Published:Updated:

`நீதிமன்றத்திலேயே பிற்போக்குத்தனம் இருக்கலாமா?' -`சோப்தார்' பணி நியமனமும் சர்ச்சையும்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் சோப்தார்
News
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் சோப்தார்

``ஆங்கிலேயர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சோப்தார் நியமன நடைமுறை, இப்போதும் தேவைதானா? சமூக சமத்துவத்தை உறுதி செய்யும் நீதிமன்றத்திலேயே, பிற்போக்குத்தனமான இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவது நியாயம்தானா?" என்று கேள்வி எழுப்புகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு.

`நீதிமன்றத்திலேயே பிற்போக்குத்தனம் இருக்கலாமா?' -`சோப்தார்' பணி நியமனமும் சர்ச்சையும்

``ஆங்கிலேயர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சோப்தார் நியமன நடைமுறை, இப்போதும் தேவைதானா? சமூக சமத்துவத்தை உறுதி செய்யும் நீதிமன்றத்திலேயே, பிற்போக்குத்தனமான இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவது நியாயம்தானா?" என்று கேள்வி எழுப்புகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு.

Published:Updated:
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் சோப்தார்
News
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் சோப்தார்

சென்னை உயர் நீதிமன்றத்தில் `சோப்தார்' பொறுப்பில் பெண் ஒருவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டது, பேசுபொருளானது. காரணம், 160 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்ட இந்த நீதிமன்ற வரலாற்றில், முதன்முறையாக சோப்தாராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டார் என்பதுதான். இதை வரவேற்கலாமா, இத்தனை காலமாக ஏன் பெண்கள் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்படவில்லை உள்ளிட்ட கேள்விகளுக்கு முன்பு, சோப்தாரின் பணி என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வது முக்கியம்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

நீதிபதிகள் தங்களின் அறையில் இருந்து (Chamber) நீதிமன்ற அறைக்கு (Court Hall) வந்து செல்லும்போது, அவர்கள் எளிதாகக் கடந்து செல்வதை உறுதிசெய்வது சோப்தார்களின் முக்கியமான பணி. இதற்காக, `உஷ்... உஷ்...' என்று ஒலி எழுப்பியவாறு, நீதிபதிகளுக்குச் சில அடி தூரத்துக்கு முன்பாக வெள்ளி செங்கோலைத் தாங்கியவாறு, சோப்தார்கள் உடன் செல்வார்கள். அந்த நேரத்தில், வழக்கறிஞர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட எல்லோருமே நீதிபதிக்கு வழிவிட்டு, ஓரமாக நின்று `வணக்கம்' தெரிவிப்பது மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெள்ளி செங்கோல் நீதிபதியின் அறைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்தால், அந்த அறையின் உள்ளே நீதிபதி இருக்கிறார் என்று பொருள். வெள்ளை நிறச் சீருடையுடன், தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற தலைப்பாகை, வயிற்றுப் பகுதியில் சிவப்பு நிற பட்டையை சோப்தார் அணிந்திருப்பார். நீதிபதியின் உதவியாளராகக் கருதப்படும் இந்த சோப்தார், பணி முடிந்து திரும்பும்வரை நீதிபதி இருக்கும் இடத்திலேயே இருப்பார். தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் சோப்தார், உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளாவின் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் சோப்தார்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் சோப்தார்

`ஆங்கிலேயர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இந்த சோப்தார் நியமனம், இப்போதும் தேவைதானா? சமூக சமத்துவத்தை உறுதி செய்யும் நீதிமன்றத்திலேயே, பிற்போக்குத்தனமான இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவது நியாயம்தானா?' என்று கேள்வி எழுப்புகிறார்கள் நடுநிலையாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சோப்தார் பணியிடம் தேவையற்றது' என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்திவருகிறார், ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு. மாற்றம் தன்னிடமிருந்து உருவாகட்டும் என்று, நீதிபதியாகப் பணியில் இருந்தபோது தனக்கு சோப்தார் உதவி வேண்டாம் என்று மறுத்திருந்தார் அவர். சந்துருவிடம் பேசினோம்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

