சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“எம். ஜி. ஆரைப் பாராட்டினா மட்டும்தான் பிடிக்குமா?” வெடித்த ஜெயலலிதா

ஆர்.எம்.வீரப்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.எம்.வீரப்பன்

தந்தை பெரியாரின் உதவியாளர், எம்.ஜி.ஆரின் ‘சத்யா மூவீஸ்’ நிர்வாகி, எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் முன்னணி அமைச்சர், ஜெயலலிதாவின் தீவிர எதிர்ப்பாளர், ரஜினியின் முதல் அரசியல் பேச்சுக்கு மேடையமைத்துக் கொடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

94வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கும் மூத்த அரசியல் தலைவரைச் சந்தித்தேன்.

“புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை தான் என் சொந்த ஊர். படிக்கிற காலத்திலேயே கலைத்துறைமீது ஈடுபாடு. படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு டி.கே.எஸ். நாடகக் குழுவில், நடிகராக இணைந்தேன். கூடவே நாடக நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டேன்.

1945-ல் பெரியார் அறிமுகம் கிடைத்து, அவரின் உதவியாளரானேன். அப்போதுதான் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் எனப் பெரிய தலைவர்களோ டெல்லாம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது’’ என்றவர், எம்.ஜி.ஆருக்கும் தனக்குமான நெருக்கத்தைப் பற்றிப் பேசும்போது மட்டும் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்.

“இணை, நட்பு, தோழமை, பாசம் என ஒவ்வொரு உறவுக்கும் பெயர்கள் உண்டு. ஆனால், 1953-ல் எம்.ஜி.ஆரோடு எனக்கு அறிமுகம் கிடைத்தபிறகு அவரோடு இணைந்து பயணித்த காலகட்டத்தை, நாங்கள் இருவரும் அண்ணன் - தம்பியா, தோழமையா, நண்பனா, வழிகாட்டியா... இப்படி எந்த வார்த்தையில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

எம்.ஜி.ஆரின் நாடக மன்ற நிர்வாகியாக இருந்தபோதே, என்மீது வைத்திருந்த நம்பிக்கையால், ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரராகவும் என்னை உயர்த்தினார்.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த முதல் படம் ‘நாடோடி மன்னன்.’ உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண் என்று அடுத்தடுத்து படங்களைத் தயாரித்தோம். அப்போதெல்லாம் திரைப்படங்களின் வெற்றிவிழாக்கள் திரையரங்குகளில்தான் நடைபெறும். முதன்முதலில், ‘நாடோடி மன்னன்’ பட வெற்றியைப் பொதுவெளியில் நிகழ்த்திக்காட்டியது நான்தான். அண்ணா தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில், முக்கால் பவுன் மதிப்புள்ள 150 மோதிரங்களைச் செய்து, படத்தில் வேலைபார்த்த அத்தனை தொழி லாளர்களுக்கும் அணிவித்தோம்’’ என்றவர், தன் கை விரலில் அணிந்திருந்த அந்த மோதிரத்தையும் நமக்குப் பெருமையோடு காட்டி, சொந்தத் தயாரிப்புக் கம்பெனியாக சத்யா மூவீஸ் நிறுவனத்தை ஆரம்பித்த கதையையும் சொல்லத் தொடங்கினார்.

ஆர்.எம்.வீரப்பன்
ஆர்.எம்.வீரப்பன்

“தென்காசியைச் சேர்ந்த சங்கரன், ஆறுமுகம் என்ற இரு நண்பர்களோடு சேர்ந்துதான் 1963-ல் ‘சத்யா மூவீஸ்’ கம்பெனியை ஆரம்பித்தேன். ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தோம். மீதித் தொகையை ஏவி.எம். செட்டியாரிடம் கடனுதவி பெற்று, எம்.ஜி.ஆரை வைத்து ‘தெய்வத்தாய்’ என்ற முதல் படத்தை எடுத்தோம். நல்ல லாபம் கிடைத்தது. அன்றைக்கு அவர் உதவவில்லையென்றால், நான் தயாரிப்பாளர் ஆகியிருக்கவே முடியாது.

