சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஜோ பைடன் காத்திருக்கும் எதிர்பார்ப்புகள்!

ஜோ பைடன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோ பைடன்

ஜோ பைடன் வந்ததும் இதெல்லாம் ஒரே நாளில் மாறிவிடப்போவதில்லை.

சில நாள்களுக்கு முன்பு ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி, கலவரப் பிரதேசமாக மாறிய அமெரிக்க நாடாளுமன்றக் கட்டட முகப்பு... இப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகிய கோலங்கள் அந்த வாசலை அலங்கரிக்கின்றன. அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகப் பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோரை வரவேற்பதற்காக அமெரிக்க இந்திய சமூகத்தினர் செய்த முயற்சி இது.

``அமெரிக்க சமூகத்தில் பிளவுகளால் ஏற்பட்டுள்ள காயங்களை இந்தக் கோலங்கள் ஆற்றும்'' என்கிறார்கள் அங்குள்ள இந்தியர்கள். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸை தமிழகக் கோலம் போட்டு வரவேற்பது டச்சிங்!

ஜோ பைடன் வருகையை அமெரிக்க இந்தியர்கள் மட்டுமன்றி, இந்தியாவில் இருக்கும் இந்தியர்களும் நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். அதற்கு நிறைய காரணங்கள்...

ஜோ பைடன் காத்திருக்கும் எதிர்பார்ப்புகள்!

முதல் காரணம், கமலா ஹாரிஸ். அமெரிக்கத் துணை அதிபராகும் முதல் பெண், இந்திய வம்சாவளியிலிருந்து இந்த உச்சத்துக்கு வரும் முதல் நபர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய பல்வேறு சமூகத்தினரின் குரலாக இருந்தவர், இப்போதும் இருப்பவர்.

இரண்டாவது காரணம், 20 அமெரிக்க இந்தியர்கள் அரசின் முக்கியமான பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளது. அவர்களில் 17 பேர் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்கின்றனர். அதிபரின் உள் வட்டத்திலேயே வினய் ரெட்டி, வேதாந்த் படேல் ஆகியோர் உள்ளனர். சர்ஜன் ஜெனரலாக விவேக் மூர்த்தி பதவியேற்கிறார். தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலில் தருண் சாப்ரியா, சுமோனா குஹா, சாந்தி கலாதில் ஆகிய மூன்று இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் உரிமை இவர்களுக்கு உண்டு.

ஜோ பைடன் காத்திருக்கும் எதிர்பார்ப்புகள்!

அமெரிக்காவில் வெறும் ஒரு சதவிகிதமே இந்தியர்கள் வசிக்கிறார்கள். ஆனால், தங்கள் கல்வியாலும் திறமையாலும் முக்கிய இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இந்தியர்கள் இடம்பிடித்திருக்கும் அரசாக இது இருக்கிறது. இந்த சாதனை பெருமைக்குரியது. அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாக, அந்த தேசத்தின் நலனையே இவர்கள் பிரதானமாகக் கருதினாலும், இந்தியாவின் நலன் காக்க இவர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மூன்றாவது காரணம், ஜோ பைடனின் சில முக்கிய முடிவுகள். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் குடியிருக்கிறார்கள். அவர்களை பைடன் அங்கீகரிக்க உள்ளார். குடியுரிமைக் கட்டுப்பாடுகள், விசாக் கட்டுப்பாடுகள் தளரும்போது, நிறைய இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டபூர்வக் குடியுரிமை பெற முடியும்; புதிதாகக் குடியேறவும் முடியும்.

நான்காவது காரணம், கல்வி. கொரோனா காலத்தில் டொனால்டு ட்ரம்ப் நிறைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார். இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் படிக்கப் போகும் மாணவர்களின் எண்ணிக்கை இதனாலேயே கணிசமாகக் குறைந்தது. வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றியது, கடன் மற்றும் ஸ்காலர்ஷிப்களைக் குறைத்தது என ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் பலவும் இந்தியாவிலிருந்து படிக்கப் போனவர்களைப் பெரிதும் பாதித்தன. அவற்றை பைடன் மாற்றுவது ஆறுதல்.

ஜோ பைடன் காத்திருக்கும் எதிர்பார்ப்புகள்!

மோசமான விபத்தில் சிக்கி உள் மற்றும் வெளிக்காயங்களுடன் தவிக்கும் நோயாளி போல ட்ரம்ப் காலத்தில் அமெரிக்கா மாறிவிட்டது. கொரோனா பாதிப்பும் பொருளாதார நெருக்கடியும் அமெரிக்காவை உருக்குலைத்தது. ட்ரம்ப் ஊட்டி வளர்த்த இனவெறிப் பகைமை, தேசத்தைப் பிளவுபடுத்தியது. இன்னொரு பக்கம் உலக நாடுகளின் வெறுப்பையும் சம்பாதித்தது. அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது, ராணுவத் தளபதி காசிம் சுலைமானியைக் கொன்றது, பொருளாதாரத் தடை விதித்தது என ஈரானை அமெரிக்காவின் மிக மோசமான எதிரியாக மாற்றினார் ட்ரம்ப். வட கொரிய அதிபர் கிம்முடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகும் அவரைச் சீண்டினார். சீனாவுடன் அவர் நடத்திய வார்த்தைப் போர் உலகத்துக்கே தெரியும்.

ஜோ பைடன் வந்ததும் இதெல்லாம் ஒரே நாளில் மாறிவிடப்போவதில்லை. சொல்லப்போனால், அவர் ராணுவச் செலவுகள் எதையும் குறைக்கப் போவதாகவும் இல்லை. தன்னை உலகின் வல்லரசாகக் காட்டிக்கொள்வதற்கு அமெரிக்காவுக்கு இதெல்லாம் அவசியம். ஆனால், பாகிஸ்தானுக்கும் ஆயுதங்கள் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசும் இரட்டை நாக்கு இனி இல்லாமல்போனால், அதுவே ஆறுதலான விஷயம்.

வேலையைத் தொடரும் மனைவி!

முதல் குடிமகளாக வெள்ளை மாளிகையில் குடியேறும் அமெரிக்க அதிபரின் மனைவி பெரும்பாலும் பணிக்குச் செல்வதில்லை. ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் இப்போது ஆங்கிலப் பேராசிரியையாகப் பணிபுரிகிறார். வெள்ளை மாளிகைக்குச் சென்றபிறகும் தன் வேலையைத் தொடர உள்ளார். அந்தவகையில் இது ஒரு புது ஆரம்பம்.

அமெரிக்க அதிபர்கள் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ட்ரம்ப் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. கடந்த ஒரு நூற்றாண்டில் வெள்ளை மாளிகையில் நாய் வளர்க்காத ஒரே அதிபர் அவர்தான். ஜோ பைடன் இரண்டு ஜெர்மன் ஷெப்பர்டு நாய்களும் ஒரு பூனையும் வளர்க்கிறார். அவருடன் அவையும் வெள்ளை மாளிகையில் குடியேறுகின்றன.