
‘`காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்றுதான் இதுவரை சிறுபான்மையினர் உணர்ந்திருந்தார்கள்.
டெல்லியில் ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை. வெற்றிபெற்ற அர்விந்த் கெஜ்ரிவாலை வாழ்த்தும் ப.சிதம்பரம், அதற்காக அவரை வறுத்தெடுக்கும் ஷர்மிஸ்தா முகர்ஜி என்று காங்கிரஸுக்கு இது சோதனையான காலகட்டம். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸைச் சந்தித்தேன்...
‘`டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இப்படியொரு தோல்வி. அதுபற்றி..?’’
‘`ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த காங்கிரஸ் கட்சி, இன்று மேற்கு வங்காளம், பீகார், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என ஒவ்வொரு மாநிலத்திலும் சுருங்கிக்கொண்டே வருகிறது; இந்தப் பட்டியலில், இப்போது டெல்லியும் இணைந்துவிட்டதே என்பதுதான் மிகப்பெரிய வருத்தம்.
63 தொகுதிகளில் கட்டுத்தொகையைக்கூட காங்கிரஸ் கட்சி இழந்திருக்கிறது என்றால், இதைத் தேர்தல் தோல்வி என்று மட்டுமே பார்த்துவிட முடியாது. காங்கிரஸின் அடிப்படை வேர்களே பட்டுப்போயிருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். எனவே, காங்கிரஸ் கட்சியின் இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம், எங்கே கோளாறு என்பதைக் கண்டறியவேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம்!’’
‘`காங்கிரஸ் தலைமை, ‘மண்ணுக்கான அரசியலை’ப் பேச மறந்தது அல்லது மறுத்ததுதான், மேற்கு வங்கத்தில் ஆரம்பித்து ஆந்திரா வரையிலான ஆட்சி மாற்றத்துக்குக் காரணமென்று சொல்லலாமா?’’
‘`நாடாளுமன்றத்தில் தங்களுடைய இடத்தை அதிகப்படுத்திக்கொள்வதற்காக, மாநிலத்தில் தங்களுக்கு இருக்கிற பிடிப்பை விட்டுக்கொடுத்தும், தளர்த்தியும் வந்திருந்ததன் எதிரொலிதான் இன்றைய நிலை. அகில இந்திய காங்கிரஸை நடத்துவது மட்டுமே முனைப்பான பணி என்று என்றைக்கு நாங்கள் முடிவெடுத்தோமோ அன்றைக்கே சராசரி மக்களோடு காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு அறுந்துபோய்விட்டது.

உதாரணமாக, தமிழகத்தில் 1967-ல் 45 விழுக்காடு வாக்குவங்கியை வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, இன்றைக்கு வெறும் 5 விழுக்காடாகத் தேய்ந்துவிட்டது. சுருக்கமாகச் சொன்னால், மத்திய ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மாநிலக்கட்சியின் நலனில், தொடர்ந்து சமரசம் செய்துவந்துவிட்டோம்!’’
‘`சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைக்கூட காங்கிரஸ் இழந்துவிட்டதா?’’
‘`காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்றுதான் இதுவரை சிறுபான்மையினர் உணர்ந்திருந்தார்கள். ஆனால், கடந்த 3, 4 தேர்தல்களில், ‘யாரை வெற்றி பெற வைக்கப்போகிறோம்’ என்பதையும் தாண்டி, யார் ஆட்சிக்கு வரக்கூடாது...’ என்ற அணுகுமுறையோடு தான் சிறுபான்மையினர் வாக்களித்துவருகிறார்கள்.
எனவே, ‘யாருக்கு வாக்களித்தால், பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியும்’ என்பதைத்தான் அவர்கள் கருத்தில் கொள்கிறார்கள். தெலங்கானா, மேற்கு வங்கம் இரண்டுமே இதற்கு உதாரணங்கள் தான். ஆனால், இதே டெல்லியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மியை விடவும் காங்கிரஸ் கட்சிதான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது.
கள எதார்த்தம், தேர்தல் நிர்பந்தம் போன்றவையெல்லாம் இன்றைய காலச்சூழலில் சிறுபான்மையினருக்குத் தலைமை இடத்தைக் கொடுப்பதிலும், வழி நடத்துவதிலும் பல நெருக்கடிகளைத் தந்திருக்கிறது. 1989-ல் நான் கடையநல்லூர்த் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க கூட்டணி இல்லாமலேயே நின்று மிகப்பெரிய வெற்றிபெற்றேன். இத்தனைக்கும் இந்தத் தொகுதிக்குள்தான் மதமாற்றக் கலவரங்கள் நடைபெற்ற மீனாட்சிபுரம் பகுதியும் வருகிறது. இத்தனைக்கும் அந்தத் தொகுதியில் மொத்தமே ஆறாயிரம் கிறிஸ்தவ வாக்காளர்கள்தான் உண்டு. ஆனாலும் தமிழ்நாடு முழுக்க காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றிபெற்றவன் நான்தான். ஆனால், இன்றைக்கு அந்தக் களச்சூழல் எல்லாம் மாறிவிட்டது.
காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இஸ்லாமியரோ அல்லது கிறிஸ்துவரோ தலைவராக வந்ததில்லை. இன்றைக்கிருக்கிற சூழலில், ‘ஒரு கிறிஸ்துவரைத் தலைவராக்க வேண்டுமா...’ என்ற கேள்வி வரும்போது, நமக்கான வாய்ப்பு பறிபோய்விடுகிறது. ஏனெனில், முன்பெல்லாம் மத அடையாளம் என்பது மேலே அணிகிற சட்டையாகத்தான் இருந்தது; ஆனால், இப்போது அது நம் தோலாகவே மாறிவிட்டது. எனவே, இந்த அடையாளத்தோடுதான் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதற்காக காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நான் சமரசம் செய்துகொள்வதாக இல்லை.’’
‘`சபரிமலை விவகாரத்தில், நீங்களும்கூட பா.ஜ.க நிலைப்பாட்டைத்தானே எடுத்தீர்கள்?’’
‘`தேர்தல் அரசியலின் எதார்த்தங்கள் மற்றும் ஒரு வெகுஜனக் கட்சிக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் என இந்த இரண்டையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மதரீதியாக சிறுபான்மையின மக்களின் சமூகநீதி மற்றும் அரசியல் அங்கீகாரம் மறுக்கப்படும்போது நாங்கள் அதை எதிர்க்கிறோம். அதேச மயம் அவரவர் மதம் சார்ந்து இருக்கின்ற மரபுகள், பண்பாடுகள், உணர்வுகளை மதவெறி என்று பார்க்கமுடியாது. இதுதான் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு. இந்த வகையில்தான், கேரள மக்களின் மரபு மற்றும் பண்பாட்டினை மதித்து அங்கிருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியினரே சபரிமலை விவகாரத்தில் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்ற உரிமையை வழங்கியிருக்கிறோம்.’’
‘`2012-ல் உத்தரகாண்ட் காங்கிரஸ் அரசு, இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?’’
‘`யார் செய்தாலும் தவறு தவறுதான். மற்றபடி, ‘காங்கிரஸில் இதுபோன்ற மனப்பாங்கு உள்ளவர்கள் இல்லை’ என்று வாதம் செய்யமாட்டேன். 2012-ல் உத்தரகாண்ட் காங்கிரஸ் அரசு இட ஒதுக்கீட்டுக்கு எதிராகச் செயல்பட்டதாக இப்போது செய்திகள் வெளியான பிறகுதான் எனக்குமே இந்த விஷயம் பற்றித் தெரியவந்திருக் கிறது. அப்போதே இப்பிரச்னை பெரிய அளவில் பேசப்பட்டு, அகில இந்திய காங்கிரஸின் கவனத்துக்கு வந்திருந்தால், நிச்சயம் இப்பிரச்னையில் மத்திய காங்கிரஸ் அரசும் தலையிட்டிருக்கும். ஏனெனில், எஸ்.சி - எஸ்.டி மக்கள் முன்னேற்றத்துக்கான ஒவ்வொரு சட்டத்திருத்தமுமே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டதுதான்.’’
‘`தேர்தலில்கூட மதப்பாகுபாடு பாராமல் மக்கள் வாக்களித்து வெற்றிபெற வைக்கிறார்கள். ஆனால், கட்சிக்குள் மதப்பாகுபாடு பார்க்கப்படுவதை எப்படிப் புரிந்துகொள்வது?’’
‘`என்ன செய்வது... வாக்காளர்களுக்கு இருக்கிற தைரியம்கூட, சில சமயங்களில் அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு இல்லை. இப்படி எல்லா பலவீனங்களோடும் எல்லாக் குறைபாடுகளோடும் இருந்தாலும்கூட இருக்கின்ற கட்சிகளிலேயே சிறந்த கட்சி காங்கிரஸ் கட்சிதான் என்பது என் நிலைப்பாடு!’’
‘`தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி சரிந்துபோனதற்கான காரணம் என்ன?’’
‘`நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பாகக் கட்சியை ஆக்டிவேட் செய்வார்கள்; தேர்தலுக்குப் பின் அப்படியே கட்சியை இறக்கிவைத்துவிடுவார்கள். அதேபோல், சட்டமன்றத் தேர்தலின்போதும்கூட கூட்டணிக் கட்சிகளிடம் பேசி இடங்களை வாங்கிவைத்துவிட்டு, அதன்பின்னர் அந்த இடங்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தேடிக்கொண்டிருப்பார்கள்.

வேட்பாளர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்துவைத்துவிட்டு, பிறகல்லவா இடங்களைக் கேட்டுப் பெறவேண்டும்; அப்போதுதானே கட்சி ஜெயிக்கும். அதனால்தான், ‘40, 50 இடங்களைக் கொடுக்கிறோம்; ஆனாலும் நீங்கள் ஜெயிப்பதில்லை’ என்று தி.மு.க குற்றம்சாட்டுகிறது.’’
‘`சொந்தக் கட்சி குறித்து இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவதால் பிரச்னைகள் வராதா?’’
‘`இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேசாமல் இருக்க முடியும்? இப்போதும் பேசாமல் இருந்துவிட்டால் எப்படி? தனிப்பட்ட வகையில் கட்சியிடமிருந்து எனக்குப் பெரிதாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை.’’