கட்டுரைகள்
Published:Updated:

“அரசியலால நிம்மதி போச்சு!” - What next தீபா?

தீபா
பிரீமியம் ஸ்டோரி
News
தீபா

எல்லாக் கேள்விகளுக்கும் அதிர அதிர சிரித்தபடி செம கூலாக பதில் சொல்கிறார் தீபா.

“நல்லது செய்யணும்கிறது முயற்சியால் வர்றது இல்ல... அரசியல்ல இல்லாததனால் அது தொலையுறதும் இல்ல..!” - பேசும்போதே ‘பஞ்ச்’ தெறிக்கவிடுகிறார் ஜெ.தீபா. லாக்டௌன் தந்த மாற்றமா இல்லை அரசியலை விட்டு வெளியேறியதால் வந்த ஜென் நிலையா தெரியவில்லை. எல்லாக் கேள்விகளுக்கும் அதிர அதிர சிரித்தபடி செம கூலாக பதில் சொல்கிறார் தீபா.

``லட்சோப லட்ச(!) தொண்டர்கள் ஆதரவோட ஒரு கட்சியை ஆரம்பிச்சீங்க. அந்தக் கட்சியோட பேராச்சும் இப்ப ஞாபகம் இருக்கா?”


“ஹாஹா... எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை. எப்படிங்க மறப்பேன்? ஆனா, அந்தப் பெயரை சும்மா வைக்கல. பதினைஞ்சு பேர் வெவ்வேற பெயர்களைப் பரிந்துரை செஞ்சு அதுல நான் டிக் பண்ணின பேருங்க அது!”

``ஜெயலலிதாவோட அண்ணன் மகளான உங்களை அப்போலோ வாசல்ல பார்த்து ஷாக் ஆன ஆட்களில் நானும் ஒருவன். உங்களை உள்ளே விடாமத் தடுத்து நிறுத்துனதுதான் நீங்க ஒரு அரசியல்வாதியா உருவாக முதல் காரணமா?”


“என்னைச் சிலர் ஏன் தடுத்தாங்கன்னு இப்பவரை புரியலை. ஆனா, அது மட்டும் காரணம் இல்லை. ஊடகங்கள் என்னைக் கவனிக்கும் முன்பே சிலபேரு என்னை அம்மா சாயல்ல (அத்தையை அம்மா என்றுதான் அழைக்கிறார்) நான் இருக்கேன்னு என்னைப் பார்க்க வர ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க நம்ப மாட்டீங்க. அ.தி.மு.க உறுப்பினர் கார்டையெல்லாம் கட்டுக்கட்டா கொண்டு வந்து வீட்டு வாசல்ல கொட்டிட்டுப் போயிடுவாங்க. தூங்கி எந்திரிச்சா ‘முதல்வன்’ படத்துல வர்ற மாதிரி மக்கள் கூட்டம் வாசல்ல நிக்கும். நிறைய பேரு என்னை எமோஷனலா அரசியலுக்கு வாங்கன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்துல நான் ஏத்துக்கவே இல்லை. ஏன்னா எனக்கு அரசியல் தெரியாது.என் தனிப்பட்ட விருப்பத்துக்கு எதிராத்தான் நான் அரசியலுக்குள்ள வந்தேன். அது தப்பான முடிவுன்னு தாமதமாத்தான் புரிஞ்சுக்கிட்டேன்!”

``உங்களை யாராச்சும் மிரட்டினாங்களா...?”


“குறிப்பிட்டு யாரையும் சொல்ல மாட்டேன். ஆனா, சிலபேருக்கு நான் அரசியல்ல இருக்குறது உறுத்தல். ஆறு மாசம் மறைமுகமா மிரட்டலெல்லாம் இருந்துச்சு. ஆனா, அதுக்காக பயந்து அரசியலை விட்டுப் போகலை. நல்ல பெயர் கிடைக்கலைங்க. கடினமா உழைச்சும் உரிய அங்கீகாரம் கிடைக்கலை. ஏமாற்றம்தான் மிஞ்சுச்சு. அரசியலுக்கு வந்தபிறகு நான் இழந்தது நிறைய. தூக்கம், சாப்பாடு, நிம்மதி போச்சு. ஒரு கட்டத்துல இது நமக்கு சரிப்பட்டு வராதுன்னு தோணுச்சு. நம்ம பாதை வேறன்னு முடிவெடுத்து பேரவையைக் கலைச்சிட்டு விலகிட்டேன். இப்ப நான் நிம்மதியா இருக்கேன்!”

