கட்டுரைகள்
Published:Updated:

சின்னார் தெரியுமா?

இயற்கை காப்போம்
பிரீமியம் ஸ்டோரி
News
இயற்கை காப்போம்

இயற்கை காப்போம் - 2

படங்கள்: கா. சங்கர் காசிராஜ்

சின்னார் காடு, மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், மூணார் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தக் காடு மற்றும் சரணாலயம் பற்றிச் சில விஷயங்கள்...

●மறையூர் வனத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்த இந்தக் காடு, 1984 ஆகஸ்ட் மாதம் தனிச்சரணாலயமாக மாற்றப்பட்டது. இந்தக் காட்டின் வடக்குப் பக்கமாக ஓடும் சின்னார் நதிதான் ஆனைமலைப் புலிகள் காப்பிடத்திலிருந்து இதைப் பிரிக்கிறது. கிழக்குப் பக்கம் கேரள எல்லையையும் நிர்ணயிக்கிறது. மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில், மறையூர் வனப் பகுதியோரங்களில் இதன் எல்லைகள் அமைந்துள்ளன.

வரையாடு, காட்டு நீலக்குருவி
வரையாடு, காட்டு நீலக்குருவி

●இரவிக்குளம் உச்சியிலிருந்து உற்பத்தியாகிப் பெருக்கெடுத்து ஓடிவரும் சின்னார் நதியும், தலையார் பள்ளத்தாக்கிலிருந்து உற்பத்தியாகி வரும் பாம்பார் நதியும், சின்னார் காடுகளின் பசுமையைப் பாதுகாக்கின்றன. இந்த இரண்டு நதிகளுமே குட்டாற்றில் இணைந்து ஒரே நதியாகி, அமராவதியில் சேருகிறது.

●ஒரே காடுதான் என்றாலும், இங்கிருக்கும் பல்வேறு நுண் தட்பவெப்பநிலைகள் (Micro Climates) காரணமாக, பல்வேறு வகைச் சிறிய காடுகளாக இவற்றுக்குள் ஒரு பல்லுயிரியத் தன்மையை உருவாக்கியுள்ளது.

●சின்னாரின் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் முதுவர், மலைப்புழையர் என்ற இரண்டு வகைப் பழங்குடியினர் வாழ்கிறார்கள். காட்டுக்குள் சுமார் 11 இடங்களில் குக்கிராமங்கள் அமைந்துள்ளன. இதில், முதுவர்கள் அடர்த்தியான காட்டுக்குள் வாழ்கிறார்கள். காட்டுக்குள் சேகரிக்கும் பொருள்களையும் காடு சார்ந்த வேலைகளையுமே சார்ந்திருக்கிறார்கள்.

●சின்னார் காட்டின் தாவர வளம், சமீப காலமாக அதிகமாகிவரும் காட்டுத்தீயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. காற்றோட்டத்தைத் தடைசெய்யும் மலைகளுக்கு நடுவே (Leeward side) சின்னார் காடு அமைந்திருப்பதால், குறைவான மழைக்காலமும் நீண்ட கோடைக்காலமும் இருக்கும்.

●விரியட்டுமலை, தெங்கமலை, கருமலை, அனக்குன்னு, ஜல்லிமலை ஆகியவை சின்னார் காட்டின் சில முக்கியமான மலை உச்சிகள். ஒவ்வோர் ஆண்டும் 30 முதல் 40 நாள்களுக்கு மழை இருக்கும். சராசரியாக 300 முதல் 500 மில்லிமீட்டர் வரை மழை அளவு இருக்கும்.

●மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்திருக்கும் சின்னார் வனவிலங்கு சரணாலயக் காட்டில்... சிறுத்தை, யானை, காட்டுமாடு, புலி, கடமான், குரங்கு, குல்லாய் குரங்கு, சாம்பல் மந்தி, நீலகிரி வரையாடு, புள்ளிமான், முள்ளம்பன்றி, காட்டு நாய், குள்ளநரி, சோம்பல் கரடி, காட்டுப் பூனை எனப் பல்வேறு பாலூட்டிகளைக் காணலாம். சிறுத்தைகள் சின்னாரிலேயே வாழ்கின்றன. புலிகள் அவ்வப்போது வந்துபோகும்.

காட்டு மாடு, பூமன் ஆந்தை, செம்பருந்து,  தெற்கத்தி மின்சிட்டு
காட்டு மாடு, பூமன் ஆந்தை, செம்பருந்து, தெற்கத்தி மின்சிட்டு

●சின்னார் காட்டில் இதுவரை 28 வகையான பாலூட்டிகளின் வாழ்விடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு 225 வகையான பறவையினங்கள், 52 வகையான ஊர்வனங்கள், 29 வகையான பாம்புகள், நட்சத்திர ஆமை, கேரளாவின் அதிகமான மக்கர் முதலைகளின் வாழ்விடம், 15 வகையான நீர்நில வாழ்விகள் என்று சிறப்பான காட்டுயிர் வளத்தைத் தன்னகத்தே வைத்துக்கொண்டு கர்வமின்றி அமைதியாக நிற்கின்றது.

●காட்டுக்குள் நுழையும்போதே அடர்த்தியான நீல நிற உடம்போடும் கருநீல இறகோடும், காட்டு நீலக்குருவி (Asian Fairy Blue bird) மனதை ஈர்க்கும் இசையோடு வரவேற்கும். தெற்கத்தி மின்சிட்டு, வெண்கன்னக் குக்குறுவான், தையல் சிட்டு, செதில் வயிற்று மரங்கொத்தி, பல்வேறு குரல்களில் மிமிக்ரி செய்யும் சோலைப்பாடி, மாங்குயில் எனப் பல புள்ளினங்கள் உள்ளன.

