சினிமா
Published:Updated:

“ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் வெளியே வரணும்!”

ஜுவாலா குட்டா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜுவாலா குட்டா

“என் பூர்வீகம் உங்கள் கேலிப்பொருள் அல்ல!” “விஷ்ணு விஷால் மீண்டு வருவார்னு நம்பினேன்!” - மனம் திறக்கும் ஜுவாலா

‘`இந்தியாவுக்காக விளையாடி, உலக சாம்பியன்ஷிப்ல மெடல் ஜெயிச்ச ஒரு ஸ்போர்ட்ஸ் வுமனை இந்த தேசம் கொண்டா டலைன்னாலும் பரவாயில்லை. துரோகம் பண்ணாம இருக்கலாம். கீழே தள்ளி வேடிக்கை பார்க்காம இருக்கலாம். மக்களுக்கு என் சாதனைகள் தெரியாட்டாலும் என் பூர்வீகத்தை கேலிப் பொருளாக்கியிருக்க வேண்டாம். என் அப்பா க்ராந்தி, இந்தியன். அம்மா யெலன், சீனாக்காரர். அதைவெச்சு என்னையும் அம்மாவையும் ‘ஹாப் கொரோனா’ன்னு கிண்டலடிச்சாங்க...’’ பொங்குகிறார் ஜுவாலா குட்டா. இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் சாம்பியன்களில் ஒருவர்.

தொடர் விமர்சனங்கள், சர்ச்சைகளில் சிக்கினாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு, ஹைதராபாத்தில் ‘ஜுவாலா குட்டா அகாடமி ஆப் எக்ஸலென்ஸ்’ என்ற பெயரில் பேட்மின்டன் அகாடமி ஆரம்பித்து செம பிஸியாக இருக்கிறார்.

“ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் வெளியே வரணும்!”

``கொரோனாச் சூழல் முழுதாக சரியாகாத நிலையில் அகாடமி ஆரம்பித்தது சரிதானா?’’

‘`ஏப்ரல் மாசமே அகாடமி ஆரம்பிக்கிறதா பிளான். ஆனா மார்ச்ல லாக்டௌன் அறிவிச்சிட்டாங்க. அந்த டைம்ல மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்ததால அகாடமி ஆரம்பிக்கிற பிளானைத் தள்ளிப் போட்டேன். இப்போ நிலைமை கொஞ்சம் மாறியிருக்கு. தவிர என் அகாடமி ரொம்பப் பெருசு. சோஷியல் டிஸ்டன்ஸிங் எல்லாம் தேவையே இல்லாத அளவுக்கு அங்கே பாதுகாப்பா விளையாடலாம்.”

``சாய்னாவோடும் பி.வி.சிந்துவோடும் உங்களை கம்பேர் பண்ணும்போது எப்படி பீல் பண்றீங்க?’’

‘`அவங்களுக்கெல்லாம் ஏகப்பட்ட ஸ்பான்சர்ஸ் கிடைச்சாங்க. ஆனா வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஜெயிச்ச பிறகுகூட எனக்கு ஸ்பான்ஸர்ஸ் வரலை. அவங்களுக்கும் எனக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்காதபோது அவங்களோடு என்னை ஒப்பிடறதும் சரியான தில்லைதானே... அன்னிக்கும் இன்னிக்கும் ஒரே மாதிரி எந்த சப்போர்ட்டும் இல்லாமப் போராடிட்டுதான் இருக்கேன். என்னை விளையாடவே விடாமத் தடுக்க நடந்த முயற்சிகளை எதிர்த்துப் போராடி மீண்டிருக்கேன்.’’

``கோச் கோபிசந்துடன் என்னதான் பிரச்னை?’’

