட்சம் உயிர்களைப் பறிகொடுத்து, ரத்த வெள்ளத்தில் மூழ்கிப் போனதாகத்தான் சரித்திரம் சொல்கிறது. பொதுவாக இரண்டு நபர்கள் பிரியும் போதே பல்லாயிரம் பிரச்னைகளோடுதான் அந்த உறவு முறிவுக்கு வருகிறது. அப்படி இருக்கும்போது, இரண்டு தேசங்கள் பிரியும் போது சொல்லவே தேவையில்லை. இதற்கு உதாரணமாகச் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு முதல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை வரை உதாரணங்கள் அடுக்கலாம்.
ஆனால் விதிவிலக்காக வன்முறை, மோதல்கள் இல்லாமல் ஒரு நாடு மிகவும் அமைதியான முறையில் பிரிந்தது. அதுதான் செக்கோஸ்லோவாக்கியா. வெல்வெட் விவாகரத்து என்று அழைக்கப்படும், கம்யூனிசத்திற்குப் பிந்தைய செக்கோஸ்லோவாக்கியாவின் அமைதியான முறிவு ஐரோப்பிய வரலாற்றில் நிகழ்ந்த ஒரு அதிசயம்.
ஒரு காலத்தில் இசை, விளையாட்டு, அறிவியல், சினிமா, கலை, இலக்கியம் என அபரிமிதமான பல பொக்கிஷங்களை உலகுக்கு வழங்கிய அற்புத பூமி, இனங்களுக்கிடையே இல்லாமல் போன ஒற்றுமையினால் இரண்டாகப் பிளவுபட்ட சோகக்கதை இவ்வார யூரோ தொடரில்...
செக்கஸ்லோவாக்கியாவின் உருவாக்கம்
செக் ரிபப்ளிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள், ஸ்லோவாக்கியா கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் செக்கஸ்லோவாகியா என்ற ஒரு பெயர் உங்களில் பலருக்கு பரிச்சயமில்லாத ஒன்றாக இருக்கலாம். ஐரோப்பாவின் பல முறை திருத்தி வரையப்பட்ட வரைபடத்தில், காணாமல் போன தேசத்தின் கதைதான் செக்கஸ்லோவாகியாவுடையது.
முதலாம் உலக யுத்தம் முடிவடைந்த பின், மீண்டும் இவ்வாறான ஒரு பேரழிவு ஏற்பட்டது விடக்கூடாது என்ற நோக்கில், முதல் உலக யுத்தத்துக்குக் காரணமாக இருந்த எல்லா காரணிகளையும் களையெடுக்க ஆரம்பித்தது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இணைந்த முக்கூட்டணி. முதல் உலக யுத்தத்தின் அடிப்படை காரண கர்த்தாவாக இருந்த ஆஸ்திரியா - ஹங்கேரியைப் பிரிப்பதுதான் இதற்கான சரியான தீர்வு என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. விளைவு, ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி என்னும் இரு தனி நாடுகள் பிரிக்கப்பட்டன. அதன் மீதமிருந்த நிலப்பரப்பை எல்லாம் ஒன்றிணைத்து ஏன் ஒரு தேசமாக அறிவிக்கக் கூடாது என்று நினைத்த அரசியல்வாதி, சமூகவியலாளர் மற்றும் தத்துவவாதியான Tomáš Garrigue Masaryk-யின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேச நாடுகளின் உதவியுடன் செக்கஸ்லோவாகியா என்னும் ஒரு தேசம் உருவாக்கப்பட்டது.

நல்ல மண், பெரிய காடு, உறைந்து போகாத ஆறுகள், செழிப்பான பூமி, ஏற்கெனவே நிறுவப்பட்ட சாலைகள், இலகுவான வர்த்தக வழிகள் போன்றவற்றால் கவரப்பட்ட ஸ்லோவாக்கியர்களும், செக் மக்களும் மட்டுமல்ல, ஜெர்மன், போலந்து இனத்தவரும் செக்கஸ்லோவாகியாவில் குடியேறத் தொடங்கினர்.
