சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

வரலாம் வரலாம் வரலாம்

அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவம்

அனுபவம்

அன்று முதல் இன்றுவரை சென்னைக்கு வந்து போவதே வேலையாக இருக்கிறேன். பெரும்பாலும் போக்குவரத்திற்கு இருப்பூர்தியைப் பயன்படுத்திக்கொள்கிறேன். சில நேரங்களில் பேருந்துகளையும் நாடுவதுண்டு. திருப்பூரில் ஓர் ஏற்றுமதி ஆலோசனையகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் அலைவதே வேலை. இப்போது இலக்கியம், உரை முதலானவற்றுக்காக வந்து போகிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக வரும் பயணங்கள் முந்திய நாள் அழைப்பின் பேரில்தான் அமையும். அவ்வமயம் இருப்பூர்தியின் பொதுவகுப்பில் ஏறி வருவதுமுண்டு. அத்தகைய பயணமொன்றில் தீபாவளிக்கு ஒருநாள் முன்பாக வந்து திரும்ப வேண்டிய நிலை. இருப்பூர்தியின் பொதுப்பெட்டியில்தான் திரும்ப வேண்டும். சேரன் இருப்பூர்தியின் பொதுவகுப்பிற்குள் ஏறித் திரும்பலாம் என்றால் அங்கே எள்விழ இடமில்லாதபடிக்குக் கூட்டம். எப்படியோ என்னை உள்நுழைத்துக்கொண்டேன்.

அனுபவம்
அனுபவம்

ண்டி கிளம்புவதற்கு முன்பு வரை ஏதோ நின்றபடியே மூச்சுவிட இடமிருந்தது. வண்டி கிளம்பியபோது தான் தெரிந்தது, என்னைச் சுற்றிலும் இறுக்கி ஒட்டியபடி எட்டுப்பேர் நின்றுகொண்டிருந்தனர். இனி இறங்கவும் முடியாது. வாழ்நாளில் எட்டு மணி நேரம் நரகத்தில் சிக்கிக்கொண்டதுபோல் ஆயிற்று. காட்பாடி வரும்வரைக்கும் கால்களுக்கு நிற்கும் ஆற்றல் இருந்தது. அதற்குமேல் நிற்கக்கூட முடியவில்லை. அப்படியே உட்கார்வதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நலக் குறைவுடையோர் என்றால் மூச்சுத்திணறி மயங்க வேண்டியதுதான். எந்த நிறுத்தத்திலும் ஒருவரும் இறங்கவில்லை. மேலும் நான்கைவர் ஏறத்தான் செய்தனர். ஒருவரோடொருவர் உடலைச் சாய்த்துக்கொண்டு வரவேண்டிய தாயிற்று. சேலம் வந்த பிறகுதான் உடலை அமர்த்த வழி கிடைத்தது. அன்றைக்கு முடிவு செய்ததுதான், இனி முன்பதிவு இல்லாத நிலையில் இருப்பூர்தியைத் தவிர்ப்பது. ஊர் ஊராக ஊர்ந்து வந்தாலும் பேருந்தில் அமர்ந்தபடி வந்துசேர்வது.

அன்றைக்கு நான் பேருந்தினில் ஏற முயன்றாலும் இதே கூட்டமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், எப்படியாவது ஓர் இருக்கையைப் பிடித்து அமர்ந்திருக்கலாம். விழுப்புரம், சேலம் என்று ஒவ்வொரு வண்டியாக மாறி வந்தடைந்திருக்கலாம். முன்பின்னாக இருந்தாலும் பேருந்தினைத் தவிர நமது பொதுப் போக்குவரத்துக்கு வேறு மாற்று இல்லை என்றே கூறுவேன். சென்னையிலிருந்து ஊருக்குத் திரும்புவோர் பேருந்தினைத்தான் கடைசி வாய்ப்பாகப் பார்க்கின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற நாள்களில் மொத்தச் சென்னையும் இடம்பெயர வந்து சேர்கிறது. போக்குவரத்துத் துறை அமைச்சரேகூட அங்கிருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்கி, கூட்டத்திற்கு உதவுகிறார்.