‘`கோபிசந்த்... 15 வருஷங்களா கோச்சா இருக்கார். இத்தனை வருஷங்கள்ல அவரால ஒரு டபுள்ஸ் பிளேயரையோ, ஒரு நேஷனல் கோச்சையோ உருவாக்க முடியலை. இப்பவும் எல்லாரும் வெளிநாட்டு கோச்களைத்தானே நம்பியிருக்கறாங்க. கோபிசந்த்துக்கு தனியார் துறையை என்கரேஜ் பண்றதுதான் நோக்கம். எத்தனை பேரால தனியார் பயிற்சி வகுப்புகளுக்குப் போக முடியும்? கடந்த 10 வருஷங்கள்ல தெலுங்கு பேசற ஆட்கள் மட்டும்தான் இந்தியன் டீம்ல இருக்காங்க. தமிழ், கன்னடம், மலையாளம் பேசற ஒரு பிளேயரைக் காட்டுங்க. இந்தியா மாதிரி திறமைகள் கொட்டிக் கிடக்கும் நாட்டுல இப்படி ஏகபோகம் கொண்டாடறது எந்த வகையில நியாயம்? கோபிசந்த் செய்யற இந்த விஷயங்கள்தான் பிரச்னை.’’

``ஸ்போர்ட்ஸில் இருக்கும் பெண்களின் உடைகள் விமர்சனத்துக்குள்ளாவது பற்றி..?’’

‘`ஆண் கிரிக்கெட் பிளேயர் எவ்வளவு கிளாமரா டிரெஸ் பண்ணிட்டு, எந்த கார்ல சுத்தினாலும் யாரும் கண்டுக்கிறதில்லை. ஒரு பெண் காஸ்ட்லியான கார்ல வந்தாள்னா, அதை யாரோ கிப்ட்டா கொடுத்திருக்கணும்னுதான் சொல்வாங்க. அவங்க பார்வையில சொந்தமா காஸ்ட்லியான கார் வாங்கத் தகுதியில்லாதவங்க பெண்கள். நானும் இந்த மாதிரி கமென்ட்களை எதிர்கொண்டிருக்கேன். ஆணாதிக்கச் சமுதாயமான இங்கே பெண்களேகூட இந்தச் சிந்தனையிலிருந்து வெளியே வரத் தயாரா இல்லை. இப்படிப் பதியவைக்கப்படற நம்பிக்கைகளிலிருந்து பெண்கள் முதல்ல வெளியே வரணும்.

ஸ்்போர்ட்ஸ்ல எந்தப் பெண்ணுக்குப் பிரச்னை வந்தாலும் முதல் ஆளா நான் குரல் கொடுக்கறேன். என்கூட சேர மத்தவங்களுக்கு பயம். என்னை மாதிரியே அவங்களும் அடுத்து டார்கெட் பண்ணப்படலாம் என்ற பயம்.’’

“ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் வெளியே வரணும்!”

``உங்கள் குடும்பத்தின் சீனப் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்...’’

‘`என் தாத்தா சாந்தி ஸெங். காந்தியவாதி. ‘பை தி சைடு ஆப் பாபு’ன்னு காந்தியைப் பத்தி ஒரு புத்தகம் எழுதியிருக்கார். அடிக்கடி இந்தியா வந்திருக்கார். காந்திஜிதான் தாத்தாவுக்கு சாந்தின்னு பெயர் வெச்சார். சிங்கப்பூர்ல ஒரு சீன நியூஸ்பேப்பர்ல சீப் எடிட்டரா இருந்தவர். அம்மாவோடு காந்தியின் ஆசிரமத்துக்கு வந்தபோதுதான் அந்தப் புத்தகத்தை எழுதினார். அம்மா சைனீஸ். அப்பா தெலுங்கு பேசற இந்தியன். ஒரே காலேஜ்ல படிச்சபோது காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

என்னைப் பார்க்கிறவங்க, ‘நீ நேபாளி மாதிரி இருக்கே’ன்னு சொல்லிருக்காங்க. என்னை சீன மொழியில கெட்டவார்த்தை சொல்லிக் கூப்பிட்டிருக்காங்க. அர்த்தம் புரியாததால அதையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டதில்லை. இப்ப சோஷியல் மீடியாவில் நடக்குற விஷயங்களைப் பார்க்கறபோதுதான் இந்த மோசமான விஷயங்கள் புரியுது.’’

``விஷ்ணு விஷால் உங்க வாழ்க்கைக்குள்ள எப்படி வந்தார்?’’