``நீங்க இப்படிச் சொன்னதும் வீட்டுக்கு முன்னாடி நின்ன கூட்டம் சும்மாவா விட்டுது?”


“அம்மா இறந்ததும் எமோஷனலா உருவான அலைதான் அந்தக்கூட்டம். அப்பாவும் அத்தையும் ஒரே சாயல்ல இருப்பாங்க. அதுவே பலபேருக்குத் தெரியாது. அவங்களுக்கு திடீர்னு புரட்சித்தலைவி சாயல்ல என்னைப் பார்த்ததும் ஷாக். சிலபேரு நான் அம்மாவைக் காப்பி அடிக்கிறேன்னுகூட நினைச்சாங்க. நான் ஏன் அவங்களைப் பார்த்துக் காப்பியடிக்கணும்? ஆனா, அப்பவே உங்களை மாதிரி மீடியா நண்பர்கள் சிலர், ‘பார்த்துட்டே இருங்க. இந்தக் கூட்டம்லாம் கொஞ்ச நாளில் காணாமப் போயிடும்’னு சொன்னாங்க. அப்படித்தான் ஆச்சு. ஓகே எல்லாம் நல்லதுக்குத்தான்னு நினைக்கிறேன்!”

``இதைத் தோல்வின்னு சொல்லலாமா?”

 “அரசியலால நிம்மதி போச்சு!”  - What next தீபா?


“பாடம்னு சொல்லலாம். ஒரு வாய்ப்பு வந்துச்சு வந்தேன். இப்ப இது நம்ம ஏரியா இல்லைன்னு தெரிஞ்சதும் விலகிட்டேன். அரசியலைத் தாண்டி இந்த உலகத்துல நிறைய இருக்குங்க. அடிப்படையில நான் ஜர்னலிஸ்ட். என்னோட கனவு ஒரு எழுத்தாளரா ஆகணும்கிறதுதான். இனி அதை நோக்கித்தான் என் பயணம் இருக்கும்!”

``ஆனா, மீம் மெட்டீரியலா கண்டென்ட் கொடுத்திட்டே இருந்தீங்களே? உங்க கணவர் மாதவனோடு உங்களுக்கு ஏற்பட்ட முரண்பாடு... ஒரேவீட்டுல இருந்தும் தனித்தனிக் கட்சி ஆரம்பிச்சு அப்புறம் ஒன்றாக்கின்னு குழப்பமா இருந்தீங்க... நடுவுல புதுப்புது நிர்வாகிகள்னு புதுக் குழப்பங்கள்... உங்க சகோதரர் தீபக்கூடவெல்லாம் சண்டை போட்டீங்க...”

(இடைமறிக்கிறார்)

“எல்லாக்குடும்பத்துலயும் பிரச்னை இருக்கத்தானே செய்யும்? சொந்த பந்தங்களை எந்தச் சூழல்லயும் நாம இழக்கக்கூடாது. உறவுகள் எப்போதும் கூடவேதான் இருப்பாங்க. இப்ப எல்லாம் சுபம். மாதவன் என்னை நல்லாப் புரிஞ்சுக்குவார். என்னோட எல்லா முடிவுகளையும் நானா சுயமா சிந்திச்சுதான் எடுக்குறேன். அதைப் புரிதலோடு ஏத்துக்குறார். இந்த லாக்டௌன்ல இன்னும் புரிதல் உண்டாகியிருக்கு!”

 “அரசியலால நிம்மதி போச்சு!”  - What next தீபா?

``இப்பவும் நினைச்சா ஆச்சர்யப்பட வைக்கிற அளவுக்கு உங்க அத்தையுடனான மலரும் நினைவுகள் ஏதாச்சும் இருக்கா?”


“நிறைய இருக்குங்க. என் பேர்கூட அவங்க வெச்சதுதான். சின்னவயசுல நிறைய பேசுவாங்க. ‘ஏய் இந்த ஹேர்க்ளிப் நல்லா இருக்கே... எங்கே வாங்குனே?’ன்னுகூட கேப்பாங்க. 91-ல அவங்க சி.எம் ஆனப்போ நேரம் கிடைக்கும்போதெல்லாம் கூப்பிட்டுப் பேசுவாங்க.”

