சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

“என் பேனாவுக்குப் பசி அதிகம்!”

ராஜேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேஷ்குமார்

எழுத்து

ராஜேஷ்குமார்! ஐம்பது ஆண்டுகள் தாண்டியும் ரேஸில் ஓடிக்கொண்டிருக்கும் எழுத்துக் குதிரை. ஐம்பது கேள்விகளோடு அவரைச் சந்தித்தேன். சளைக்காமல் பதில் சொன்னது அவர் பேனா.

1. பல நாவல்களுக்கு, தலைப்பைச் சொல்லிவிட்டு அதற்குக் கதை யோசித்திருப்பீர்கள். அப்படி உங்களுக்குச் சவால் விட்ட தலைப்பு எது?

``ஆசிரியர் சாவி அவர்களை ஒருமுறை அவருடைய பத்திரிகை அலுவலகத்தில் சந்தித்தபோது அவர், `ராஜேஷ்குமார்! இந்தத் தடவை, `சாவி தீபாவளி மலரி’லிருந்து உங்கள் தொடர்கதையை ஆரம்பிக்கலாம். அது உங்கள் `மாஸ்டர் பீஸ்' கதையாக இருக்க வேண்டும். இந்த இஷ்யூவில் விளம்பரம் வைக்க வேண்டும். அற்புதமான ஒரு தலைப்பைச் சொல்லுங்கள்’ என்றார். நான் சற்றும் யோசிக்காமல் `காகிதப்பூ தேன்' என்று சொன்னேன்.

சொல்லிவிட்டு வந்துவிட்டேனே தவிர, இந்த `காகிதப்பூ தேன்' தலைப்புக்கு என்ன மாதிரியான கதை எழுதுவது என்பதில் திணறிவிட்டேன். எந்த வேலையைச் செய்தாலும் அந்தத் தலைப்பு என் மூளையைப் பிறாண்டிக் கொண்டேயிருந்தது. சரியாக ஐந்தாவது நாள். காலையில் வாக்கிங் போனபோது ஒரு பங்களாவின் காம்பவுண்டு சுவர் முழுவதும் `போகன் வில்லா' பூக்கள் பல வண்ணங்களால் பூத்துக் குலுங்க, ஒரு சிறிய பூச்சிகூட அந்தப் பூக்களின் மேல் இல்லை. அடுத்த சில நிமிடங்களில் கதைக்கான கரு ஒரு புள்ளியாக உற்பத்தியாகி, விஸ்வரூபம் எடுத்தது. அன்று மாலைக்குள் `காகிதப்பூ தேனி’ன் முதல் அத்தியாயம் தயாராகி தபாலில் பறந்தது. 41 வாரங்கள் வெளிவந்த அந்தக் கதை இன்றளவும் வாசகர்களால் வாசிக்கப்பட்டு, பேசப்படுகிறது.’’

ராஜேஷ்குமார் 50
ராஜேஷ்குமார் 50

2. ஒரு வரலாற்றுத் தலைவரை உயிர்ப்பிக்கலாம் என்றால் யாரை உயிர்ப்பிப்பீர்கள்... ஏன்?

``சுபாஷ் சந்திர போஸ். பல நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு சரியான ஒரு பதில் கிடைக்கும்.’’

3. ‘விவேக், ரூபலா, கோகுல்நாத், விஷ்ணு இவர்களெல்லாம் தவிர்த்து, வேறு கதையில் நீங்கள் எழுதி உங்கள் மனதில் நின்ற கதாபாத்திரம் யார், ஏன்?

`` `பூரணி’ என்னும் கதாபாத்திரம். 1990களில் `முதல் பகல்' என்ற தலைப்பில் தேவி வார இதழில் ஒரு தொடர்கதை எழுதினேன். கதையின் நாயகி பூரணிக்குக் கண்பார்வை கிடையாது. ஆறு வயதில் ஒரு விபத்தில் பார்வை பறிபோன பூரணிக்கு எப்போது வேண்டுமானாலும் `ஆப்டிக் நரம்பு' உயிர்பெற்றுப் பார்வை வரலாம் என்று வெளிநாட்டு டாக்டர்கள் சொல்லியிருப்பார்கள். பூரணி பருவமடையும்போதோ, திருமணமான பின்போ, குழந்தைப் பேற்றின்போதோ பார்வை திரும்ப வரும் வாய்ப்பு அதிகம் என்று டாக்டர்கள் சொன்னதன் பேரில் பூரணியின் பெற்றோர் அவளுக்குக் கல்யாணத்தைச் செய்துவைப்பார்கள். மாப்பிள்ளை, அத்தை மகன்தான். பூரணிக்கு எப்போது அந்த முதல்பகல் தரிசனம் கிடைக்கும் என்பதுதான் கதையின் கரு.’’

