Published:Updated:

யூரோ டூர் - 5 | பிரிட்டனோடு ஜெர்மனி ஏன் மோதியது, உலகின் முதல் போர் எப்படி இருந்தது?!

முதலாம் உலகப்போர்
News
முதலாம் உலகப்போர்

நவீன ஐரோப்பாவின் அமைப்பையும் உலக அரங்கில் அதன் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் தெரிந்து கொள்ள மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவின் செழிப்பையும் கிழக்கு ஐரோப்பாவின் வறுமையையும் கூட புரிந்துகொள்ள அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஆரம்பப் புள்ளி முதலாம் உலகப் போர்.

Published:Updated:

யூரோ டூர் - 5 | பிரிட்டனோடு ஜெர்மனி ஏன் மோதியது, உலகின் முதல் போர் எப்படி இருந்தது?!

நவீன ஐரோப்பாவின் அமைப்பையும் உலக அரங்கில் அதன் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் தெரிந்து கொள்ள மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவின் செழிப்பையும் கிழக்கு ஐரோப்பாவின் வறுமையையும் கூட புரிந்துகொள்ள அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஆரம்பப் புள்ளி முதலாம் உலகப் போர்.

முதலாம் உலகப்போர்
News
முதலாம் உலகப்போர்

ஹிட்லரும், ஹோலோகாஸ்ட்டும், ஜப்பான் மீதான அணுகுண்டு தாக்குதலும், இரண்டாம் உலகப் போரை இன்று வரை பேசுபொருளாக உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதேப்போல இரண்டாம் உலகப் போர் நடந்த 1940-களின் காலகட்டங்களில் வாழ்ந்தவர்களில் பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். போரின் எஞ்சிய சுவட்டின் ஈரம் இன்னும் முழுமையாகக் காயந்துவிடவில்லை. ஆனால் முதல் உலகப் போர் நடந்து நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. அதன் எச்சங்களும் மிச்சங்களும் கூட மறைந்து விட்டன. அதனால்தான் இன்றைய தலைமுறைக்கு முதலாம் உலகப் போர் அவ்வளவு பரிட்சயம் இல்லாத ஒன்றாகிப் போனது.

பாசிசம், நாசிசம், கம்யூனிசம் போன்ற சித்தாந்தங்களின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது உலகப் போரை விட, நாடுகள் மற்றும் காலனிகளை கையகப்படுத்தும் நோக்கத்துடன் நடந்த முதலாம் உலகப் போர் அதிக அழிவுகளை ஏற்படுத்தியது.
முதலாம் உலகப்போர்
முதலாம் உலகப்போர்

ஐரோப்பாவை பாகம் பாகமாக கிழித்த முதலாம் உலகப் போர் எந்த ஒரு ஐரோப்பிய தேசத்தையும் தீண்டாமல் கடந்து போகவில்லை. நேச நாடுகள், நட்பு நாடுகளுக்கு இடையே நடந்த இந்தப் போர், நடுநிலை வகித்த தேசங்களையும் கூட விட்டு வைக்கவில்லை. அதன் தாக்கம் ஒரு புறம் சாதகமாகவும், மறுபுறம் பாதகமாகவும் இன்று வரை ஐரோப்பாவை தொடர்கிறது.

ஜெர்மனி, ஓட்டமான், ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்யா எனும் நான்கு பெரும் சக்திகளின் வீழ்ச்சியை ஏற்படுத்தி, பெரும்பாலான காலனித்துவத்தை முடித்து வைத்து, உலகின் பொருளாதார சமநிலையை மாற்றி, ஐரோப்பிய வரைபடத்தை திருத்தி வரைந்து, ஐரோப்பிய நாடுகளை கடனில் ஆழ்த்தி, அமெரிக்காவை உலகின் முன்னணி சக்தியாகவும் ஆக்கிய முதலாம் உலகப் போர், சோவியத் யூனியனின் வளர்ச்சிக்கும், ஹிட்லரின் எழுச்சிக்கும் விதை போட்டுச் சென்றது.

