
தங்கம் விலை கொஞ்சம் குறைந்திருப்பது நகைப் பிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது!
மூன்று மாதங்களுக்கு முன்பாக 22 காரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,400 ஆக காணப்பட்ட நிலையில், தற்போது, அதிலிருந்து 15% இறக்கம் கண்டு சுமார் ரூ.4,800 ஆக வர்த்தகமாகி வருகிறது.
இந்த விலைச்சரிவானது ஒருவகையில் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இனி விலை ஏறும்முன் வாங்கிவிடலாம் எனச் சிலர் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். இன்னும் சிலர், விலை இன்னும் குறையும். அப்போது வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தங்கம் விலை இனி எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் எனில், சர்வதேச நிகழ்வுகளை முதலில் நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நிகழ்வுகள் என்னென்ன என்று முதலில் பார்ப்போம்.

கொரோனா தடுப்பு ஊசியும் பங்குச் சந்தை ஏற்றமும்...
உலகச் சந்தைகள் மற்றும் இந்திய பங்குச் சந்தைகள் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தில் வர்த்தகம் நடைபெறுவது, கோவிட் 19-க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் 90% வெற்றி போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை, ஆகஸ்ட் மாத உச்சத்திலிருந்து இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
என்றாலும், பங்குச் சந்தைகள் உலகளவில் மீண்டும் இறக்கம் காணலாம்; அதேபோல, கொரோனா இரண்டாவது அலை வீசி, உலகப் பொருளாதார நிலையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கலாம் என்பதால், தங்கத்தின் மீதான முதலீடு மீண்டும் உயர வாய்ப்புண்டு.
பொதுவாக, தங்கத்தின் மீதான முதலீடுகள் என்பது ஆபரணங்கள், தங்கக் காசு அல்லது கட்டிகள், பேப்பர் கோல்ட் எனப்படும் கோல்ட் இ.டி.எஃப், எஸ்.ஜி.பி (சாவரின் கோல்ட் பாண்டுகள்) என்று அழைக்கக்கூடிய தங்கப் பத்திரங்கள் போன்றவை மீதுதான் நடைபெறுகிறது.

கோல்ட் இ.டி.எஃப் முதலீடுகளில் ஆதாயப் பதிவு
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கம் சார்ந்த இ.டி.எஃப் முதலீடுகள் அதிகரித்து வந்தன. கடந்த 10 மாதங்களில் மட்டும் 11% அதிகரித்திருந்தன. இதில் கோவிட்19-ன் தாக்கம் பங்குச் சந்தைகளை மார்ச் மாதத்தில் 30 சதவிகிதமாக இறக்கம் காண வைத்தது. அதே சமயம், தங்கத்தின் மீது முதலீடுகள் பெருமளவு அதிகரித்தன. இப்போது, ஃபைசர் நிறுவனத்தின் கோவிட் 19-க்கு தடுப்பூசி பற்றிய செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து முதலீட்டாளர் களில் ஒரு பகுதியினர் ஆதாயப்பதிவு செய்ததை அடுத்து, உச்சத்திலிருந்து சற்றுக் கீழிறங்கி வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது.
இருந்தபோதிலும், இ.டி.எஃப் மீதான முதலீட்டாளர்களின் கவனம் இரண்டாம் கட்ட கொரானாவின் தாக்கம் பற்றியதாக இருக்கிறது. ஏனென்றால், அமெரிக்காவின் நியுயார்க் நகரத்தில் பள்ளிகளை மூடுமாறு அறிவித்திருப்பது, சிகாகோவில் பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது, கலிபோர்னியா மாகாணத்தில் கொரானா பாதிப்பு அதிகரித்துவருவது - இவையெல்லாம் தங்கத்தின் மீதான விலைச் சரிவை தடுக்கும் காரணிகளாக இருக்கின்றன.
ஜோ பைடனின் பொருளாதார நிலைபாடுகள்...
அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் சீனாவுடனான வர்த்தகக் கொள்கையை எவ்வாறு கையாளப்போகிறார் என்பதை உலகச் சந்தைகள் கவனித்து வருகின்றன. 2018-ம் ஆண்டிலிருந்தே அமெரிக்க – சீனா இடையிலான வர்த்தகப்போரின் காரணமாகத் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இதில் அமெரிக்கா தொடுத்த வர்த்தகப்போரின் நோக்கமே அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் என்றாலும், அதற்கான பலன்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம் பல்வேறு பொருள்களுக்கு இறக்குமதி தீர்வையை அதிகரிக்கச் செய்வதன் மூலமாக அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்த நடவடிக்கை எடுத்தது. இதில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்தது. ஆனால், மறுபக்கம் இறக்குமதி வரி விதிப்பால், அமெரிக்க மக்களுக்கும், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் தேவையான அளவுக்கு மூலப்பொருள்கள் கிடைக்கப் பெறாமலும், அப்படியே கிடைத் தாலும், விலை அதிகரித்தும் காணப்பட்டன. இதன் தாக்கம் தனிநபர் வருவாய் குறைந்தது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது; தவிர, பொருளாதார வளர்ச்சிக்கும் பங்கம் விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது. நடப்பு 2020–ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே சீனாவின் நாணயமான யுவான் அமெரிக்க டாலருக்கு எதிராக வலுவான நிலைக்கு நகர ஆரம்பித்தது. இது 2018-ம் ஆண்டுக்குப் பிறகு, ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றமாகும். (பார்க்க படம்-1)
மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பு முறையால், சீனாவின் அமெரிக்க ஏற்றுமதியில் எத்தகைய தொய்வும் ஏற்படவில்லை என்பது முக்கியமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மேற்கொண்ட பற்றாக்குறையைக் குறைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி காண முடியவில்லை என்பது நிரூபணமாகி இருக்கிறது. (பார்க்க படம் - 2)