Tomas G. Masaryk-இன் கடின உழைப்பால் வெற்றிகரமாக உருவான செக்கோஸ்லோவாக்கியா, ஐரோப்பாவின் மையத்தில் ஒரு புதிய குடியரசாக உருவாக்கம் பெற்று, பெரும் செல்வாக்கு பெறத் தொடங்கியது. மிகவும் உறுதியான, நிலையான பொருளாதாரத்தைக் கொண்ட ஜனநாயகமாக இருந்த செக்கோஸ்லோவாக்கியா, ஜனாதிபதி டோமாஸ் ஜி. மசாரிக் தலைமையில் மேலும் மேலும் வளர்ச்சியை நோக்கி வேகமெடுக்கத் தொடங்கியது.
ஒரு செக்கோஸ்லோவாக் ஹீரோ - Tomáš Garrigue Masaryk
செக்கோஸ்லோவாக் ஜனநாயகத்தை நிறுவிய டோமாஸ் ஜி. மசாரிக் இந்த நாட்டை கட்டிக்காப்பதில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனிப்பட்ட பொறுப்பு உள்ளது என உறுதியாக நம்பினார். ஐரோப்பாவில் சிறிய நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும், அவை ஒட்டுமொத்த உலகிற்கும் பங்களிக்க முடியும் என்றும் அவர் உறுதியாகக் கூறினார். தத்துவஞானி, அறிஞர் மற்றும் அரசியல்வாதியான டோமாஸ் ஜி. மசாரிக், அதற்குத் தேவையான நடைமுறை நெறிமுறைகளை வலியுறுத்தியதோடு மட்டுமல்லாது, செக் மற்றும் ஸ்லோவாக்கியர்களுக்கு அறிவியல், அரசியல், மனிதநேயம் மற்றும் உலக இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தினார். 1880கள் மற்றும் 1890களில் ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்த மசாரிக் தற்கொலைக்கான காரணங்களைப் பகுப்பாய்வு செய்யும் மிக முக்கியமான புத்தகத்தை 1881-இல் வெளியிட்டார்.
முதல் உலகப் போருக்கு முன் ஆஸ்ட்ரோ-ஹங்கேரிக்குள் சீர்திருத்தங்களுக்காக மசாரிக் போராடியிருந்தாலும், முதலாம் உலகப் போரின் போது, அவர் சுயாட்சிக்குப் பதிலாகச் சுதந்திரத்திற்காக வாதாடினார். அமெரிக்காவிற்கான ஒரு பயணத்தின் போது, செக்கோஸ்லோவாக்கியாவின் சுதந்திரத்தின் அவசியத்தை ஜனாதிபதி உட்ரோ வில்சனுக்கும் அவர் உணர்த்தினார். டோமாஸ் ஜி. மசாரிக்கின் இத்தனை கடும் முயற்சிகளுக்குப் பிறகு, அக்டோபர் 28, 1918 இல் செக்கோஸ்லோவாக்கியா என்னும் சுதந்திர நாடு உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் 14 அன்று மசாரிக் செக்கோஸ்லோவாக்கியாவின் முதல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக்கச்சிறப்பான ஒரு ஆட்சியை ஆரம்பித்தார்.

மசாரிக் என்னும் சிறப்பான தலைவனும் செக்கோஸ்லோவாக்கியா என்னும் செழிப்பான தேசமும்!
மசாரிக் நாட்டை வழிநடத்தியபோது, அனைத்து குடிமக்களையும் சமமாகக் கருதி, சிறுபான்மையினருக்கு தங்கள் தேசிய அடையாளத்தை வைத்துக்கொள்ள உரிமைகளை வழங்கி, ஒரு சிறப்பான ஜனநாயக நாடாக செக்கோஸ்லோவாக்கியாவை வடிவமைத்தார். அங்குப் பத்திரிகை சுதந்திரம் மற்றும் சர்வஜன வாக்குரிமை இருந்தது. ஜனநாயகத் தேர்தல் நடந்தது. ஆயினும்கூட, ஆறு தேசங்களை உள்ளடக்கிய 10 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில், பிரச்னைகள் இல்லாமல் இருக்குமா?