சிற்றூரில் தொடங்கிய என் இளமையில் இரு நகரங்களுக்கு இடையே செல்லும் பேருந்துகள்தாம் முதல் போக்குவரத்துக்கு உதவின. இரண்டாம் எண் பேருந்து போவதையும் வருவதையும் வைத்து பகல் மணி நேரங்களைக் கூறும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. வண்டியின் ஒலிப்பான் ஓசையை வைத்தே இது இந்த வண்டி என்று அடையாளம் கூறுமளவுக்குப் பேருந்துகள் வாழ்வோடு கலந்திருந்தன.

முதன்முதலில் ஒரு நகரத்திற்கு வந்தபோது இறங்கிய இடமும் அந்நகரின் பேருந்து நிலையம்தான். ஓர் இளங்காலையில் பூக்கள் பரப்பிய உள்மணத்தோடு வந்த பேருந்தில் நான் முதன்முதலாக என் தந்தையோடு ஏறினேன். ஏறியதும் சமநிலை குலைந்து தள்ளாடியது நினைவிருக்கிறது. ஒருவாறு கம்பியைப் பிடித்து நின்றபோது ‘ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது’ என்ற பாடல் ஒலித்தது. வண்டிக்குள் நிறைந்திருந்த பூமணமும் முகந்தழுவி மோதிய இளங்காற்றும் அந்தப் பாடலும் அப்பயணத்தை இன்றும் மறக்க முடியாதபடி செய்துவிட்டன.

வழியில் ஒவ்வோர் ஊராக நின்று நின்று பேருந்து நிலையத்தை வந்தடைந்தாயிற்று. ஒரே இடத்தில் அத்தனை பேருந்துகளைப் பார்த்துக் கண்கள் நிறைந்தன. “வரலாம் வரலாம் வரலாம்” என்ற நடத்துநரின் அறிவிப்போடு பின்னகர்ந்து நிற்கும் பேருந்துகள், ஊர்ப் பெயர்களை ஒருவர் இசையாகக் கூவியபடி நிற்கையில் மெல்லக் கிளம்பும் பேருந்துகள், வெளியிலிருந்து வெற்றிக்களிப்போடு நிலையத்திற்குள் யானை அசைவோடு வந்து நிற்கும் பேருந்துகள் என அந்தக் காட்சியை எல்லாரும் ஏதோ ஒரு நிலையத்தில் கண்டிருப்பீர்கள்.

அன்று முதல் தொடக்கப் பள்ளி விளையாட்டு நேரத்தில் பேருந்து ஓட்டி விளையாடுவதே எங்கள் விளையாட்டாக இருந்தது. “டுர்ர்ர்... பேம் பேம்” என்று ஒருவர் ஓட்டுவதும் இன்னொருவர் பின்சட்டையைப் பிடித்தபடி நடத்துநராக நடந்து கொள்வதும் வழியில் அங்கங்கே நிறுத்தி ஓரிருவரை ஏற்றிக் கொள்வதுமான விளையாட்டு. பேருந்து ஓட்டாமல், இருப்பூர்தி ஓட்டாமல் நம் விளையாட்டுப் பருவத்தைக் கடந்திருக்கவே மாட்டோம். அப்படியொரு விளையாட்டினை விளையாடி யிருப்பீர்கள் எனில், இன்று உங்கள் வண்டிகளை மிகச்சிறப்பாக ஓட்டிக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் நல்ல ஓட்டுநர் என்ற தகுதியை எப்படி அடைந்தேன் என்று எண்ணுங்கால் அவ்விளையாட்டுகளே நினைவுக்கு வருகின்றன.

அனுபவம்
அனுபவம்

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் பேருந்து நிலையங்களுக்கும் ஓர் இடம் கட்டாயம் இருக்கும். உவகையும் அழுகையும் களிப்பும் கண்ணீருமாய் அந்த நிலத்தில் நின்றிருப்போம். `அருகிலுள்ள சிற்றூரிலிருந்து வந்து பேருந்து நிலைய உணவு விடுதியில் பூரி தின்ன வேண்டும் என்ற அவளுடைய நெடுநாளைய ஆசை நகையை விற்றுத் திரும்பும் இந்தத் துயர்நாளில்தான் நிறைவேறிற்று’ என்று நேரடியாகக் கண்ட காட்சியினைக் கவிதையாக எழுதியிருக்கிறேன்.