‘`விஷ்ணுவுக்கும் எனக்கும் பொதுவான ஒரு நண்பர் வீட்டுக் கல்யாணத்துல அறிமுகமானோம். எதுவும் திட்டமிட்டு நடக்கலை. இது வெறும் நட்பில்லை, அதுக்கும் மேலன்னு புரிய ஒரு வருஷம் ஆச்சு. ரெண்டு பேரும் 30 ப்ளஸ் வயசுல இருக்கோம். காலேஜ் ஸ்டூடன்ட்ஸுக்கு வர்ற மாதிரியான லவ்வெல்லாம் இல்லை. ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான விருப்பங்கள், லட்சியங்கள் இருக்கிறது புரிஞ்சது. வாழ்க்கையில மட்டுமல்ல, கரியர்லயும். அப்படிப்பட்டவர்கூட இருக்கிறது சந்தோஷமான விஷயமில்லையா?’’

``இரண்டு பேருமே முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியைச் சந்திச்சவங்க. இந்த உறவு சரியானதா இருக்கும்னு எப்படி நம்புறீங்க?’’

‘`கடந்த காலக் கசப்புகளைச் சுமந்துக்கிட்டே இருந்தோம்னா வாழ்க்கையில் அடுத்தடுத்து நகரவே முடியாது. விஷ்ணுவும் இப்போ நிறைய பக்குவப்பட்டிருக்கார். நான் விஷ்ணுவோட சினிமாத் துறையை மதிக்கிறேன். அவர் என்னுடைய ஸ்போர்ட்ஸ் துறையை மதிக்கிறார். பரஸ்பரமான அந்த மரியாதைதான் எங்க உறவை பலப்படுத்தற விஷயம்னு நம்பறோம்.’’

``முதல் திருமணத்தின் தோல்வி, மகனைப் பிரிந்ததுன்னு விஷ்ணு கடுமையான டிப்ரெஷனுக்குள்ளே போய், ஆல்கஹாலுக்கு அடிமையாகி மீண்ட கதைகளைப் பகிர்ந்திருந்தார். அவரை மீட்டதில் உங்க ரோல் என்ன?’’

‘`நான் ரொம்ப பாசிட்டிவ்வான மனுஷி. டிப்ரெஷன் என்பது ஒருத்தரைக் காணாமப் போகச் செய்திடக்கூடாதுன்னு நினைக்கிறவள். எனக்கும் டிப்ரெஷன் இருந்திருக்கு. ஆனா நான் அதை அணுகின விதம் வேற மாதிரி. விஷ்ணு தன்னுடைய டிப்ரெஷன்ல மூழ்கிடாம, கரியர்ல கவனம் செலுத்தணும்னு நினைச்சேன். எதைப் பத்தியும் யாரைப் பத்தியும் கவலைப்பட வேணாம்னு சொன்னேன். நானா இருந்தாலும் சாப்பிட்டேனா, தூங்கினேனான்னு யோசிக்காதேன்னு சொன்னேன். அவரும் ஒரு ஸ்போர்ட்ஸ் பர்சன்தான். நிச்சயம் மீண்டு வருவார்னு நம்பினேன். வந்திருக்கார்.’’

``சென்னையில் விஷ்ணுவின் வீட்டில்தான் நீங்க தங்கியிருக்கீங்கன்னும், அது அவரின் பெற்றோருக்கு விருப்பமில்லாததால் தினமும் வீட்டில் சண்டைன்னும் ஒரு செய்தி... அப்படியா?’’

‘`செம காமெடியா இருக்கு... விஷ்ணுவின் அப்பா எனக்கும் அப்பா மாதிரி. என்கூட ஜாலியா அரட்டை அடிப்பார். விஷ்ணுவின் அம்மா எனக்காக சூப்பரா சமைச்சுக் கொடுப்பாங்க. சென்னையில் அவங்க வீட்டுக்குப் போற நாள்கள் செம ஜாலியா இருக்கும். மற்ற நாள்களில் தினம் அவங்ககிட்ட பேசிடுவேன்.அகாடமி ஆரம்பிச்ச பிறகு அடிக்கடி சென்னைக்குப் போக முடியலை.’’

``எப்போ கல்யாணம்?’’

‘`சீக்கிரமே... இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்.’’