நவீன ஐரோப்பாவின் அமைப்பையும் உலக அரங்கில் அதன் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் தெரிந்து கொள்ள மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவின் செழிப்பையும் கிழக்கு ஐரோப்பாவின் வறுமையையும் கூட புரிந்துகொள்ள அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஆரம்பப் புள்ளி முதலாம் உலகப் போர்.

ஐரோப்பாவை முதல் உலகப் போருக்குள் வீழ்த்திய டொமினோ விளைவுகள்!

Domino Effect... அதாவது ஒரு நிகழ்வு ஒத்த நிகழ்வுகளின் சங்கிலியை அமைக்கும்போது ஏற்படும் ஒட்டுமொத்த விளைவை டொமினோ எஃபக்ட் என்பார்கள். முதலாம் உலகப் போரும் இவ்வாறு அடுக்கி வைக்கப்பட்டிருந்த டொமினோ நிகழ்வுகளின் விளைவுதான்.

ஆஸ்திரியா-ஹங்கேரியின் இளவரசரும் அவரது மனைவியும், செர்பிய நாட்டைச் சேர்ந்த 19 வயது இளைஞனால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து சில வாரங்களுக்குள் முதலாம் உலகப் போர் வெடித்தது. ஐரோப்பா முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த ஒற்றைக் கொலை மட்டும்தான் அத்தனை பெரிய போர் உருவாகக் காரணமா என்றால் இல்லை. ஒரு சிறு கூழாங்கல் ஒரு பெரிய நிலச்சரிவை தொடங்கிவைப்பதைப்போல, இந்த ஒரு கொலை அதற்கு முன் இருந்த அனைத்து டொமினோ காய்களையும் மளமளவென்று சரித்து ஒரு மாபெரும் போரில் கொண்டு சென்று முடித்தது.

 முதலாம் உலகப்போர் - ராணுவ வீரர்கள்
முதலாம் உலகப்போர் - ராணுவ வீரர்கள்

முதல் டொமினோ

பிராங்கோ-பிரஷ்யன் போரில் பலம் மிக்க நெப்போலியனின் அவமானகரமான தோல்வியைத் தொடர்ந்து அதுவரை ஐரோப்பாவில் அதிகாரம் செலுத்தி வந்த பிரான்ஸின் ஆட்டத்தை அடக்கி ஒரு ஒன்றிணைந்த பேரரசாக ஐரோப்பிய அரசியலுக்குள் அதிரடியாக நுழைந்தது ஜெர்மனி. அவமானப்படுத்தப்பட்ட பிரான்ஸ் ரஷ்யாவுடன் பரஸ்பர பாதுகாப்புக்கான ஒப்பந்தத்தை நாடியது.

இரண்டாம் டொமினோ

ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் இத்தாலி ஆகிய மூன்று நாடுகளும் Triple Alliance கூட்டணியை உருவாக்கின.

மூன்றாம் டொமினோ

ஏற்கெனவே பல ஆண்டுகளாக செர்பியாவை தமது கலாசாரத்துக்கான அச்சுறுத்தலாகவே ஆஸ்திரியா-ஹங்கேரி பார்த்து வந்தது. அதேபோல பால்கன் பகுதியின் பெரும் பரப்பை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஒரே வழி செர்பியாவை ஆட்டத்தில் இருந்து நீக்குவது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தது. இதனாலேயே இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஆரம்பம் முதலே ஒரு பதற்ற நிலை நிலவியது.

நான்காம் டொமினோ

ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மூன்றும் சேர்ந்து Triple Alliance-க்கு எதிரான Triple Entente எனும் முக்கூட்டணியை உருவாக்குகின்றன.

ஐந்தாம் டொமினோ

அதுவரை ஐரோப்பாவில் பலம் பெற்று இருந்த பிரிட்டன் கடற்படையை மிஞ்சும் அளவுக்கு ஜெர்மனி தனது கடற்படையின் அளவை அதிரடியாக விரிவுபடுத்தியது.

ஆறாம் டொமினோ

ரஷ்யா தனது கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களை பசிபிக் பகுதிக்கு அனுமதிக்கும் ஒரு துறைமுகத்தை பெற விரும்பியது. எனவே அது தனது தளங்களை கொரியாவில் அமைத்தது. தமது எல்லையில் புதிதாக முளைத்த ரஷ்யாவை தமக்கெதிரான பெரிய அச்சுறுத்தலாக பார்த்த ஜப்பான் எதிர்பாராத ஒரு திடீர் தாக்குதல் மூலம் ரஷ்யாவை வேரோடு பிடுங்கி எறிந்தது. இது ஐரோப்பாவில் அதிகார சமநிலையை மாற்றியது.

ஏழாம் டொமினோ

1800-களில் ஒட்டோமான் பேரரசிலிருந்து பிரிந்த செர்பியா, பல்கேரியா, மாண்டினீக்ரோ மற்றும் கிரீஸ் போன்ற நாடுகள் பால்கன் லீக் என்ற புதிய கூட்டணியை உருவாக்கின. பால்கனில் ஓட்டமான் பேரரசு வசம் மீதமிருந்த பகுதிகளை ரஷ்யா கைப்பற்ற நினைத்தது. ஆனால் அதற்கு ஆஸ்திரியா- ஹங்கேரி போட்டியாக குறுக்கே நின்றது.

எட்டாம் டொமினோ

ஆஸ்திரியா-ஹங்கேரி இளவரசரின் படுகொலை. இதுதான் கடைசியாக அழுத்தப்பட்ட ட்ரிக்கர் பாயின்ட். அதுவரை உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்த ஏனைய டொமினோக்கள் அந்த ட்ரிக்கர் பொறியில் தீப்பற்றி ஒன்றின் மேல் ஒன்றாக விழ ஆரம்பித்ததன் விளைவு நான்கு ஆண்டுகள் நீடித்த ஒரு மாபெரும் உலக யுத்தம்.

வல்லரசுகளின் ஸ்கெட்ச்!

ஆஸ்திரியா-ஹங்கேரியின் இளவரசர் படுகொலையை அடுத்து சில மணி நேரங்களிலேயே ஆஸ்திரியா-ஹங்கேரி இராணுவம் செர்பியாவின் பெல்கிரேட் நகரை நோக்கி சரமாரியாக தாக்குதல்களை முடுக்கிவிட்டது. வாக்கு கொடுத்தபடி ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு ஆதரவு வழங்க உடன்பட்டது. இது ஏற்கெனவே ஆட ஆரம்பித்திருந்த ஆஸ்திரியா-ஹங்கேரியின் கால்களில் சலங்கையை கட்டிவிட்டது. ரஷ்யா, செர்பியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்ததால் ஜெர்மனி தனது ஒவ்வொரு அடியையும் மெல்ல மெல்ல நிதானமாகவே எடுத்து வைத்தது. ரஷ்ய தலையீட்டை எதிர்கொள்ளவும், ரஷ்யா செர்பியர்களுக்கு உதவுவதைத் தடுக்கவும், ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியா அதன் அண்டை நாடான பல்கேரியாவுடன் கூட்டணி அமைத்தது.