4. விஞ்ஞான வளர்ச்சியில் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது எதை?

``இயற்கையைப் பதம் பார்க்கும் எந்த ஒன்றையுமே.’’

5. நீங்கள் ஒரு எம்.பியாக வெற்றி பெற்றுப் நாடாளுமன்றம் சென்றால், கேள்வி நேரத்தில் எது மாதிரியான கேள்வியைக் கேட்பீர்கள்?

``நீட் நுழைவுத் தேர்வை விடாப் பிடியாகக் கட்டாயச் சட்டமாக்கும் மத்திய அரசு, இன்றைய தலைமுறையின் ஒழுக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பதம்பார்க்கும் மதுவை ஒழிக்க, நாடு முழுவதும் கட்டாய மதுவிலக்குச் சட்டம் கொண்டுவந்தால் என்ன?’’

6. `முதல் கோணல் முற்றிலும் கோணல்', `முயற்சி செய்தால் வெற்றி நமதே!' இந்தப் பழமொழிகள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

``செய்வதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டது முதல் பழமொழி. ஒரு முக்கியமான வேலையில் ஒருவன் தோற்றால், அவன் சோர்ந்துபோய்விடக் கூடாது என்பதற்காகச் சொல்லப்பட்டது இரண்டாவது பழமொழி. நோய்க்கு ஏற்ற மருந்தைச் சாப்பிடுவது மாதிரி, தேவையான நேரத்துக்கு, தேவையான பழமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.’’

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

7. உங்களைச் சந்திக்க வந்து உங்களை பிரமிக்க வைத்த வாசகர் யார்?

``ஒருவரா இருவரா எடுத்துச் சொல்ல... இருந்தாலும் இதோ ஒருவர். ஆறு மாதங்களுக்கு முன்னர் நான் என் வீட்டு வாசலில் நின்றிருந்தபோது கட்டட வேலைக்குச் செல்லும் ஒரு நடுத்தர வயதுப் பெண் தயக்கத்தோடு என்னை நோக்கி வந்தார். அதிர்ச்சி அகலாத விழிகளோடு கேட்டார்.

`ஐயா! நீங்க கதை எழுதுற ராஜேஷ்குமார்தானே?’

நான், `ஆமாம்’ என்று சொன்னதும், அந்தப் பெண் உணர்ச்சிவசப்பட்டு என் கையைப் பிடித்துக்கொண்டு, `ஐயா! நான் சித்தாள் வேலைக்கு ஒரு தைரியமான பொண்ணா போறேன்னா அதுக்குக் காரணம், நான் சின்ன வயசுலேருந்து படிச்சுக்கிட்டிருக்குற உங்க நாவல்கள்தான்யா. படிச்சது அஞ்சாங்கிளாஸ்தான். ஆனா, கட்டட வேலை பார்க்கிறப்ப இன்ஜினீயர்ஸ் இங்கிலீஷ்ல பேசினாலும் எனக்கு நல்லாப் புரியுது’ என்றார்.

`உங்க பேர் என்னம்மா?’ என்று கேட்டேன். `செல்விங்க... முழுப்பேரு அருள் செல்வி’ என்றார். சித்தாள் வேலைக்குப் போகும் ஒரு பெண்ணின் மகள் எப்படி ஐ.ஏ.எஸ் படித்து ஒரு மாவட்டத்தின் கலெக்டர் ஆகிறாள் என்ற கருவில் ‘அருள் செல்வி ஐ.ஏ.எஸ்' நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.’’

8. நீங்கள் வாசகர்களிடம் கேட்பதாக இருந்தால் துப்பறியும் பாணியில் எந்த மாதிரியான கேள்வியைக் கேட்பீர்கள்?

`` `சீனிவாசன், சீதாராமன், சௌந்தர்ராஜன் - இந்த மூன்று பெயர்களுக்கிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது என்ன?’ வேறு ஏதாவது ஒரு பதிலுக்கிடையில் விடை சொல்கிறேன். கண்டுபிடித்துப் படித்துக்கொள்ளுங்கள்!