சென்னை என்றதும் எனக்கு அதன் பரந்த நகர்ப்பரப்பும் காணுதற்கினிய இடங்களும் முதல் நினைவுகளாக இல்லை. பாரி முனையில் இருந்த அந்த வெளியூர்ப் பேருந்து நிலையம்தான் உடனே நினைவுக்கு வருகிறது. தீவுத்திடல் தாண்டியதும், `சென்னை- 0’ என்ற ஒரு மைல்கல் வைத்திருந் தார்கள். இப்போதும் அந்தக் கல் இருக்கும் என்று கருதுகிறேன். அந்தக் கல்லின் மீது நிறைவாக அமர்ந்திருக்கிறேன். மாநிலத்தின் எங்கோ ஒரு சிற்றூரில் பிறந்து இங்கே வந்து சேர்வதற்கு எவ்வளவு பாடுகள் என்று எண்ணி நெகிழ்ந்ததுண்டு. வந்த வேலையை முடித்துவிட்டு ஊருக்குத் திரும்ப ஓடும்போது அந்தப் பாரிமுனைப் பேருந்து நிலையத்தைத் தான் நாடுவது.

சென்னையில் நாம் இடம் தெரியாமல் தொலைந்துபோவதற்கு எப்போதுமே வாய்ப்பில்லை. எந்தப் பகுதியில் இருந்தாலும், அங்கிருந்து ஒரு வண்டி பாரிமுனைக்குச் செல்லும். அந்த வண்டியில் ஏறியமர்ந்தால் வெளியூர்ப் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்துவிடலாம். இளம் அகவையில் தனியாய் நேர்ந்த என் சென்னைப் பயணங்களில் இந்த முறையைத்தான் பயன்படுத்திப் பாதுகாப்பாக ஊர் திரும்பினேன். பாரிமுனையிலிருந்த அந்தப் பேருந்து நிலையம் சிறியது என்றாலும் முடிந்தவரை நெரிசலோடு நெரிசலாய் வண்டிகள் வந்து சென்றன. பிறகுதான் தனியார்ப் பேருந்துகள் இயக்கப் பட்டன. தனியார்ப் பேருந்துகள் யாவும் நடுவண் இருப்பூர்தி நிலையத்தின்முன் அணிவகுத்து நின்று செல்லும். இருப்பூர்தியில் முன்சொன்னவாறு நான் பட்டபாடு நினைவுக்கு வந்ததும் அங்கே நிற்கும் தனியார்ப் பேருந்துகளையே நாடினேன். கோவை, சேலம், ஈரோடு செல்லும் ஏதேனும் ஒரு பேருந்தில் ஏறிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. பிறகுதான் பாரிமுனை பேருந்து நிலையம் கோயம்பேட்டுக்கு மாற்றப்பட்டு புறநகர் பேருந்து நிலையமாக விரிந்தது. நாட்டின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக அது விளங்குகிறது.

இன்றைக்கும் தமிழ்நாட்டில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அது ஏதேனும் ஒரு மாவட்டத் தலைநகரின் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. அவை ஏதேனுமொரு நீர்நிலையைத் தூர்த்துத்தான் அமைக்கப்படுகின்றன என்பது சூழலியல் கேடுதான். அண்மையில் தேனி நகரத்துப் பேருந்து நிலையத்தைப் பார்க்கையில் சிறிது வியப்பேற்பட்டது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்லும் பெரும்பரப்பான நிலையம். முன்பிருந்த நிலையம் அளவிற் சிறியது. தேனியைச் சந்தைச் சிறு நகராக வைத்திருந்த நிலை மாறி அங்கு அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் அதற்குப் பெருநகரத்தின் தோற்றத்தைத் தந்துவிட்டது.

தமிழகத்தின் பேருந்து நிலையங்கள் எவ்வளவு சிறப்பானவை என்பதை உணர வேண்டுமானால் மகாராட்டிரத்திலுள்ள ஔரங்காபாத், ஒடியாவிலுள்ள கட்டாக் போன்ற நகரங்களின் பேருந்து நிலையங்களைப் பார்த்திருக்க வேண்டும். நான் பார்த்திருக்கிறேன். அடிப்படையில் ஔரங்காபாத் வரலாற்றுப் பழைமை மிக்க நகரம். வட இந்தியாவிற்கும் மேற்குக் கடற்கரைக்கும் இடையே துறைமுகத் தொடர்பினை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நாற்றிசைக் கூடல் நகரம் அது. ஆனால், அங்கிருக்கும் பேருந்து நிலையத்தைப் பார்த்தால் மிகவும் தொன்மையாக இருக்கும். கட்டுதிட்டமில்லாமல் சந்தைக்கூடம்போல் அமைக்கப்பட்டிருக்கும். துப்புரவு என்பதே இல்லை. பேருந்துகளும் இருப்புப் பெட்டகங்களைப் போன்றே தோற்றமளிக்கும். இந்தப் புழுதி நகரத்திற்கு இந்தப் பேருந்து நிலையமே கூடுதல் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