தந்தை பெரியாரின் உதவியாளர், எம்.ஜி.ஆரின் ‘சத்யா மூவீஸ்’ நிர்வாகி, எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் முன்னணி அமைச்சர், ஜெயலலிதாவின் தீவிர எதிர்ப்பாளர், ரஜினியின் முதல் அரசியல் பேச்சுக்கு மேடையமைத்துக் கொடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன். 94வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கும் மூத்த அரசியல் தலைவரைச் சந்தித்தேன்.

அதன்பிறகு தொடர்ந்து 27 படங்கள் எடுத்தேன். ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘பாட்ஷா’தான், சத்யா மூவீஸின் கடைசிப் படம்’’ என்றவர், சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் தொடர ஆரம்பித்தார்.

“பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவின்போது, ‘தமிழகத்தில் வன்முறை பெருகிவிட்டது’ என்ற பொருள்பட ரஜினிகாந்த் பேசிவிட்டார். அமைச்சர் பொறுப்பில் இருந்த நானும்கூட இதைச் சாதாரண ஒரு பேச்சாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஆனால், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. விழா முடிந்து மறுநாள் காலையிலேயே, போயஸ் தோட்டம் வரச்சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. சென்றேன். அங்கே ஜெயலலிதா இல்லை. இன்டர்காமில்தான் பேசினார்.

‘என்ன... நேத்து ரஜினி அப்படியெல்லாம் பேசியிருக்கிறார்... நீங்க மேடையில் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தீர்களா? அவர் என்னை அட்டாக் பண்ணித்தான் பேசியிருக்கிறார். நீங்க அதைக் கேட்டுக்கிட்டிருந்தீங்க... நீங்கதான் யார் என்னை அட்டாக் பண்ணிப் பேசினாலும் ரசிப்பீங்களே... உங்களுக்கு எம்.ஜி.ஆரைப் பாராட்டினாதானே பிடிக்கும்...’ என்று ஆவேசமாக வெடித்தவர், என் பதிலுக்குக் காதுகொடுக்காமல், ரிஸீவரை வைத்துவிட்டார். அதன்பிறகு, அமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டேன், கட்சிக் கூட்டங்களில் தொடர்ந்து புறக்க ணிக்கப்பட்டேன்.

1995 செப்டம்பர் 15-ம் தேதி கட்சி சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை. அதனால், காரைக்குடியில் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் சென்று பேசினேன். அங்கே, கட்சித் தொண்டர்களோடு ரஜினி ரசிகர்களும் சேர்ந்து வந்திருந்ததால், அரங்கமே திணறியது. அண்ணாவின் புகழைப் பேசிய அந்தக் கூட்டத்தில், ரஜினிகாந்த் பற்றியும் பேசினேன். அவ்வளவுதான்... அடுத்த இரண்டு நாள்களில், ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க-விலிருந்தே என்னை நீக்கிவிட்டார் ஜெயலலிதா’’ என்றவர், அதன்பிறகு ‘எம்.ஜி.ஆர் கழகம்’ என்ற கட்சி தொடக்கம், ரஜினிகாந்த் உடனான தொடர்புகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்தும் விரிவாகப் பேசத் தொடங்கினார்.