செக்-ஜெர்மன் குழப்பம், ஸ்லோவாக் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஸ்லோவாக் பிரிவினைவாதம், ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசின் நெருக்கடிகள் எனப் பல சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆயினும் தனது சிறப்பான ஆளுமையினால் மக்களின் அபிமானத்தைப் பெற்று, சாமானியர்களுடன் தொடர்பிலிருந்ததால், மசாரிக் 1920-ல் ஜனாதிபதியாக இரண்டாவது தடவையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு ஒரு திடமான, ஜனநாயக அடித்தளத்துடனும், வலுவான நாணயத்துடனும் செழித்து, பொருளாதார ரீதியாக முன்னேறியது.
1927-ல் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மூன்றாவது தடவையாகவும் மசாரிக் ஜனாதிபதி பதவிக்கு வந்தார். சிறு சிறு குழப்பங்கள் இருந்தாலும், Brotherhood என்னும் சகோதரத்துவத்தை மக்களிடம் மிகத் தீவிரமாக வலியுறுத்திய இவர், செக்கோஸ்லோவாக்கியா என்னும் தேசத்தை எந்தத் தீய சக்தியாலும் பிளவுப்படமால் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார். 1933-ல் அடோல்ஃப் ஹிட்லர் ஜெர்மன் சர்வாதிகாரியாக ஆனதால் கம்யூனிசம், பாசிசம் மற்றும் நாசிசம் ஆகியவற்றின் பாதிப்புகள் அமைதியான பூங்காவாக இருந்த செக்கோஸ்லோவாக்கிய மண்ணில் விஷ விதைகளை மெல்ல மெல்ல விதைக்க ஆரம்பித்தன.

1934-ல் மசாரிக் நான்காவது முறையாகவும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த முறை மக்கள் ஒத்துழைத்த அளவுக்கு அவர் உடல்நலன் ஒத்துழைக்கவில்லை. எனவே 1935 டிசம்பரில் பதவியை ராஜினாமா செய்து 17 ஆண்டுக்கால தனது வெற்றிகரமான ஜனாதிபதி வாழ்க்கையை முடித்தார். ப்ராக் அருகே உள்ள லானியில் உள்ள தனது பிரியமான அரண்மனையில் மசாரிக் தனது மீதி நாள்களைக் கழித்தபோது பெனஸ் அவருக்குப் பின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். செப்டம்பர் 2, 1937 இரவு, மசாரிக்குக்கு பக்கவாதம் ஏற்பட்டது. செப்டம்பர் 14 அன்று அவர் காலமானார்.
தலைவனின் மறைவும் தொண்டனின் பிரிவும்!
ஒரு மோசமான தலைவனால் சிறப்பாக இருக்கும் நாட்டைக் கெடுத்து குட்டிச்சுவராக்கி, அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையைச் சூனியமாக்க முடியும் என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. சமீபத்திய உதாரணம் இலங்கை. அதுவே சிறந்த ஒரு தலைவனால் சிதைந்திருக்கும் மக்களைக் கூட சிறப்பாக ஒன்றுபடுத்தி, நாட்டை வளப்படுத்த முடியும் என்பதற்கும் சில அரிய உதாரணங்கள் உள்ளன. அந்த வரிசையில் மசாரிக்கும் இணைந்தார்.
செக் மக்கள் ஜெர்மனியின் கட்டுப்பாட்டுக்குள்ளும், ஸ்லோவாக்கிய மக்கள் ஹங்கேரியின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்தவர்கள். எனவே அவர்களது மொழி, கலாசாரம் என எல்லாமே வித்தியாசமாக இருந்தது. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகளே ஆயிரம் கருத்து வேறுபாடுகள், ஆயிரம் பேதங்களை வைத்து தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் போது, வெவ்வேறு தேசத்தில், வெவ்வேறு கலாசாரத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மக்களை ஒரே இடத்தில் வைக்கும் போது பிளவுக்கும் பிரச்னைகளுக்கும் பஞ்சமே இருக்காது. எனவே இவர்கள் இருவரையும் ஒன்றாக இணைத்து செக்கோஸ்லோவாக்கியா உருவாக்கப்பட்ட போது, அவர்களுக்குள் பிளவு, வந்துவிடக்கூடாது என்பதில் Tomas G. Masaryk மிகவும் கவனமாக இருந்தார். கொந்தளிக்கும் கடலில் லாகவமாகக் கப்பலைச் செலுத்தும் மாலுமி போல, மிகவும் கவனமாக நாட்டை வழிநடத்திச் சென்றார். ஆனால் தலைவன் இல்லாத நாடு, மேய்ப்பவன் இல்லா மந்தைக்கூட்டமாக மாறிவிடும் என்பது போல, மசாரிக்கின் மறைவைத் தொடர்ந்து, மெல்ல மெல்ல பிரச்னைகள் தலைதூக்கத் தொடங்கின. மக்கள் ஒரு கட்டுப்பாடு இல்லாமல், களையத் தொடங்கினர். 'நீயா நானா' என்ற வர்க்க பேதம் மீண்டும் தலை தூக்கியது. இனவாதமும் தேசியவாதமும் முற்றிய புற்று போலப் பரவத் தொடங்கின.

செக்கோஸ்லோவாக்கியாவின் பிளவு
செக் மொழி பேசுபவர்கள் 50 சதவிகிதமும், ஸ்லோவாக் இனத்தவர் 20 சதவிகிதமும் மிதிப் பங்கு ஜெர்மன், ஹங்கேரியன் இனத்தவரையும் கொண்டு உருவாக்கப்பட்ட செக்கோஸ்லோவாக்கியாவில் செக் மக்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. இதனாலேயே செக் மக்களுக்கும், ஸ்லோவாக்கியர்களுக்கும் இடையே வர்க்க வேறுபாடு ஏற்படத் தொடங்கியது. இந்த வேளையில் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்த சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிசம் செக்கோஸ்லோவாக்கியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வந்ததால், தேசியவாதம் பற்றிய பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. ஆனாலும் மக்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வு நீறு பூத்த நெருப்பாகப் புகைந்து கொண்டு இருந்தது.
சோவியத் யூனியன் 1990-களில் வீழ்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டத்தில், ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த நெருப்பு பற்றியெரியத் தொடங்கியது. உலகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்த வெல்வெட் போராட்டத்தின் ஆரம்பம் அது. மாணவர்களின் தலைமையில் நிகழ்ந்த இந்தப் போராட்டம் மாபெரும் புரட்சியாக வெடிக்கும் முன்னர், செக் மற்றும் ஸ்லோவாக்கியா, இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. அந்த இரு மாகாணங்களின் தலைவர்கள் கூடிப்பேசி, 'இதற்கு மேலும் நாம் ஒன்றாக இருக்க முடியாது, எனவே, அமைதியான முறையில் பிரிந்து விடலாம்' என இறுதியாக முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஜனவரி 1, 1993-ம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. செக் குடியாராசகவும், ஸ்லோவாக்கிய குடியாராசகவும் மாறியது செக்கோஸ்லோவாக்கியா. ஒரு காலத்தில் ஐரோப்பாவில் உறுதியான தேசமாக இருந்த செக்கோஸ்லோவாக்கியா என்னும் நாடு காணாமல் போனது.

போரின்றி, வன்முறையின்றி, ரத்தம் சிந்தாமல், உயிர்கள் பலியாகாமல் மிகவும் கண்ணியமான முறையில்கூட ஒரு போராட்டம் நிகழலாம் என உலகுக்கு உணர்த்திச் சென்றது இந்த வெல்வெட் புரட்சி. அமைதியான முறையில், மனமொத்த வகையில் கூட ஒரு பிரிவு நிகழலாம் என்பதை வரலாற்றில் எழுதிச் சென்றது இந்த வெல்வெட் பிரிவு.