2014-2015-ம் ஆண்டில் சவுதி அரசின் ஆட்சியை விமர்சிக்கும் ட்விட்டர் கணக்குகள் குறித்த மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், பிறந்த தேதிகள் மற்றும் பிற தனிப்பட்ட தரவுகளைப் பெறுவதற்கு, சவுதி அரேபிய அதிகாரிகள் ட்விட்டர் நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்கள் இருவரை அணுகியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அபுஅம்மோ (45) என்ற முன்னாள் ட்விட்டர் ஊழியர் தகவல்களைப் பணத்துக்காகவும், விலையுயர்ந்த கடிகாரத்துக்காகவும் விற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் 2015 -ல் ட்விட்டர் நிறுவனத்திலிருந்து வெளியேறி, சியாட்டிலிலுள்ள அமேசானில் பணியில் சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில்தான், அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்துவந்திருக்கிறது.
கலிஃபோர்னியாவின் வடக்கு மாவட்டத்துக்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், இது தொடர்பான வழக்கு நடைபெற்றது. அதில், சவுதி இளவரசருக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து 1,00,000 டாலர் ரொக்கம் மற்றும் 40,000 டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள கடிகாரத்தைப் பெற்றது உறுதியானது. இதற்கிடையே நீதிமன்றம், பண மோசடி, வெளிநாட்டு அரசின் சட்டவிரோத முகவராக இருந்தமை உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளில் அவரைக் குற்றவாளி என அறிவித்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு 3.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.