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி புதிய அதிபரின் நடவடிக்கைகள், இறக்குமதித் தீர்வில் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதைப் பொறுத்ததாகும். ஒருவேளை, இறக்குமதித் தீர்வையில் தளர்வுகள் அறிவிக்கப்படுமானால், அதற்கு மாற்றாக உள்நாட்டில் பெரு நிறுவனங்களுக்கும் மற்றும் ஆண்டுக்கு நான்கு லட்சம் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டும் தனிநபர் மீதான வரியானது அதிகரிக்கப்படக்கூடும் என்கிற கருத்துகள் மேலோங்கி வருகின்றன.
அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும்போது வரியானது மேலும் அதிகரிக்கப்பட்டால், வளர்ச்சியானது தொய்வைச் சந்திக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்படும். தவிர, பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மீண்டும் அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கவே செய்கிறது. ஆகையால், தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் உடனடியாக இறக்கம் காண வாய்ப்பில்லை எனக் கருதலாம்.
வளர்ந்த நாடுகளின் பொருளாதார நிலைமை
தங்கத்தின் விலையேற்றம் வரும் ஆண்டு களிலும் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறுவதற்கு வளர்ந்த நாடுகளின் பொருளாதார வலிமை மிகவும் பலவீனமாக இருப்பதும், அத்தகைய நிலையிலிருந்து மீண்டெழ அந்த நாடுகள் மேற்கொள்கிற நடவடிக்கைகளுமே முக்கியக் காரணமாக இருக்கின்றன.
தளர்வான நிதிக் கொள்கைகள், அதிகக் கடன் சுமையில் இருப்பது, அரசின் செலவுகள் அதிகரித்துக்கொண்டே போவது என இவை அனைத்தும் வளர்ந்த நாடுகள் அனைத்தும் தொடர் நிகழ்வாகக் கொண்டுசெல்வது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை இன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் தங்கம் ஒருவித தவிர்க்க முடியாத பாதுகாப்பான முதலீடாக அனைவராலும் பார்க்கப் படுகின்றன.
கோவிட்-19 போன்ற நீண்டகால அச்சுறுத்தல்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்து கின்றன. இதன் தாக்கம் அந்தந்த நாடுகளின் நாணய மதிப்பில் பிரதிபலிக்கச் செய்கின்றன. அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் 2020–ம் ஆண்டின் தொடக்கத்தில் 97 ஆக இருந்தது, படிப்படியாகக் குறைந்து தற்போது 92-ஆக இறக்கமடைந்திருக்கிறது.
ஆக, மொத்தத்தில், டாலரின் மதிப்பு சரிவு, அமெரிக்க பெடரல் வட்டி விகிதங்களைக் குறைத்து வைத்திருப்பது, கொரானா பாதிப்பால் பொருளாதார மந்தநிலை – இவை அனைத்திலும் உடனடியாக எவ்வித முன்னேற்றமும் காண வாய்ப்பில்லை என்பதால், தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரிக்கவே வாய்ப்புண்டு என்பதைச் சொல்லும் நிலையே தற்போது இருக்கிறது.
தற்போதைய விலை இறக்கத்தைப் பயன்படுத்தி, தங்கத்தில் கொஞ்சம் முதலீடுகளை மேற்கொள்ளலாம். என்றாலும், இனிவரும் நாள்களில் நடக்கும் உலக நிகழ்வுகளைப் பொறுத்து தங்கத்தின் விலைப் போக்கு மாறவும் வாய்ப்புண்டு. எனவே, தங்கத்தின் விலையை மட்டும் கவனிக்காமல், உலக நிகழ்வுகளையும் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது அவசியம்!