‘ஒரு பேருந்து நிலையத்தில் அந்தந்த மாநகர/நகராட்சிகளின் தண்ணீரையும் இடத்தினையும் பயன்படுத்திக் கொண்டு யாரோ ஒருவர் கட்டணக்கொள்ளை அடிப்பது எவ்வகையிலும் அறமில்லை. ’

ஒடிய மாநிலத்திற்குக் கட்டாக் நகரம்தான் ஆங்கிலேயர் ஆட்சியின் தலைநகரம். கிழக்கிந்தியாவின் மேற்கு, தெற்குப் பகுதிகளோடு தொடர்புகொள்வதற்கு அந்நகரமே வாயில். மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம். ஆனால், கட்டாக் பேருந்து நிலையத்தைப்போல் இன்னொரு கச்சடாவான பேருந்து நிலையத்தைப் பார்க்க முடியாது. ஒடியாவில் அடிக்கடி மழை பட்டையைக் கிளப்பும். அதனால் நிலையமெங்கும் சேறும் சகதியுமாக… வயற்காடு தோற்றது போங்கள். ஒடியர்களின் தவிர்க்க முடியாத பழக்கங்களில் ஒன்று வாய்நிறைய பாக்கினை அதக்கிக் குதப்புவது. பாக்குக் குதப்பிகள் இருந்தாலே நிலையமெங்கும் எச்சில் உமிழ்ச்சியின் சுவடுதான். கட்டாக் பேருந்து நிலையத்தின் இரங்கத்தக்க நிலையைக் கண்ட பிறகுதான் எனக்குத் தமிழ்நாட்டுப் பேருந்து நிலையங்கள் உயர்வாகத் தோன்றலாயின. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் மாநிலங்களின் பேருந்து நிலையங்களைக் கற்பனை செய்வதற்கே அச்சமாக இருக்கிறது.

நாட்டின் தூய்மையான நகரங்கள் என்ற பட்டியலில் கர்நாடகத்தின் மைசூரும் ஆந்திரத்தின் விசாகப்பட்டினமும் இருக்கின்றன. மைசூரு நகரத் தெருக்கள் ஐரோப்பியத் தொன்மை நகரத்தின் அழகோடு திட்டமிட்டுக் கட்டப்பட்டவை. இரவில் மின்விளக்குகளின் வெளிச்சத்தில் அந்நகரத் தோற்றமே ஒளிப்பூக்களால் தோரணங்கட்டப்பட்டதுபோல் இருக்கும். ஆனால், மைசூரு நகரத்தின் பேருந்து நிலையம் தமிழ்நாட்டுப் பேருந்து நிலையங்களோடு போட்டியிட முடியாது.

விசாகப்பட்டினத்தின் இருப்பூர்தி நிலையத் தரைக்கற்களில் கண்ணாடிபோல் முகந்தெரியும். அதன் பேருந்து நிலையத்தில் தனித்தனியே கூண்டு அமைத்திருப்பார்கள். அங்கே சென்று பேருந்துக்குச் சீட்டு வாங்கிக்கொண்டு நமக்கான பேருந்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். அங்குள்ள பேருந்துகளில் ஏறுவதற்கும் இறங்குவதற்குமென இரண்டு வழிகள் இருப்பதில்லை. ஓட்டுநரின் அருகிலுள்ள ஒரே வழிதான். அப்பேருந்துகட்கு நடத்துநரும் இல்லை. ஓட்டுநரே பயணச்சீட்டுக்குரிய பணத்தைப் பெற்றுக்கொண்டும் ஏற்றுகிறார். இடைநிறுத்தம் இல்லாத பேருந்துகளில் இத்தகைய ஏற்பாடு என்று நினைக்கிறேன். விசாகப்பட்டினப் பேருந்து நிலையத்தின் கழிப்பறைகள் தரமாக இருக்கின்றன. நிலையத்திற்குள் சுற்றிலும் கடைகள் வைப்பதற்கில்லை. காத்திருப்புக் கூடமும் பேருந்து நிறுத்தத்திற்குரிய ஒதுக்கங்களும் என வேறு கூச்சல்களுக்கும் வணிகத்திற்கும் இடமில்லாத நிலையம் அது. ஒரு தேநீர் அருந்த வேண்டும் என்றாலும் வெளியே சாலைக்கு வர வேண்டும்.