``சோப்தார் பணியை, காலனி ஆதிக்கத்தின் நீட்சியாகத்தான் பார்க்கிறேன். அதனாலும், வரட்டு கௌரவத்தை விரும்பாததாலும், நான் நீதிபதியான பிறகு, சோப்தார் என்ற உதவியாளர் எனக்கு வேண்டாம் எனக் கூறினேன். அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் 59 நீதிபதிகள் பணியில் இருந்தனர். `நீதிபதிகள் உட்பட பல்வேறு பணியிடங்களுக்குப் பற்றாக்குறை இருக்கும் இந்த நீதிமன்றத்தில், 59 சோப்தார்கள் தேவையா? ஒருவேளை சோப்தார்கள் பயன்படுத்தப்பட்டாலும், நீதிமன்ற அறைக்கு நீதிபதி வந்த பிறகு, சோப்தார்களுக்கு ஆக்கபூர்வமான வேலைகள் ஏதாவது ஒதுக்கப்பட வேண்டும்' என்று பலமுறை வலியுறுத்தினேன். ஆனால், அதை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை.

பணியிலிருக்கும்போது சோப்தார்கள் செருப்பு அணியக் கூடாது என்ற நடைமுறை அப்போது இருந்தது. அதற்கு எதிராகவும் குரல் கொடுத்தேன். பிறகுதான், உதவியாளராக இருக்கும் நீதிபதி ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் மட்டும், சில சோப்தார்கள் செருப்பு அணிய அனுமதிக்கப்பட்டனர். சோப்தார்களுக்குப் பெரிதாக வேலையே கிடையாது. ஆனால், அவர்களுக்குச் சராசரியாக 25,000 - 30,000 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது என நினைக்கிறேன். நீதிபதிகளின் வறட்டு கெளரவத்துக்காக, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இதேபோலத்தான் நீதிபதிகளுக்கான ஓட்டுநர் பணியிடமும். நீதிபதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, பின்னர் இல்லத்துக்குக் கொண்டுசென்று விடுவது தவிர, ஓட்டுநர்களுக்கும் பெரிதாக வேலை கிடையாது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு

சென்னையைப் போன்றே பாரம்பர்யம் கொண்டிருக்கும் மும்பை மற்றும் கொல்கத்தா உட்பட நாட்டிலுள்ள பெரும்பாலான உயர் நீதிமன்றங்களிலும், இந்த சோப்தார் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன்? டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில்கூட சோப்தார்கள் பயன்படுத்தப்படுவதில்லை. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தாலே, சோப்தார் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரலாம். ஆனால், அந்த மாற்றத்தைப் பெரும்பாலான நீதிபதிகள் விரும்பமாட்டார்கள். அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல், சமூகத்தில் பலமாக ஒலிக்கும்போது, அதைக் கேலிக்கூத்தாக்கும் விதமான இந்த சோப்தார் நடைமுறை இன்றுவரை தொடர்கிறது. இந்த நிலையில், சோப்தார் பொறுப்பில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டதை எப்படி வரவேற்க முடியும்? இது பெருமிதப்பட வேண்டிய சாதனையா?" என்று காட்டமாக முடித்தார் சந்துரு.

சந்துருவின் கருத்தை ஆமோதிக்கும் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அஜிதா, பெண் சோப்தார் நியமனத்தை வரவேற்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசுகையில், நீதிமன்றத்தில் கடைப்பிடிக்கப்படும் தேவையற்ற பல நடைமுறைகள் குறித்து ஆதங்கத்தையும் அதிருப்தியையும் ஒருசேர வெளிப்படுத்தினார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

தொடர்ந்து பேசிய அவர், ``பிரிட்டிஷ் ஆட்சியில், மன்னர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு முன்வரிசையில், செங்கோலைத் தாங்கிய நபர் செல்வார். மேலும், மன்னர் செல்லாத இடங்களிலும், அவரின் ஆணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றுமென்றால் செங்கோலைக் கொண்டு சென்று அங்கு வைப்பார்கள். இதனால், `அரசரின் ஆணைப்படி' என்ற முக்கியத்துவம் உணர்த்தப்படும். அரசர் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பு உதவியாளராகவும், அவர்களின் அதிகாரத்தை வெளியுலகத்துக்குப் பிரகடனப்படுத்தவும்தான், வெள்ளி செங்கோலைத் தாங்கிச் செல்லும் சோப்தார் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