வரலாற்றாசிரியர்களால் blank check என்று குறிப்பிடப்படும் ஆஸ்திரியா-ஹங்கேரிக்கான ஜெர்மனியின் ஆதரவின் பின் பல இராஜதந்திர நகர்வுகள் இருந்தன. மிகப்பிரபலமான The Schlieffen Plan படி துல்லியமாக ஸ்கெட்ச் போட்டது ஜெர்மனி. ஆஸ்திரியா-ஹங்கேரி மிகவும் பலவீனமான ஒரு இராணுவத்தைக் கொண்ட ஒரு பலம் குன்றிய ராஜ்ஜியமாக காணப்பட்டது. ஆனால், அதற்கு ஜெர்மனி கொடுத்த blank check ஆதரவால் தெம்பு பெற்று வலிந்து சென்று யுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. உண்மையிலேயே ஜெர்மனி இந்த விஷயத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் இது வெறும் இரு நாடுகளுக்கு இடையேயான போராக முடிந்திருக்கும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற உலக சக்திகள் தத்தமது சுய லாபத்திற்காக இதில் மூக்கை நுழைத்ததன் விளைவு ஒரு மாபெரும் உலக யுத்தம் வெடித்தது.

 முதலாம் உலகப்போர் - ராணுவ வீரர்கள்
முதலாம் உலகப்போர் - ராணுவ வீரர்கள்

மறுபக்கம் செர்பியாவுடன் ரஷ்யாவுக்கு முறையான ஒப்பந்தங்களோ நிர்பந்தமோ இல்லை என்றாலும், பால்கன்களைக் கட்டுப்படுத்த விரும்பியதாலும், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரியின் ராணுவ பலத்தை வலுவிழக்கச் செய்ய ரஷ்யாவுக்கு நீண்ட கால திட்டம் இருந்ததாலும் இந்த சந்தர்ப்பத்தில் செர்பியாவுக்கு உதவ முன் வந்தது ரஷ்யா. அதே போல ஒட்டோமான் மற்றும் ஹப்ஸ்பேர்க் பேரரசுகள் இரண்டையும் அழிக்கப் பயன்படும் ஒரு சக்தியாகவும் செர்பியாவைப் பார்த்ததால், அதன் மூலம் பால்கன் தீபகற்பத்தின் மீது கட்டுப்பாட்டை பெறுவதற்கான இலகுவான வழிகளையும் ரஷ்யா கவனத்தில் கொண்டது. எனவே செர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுக்க ஆரம்பித்ததும் இதுதான் சந்தர்ப்பம் என ரஷ்யாவும் களத்தில் குதித்தது.

மைய நாடுகளின் உடன்படிக்கையின் போது ஆஸ்திரியா-ஹங்கேரியை ரஷ்யா தாக்கினால் உதவுவதாக உத்தரவாதம் அளித்திருந்த ஜெர்மனி உடனே தன் இராணுவத்தை ஒன்று சேர்த்து ரஷ்யா மீது போர் பிரகடனத்தை அறிவித்தது. ரஷ்யா மீது போர் தொடுத்தால் அது அதன் கூட்டணியான பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடனான போராகவும் மாறும் என்பதையும் ஜெர்மனி நான்கு தெரிந்தே வைத்திருந்தது. எனவே ரஷ்யாவுடனான போரில் பிரான்ஸ் நடுநிலையாக இருக்க வேண்டும் என ஜெர்மனி கட்டளை இட்டது. இதை கண்டுகொள்ளாத பிரான்ஸ் ரஷ்யாவுக்கு உதவ முன்வந்து ஜெர்மனிக்கு எதிராக தம் படைகளை அணிதிரட்ட ஆரம்பித்தது. இதனால் கோபமடைந்த ஜெர்மனி, பிரான்ஸ் மீது போர் பிரகடனம் செய்தது. ஜெர்மனியுடனான பிரெஞ்சு எல்லையில் பிரான்சின் பல முக்கிய கடற்படை துறைமுகங்கள் அமைந்திருந்ததால் பெல்ஜியம் ஊடக சுற்றி வளைத்து அடிப்பதுதான் புத்திசாலித்தனம் என ஜெர்மனி எண்ணியது. அதனால் ரஷ்யா தன் மிகப்பெரிய ராணுவப் படையை அணி திரட்டும் நேரத்துக்குள் பெல்ஜியம் வழியாக பிரான்சுக்குள் நுழைந்து பிரெஞ்சு படைகளை பதம் பார்த்து விடலாம் என மாஸ்டர் பிளான் போட்டது ஜெர்மனி.