9. ட்விட்டர், ஃபேஸ்புக் இரண்டிலும் புகுந்துவிட்டீர்கள். இந்த இரண்டில் எது பெஸ்ட்?

``என்னைப் பொறுத்தவரைக்கும் ட்விட்டர், ஃபேஸ்புக் இரண்டுமே விஞ்ஞானக் கடவுள் தந்த இரண்டு வரங்கள். இரண்டிலும் எனக்குப் பிடித்தது ஃபேஸ்புக்தான். என்னுடைய பல வாசகர்களை அது கண்டுபிடித்து, நண்பர்களாக மாற்றிக்கொடுத்திருக்கிறது. எந்த ஒரு காயகல்பமும் சாப்பிடாமல் மீண்டும் ஒருமுறை என்னை இளைஞனாக மாற்றிய முகநூலுக்கு ஒரு பெரிய ஜே!’’

10. இதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே என்று நீங்கள் நினைக்கும் விஷயம் எது?

``அம்மா, அப்பா உயிரோடு இருந்தபோது அவர்களை விமானத்தில் பயணம் செய்யவைத்து காசிக்குக் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே என்ற ஒரு விஷயம் இன்னமும் ரணமாக மனசுக்குள்.’’

11. உங்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் உங்கள் கதை பற்றி உங்களிடமே யாராவது பேசியது உண்டா?

``1989-ம் ஆண்டு வடவள்ளியில் நான் கட்டிக்கொண்டிருந்த வீட்டைப் பார்வையிடச் சென்றபோது, ஒருமுறை ஸ்கூட்டரில் பழுது ஏற்பட்டு நின்றுவிட்டது. சுற்றிலும் பொட்டல் வெளி, ஆள் நடமாட்டம் இல்லை. அப்போது அந்தப் பக்கமாக ஆடுகளை மேய்த்துக்கொண்டு வந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன் `சார்... அந்தத் தோப்புக்குப் பக்கத்துல ஒரு குடிசை தெரியுதே... அதுல மெக்கானிக் ஒருத்தர் இருப்பார். போய்க் கூட்டிட்டு வாங்க. நான் ஸ்கூட்டரைப் பார்த்துக்குறேன்' என்றான். சொன்னவன், பக்கத்திலிருந்த மரத்தடியில் போய் உட்கார்ந்தபடி தன் ட்ரவுசர் பாக்கெட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தான். அதைத் திறந்தபடி, `க்ரைம் நாவல் சார்... நம்ம ஊரைச் சேர்ந்த ராஜேஷ்குமார்ங்கிறவர் எழுதின நாவல். சூப்பரா இருக்கு சார்’ என்றான். இறைவனுக்கு நன்றி சொல்லிப் புன்னகைத்தேன்.’’

12. எழுத்தாளர் லஷ்மி கேட்டுக்கொண்டதன் பேரில் பெண்களை வர்ணிப்பதில் கண்ணியம் காத்துவருவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதேபோல் வேறு எதற்காகவும் யாருக்காகவும் உங்கள் எழுத்தை மாற்றிக்கொண்ட அனுபவம் உண்டா?

``ஆனந்த விகடனில் திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் ஆசிரியராக இருந்தபோது `கொஞ்சம் மேகம், கொஞ்சம் நிலவு' என்னும் தலைப்பில் ஒரு சைக்கோ த்ரில்லர் தொடர்கதை எழுதினேன். தொடரில் வரும் ஹீரோ ஒரு சைக்கோ. குழந்தைகளைக் கடத்திக்கொண்டு போய் டார்ச்சர் செய்பவன். குழந்தைகளின் ரத்தத்தை ஓர் ஊசி மூலம் சிறிது எடுத்து மதுவில் கலந்து குடிப்பதாகத் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் எழுதியிருந்தேன். ஆசிரியர் என்னை டெலிபோனில் தொடர்புகொண்டு பேசினார்.

`ராஜேஷ்குமார்... இது க்ரைம் கதை என்று தெரிய ரத்தம் வர வேண்டிய அவசியம் இல்லை. படிக்கும்போது பயம் வந்தால் போதும்.’ - அவர் எளிமையாகச் சொன்னார். நான் அதை வலிமையாக எடுத்துக்கொண்டு இன்றளவும் பின்பற்றி வருகிறேன்.’’

13. 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த கோவை - இன்றைய கோவை என்ன வேறுபாடு? நான்கு வரி விமர்சனம்...

அன்றைய கோவை: சிறுவாணித் தண்ணீர் இளநீராக இனித்தது. மக்கள் சண்டை போட்டுக்கொண்டாலும், மரியாதையோடு சண்டை போட்டுக்கொண்டார்கள். `லட்சுமி நகரம்’ என்று காமராஜர் பாராட்டினார்.வருடத்தின் 365 நாள்களில் 300 நாள்கள் ஏ.சி போட்ட மாதிரியான க்ளைமேட்.

இன்றைய கோவை: சிறுவாணித் தண்ணீர் சுவை குறைந்து, `நான் அவனில்லை’ என்கிறது. மரியாதைக்கு சற்றே பஞ்சம். இப்போது, மஹாலட்சுமி நகரம். தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரம். 365 நாள்களில் 200 நாள்கள் மட்டுமே ஏ.சி. மற்ற நாள்களில் வேலூர் வெயில்.’’

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

14. உங்கள் கதைக்கு வரைந்த ஓவியர்களில், நீங்களே பெருமைப்பட்டுக்கொள்வது யாருடைய ஓவியத்துக்கு?

`` `தில்லானா மோகனாம்பாள்' காலத்திலிருந்தே எனக்கு ஓவியர் கோபுலுவின் ஓவியங்கள் பிடிக்கும். ஓவியங்களின் முகபாவங்கள் ரசனையோடு இருக்கும். கைவிரல்களும் அவற்றின் வளைவுகளும் தத்ரூபமாக அமைந்து பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். அப்படிப்பட்ட ஓவியப் பிதாமகர், நான் எழுதிய `இனிமேல் சாருமதி' என்ற தொடர்கதைக்கு ஓவியம் வரைந்தார். எழுத்துலகில் எனக்குக் கிடைத்த பெரியதொரு பேறு அது.’’

15. தொலைக்காட்சி விவாதங்களில் அழைத்தால், எந்தத் தலைப்பில் பேச நீங்கள் தயார்?

``சிஸ்டம் கெட்டுக் கிடப்பதால், எந்தத் தலைப்பிலும் பேச நான் தயார்.’’

16. நீங்கள் ரசித்துப் பார்த்த க்ரைம் திரைப்படம் எது... அண்மையில் பார்த்து ரசித்த திரைப்படம் எது?

``பிடித்த க்ரைம் படம் `புதிய பறவை.’ சமீபத்தில் ரசித்தது, டிஜிட்டலில் குளித்துவிட்டு வந்த `வசந்த மாளிகை’யும் `அடிமைப்பெண்’ணும்.’’

17. உங்கள் பெயரை இன்று மாற்றிக்கொள்ளலாம் என்றால், என்ன பெயரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

``ராஜ ராஜ ராஜேஷ்குமார்.’’

18. உங்களின் எத்தனை கதைகள் இதுவரை உங்களைக் கேட்காமல் படமாக்கப்பட்டுள்ளன?

``இதுவரை எல்லாக் கேள்விகளுக்கும் மகிழ்ச்சியோடு பதில் சொல்லிக்கொண்டு வருகிறேன். என்னை `மூட்அவுட்' செய்துவிடாதீர்கள்.’’

19. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்திருக்குமே.... ஏன் தவிர்த்துவிட்டீர்கள்?

``அப்படித் தவிர்க்காமல் இருந்திருந்தால், `எழுத்துலகில்

50 ஆண்டுக் காலம்’ என்கிற இந்த அதிசய நெல்லிக்கனி எனக்குக் கிடைத்திருக்காதே!’’

20. எழுத்தாளர்களுக்குத் தமிழ்த்திரையுலகில் எந்த இடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

``ஓர் இயக்குநருக்குக் கற்பனை வறட்சி ஏற்பட்டால் மட்டுமே எழுத்தாளர்களின் ஞாபகம் வரும்.’’

21. நீங்கள் நேரில் பார்த்து பிரமித்துப்போன பிரபலம் யாராவது உண்டா?

``1968-ம் ஆண்டில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் `மாணவர் அணி’ என்ற பெயரில் ஒரு பத்துப் பேரை அழைத்துக்கொண்டு காமராஜரைப் பார்க்கக் கூட்டிக்கொண்டு போனார். அந்தப் பத்துப் பேரில் நானும் ஒருவன். காமராஜரை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் சென்றேன்.