அதன் நீட்சியாகவே, ஆங்கிலேயர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்ட சென்னை, கொல்கத்தா, மும்பை உயர் நீதிமன்றங்களிலும் சோப்தார் நடைமுறை பின்பற்றப்பட்டது. நீதிபதி, தனது அறையில் இருந்து நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில், அவருக்கான பாதையைச் சரிசெய்யச் செங்கோல் ஏந்திய சோப்தார் செல்வதுடன், `உஷ்... உஷ்...' என எச்சரிக்கை ஒலியை எழுப்புவார். யாருடைய இடையூறும் இன்றி, நீதிபதி நேரடியாகத் தனது இருக்கையில் சென்று அமர்வதை உறுதி செய்யவே சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த நடைமுறை தற்போது வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

வழக்கறிஞர் அஜிதா
வழக்கறிஞர் அஜிதா

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் போன்ற மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்டவர்கள் கூடும் அவைகளில்கூட, ஆங்கிலேயர் கால நடைமுறையைப் பிரதிபலிக்கும் வகையில் சபாநாயகர்கள் செல்லும் முன்பு செங்கோல் தாங்கிய சோப்தார் பயன்படுத்தப்படுவது சரிதானா? `ஏன் இந்த நடைமுறை வந்தது, இந்தக் காலத்திலும் இந்தப் பணி தேவைதானா?' என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் சிந்திப்பதேயில்லை.

அனைவரும் சமம் எனக் கருதப்பட வேண்டிய நம் சுதந்திர நாட்டில், சோப்தார் பணி தேவையற்றது. அவர்களின் பயன்பாடு, காலனி ஆதிக்கத்தின் தொடர்ச்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனால், சமூக சமத்துவம், மனிதநேயம் போன்ற பல விஷயங்கள் அடிபட்டுப் போகின்றன. இதையெல்லாம் உணர்ந்து, சோப்தார் உதவியாளர் தங்களுக்கு வேண்டாம் என்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளான சந்துரு மற்றும் ஹரிபரந்தாமன் ஆகியோர் எடுத்த முடிவை, மற்ற நீதிபதிகள் எடுக்க விரும்பவில்லை" என்கிற அஜிதா. பெண் சோப்தார் நியமனத்தை வரவேற்பதற்கான காரணத்தையும் அவர் முன்வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

``பாதுகாப்புப் பணிக்குப் பெண் சரிபட்டுவரமாட்டார் என்ற ஆணாதிக்க சிந்தனையால்தான், சோப்தார் பணியில் மன்னராட்சிக் காலம் முதலே பெண்கள் பயன்படுத்தப் படவில்லை. இதே எண்ணத்தினால்தான், காவல்துறையிலும் பெண்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர்.

பெண்களின் பங்களிப்புடன் இந்த ஜனநாயகம் எப்படித் தழைக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்ட பிறகே, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்புதான், மகளிர் காவல் நிலையம் உட்பட காவல்துறையில் பெண்களின் பங்களிப்பும் உறுதி செய்யப்பட்டது. எந்தத் துறையாக இருந்தாலும், `இந்த வேலைக்குப் போகலாமா, வேண்டாமா...' என்பதைப் பெண்கள்தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, ஆணாதிக்க சிந்தனையுடன் பிறரால் முடிவுகள் எடுக்கப்படக் கூடாது.

பெண் காவலர்கள்
பெண் காவலர்கள்

இந்த சோப்தார் நடைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் உறுதியான கருத்து. ஆனால், அந்த மாற்றம் ஏற்படும்வரை, சோப்தார் பொறுப்பில் மூன்றில் ஒரு பங்கு அல்லது சரிபாதி பெண்கள் நியமிக்கப்பட வேண்டும். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாகப் பெண் சோப்தார் பொறுப்பேற்றுள்ளதை வரவேற்கிறேன்" என்று உறுதியான குரலில் கூறினார் வழக்கறிஞர் அஜிதா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism