
ஒரு வேட்பாளராகக்கூட யாரும் நினைத்துப் பார்த்திராத பெண்மணி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐம்பது ஆண்டு கால வரலாற்றில், ஆணையத்தின் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண்மணி, உர்சுலா ஒன் டெர் லேயன். ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவிக்கு வருவதும் இதுதான் முதல்முறை. அதேசமயம் இவரை வெற்றிபெற வைக்க, பல ஐரோப்பிய நாடுகளின் பிரதான அரசியல் கட்சிகள் சமரசம் செய்துகொண்டன என்ற புகாரும் எழுந்துள்ளது.
ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜலா மெர்க்கெல்லின் நெருங்கிய நண்பரும் நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான 60 வயதான உர்சுலா, ஜூலை 16-ம் தேதி ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 747 உறுப்பினர் களில் 383 பேர் இவருக்கு ஆதரவாக வாக்களித் துள்ளனர். இவருடைய பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். தற்போதைய தலைவர் ஜேன் க்ளாட் ஜன்கரின் பதவிக்காலம் அக்டோபர் 31-ல் முடிவடைவதால், நவம்பர் 1-ல் புதிய தலைவராக உர்சுலா பதவியேற்பார்.
இனி, உர்சுலா அறிவுரைப்படிதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் வகுக்கப்படும். தவறிழைக்கும் உறுப்பினர் நாடுகளுக்கு அபராதம் விதிக்கவும் இவருக்கு அதிகாரம் உண்டு. உர்சுலா வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, எதிர்பாராத சம்பவம். அது சொந்தக் கட்சியினருக்கே ஆச்சர்யமான சம்பவம். ஏனெனில், தேர்தல் அறிவிக்கும்போது ஆணையத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில்கூட உர்சுலாவின் பெயர் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை, வேட்பாளர்கள் பட்டியலிலும் அவர் பெயர் இல்லை.
முதலில் சோஷலிச ஜனநாயகக் கட்சி சார்பில் வேறு இரண்டு வேட்பாளர்கள்தான் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். அவர்களின் சோஷலிசக் கொள்கைகளைப் பல நாடுகள் ஏற்றுக் கொள்ள வில்லை. இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியவர் களுக்குத்தான் முதல் வாய்ப்பு தரவேண்டும் என்று ஐரோப்பிய மக்கள் கட்சி கேட்டுக் கொண்டது. இதைப் பயன்படுத்திக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், ஜெர்மனி அதிபர் மெர்க்கலின் வலது மைய ஜனநாயக யூனியன் கட்சியைச் சேர்ந்த உர்சுலாவை நிறுத்த முடிவு செய்தனர்.
முதலில், உர்சுலாவை முன்மொழிந்தவர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன். உர்சுலாவை ஆதரிக்க முடியாது என்று ஐரோப்பிய பசுமைக் கட்சி வெளிப்படையாகவே அறிவித்தது. கூட்டணிக்குள்ளும் எதிர்ப்பு வலுத்தது. பல கட்சிகள் ஆதரிக்க மறுத்தன. தன் நெருங்கிய நண்பருக்காக, கூட்டணியின் கருத்துகளை உதாசீனப்படுத்தக்கூட மெர்க்கல் தயங்கவில்லை. இவரை வெற்றிபெறவைக்க, பல ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கட்சிகள் சமரசம் செய்து கொண்டதாகவும், பல திரைமறைவு வேலைகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
பின்னர் அரங்கேறிய செயல்கள், இந்தப் புகார்களை உறுதி செய்வதுபோல இருந்தன. பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆனார். அங்கு நாடாளுமன்றத் தலைவர் பதவியை சோஷலிச கட்சி கைப்பற்றியது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டின் லகார்ட், ஐரோப்பிய சென்ட்ரல் வங்கித் தலைவரானார். இதற்குப் பின்தான், உர்சுலாவுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டது.
ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர் ஆணையத்தின் பெரிய பதவிகளை வகிக்கக் கூடாது என்று விதி இருப்பதால், ஐரோப்பிய ஆணையத்தின் செக்ரட்டரி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்யும்படி மார்டின் செல்மேயருக்கு உத்தரவிட்டது ஜெர்மனி.
பிரஸ்ஸல்ஸ் நகரில் பிறந்த உர்சுலா, 60 ஆண்டுகளுக்குப் பின், புது அரசியல் வாழ்வைத் தொடங்க மீண்டும் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வருகிறார். இவர் ஒரு மகப்பேறு மருத்துவர். தனது 42-வது வயதில் அரசியலுக்கு வந்த உர்சுலா, ஏஞ்ஜலா மெர்க்கலின் நெருங்கிய நண்பரானார். கடந்த 2005-லிருந்து, குடும்ப விவகாரத் துறை, இளைஞர், தொழிலாளர் நலன் அமைச்சராகப் பணிபுரிந்தார். பின்னர், பாதுகாப்பு அமைச்சரானார்.

பல ஐரோப்பிய நாடுகளில் பெருகிவரும் தேசிய சிந்தனை, உள்நாட்டுக் குழப்பங்கள், ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஈரான் நாடுகளின் அதிகாரப் போட்டி, பிரெக்ஸிட், ஐரோப்பா - அமெரிக்கா வர்த்தகம் போன்றவை இவருக்கு முன் நிற்கும் சவால்கள். இவரின் பன்மைத்துவ கோட்பாடுகள், தடைகளற்ற வர்த்தகக் கொள்கை களை, பல கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகள் வரவேற்காது. இவ்வளவு ஏன், அமெரிக்கா கூட விரும்பாது. ஏனெனில், அதிபர் ட்ரம்பின் ‘முதலில் அமெரிக்கா’ என்ற கொள்கைக்கு இது முரணானது. பல தடைகளைத் தகர்த்தெறிந்த உர்சூலா, இதையும் சமாளிப்பார் என்றே நம்புவோம்!
இந்தியாவில் தாக்கம் என்ன?
பல ஐரோப்பிய நாடுகள், இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்துள்ளன. ஐரோப்பிய கமிஷனின் தடைகளற்ற வர்த்தகக் கொள்கை, இந்தியாவின் வர்த்தக நலன்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும். தன் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க போலந்து, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா செக் குடியரசு போன்ற நாடுகளுடன், இந்தியா இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.