"என் தனிப்பட்ட விருப்பத்துக்கு எதிராத்தான் நான் அரசியலுக்குள்ள வந்தேன். அது தப்பான முடிவுன்னு தாமதமாத்தான் புரிஞ்சுக்கிட்டேன்"
"என் தனிப்பட்ட விருப்பத்துக்கு எதிராத்தான் நான் அரசியலுக்குள்ள வந்தேன். அது தப்பான முடிவுன்னு தாமதமாத்தான் புரிஞ்சுக்கிட்டேன்"

``இப்ப உள்ள அரசியல் சூழலை கவனிக்கிறீங்களா? 2021 தேர்தல் முடிவு யாருக்கு சாதகமா இருக்கும்? உங்களுக்கு ஆபர் எதுவும் வருதா?”


“நீங்க வேற... என்னோட வாழ்க்கையில ஒரு ரெண்டு வருஷத்தை வீணாக்கிட்டோம்னு நினைச்சுட்டு இருக்கேன். பச்சைக் காக்கா பறக்குதுன்னா ஆமா பறக்குதுன்னு சொல்லத் தெரியாது எனக்கு! அதனால எனக்கு இனி அரசியலே போதும்டா சாமின்னு முடிவெடுத்துட்டேன். அப்புறம் நீங்க கேட்குறதால கட்சிகளைப் பத்திப் பொதுவா சொல்றேன்.

அ.தி.மு.க-ல வெளிப்படைத்தன்மை இல்லை. ரஜினி கட்சி ஆரம்பிக்கவே இல்லை. கமல் கட்சி பற்றி இந்தத் தேர்தல்லதான் என்னன்னு தெரியும். அவ்ளோதான் நான் கவனிச்சதுல பேசமுடியும்.”

``லாக்டௌன்ல ஸ்ட்ரெஸ்ஸைத் தவிர்க்க என்ன படம் பார்த்தீங்க?”

“மாதவன்
என்னை நல்லா
புரிஞ்சுக்குவார்
லாக்டௌன்ல
இன்னும் புரிதல் உண்டாகியிருக்கு!”
“மாதவன் என்னை நல்லா புரிஞ்சுக்குவார் லாக்டௌன்ல இன்னும் புரிதல் உண்டாகியிருக்கு!”


“என்னைப் பத்தி வந்த ட்ரோல்ஸ் பார்த்தேன். நகைச்சுவையா இருந்தா ரசிக்க வேண்டியதுதானே! க்ளாசிக் மூவீஸ் நிறைய பார்த்தேன். வெப் சீரிஸ்லாம் அலர்ஜிங்க. ஓ.டி.டி-ல ரிலீஸான படம் எல்லாத்தையும் இனிமேதான் பார்க்கணும். நிறைய புக்ஸ் படிச்சேன். ரெண்டு வருஷமா வறண்டுபோயிருக்குற கிரியேட்டிவிட்டி இப்ப தோண ஆரம்பிச்சிருக்கு. மனசுக்குள்ள நிறைய ஒன்லைன்ஸ் ஓடுது. நிறைய எழுதணும்னு பிளான் போட்டு வெச்சிருக்கேன். சமைக்கிறது, சாப்பிடுறதுன்னு இருந்தேன் அதனால ஒர்க் அவுட் பண்ணணும். இனிமேதான் வெளில டிராவல் பண்ணணும். என்னோட 2.0 வெர்ஷன் நிச்சயம் ஆச்சர்யமா இருக்கும்!”

``கடைசியா ஒரு கேள்வி... ஒருநாள் தூங்கி எந்திரிச்சா வீட்டுவாசல்ல கரைவேட்டிக்காரங்க நீங்க அரசியலுக்கு வரணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறாங்க. என்ன பண்ணுவீங்க..?”

“அடிப்படையில
நான் ஜர்னலிஸ்ட்.
என்னோட கனவு
ஒரு
எழுத்தாளரா ஆகணும்கிறதுதான்”
“அடிப்படையில நான் ஜர்னலிஸ்ட். என்னோட கனவு ஒரு எழுத்தாளரா ஆகணும்கிறதுதான்”


“தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கங்கன்னு சொல்வேன். (சிரிக்கிறார்)

சும்மா சொன்னேன். அட்வைஸ் பண்ணி அன்பா அனுப்பி வைப்பேன்!”