●பாம்புண்ணிக் கழுகு, செம்பருந்து, கரும்பருந்து போன்ற வேட்டையாடிப் பறவைகளும் புள்ளி ஆந்தை, கூகை போன்ற ஆந்தை வகைகள், இரவுப்பக்கி, பழந்தின்னி வௌவால்கள் போன்ற பல இரவாடிப் பறவைகளும் நிறைந்தது சின்னார் காடு. வேறு பல பறவைகளும் அவ்வப்போது வருகையும் தருகின்றன. சமீபத்தில் அரிதான Spot bellied eagle owl ஒரு மரத்தில் கூடு அமைத்திருந்ததும் பதிவுசெய்யப்பட்டது.

●காட்டுக்கீச்சான், தேன்சிட்டு, வேலிக் கதிர்க்குருவி, செம்மீசைச் சின்னான் போன்ற பறவைகளையும் எளிதாகவே பார்க்கமுடியும்.

●சின்னார் காட்டின் எல்லைக்குள் அமைந்திருக்கும் மறையூர் என்ற கிராமத்தின் சந்தனக்காட்டில் கேழையாடுகள் காணப்படும். அந்தச் சந்தனக்காட்டுக்கும் தனித்துவமான பெருமை உண்டு. மற்ற பகுதிகளிலுள்ள சந்தனக்காடுகளைப் போல மனிதர்களால் வளர்க்கப்பட்டதல்ல. இயற்கையாக உருவான காடுகளில் இன்றுவரை அப்படியே இருக்கும் ஒரே சந்தனக்காடு.

சின்னார் தெரியுமா?

●பறக்கும் பல்லிகள், பாறைப் பல்லிகள், பழுப்பு நிறப் பல்லிகளையும் பார்க்கமுடியும். கேரளாவிலேயே சாம்பல் நிற மலை அணில்கள் வாழ்கின்ற ஒரே காடு, சின்னார் வனவிலங்கு சரணாலயம்தான். மஞ்சம்பட்டி வெள்ளைக் காட்டு மாடு (Manjampatti White Bison) என்ற தனித்துவமான காட்டு மாடுகளையும் இங்குதான் பார்க்கமுடியும். சாம்பல் நிறத்திலிருக்கும் இந்தக் காட்டு மாடுகளும் சின்னாருக்குப் பெருமையைச் சேர்க்கின்றன.

●விலங்குகள், பறவைகள் மட்டுமன்றி பல அரிய வகைத் தாவரங்களும் சின்னாரில் வளர்கின்றன. சில கிழங்கு மற்றும் கீரை வகைகளை இந்தக் காட்டிலிருந்து பழங்குடிகள் சேகரிக்கின்றனர். இங்குதான் நீரோலி என்ற மரமும் வளர்கிறது. அந்த மரத்துக்கு ஒரு கதையை அங்குள்ள மக்கள் சொல்வார்கள்.

●ஒருகாலத்தில் சின்னார் காட்டில் வாழ்ந்த வன தேவதைகளின் உருவத் தோற்றத்தை நீரோலி மரம் கேலி செய்தது. ஆத்திரமடைந்த தேவதைகள், “நீ எப்போதும் நிர்வாணமாகத்தான் நிற்கவேண்டும்” என்று சாபம்விட்டார்கள் என்பதே அந்தக் கதை. இந்த மரத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். பட்டைகள் மிருதுவாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும். அதனால்தான், நீரோலி என்ற பெயர் என்ற கருத்து நிலவுகிறது.

●அரிய வகை வண்ணத்துப்பூச்சியான குழம்பு மயில் வண்ணத்துப்பூச்சி (Common banded peacock), இனப்பெருக்கம் செய்யும் புருஷ மரம் (Chloroxylon swietenia) இங்குள்ளன. நட்சத்திர ஆமை விரும்பிச் சாப்பிடும் சப்பாத்திக்கள்ளி, உள்ளூர்ப் பெயரில் கெயினா என்றழைக்கப்படும் தாவரம், குப்பைமேனிக் கீரை, எலும்பொட்டி (Blepharis maderaspatensis), எகிடிக் காய் (Caralluma umbellata), சிறுங்கள்ளி (Caralluma umbellata) போன்றவையும் இங்கு அதிகம் வளர்கின்றன.

●நட்சத்திர ஆமைகள் சின்னார் போன்ற வறண்ட காடுகளில் அதிகம் வாழும் நிலத்து ஆமை வகையைச் சேர்ந்தது. அதற்கு அதிக நீர்ச்சத்து கிடைக்க இந்தத் தாவரங்கள் உதவுகின்றன. மனிதத் தலையீடுகள் அதிகமானதால், இந்தத் தாவரங்கள் பல இழப்புகளைச் சந்தித்துவருகின்றன. 1971ஆம் ஆண்டு தொடங்கிய யூகலிப்டஸ், தேக்கு மரப் பயிரிடுதல் காரணமாகவும் சிக்கல்கள் உண்டாகியுள்ளன. இவற்றையெல்லாம் களைந்து, சின்னார் காட்டின் இயற்கையைச் சிதையாமல் பாதுகாக்க, வனத்துறை போராடிக்கொண்டிருக்கிறது.