“எம். ஜி. ஆரைப் பாராட்டினா மட்டும்தான் பிடிக்குமா?” வெடித்த ஜெயலலிதா

“எம்.ஜி.ஆரின் நாடகக் குழுவில் தொடங்கி, அவருடனேயே பயணித்து, அ.தி.மு.க உருவாக்கத்திலும் உடனிருந்து, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா எனக் கட்சி இரண்டாகப் பிளவுபட்ட நேரத்தில் அரும்பாடுபட்டு இரு அணிகளையும் ஒருங்கிணைத்தது என, அ.தி.மு.க-வின் நீண்ட நெடிய பயணத்தில் சாதாரணத் தொண்டனாக இருந்து என்னால் முடிந்தவரை என் விசுவாசத்தைக் காட்டினேன். ஆனால், ஒரு திரைப்பட விழாவில், ரஜினிகாந்த் வெளியிட்ட கருத்துக்கு நான் மறுப்பு சொல்லவில்லை என்ற காரணத்துக்காக அடிப்படை உறுப்பினரிலிருந்தும் வெளியேற்றப்பட்டது எனக்கு ரொம்பவே மனவேதனையை ஏற்படுத்தியது. ‘பொதுவாழ்க்கையில் இருந்தே ஆகவேண்டும்’ என்ற வைராக்கியத்தையும் அது கொடுத்தது. அதனாலேயே, 1995 அக்டோபரிலேயே ‘எம்.ஜி.ஆர் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினேன். கட்சிக் கூட்டங்களின்போது ரஜினி ரசிகர்களும் எனக்குப் பெருவாரியாக ஆதரவு தந்தனர். ‘ரஜினி - ஆர்.எம்.வீ கூட்டு முயற்சியில் ஒரு இயக்கம்’ என்றெல்லாம் வெளியே செய்திகள் பரவின. ஆனால், ரஜினிகாந்த் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஒருநாள் என் வீட்டுக்கே வந்து நேரில் சந்தித்த ரஜினிகாந்த், 2 மணிநேரம் பேசினார். முடிவில், ‘நான் அரசியலுக்கு வருவதாக இல்லை’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

இதற்கிடையில், கோவையில் எம்.ஜி.ஆர் கழகம் நடத்திய கூட்டத்தில் பெருமள விலான ரஜினி ரசிகர்கள் வழக்கம்போல் கலந்துகொண்டார்கள். அதில் இரண்டு ரசிகர்கள், கூட்டம் முடிந்து ஊர் திரும்பும்போது விபத்து ஒன்றில் மரணமடைந்துவிட்டனர். இதையடுத்து, ‘இனி எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் என் பெயரோ, படமோ பயன்படுத்தக்கூடாது’ என்று அறிக்கை வெளியிட்டுவிட்டார்’’ என்று மனம் திறந்து பேசுபவர், இப்போதும் ரஜினி உடனான நட்பைத் தொடர்கிறார். ரஜினிகாந்தின் இரண்டாவது மகளின் திருமணத்தில் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்தவர், கருணாநிதியுடனான தனது நட்பையும் மனம் திறந்து பேச ஆரம்பித்தார்.

‘`தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்துவந்தபோது, அந்தப் பிரிவைத் தடுக்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனாலும் அவை பலனளிக்கவில்லை. அதன்பிறகே, நானும் எம்.ஜி.ஆரோடு இணைந்து அ.தி.மு.க உருவாக்கத்தில் பங்குகொண்டேன்.

பெரியாரின் குடியரசு பத்திரிகைப் பணியில் தொடங்கி எனக்குக் கலைஞருடன் பழக்கம் இருந்தது. ஆனாலும் அரசியல் ரீதியாக, கலைஞர் - எம்.ஜி.ஆர் என இரு துருவங்களாக இவர்கள் பிரிந்துபோனபிறகு, நான் எம்.ஜி.ஆரோடுதான் பயணித்தேன்.

அதன்பிறகு முழுக்க தி.மு.க எதிர்ப்பில் இருந்த நான், 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதே தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கவும் நேர்ந்தது. எனது 80-வது பிறந்தநாளின்போது என் வீட்டுக்கே நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார் கலைஞர். இப்போது என் 94-வது பிறந்தநாளுக்கு என் வீடு தேடி வந்திருந்தார், அவர் மகன் ஸ்டாலின்!’’ என்று மகிழ்ச்சியில் பூரிக்கும் ஆர்.எம்.வீரப்பன், தன் வாழ்நாளின் சாதனையாகச் சொல்லவருவது இதுதான்...

“ஆசியாவிலேயே மிக உயர்ந்த ஆலய கோபுரங்களான திருவரங்கம் மற்றும் தென்காசிக் கோயில் கோபுரங்கள் அறநிலையத்துறை அமைச்சராக நான் பதவி வகித்துவந்த காலங்களில், என் முயற்சியால் கட்டப்பட்டவை என்பதுதான் என் வாழ்நாள் பெருமை!