The Schlieffen Plan

ஜெர்மனி போட்ட மாஸ்டர் ப்ளான் தான் ஷ்லிஃபென் திட்டம். மேற்கில் பிரான்ஸ் மற்றும் கிழக்கில் ரஷ்யா எனும் இரு வலுவான சக்திகளுக்கு எதிராக இரண்டு முனைகளில் ஒரு போரை எவ்வாறு வெல்வது என்ற முக்கியமான பிரச்னைக்கு ஜெர்மன் ராணுவத்தால் தீட்டப்பட்ட ஒரு துல்லியமான திட்டம் இது. ஒரு புறம் பிரான்ஸ் மறு புறம் ரஷ்யா என இந்த இரு முனைத் தாக்குதலை தவிர்க்க அப்போதைய ஜெர்மனியின் ஃபீல்ட் மார்ஷல் மற்றும் ஜெர்மன் பொதுப் பணியாளர்களின் தலைவராக பணியாற்றிய Alfred Graf von Schlieffen என்பவர் தலைமையில் தீட்டப்பட்ட இந்தத் திட்டம் ஆரம்பத்தில் பல பிரமாண்டமான வெற்றிகளை அடுத்தடுத்து ஜெர்மனிக்கு கொடுத்தாலும் இறுதி ஆட்டம் ஜெர்மனிக்கு எதிராகத் திரும்பியது.

இந்தத் திட்டத்தின்படி பிரான்சின் கதையை முடிக்க சரியாக 42 நாட்கள் ஒதுக்கப்பட்டது. ஏனெனில் இந்த 42 நாட்களுக்குள் ரஷ்யா அதன் ராணுவத்தை மொத்தமாக அணிதிரட்டி முடித்திருக்கும் என கணக்கு போட்டது ஜெர்மனி. அதற்கு பெல்ஜியம் வழியாக பிரான்சை தாக்குவது என்று முடிவு செய்தது. ஆனால் 1839-ன் லண்டன் உடன்படிக்கைக்குப் (Treaty of London) பிறகு பெல்ஜியம் ஒரு நடுநிலை நாடாக தன்னை அறிவித்ததை தொடர்ந்து ஜெர்மனியின் இந்த நடவடிக்கைக்கும் பெல்ஜியம் உடன்படவில்லை என்பதால் கடைசியில் அது The Battle of Liège எனும் பெல்ஜியத்துக்கு எதிரான போராக முடிந்தது. எந்த மொழியைப் பேசுவது என்று கூட சரியாக தீர்மானிக்கத் தெரியாத பெல்ஜியம் அப்படி என்ன செய்துவிடப் போகிறது என்று குறைத்து மதிப்பிட்ட ஜெர்மனியின் கண்களில் விரலை விட்டு ஆட்டியது பெல்ஜிய ராணுவம். இத்தனைக்கும் ஜெர்மன் ராணுவத்தில் பத்தில் ஒரு பங்கு அளவு கூட பெல்ஜிய ராணுவம் இல்லை. எதிர்பார்த்ததை விடவும் அதிக நாட்கள் நீடித்த இந்தப் போர் ஜெர்மனே எதிர்பார்த்திராத ஒரு ட்விஸ்ட். இறுதியில் பலம் வாய்ந்த ஜெர்மன் இராணுவம் பெல்ஜியத்தை வீழ்த்தியது.

நீண்ட நாள் நீடித்த ஜெர்மன் - பெல்ஜியம் போர், பிரெஞ்சு இராணுவத்துக்கு சுதாகரிக்கத் தேவையான கால அவகாசத்தை கொடுத்தது. பெல்ஜியத்தில் தங்கள் ஆக்கிரமிப்பை முடித்த பிறகு, ஜெர்மன் படைகள் பிரான்ஸ் நோக்கி நகர்ந்தன. ஆனால், ஜெர்மனி பிரான்சுக்குள் நுழையும் போதே பிரெஞ்சு படைகள் தயார் நிலையில் இருந்தன. The Battle of Mons என்று அழைக்கப்பட்ட உக்கிரமான யுத்தம் ஆரம்பமானது.