தமிழ்நாட்டுப் பேருந்து நிலையங்களுக்குப் பொதுவான ஓர் அழகிய முகம் உண்டு. என் நினைவில் பேருந்து நிலையம் என்றதும் அதனைச் சுற்றியுள்ள கடைகளிலிருந்து எழும் பழங்களின் நறுமணம் அவற்றில் ஒன்று. என் நினைவிலுள்ள பழநிப் பேருந்து நிலையம் கொய்யாப்பழ மணத்தால் ஆனது. மதுரைப் பேருந்து நிலையம் மல்லிகைப் பூக்களின் மணத்தால் நிரம்பியிருப்பது. பெரும்பாலும் எல்லாப் பேருந்து நிலையங்களுக்கும் ஆப்பிள் வாசனை உண்டு. பலவகைப் பழக்கடைகளால் நிரம்பியவைதான் பேருந்து நிலையத்தின் விளிம்புகள். எப்படிப் பூக்கடைகள் மிகுந்திருந்தால் ஒரு மலர்ச்சியான மனநிலை வாய்க்குமோ அதே இயல்பு பழக்கடைகட்குமுண்டு. அதனை அடுத்து என்னை ஈர்த்தவை அங்குள்ள கடைகளில் தொங்கும் கிழமை, திங்கள் இதழ்களின் புத்தம் புதுத்தோற்றம். விகடனும் குமுதமும் கல்கியும் குங்குமமும் ராணியும் வந்திறங்கினால் பேருந்து நிலையக் கடைகளில் புதுத்தாள்களின் அச்சு மணம் கும்மென்று பரவும். அப்போதைய இதழ்களின் அட்டைப்படமே அந்தப் பேருந்து நிலையத்தில் எங்கெங்கும் தொங்கும் படங்களாக இருக்கும். இன்றைக்குப் பேருந்து நிலையத்திற்குள் புத்தகக் கடைகள் அருகிப்போய்விட்டன. விகடனையும் குமுதத்தையும் தோரணமாய்த் தொங்கவிடாமல் அடுக்கி வைத்து விற்கிறார்கள். பழங்கள் யாவும் தம் இயற்கை மணமிழந்து வெறும் காட்சிப் பொருளாய் இருக்கின்றன.

இப்போதைய பேருந்து நிலையங்களில் புதிதாய் ஒரு கவிச்சம் அடிக்கிறது. அதுதான் சிறுநீர்க் கவிச்சம். பேருந்தினை விட்டிறங்கியதும் உடனே சிறுநீர் கழித்தாக வேண்டும். பேருந்து நிலையக் கழிப்பறைகள் ஐந்துக்கும் பத்துக்கும் விலைவைத்து நிற்கின்றன. இதனைக் குறித்து விரிவாய் ஒரு பதிவினை முகநூலில் எழுதினேன். அதற்குக் கிடைத்த எதிர்வினைகள் விழிவிரிய வைத்தன. உலகெங்குமுள்ள பொதுக் கழிப்பறைகள் இலவயமாக இருக்கையில் நம்மூரில்தான் அவற்றுக்குக் கட்டணம் கேட்கிறார்கள். ஒரு பேருந்து நிலையத்தில் அந்தந்த மாநகர/நகராட்சிகளின் தண்ணீரையும் இடத்தினையும் பயன்படுத்திக்கொண்டு யாரோ ஒருவர் கட்டணக்கொள்ளை அடிப்பது எவ்வகையிலும் அறமில்லை. அவ்வளவு கட்டணம் பெற்றாலும் அவற்றின் தூய்மைத் தரமோ சொல்லிக்கொள்ளுமளவும் இல்லை. மாநிலமெங்கும் பேருந்து நிலையக் கழிப்பறைகள் அனைவர்க்கும் இலவயமாகவும் தூய்மையாகவும் மக்களுக்குத் திறந்திருக்க வேண்டும் என்பதே எல்லாரின் கோரிக்கையாகவும் இருக்கிறது.