“எம். ஜி. ஆரைப் பாராட்டினா மட்டும்தான் பிடிக்குமா?” வெடித்த ஜெயலலிதா

திருவரங்கம் கோயில் மொட்டைக் கோபுரமானது மாநில தொல்பொருள் துறைக் கட்டுப்பாட்டில் இருந்துவந்ததால், ‘கோபுரத்தை அப்படியேதான் பராமரிக்க வேண்டும். கட்டுமானப் பணிகள் எதுவும் செய்யக்கூடாது’ என்ற நிலை இருந்துவந்தது. இந்த நிலையில், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள், திருவரங்கம் வந்திருந்தபோது, ‘இப்படி மொட்டைக் கோபுரமாக நிற்கிறதே’ என்று வருத்தப்பட்டிருந்தார்.

இதையறிந்த அகோபிலமட ஜீயர், ‘இந்தக் கோயில் கோபுரத்தை நானே பணம் திரட்டிவந்து கட்டுகிறேன். என் பணியில் அறநிலையத்துறை தலையிடாமல் இருந்தால் மட்டும் போதும்’ என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். ‘சரி’ என்று அவருக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு, மாநில தொல்பொருள் ஆய்வுத் துறையில் தலையிட்டு, கோபுரம் கட்டுவதற்கான அனுமதியை அளிக்கச் செய்தேன்.

இதையடுத்து, டி.வி.எஸ்., இளையராஜா எனப் பல்வேறு வி.ஐ.பி-களிடமும் பணம் திரட்டிவந்த ஜீயர், தஞ்சாவூர்க் கோயில் விமானத்தைவிடவும் உயரமாக 236 அடியில் கோபுரத்தைச் சிறப்புறக் கட்டி முடித்தார். ஒருமுறை கோபுரப் பணியைப் பார்வையிட நான் சென்றிருந்தபோது, பணியாளர்களுக்குக் கூலி வழங்கிக்கொண்டிருந்த ஜீயர், என்னையும் அருகே அழைத்து, 100 ரூபாயை என் கையில் திணித்தார்.

‘எனக்கு எதற்கு...?’ என்று நான் திகைக்க, ‘இது உனக்கு சம்பளமோ கூலியோ அல்ல... போனவாரம் உனக்குப் பிறந்தநாள் வந்ததில்லையா... அதற்கான என் அன்பளிப்பு’ என்று சொல்லிச் சிரித்தார்.

அந்த 100 ரூபாயை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

அதேபோல், தென்காசிக் கோயில் கோபுரத்தைக் கட்டுவதற்காகத் தொழில் அதிபர் பா.சிவந்தி ஆதித்தனை நான் முதன் முதலில் சந்தித்துப் பேசியபோது, அவர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ‘அது ரொம்பப் பெரிய காரியம். என்னால் அது முடியாது’ என்று மறுத்தார். ஆனால், ‘ராஜராஜ சோழன் மாபெரும் வீரன். அவனைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நமக்குக் கிடைத்தாலும், அவன் வாழ்ந்த அரண்மனையோ அல்லது மற்ற தடயங்களோ இப்போது இல்லை. ஆனால், ‘தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன்’ என்ற புகழ்தான் இன்றைக்கும் அவன் பெயரை நிலைத்திருக்கச் செய்கிறது. அதைப்போல, தாங்களும் இந்த வரலாற்றுத் திருப்பணியை ஏற்றுச் செய்துமுடிக்க வேண்டும். தயவு செய்து மறுக்காதீர்கள்’ என்று நீண்ட நேரம் அவரோடு வாதாடி, அவரை சம்மதிக்க வைத்தேன்.

ஒப்புக்கொண்டபின், சிவந்தி ஆதித்தனும், தனது பல்வேறு பணிகளுக்கிடையேயும் கோபுரம் கட்டும் பணிக்காகத் தனியே நேரம் ஒதுக்கி, குறித்த காலத்தில் பணியை நிறைவு செய்தார். கோயில் கோபுரக் கட்டுமானத்தின்போது, நான் அறநிலையத்துறை அமைச்சராக இருந்ததால் என்னளவில் நான் சில முயற்சிகளை மேற்கொண்டது உண்மைதான். ஆனாலும், கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றபோது, நான் அமைச்சராக இல்லை. அதனாலேயே அந்த விழாக்களில் நான் பங்கேற்கவு மில்லை!’’ என்கிறவரின் கண்களில் அதுவரை இருந்த பெருமிதம் வடிந்து, லேசான ஏக்கம் எட்டிப் பார்க்கிறது!