அந்த காங்கிரஸ் பிரமுகர் எங்களையெல்லாம் பெருமையோடு கூட்டிக்கொண்டு போய், காமராஜருக்கு முன் நிறுத்தி, `இவர்கள் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி’ என்று சொல்ல, காமராஜரின் முகம் அந்தக் கணமே கோபவேசமாக மாறியது.

`என்னது, மாணவர் அணியா... இவர்களுக்கெல்லாம் கட்சியில் என்ன வேலை... அவங்க வேலை, படிச்சு ஒரு உத்தியோகத்துக்குப் போய்க் குடும்பத்தைக் காப்பாத்துறதுதான்’ என்று சொன்னவர், எங்களைப் பார்த்துச் சீறினார்.

`இன்னிக்கு காலேஜ் இருக்கா இல்லையா?’

`இருக்கு அய்யா.’

`கட்சியை வளர்க்க எங்களுக்குத் தெரியும். நீங்க போய் ஒழுங்கா

படிங்கன்னேன்... எம் முன்னாடி நிக்காதீங்க. ஓடிப்போங்க’’ என்று கத்தவும் விழுந்தடித்துக்கொண்டு வெளியே வந்தோம்.

எப்பேர்ப்பட்ட தலைவர்! அப்படிப்பட்ட தலைவர் ஒருவரை இனி எந்த ஜென்மத்திலும் பார்க்க முடியாது.’’

22. பிற எழுத்தாளர்கள் எழுதியவற்றில் உங்கள் மனதுக்குப் பிடித்த சிறுகதைகள் மூன்றைச் சொல்லுங்கள்?

``ஜெயகாந்தன் - யாருக்காக அழுதான்?

சுஜாதா - விளிம்பு

அகிலன் - சகோதரர் அன்றோ!’’

23. எழுத்தாளர்களுக்கிடையிலான நட்பு எப்படி இருக்கிறது?

``செம்பு கலக்காத தங்கம்.’’

24. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இரண்டு வார்த்தைகள் ப்ளீஸ்!

``தோல்வி எப்போதுமே ஒரு புள்ளியில் ஆரம்பித்து, பிறகுதான் அது ஒரு வெற்றிக்கோடாக மாறும். நிலவு எங்கே போய்விடப்போகிறது... குறித்துக் கொள்ளுங்கள்... 2024-ம் ஆண்டில் நிலவு நமது நட்பு நாடு!’’

25. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகியிருப்பதற்குக் காரணம் எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

``ஒரு பழைய புராணக்கதை நினைவுக்கு வருகிறது. கோயிலொன்றில் இறைப் பணியாற்றும் நல்ல குணநலன்கள் வாய்க்கப்பெற்ற இளைஞன் அவன். அவனுடைய ஜாதகரீதியில் ஏதாவது ஒரு பாவம் செய்தேயாக வேண்டிய கட்டாயம். ஒருநாள் இரவு இறைப் பணி முடிந்து, வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். காட்டுவழி அது. பாதிவழி சென்றிருப்பான். எதிரில் ஓர் அழகான பெண் கையில் குழந்தையோடு வந்துகொண்டிருந்தாள்.

இறைவனின் குரல் அசரீரியாக அந்த இளைஞனின் காதில் ஒலித்தது.

`இளைஞனே! உன் ஜாதகப்படி நீ இன்றைக்கு அந்தப் பெண்ணைக் கெடுக்க வேண்டும். ஸ்திரீ லோபம் பெரிய பாவம். எனவே, நீ அந்தப் பாவத்திலிருந்து தப்பிக்க நான் ஒரு வழி சொல்கிறேன். ஜாதகத்தின்படி பாவம் செய்தே ஆக வேண்டியிருப்பதால், இன்னொரு பரிகார உபாயம் சொல்கிறேன். அதோ... அந்தத் தென்னை மரத்துக்குக் கீழே ஒரு கள்ளுப்பானை இருக்கிறது. அதை எடுத்துக் குடித்துவிடு. அதை அருந்துவது பாவம் என்றாலும், ஸ்திரீ லோப பாவத்திலிருந்து தப்பித்துவிடலாம்.’ அசரீரியைக் கேட்ட இளைஞன், கள்ளுப்பானையை எடுத்தான்; குடித்தான். பானை காலியான விநாடி தலைக்கு போதை ஏறியது. விளைவு?

