
பழைய கார் வாங்கும்போது இவையெல்லாம் கவனியுங்க! - நிபுணர் தரும் டிப்ஸ்...
இரண்டு சக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ உடனடியாக வாங்க வேண்டும். ஆனால், புது வண்டி வாங்குகிற அளவுக்குப் பணம் இல்லை என்றால், செகண்ட் ஹேண்ட் எனப் படுகிற பழைய வண்டியைத்தான் வாங்க வேண்டி வரும்.
புதுவண்டியைவிட இந்த வண்டிகள் சில ஆயிரங்களோ, சில லட்சங்களோ குறைவானது என்றாலும், நாம் உழைத்துச் சம்பாதித்த பணத்துக்கேற்ற தகுதி கொண்டதாக அந்த வண்டிகள் இருக்க வேண்டும். பழைய வண்டிகள் வாங்கும்போது, பிடித்த கலர், வண்டியில் சத்தம் வருகிறதா என்பதைத் தாண்டி வேறு எவற்றையெல்லாம் கவனித்து வாங்க வேண்டும் என்று சொல்கிறார் மோட்டார் வாகனம் தொடர்பான வழக்கறிஞரும் கார் ஆர்வலருமான பாபு ரங்கசாமி.

டூவீலர் வாங்கும்போது...
இரண்டு சக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ எது வாங்கினாலும், அதை ஓட்டப்போவது ஆணா அல்லது பெண்ணா அல்லது இருவருமா என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டு வாங்க வேண்டும். உதாரணத்துக்கு, கணவருடைய ஆஃபீஸ் உபயோகத்துக்கு என்றால், பைக் ஓகே. மனைவியுடைய ஆஃபீஸ் உபயோகத்துக்கு என்றால், அவர் உயரத்துக்கு ஏற்ற, அவருக்குப் பிடித்தமான கலரில் வண்டியை வாங்க வேண்டும். ஒருவேளை, கணவர்-மனைவி இருவருமே ஓட்டுவார்கள் என்றால், இருவருக்குமே வசதியான டூவீலரை வாங்க வேண்டும். உதாரணமாக, ஆக்டிவா. வயதானவர்கள் ஓட்டப்போகிறார்கள் என்றால், அவர்களுக்கு ஏற்ற வெயிட் குறைவான வண்டியை வாங்க வேண்டும். இது பழைய வண்டிக்கு மட்டுமல்ல, புது வண்டிக்கும் பொருந்தும்.
மார்க்கெட்டுக்கு புதிதாக வந்த வண்டியை வாங்கினீர்கள் என்றால், அவற்றுக்கு சர்வீஸ் நெட்வொர்க் மிகவும் குறைவாகவே இருக்கும். உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் சர்வீஸ் நெட்வொர்க் இருக்கிற அல்லது சுலபமாக சர்வீஸ் செய்ய முடிந்த வண்டியை வாங்குவது புத்திசாலித்தனம். இது டூவீலர், ஃபோர் வீலர் இரண்டுக்குமே பொருந்தும்.
எத்தனை கி.மீ ஓடியிருக்கிறது?
செகண்ட் ஹேண்டில் டூவீலர் வாங்கப் போகிறீர்கள் என்றால், வண்டி எத்தனை கிலோ மீட்டர் ஓடியிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். வண்டி 15,000 முதல் 20,000 கிலோ மீட்டர் ஓடியிருந்தால் வாங்கலாம். ஒருவேளை, வண்டி 20,000 கிலோ மீட்டருக்கு மேல் ஓடியிருந்தாலும், ஒரு மெக்கானிக்கை அழைத்துச் சென்று, ‘இந்த வண்டிக்கு இந்த விலை கொடுக்கலாமா’, ‘வாங்கினால் செலவு வைக்குமா’ என்பனவற்றைத் தெரிந்துகொண்டு வாங்குங்கள். டூவீலர் அதிக கிலோ மீட்டர் ஓடி இருந்தாலும் குறைவாக ஓடியதாகக் காட்டும்படி ஸ்பீடா மீட்டரை மாற்றி வைக்கிற ஏமாற்று வேலையும் நடக்கிறது. இதையும் மெக்கானிக் உதவியுடன்தான் கிராஸ் செக் செய்ய வேண்டும்.

