பாகிஸ்தான் நாட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ராஜா (Adil Raja), முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தீவிர ஆதரவாளர். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானிலிருந்து திடீரென காணாமல் போனதாக தகவல் வெளியானது. அதன் பிறகு இங்கிலாந்திலுள்ள அவருடைய குடும்பத்தினருடன் இணைந்து விட்டார் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், அடில் ராஜா யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த சேனலை 2.9 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
அதில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், பாகிஸ்தானின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகள், உளவு வேலைக்கு பாகிஸ்தானின் நடிகைகளை பயன்படுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். அவர் அந்த நடிகைகளின் பெயர்களை குறிப்பிடவில்லை. ஆனால் அவர்களின் பெயர்களின் முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்.
இது தொடர்பான அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உளவு அமைப்பு தயாரித்து வெளியிட்ட நாடகங்களில், பணியாற்றிய நடிகைகள் தான் அவர்கள் என மக்கள் குறிப்பிட்டு பேச தொடங்கியிருக்கிறார்கள்.
அதில் நடிகை சாஜல் ஆலி (Sajal Aly) என்பவரும் ஒருவர். இதையடுத்து, அவர் இந்தக் குற்றச்சாட்டுக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக , "நமது நாட்டின் தரம் குறைந்திருப்பது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல, அருவருக்கத்தக்கது. ஒருவரின் தனி பண்பு நலனை படுகொலை செய்வது, மனிதத் தன்மையின் மிக மோசமான வடிவம். பெரும் பாவத்திற்குரியது" எனத் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ராஜா புதிய அரசாங்கத்தை, குறிப்பாக ஷெரீப் குடும்பத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.