சற்று முன் பார்த்த பெண் பேரழகியாகத் தெரிய, அவளைப் பாலியல் வன்முறை செய்தான். குழந்தை அழுதது. அழுகிற குழந்தை அவனை எரிச்சல்படுத்த குழந்தையை வீசியெறிந்து கொன்றான்.

கேள்விக்கான பதில் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.’’

26. இந்தியாவில் பிடித்த இடம் எது?

``இந்தியாவில் பிடித்தது தமிழகம். தமிழகத்தில் பிடித்தது கோவை. கோவையில் பிடித்தது என் பத்துக்குப் பதினாறு அறை.’’

27. யாராவது கதை கேட்டு நீங்கள் மறுத்ததுண்டா?

``என் பேனாவுக்குப் பசி அதிகம்.’’

28. நீங்கள் சந்திக்க விரும்பி முடியாமல் போன பிரபலம் யார்? ஏன் அவரைச் சந்திக்க விரும்பினீர்கள்?

``காஞ்சி மகா பெரியவர். அவரிடமிருந்த ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. ஈர்த்தது, ஈர்த்தது... ஈர்த்துக்கொண்டே இருந்தது.’’

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

29. கிரிக்கெட் உங்களுக்குப் பிடிக்குமா?

``பிடிக்கும்... இந்தியா ஜெயிக்கும்போது மட்டும்.’’

30. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பத்து நூல்களைப் பட்டியலிடுங்கள்?

``பத்து எதற்கு... திருக்குறள் ஒன்று போதாதா?’’

31. உணவுக் கட்டுப்பாடு உண்டா... உங்களது ஒரு நாளின் மெனு என்ன?

``காலையில் எழுந்து பல்துலக்கியதும் இரண்டு டம்ளர் இதமான சூட்டில் சீரக நீர்.

காலை டிபன்: நான்கு இட்லி அல்லது இரண்டு தோசை

11:00 மணி: அரை டம்ளர் டீ.

மதியம்: அளவான சாதம். சாதத்தைவிடக் காய்கறி அதிகமாக இருக்கும்.

மாலை 4:00 மணி: அரை டம்ளர் டீ (நொறுக்குத்தீனி அறவே இல்லை).

இரவு 8:30 மணி: இரண்டு சப்பாத்தி அல்லது உப்புமா, ஒரு வாழைப்பழம்.

இரவு 9:30 மணி: தேன், பூண்டு கலந்த ஒரு டம்ளர் பால்.’’

32. ரஜினி, கமல், விஜய், அஜித் நால்வரும் இணைந்து நடிக்கும் ஒரு படத்துக்கு நீங்கள்தான் தலைப்பு வைக்க வேண்டுமென்றால் என்ன வைப்பீர்கள்?

``நான்கு துருவங்கள்.’’

33. மொபைல் வாங்கி உபயோகித்து இன்றுவரை நீங்கள் அதில் வியக்கும் விஷயம் எது?

``இன்டர்நெட் பேங்கிங். ஒரு சின்னத் தொடலில் ஒரே ஒரு விநாடியில் பண மாற்றம். ஒருவரின் வங்கிக்கணக்கில் `டெபிட்'ஆகி, இன்னொருவரின் வங்கிக்கணக்கில் `கிரெடிட்' ஆகும் மாயாஜாலம். `நாம் தப்பு செய்தால் அன்றி அங்கே தப்பு நடக்க வாய்ப்பில்லை’ என்பது எவ்வளவு பெரிய ராட்சஸ நம்பிக்கை.’’

34. உறவினர் அல்லாத இப்போதிருக்கும் பிரபலத்துடன் ஒரு வாரகாலப் பயணம் செல்வதென்றால் யாரைத் தேர்வு செய்வீர்கள்?

``ஏற்பாடு செய்ய முடியுமா... ட்ரம்ப்.’’

35. உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய கேள்வியை எதிர்கொண்டதுண்டா?

``ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு கல்லூரி விழாவில் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டபோது மாணவர்கள் சிலர் என்னிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு குறும்புக்கார மாணவர் திடீரென்று இப்படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டார்.

` ‘கலர்’ பார்க்கச் சிறந்த இடம் எது... கோயிலா, பார்க்கா, பீச்சா?’

எனக்கு ஒரே அதிர்ச்சி! காரணம் எனக்குப் பக்கத்தில் சில மாணவிகளும் இருந்தார்கள். நான் சட்டென்று அந்த மாணவனைப் பார்த்து `ஏன், ஒரு பெயின்ட் கடைக்குப் போகலாமே’ என்று சொன்னதும், இறுக்கமான நிலைமை சட்டென்று இயல்பான சூழலுக்கு மாறியது.’’