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற மார்க்கெட்டுக்கு செல்ல, நாலுத்தெரு தள்ளி இருக்கிற பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை விட எனில், 25,000 கிலோ மீட்டருக்கு மேல் ஓடிய டூவீலர் என்றாலும் வாங்கலாம். ஆனால், அந்த வண்டியும் நன்றாகப் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். வண்டியின் உதிரிபாகங்கள் ஒரிஜினலாக இருக்க வேண்டும்.
மோசமான சாலைகள், வேகமான டிரைவிங் என்று டூவீலர் ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தங்கள் வண்டிகளை மோசமான கண்டிஷனில்தான் வைத்திருப்பார்கள். வேலை, வேலையென்று ஓடுவதில் சர்வீஸ் செய்யவும் அவர்களுக்கு நேரமிருப்பதில்லை. வண்டிக்குப் பெரிய தொகை செலவழித்து சர்வீஸ் செய்ய வேண்டும் என்கிற நிலையில்தான், வண்டியை விற்கிற முடிவுக்கு வருகிறார்கள். இப்படிப்பட்ட டூவீலரை வாங்கினீர்கள் என்றால், வண்டி லொடலொடவென்று இருக்கும்.
வண்டி வாங்கும்போது அதனுடைய உதிரிபாகங்கள், சஸ்பென்ஷன், டயர் போன்றவை தரமாக இருக்கின்றனவா என்பதை செக் செய்வது நல்லது. இல்லையென்றால், வாங்கியவுடனே உங்களுக்குச் செலவு வைக்கும்.
காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக டெல்லி போலவே இங்கும் 15 வருடத்துக்கு முந்தைய மாடல் வண்டிகளைத் தடைசெய்ய இருக்கிறார்கள். விலை குறைவாக இருக்கிறது என்று பழைய மாடல் வண்டிகளை வாங்கி விடாதீர்கள்.
ஆர்.சி புக் ஒரிஜினல் இருக்கிறதா?
வண்டியின் ரெஜிஸ்ட்ரேஷன் சர்ட்டிஃபிகேட் என்று சொல்கிற ஆர்.சி புக்கின் ஒரிஜினல் கட்டாயம் இருக்க வேண்டும். டூப்ளிகேட்தான் இருக்கிறது, ஒரிஜினல் தொலைந்துவிட்டது என்றால், அது தொடர்பான புகார் கொடுத்து டூப்ளிகேட் ஆர்.சி புக் வாங்கியதற்கான ஆதாரங்களை செக் செய்ய வேண்டும்.

ஒரு டூவீலரை செகண்ட் ஹேண்டில் 20,000-க்கு வாங்குகிறீர்கள் என்றால், அதை மூன்றாவதாக விற்கும்போது அடிமாட்டு விலைக்குப் போகாமல் 10,000 அல்லது 8,000-க்காவது போக வேண்டும். அந்தளவுக்குத் தரமாகவும் நல்ல பிராண்டிலும் வாங்குவது நல்லது.
புல்லட் அல்லது பல்சர் வண்டிகள் அதிகம் திருடு போகின்றன. அதனால், இந்த வண்டிகளை செகண்ட் ஹேண்டில் வாங்குகிறீர்கள் என்றால், அது திருட்டு வண்டியா என்பதை கிராஸ் செக் செய்துவிட்டே வாங்க வேண்டும். ஆர்.சி புத்தகத்தில் இருக்கிற இன்ஜின் நம்பரும் வண்டியின் ஹேண்டில் பாருக்கு கீழே இருக்கிற சாஷிஷ் (chassis) நம்பரரும் ஒன்றாக இருந்தால், அது திருட்டு வண்டியில்லை என்று தெரிந்துகொள்ளலாம்.
இன்ஷுரன்ஸ் இழப்பீடு வாங்கி இருக்கிறார்களா?
வண்டியின் இன்ஷூரன்ஸ் பேப்பரை செக் செய்து, வண்டி விபத்தில் சிக்கியிருக்கிறதா, அது தொடர்பான இழப்பீடு ஏதாவது வாங்கி யிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
வண்டி வாங்கிய 15 நாளிலோ, ஒரு மாதத்திலோ இன்ஷூரன்ஸ் பணம் கட்டுகிற மாதிரி இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள். அப்படியிருந்தால், விற்பவர்களிடம் அந்த இன்ஷூரன்ஸை கட்டச் சொல்லியோ, அந்தப் பணத்தை விற்பனைத் தொகையில் குறைத்தோ கொடுக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால், அந்த பிரீமியத்தை நீங்கள்தான் கட்ட வேண்டும்.
கார் வாங்கும்போது...
புது காரோ, பழைய காரோ, வாங்குவதற்கு முன்னால் ஹைவேஸில் ஓட்டப் போகிறீர்களா, சிட்டிக்குள் ஓட்டப் போகிறீர்களா, அந்தளவுக்கு உங்களுக்கு டிரைவிங் ஸ்கில் இருக்கிறதா என்பதை யோசித்து முடிவெடுங்கள். இது உங்கள் பாதுகாப்புக்கு...