The Battle of Mons, August 23, 1914

பிரிட்டிஷ் படைகள் ஜெர்மனியை நேருக்கு நேர் பார்த்து மோதிய முதலாம் உலகப் போரின் முதல் யுத்தம் இது. ஜெர்மனி, பிரான்ஸ் மீது போர் தொடுக்கப்போவதாக பிரகடனப்படுத்திய போது நேச நாடுகளின் கூட்டணியில் பிரான்ஸோடு ஆதரவாக இருந்த பிரிட்டன் உடனடியாக ஜெர்மன் ராணுவத்தை வாபஸ் வாங்கச் சொல்லி ஜெர்மனியை எச்சரித்தது. அப்போது மிகப்பெரிய ராணுவ பலத்தோடு இருந்த ஜெர்மனி பிரிட்டனின் இந்த எச்சரிக்கையை லெஃப்ட்டில் டீல் செய்து தூசு போல தட்டி விட்டது. ஐரோப்பாவில் சூப்பர் பவராக உருவெடுத்துக் கொண்டு வந்த ஜெர்மனியை எப்போது கவிழ்க்கலாம் என சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த பிரிட்டன் வந்த வாய்ப்பை நழுவ விடாமல் கோதாவில் குதித்தது.

முதலாம் உலகப்போரில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு நிகழ்ந்தபோது
முதலாம் உலகப்போரில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு நிகழ்ந்தபோது

தென்கிழக்கு பிரான்சில் அல்சேஸ்-லோரெய்ன் பகுதியில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் படைகளுக்கு இடையே சண்டை நடந்திருந்தாலும், ஆகஸ்ட் 23, 1914 அன்று தான் பிராங்கோ-பெல்ஜிய எல்லையில் மோன்ஸ் நகருக்கு அருகில் ஜெர்மனிக்கு எதிராக பிரான்சுடன் கை கோர்த்து பிரிட்டிஷ் ராணுவம் களத்தில் இறங்கியது.

ஜெர்மனியுடன் ஒப்பிடும் போது மூன்றில் ஒரு பங்கு ராணுவ பலத்தையே கொண்டிருந்த பிரிட்டிஷ், ஜெர்மனியின் சரமாரியான தாக்குதலில் நிலை குலைந்துபோனது. பிரான்சின் கிழக்கு எல்லைகளிலும், தெற்கு பெல்ஜியத்திலும் நடைபெற்ற இந்தப் போரில் கடைசி வரை விடாமல் போரிட்டு வந்த பிரிட்டிஷ் படைகள் இறுதியாக சுமார் 1600-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளோடு தன்னை சுற்றி வளைத்த ஜெர்மன் படைகளிடம் தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கியது.

இருப்பினும் இன்றுவரை, ஆங்கிலேயர்கள் மோன்ஸ் போரை ஒரு வெற்றியாகவே கருதுகின்றனர். ஏனென்றால் 3:1 விகிதத்தில் குறைவான ராணுவ பலத்துடன் 48 மணி நேரங்களுக்கு மேல் தாக்குப் பிடித்த பிரிட்டிஷ் ராணுவம் சுமார் 5,000 உயிரிழப்புகளை ஜெர்மனிக்கு ஏற்படுத்தி விட்டுத்தான் பின்வாங்கியது.

ஐரோப்பாவை சுற்றி வளைத்து அடித்து ஆட ஆரம்பித்த ஜெர்மனி வாழ்ந்ததா, வீழ்ந்ததா… அடுத்த வாரம் அலசுவோம்!

யூரோ டூர் போவோம்!