36. அது எப்படி சார் அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்?

``பூனையின் வயிற்றில் எது பிறந்தாலும் அது எலியைப் பிடிக்கத்தான் செய்யும்.’’

37. அத்திவரதரை தரிசித்தீர்களா?

``முகநூல் மகாமுனிவரின் அருளாலும், வாட்ஸ் அப் சித்தர் அருளாலும்

48 நாள்களும் அவரை பாதாதி கேசமாய் தரிசித்தேன். அந்த 48-வது நாள் ஏதோ ஒரு நண்பனைப் பிரிகிற மாதிரி மனதில் கனம். அன்று இரவு வெகுநேரம் தூக்கம் வரவில்லை.’’

38. எல்லோரையும் நண்பர்களாக்கிக்கொள்ள என்ன வழி?

``மற்றவர்களிடமிருக்கும் குணத்தைப் பார்த்து, நம்மிடமுள்ள குறைகளைத் தெரிந்துகொண்டு நாம் யாரிடம் பழகினாலும் எல்லோரும் நண்பர்களே!’’

ராஜேஷ்குமார், ரஜினி, கமல்
ராஜேஷ்குமார், ரஜினி, கமல்

39. ஒருவரைப் பற்றி உங்களிடம் குறை கூறினால் என்ன செய்வீர்கள்...?

``இரண்டு காதுகள் எதற்காக இருக்கின்றன... சொல்லப்படும் விஷயத்தை ஒரு காதில் வாங்கி, இன்னொரு காதில் அந்த நிமிடமே விட்டுவிடுவேன்.

இப்போது 8-வது கேள்வியில் நான் கேட்ட கேள்விக்கான விடை: அந்த மூன்று பேரின் மனைவிகளும் பா.ஜ.கட்சியின் அரசியல் புள்ளிகள்! வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமன், தமிழிசை சௌந்தர்ராஜன்!’’

40. உயிரியலும் விஞ்ஞானமும் கலந்த ஒரு தகவலைச் சொல்ல முடியுமா?

``பொதுவாக நாம் பேசும்போது `கண்ணிமைக்கிற நேரத்துல எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு' என்று சொல்வோம். உண்மையில் கண்ணிமைக்கும் நேரம் என்பது எவ்வளவு தெரியுமா... ஒரு விநாடியில் ஆயிரத்தில் 450 பங்குதான். ஒரு மைக்ரோ விநாடி என்பது ஒரு விநாடியை ஆயிரம் பாகங்களாகப் பிரித்தால் கிடைக்கும் ஒரு பாகம்தான் மைக்ரோ விநாடி. அந்த இம்மி நேரத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்து முடிந்துவிடுகின்றன. சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கும் பூமி தனது சுழலும் பாதையில் 40 அடி தூரம் பயணம் செய்திருக்கும். ஒலி 35 செ.மீ தூரமும், வேகமாகப் பறக்கும் விமானம் ஒன்றரை அடியும் சென்றிருக்கும். ஒளியின் வேகம் மிக மிக அதிகம் என்பது நமக்குத் தெரியும். அது ஒரு மைக்ரோ விநாடியில் 300 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்திருக்கும்.’’

41. கணினி யுகத்திலும் பேனா பிடித்துக் கையில்தான் எழுதுகிறீர்கள், ஏன்?

``பேப்பர், பேனா பிடித்திருக்கும் கை, மூளை இந்த மூன்றுக்கும் இடையிலிருக்கும் உயிரோட்டம் கணினியில் டைப் அடிக்கும்போது மிஸ்ஸிங்...’’

42. அரசின் கெடுபிடிச் சட்டங்களுக்கு உங்கள் ஒருவரி விமர்சனம்?

``எந்த ஒரு சட்டமும் பூனை தன் குட்டியைக் கவ்வி எடுப்பதுபோல் இருக்க வேண்டும்.’’

43. நம் நாடு போதுமான அளவு முன்னேற்றம் அடையாததற்கு என்ன காரணம்?

``அண்மையில் ஒரு வெளிநாட்டுப் பயணியை நான் ரயில் பயணத்தின்போது சந்தித்துப் பேசுகையில், இந்தியாவின் முன்னேற்றம் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இவை. `Indians are best in the world. But not in India.' ''

44. கதைத் திருட்டு குறித்து?