30,000 முதல் 50,000 கிலோ மீட்டர் வரை கார் ஓடியிருந்தால், அந்த காரை தாராளமாக வாங்கலாம். சில கார்கள் ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடியிருந்தாலும் பராமரிப்பு நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட கார்களையும் வாங்கலாம். ஆனால், ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடிய கார்களை வாங்காமல் இருப்பதே நல்லது. இந்த கார்கள் செலவு வைத்துக்கொண்டே இருக்கும்.
வாரத்துக்கு ஒருநாள் குடும்பத்துடன் அவுட்டிங் செல்வதற்குத்தான் கார் எடுப்பீர்கள் என்றாலோ, மாதத்துக்கு ஒன்றிரண்டு நாள்கள்தான் கார் எடுப்பீர்கள் என்றால், அதற்கு சில லட்சங்கள் செலவழித்து கார் வாங்குவது வீண். ஏனென்றால், காரை வாங்கி மாதத்தின் முக்கால்வாசி நாள்கள் ஓட்டாமல் நிறுத்தியே வைத்திருப்பீர்கள் என்றால், தேவைக்கு எடுக்கும்போது வண்டி செலவு வைக்கும். பொதுவாகவே, ஓடாமல் நிற்கிற கார் அதிக செலவு வைக்கும்.
விபத்தான காரா?
கார் வாங்கும்போது ஆக்ஸிடென்ட் ஆகாத வண்டியா என்பதை கார் மெக்கானிக் செக் செய்தே பிறகே வாங்க வேண்டும். கார் பேனட் மற்றும் கதவைத் திறந்துப்பார்த்தால், அடிபட்டு சரிசெய்ததைக் கண்டுபிடித்து விடலாம். வேகமாகப் போகும்போது விபத்தைச் சந்தித்த காரில் ஸ்டெபிலிட்டி இருக்காது.

காரை ஓட்டாமலே நிற்க வைத்திருந்தால், டயர்கள் வீக்காக இருக்கும். பார்க்க நன்றாக இருந்தாலும் ஓட்ட ஆரம்பித்தவுடன் இந்த டயர்கள் சேதமாகிவிடும். 5,000 ரூபாய்க்குக் குறைவாக இன்றைக்கு எந்த வண்டிக்கும் டயர் கிடைக்காது. நான்கு டயர் மாற்றினால் 20,000 போச்சு. எனவே, டயரைப் பாருங்கள்.
பழைய கார் வாங்கும்போது கிளட்ச் தேயாமல் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். தேய்ந்திருந்தால், அந்த வகையில் கூடுதலாக 15,000 முதல் 20,000 வரை செலவாகும்.
பழைய காரை வாங்கிய ஒரு மாதத்தில் இன்ஷூரன்ஸ் போட வேண்டியிருந்தால், அதைக் கவனித்து, விற்பவரை கட்டச் சொல்லுங்கள்.
தற்போது காரில் அழகழகான சின்ன வண்டிகள் வருகின்றன. பார்க்க அழகாக இருக்கும் இந்தக் கார்களின் பராமரிப்புச் செலவு அதிகம். உதிரிபாகங்களின் விலையும் அதிகம். செகண்ட் ஹேண்ட் கார்கள் வாங்கும்போது இந்த வண்டிகளைத் தவிர்ப்பது நல்லது. தவிர, தொலைதூரப் பயணங்களுக்கு சின்ன கார்கள் சரிப்பட்டு வராது.
மாருதி, டொயோட்டா, மஹிந்திரா என்று சில கார் கம்பெனிகளே தங்களுடைய செகண்ட் ஹேண்ட் கார்களை விற்பனை செய்ய ஆரம்பித் திருக்கின்றன. விலை சற்று கூடுதலாகத்தான் இருக்கும். உங்களுக்கு அந்த பிராண்ட்டுகளின் மீது நம்பிக்கை இருந்தால் வாங்கலாம்.
பழைய டூவீலர் மற்றும் கார்களை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை சொல்லிவிட்டோம். இனி நீங்களும் கார் வாங்கலாமே!