``அது கதைத் திருட்டு அல்ல. அறிவுத் திருட்டு. அது இல்லாதவர்கள் திருடுகிறார்கள்.''

45. நீங்கள் எந்தப் பிரபலத்திடமாவது கேள்வி கேட்டு பதில் பெற்ற அனுபவம் உண்டா?

``நடிகர் கமலிடம் நான் கேட்ட கேள்வி இது. `மிஸ்டர் கமல்! நீங்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவர். ஆனால், உங்கள் படங்களின் தலைப்புகளோ கடவுள் சம்பந்தப்பட்டவையாக, கடவுள் நாமத்தைச் சொல்லக் கூடியவையாக இருக்கின்றன. உதாரணம்: `சிங்காரவேலன்’, `தசாவதாரம்’, `அன்பே சிவம்’, `சூரசம்ஹாரம்’, `விஸ்வரூபம்.’ இது அறியாமல் செய்ததா அல்லது இயல்பாக நடந்ததா?’

கமல் சொன்ன பதில்: `விஞ்ஞானத் தீர்வுகளைத் தன் தீர்வாக ஆக்கிக்கொள்ள முற்படும் தேவசபைகள் கையாளும் அதே யுக்திதான் இது. (உதாரணம்: டார்வினிடமும் கலிலியோவிடமும் காலம் தாழ்த்தி மன்னிப்பு கேட்கும் வாடிகன்). `Brutus is an honourable man' என்று தொடங்கும் Mark Antony-யின் வசனத்தில் ஷேக்ஸ்பியர் கையாளும் யுக்தி. `பராசக்தி' என்று ஒரு பகுத்தறிவுவாதப் படத்துக்குப் பெயர்வைத்த அதே யுக்தி. வழி வழியாக என் முன்னோர்கள் செய்த இடக்கரடக் கலைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன்.’ ’’

46. நடிகர் ரஜினியைச் சந்தித்திருக்கிறீர்களா?

``1994-ம் வருடம், ஒரு மே மாதத்தின் காலை நேரம் ரஜினியை அவருடைய போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்து

15 நிமிடங்கள் பேசினேன். சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் நக்கீரன் கோபால். ரஜினி எந்தவிதமான ஒரு பந்தாவும் இல்லாமல் எளிமையாகப் பேசினார்.

`என்கிட்டே வந்திருக்கீங்க... நான் என்ன பண்ணணும் ராஜேஷ்குமார்?’

`உங்களை ஹீரோவாக வெச்சு `ரஜினி ராஜ்யம்' என்கிற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதப்போறேன்.’

வாய்விட்டு அண்ணாந்து சிரித்தார். `வெரி நைஸ். அதுல எனக்கு என்ன ரோல்?’

`ஆர்.கே என்கிற ஒரு க்ரைம் பிராஞ்ச் ஸ்பெஷல் ஆபீஸர். தமிழ்நாட்டில் நடந்த கண்டுபிடிக்க முடியாத குற்றங்களை நீங்க உங்க `இன்டலிஜென்ட்டான மூவ்'களில் இன்வெஸ்டிகேட் பண்ணி, குற்றவாளிகளைப் பிடிக்கிறீங்க.’

`நல்லா இருக்கே... குட்ஜாப். பண்ணுங்க’ கைகொடுத்து, பாராட்டினார். மறக்க முடியாத பதினைந்து நிமிடங்கள்.’’

47. உங்க கதாபாத்திரம் ஒருத்தர்கூட பயணம் போகலாம்னா யார்கூட எங்க போவீங்க?

``விவேக்குடன் அமெரிக்கா!’’

48. விவேக், ரூபலா கேரக்டர்களுக்கு இப்போ இருக்கும் நடிகர்களில் யார் யார் பொருத்தமா இருப்பாங்க?

``யாரை நடிக்கவெச்சாலும் அவங்கதான் தெரிவாங்க. அதனால புதுமுகங்கள்தான்.’’

49. உங்க நாவலை எந்த இயக்குநர் எடுத்தா சிதைக்காம எடுப்பாங்கன்னு நினைக்கறீங்க?

``இயக்குநர் அறிவழகன்.’’

50. வாசகர்களுக்கு ஒருவரிச் செய்தி?

``நான் எழுதிட்டே இருப்பேன். நீங்க படிச்சிட்டே இருங்க.’’