மத்தியப் பிரதேச வனத்துறை அமைச்சர், வரும் நவம்பர் மாதத்தில் 10 ஆண் மற்றும் 10 பெண் சிவிங்கிப் புலிகள் இரண்டு கட்ட பயணத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு, குனோ-பால்பூர் காட்டுயிர் சரணாலயத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவிலிருந்து குவாலியர் வரை விமானத்தில் கொண்டுவரப்படும் இவை, அங்கிருந்து சாலை வழியாக குனோ-பால்பூர் சரணாலயத்துக்குக் கொண்டுவரப்படும்.
உலகின் அதிவேகமான பாலூட்டியாக அறியப்படு சிவிங்கிப் புலிகள், இப்போது ஆப்பிரிக்காவில் சில ஆயிரங்களில் வாழ்கின்றன. இப்போது, இந்தியத் துணைக்கண்டத்தில் எங்குமே காணப்படாத இவை, ஒருகாலத்தில் வடக்கிலிருந்து கிழக்கே தக்காண பீடபூமி முழுக்கப் பரவி வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த வரலாற்றை மீட்டெடுக்கும் நோக்கத்தில் உச்ச நீதிமன்றம் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியது.

வரலாற்றில் இதுவரை அழிந்துபோன உயிரினங்களின் சோகக் கதைகளில் மனித இனத்தின் ஈவு இரக்கமற்ற வேட்டை முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஆனால், வேட்டை மட்டுமே சிவிங்கிப் புலிகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கவில்லை. இவற்றின் அழிவுக்கு அதைவிட இரண்டு மிக முக்கியக் காரணங்கள் இருந்தன. ஒன்று, சிவிங்கிப் புலிகளை உங்களால் எளிதில் பழக்கப்படுத்திவிட முடியும். அவை நாய்களைப் போல் நன்றாகப் பழகிவிடும். புலி, சிங்கம், சிறுத்தை போன்றவற்றுக்கு மனிதர்களிடம் இருக்கும் எச்சரிக்கை உணர்வு சிவிங்கிப் புலிகளுக்குக் கிடையாது. ஆகவே அவை ஆயிரக்கணக்கில் பிடிக்கப்பட்டு, உலகின் இரண்டாவது வேகமான பாலூட்டியாக அறியப்படும் வெளிமான்களை (Black bucks) வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டன.
இந்த அளவுக்குப் பழக்கப்படுத்தி வளர்த்திருந்தால், அவை எண்ணிக்கையில் மாடுகள், ஆடுகள், நாய்களைப் போல் அதிகரித்திருக்க வேண்டுமல்லவா! ஏன், விரைவில் அழிந்துபோயின?
அதற்கான விடைதான், இரண்டாவது காரணம். பழக்கப்படுத்தினால், நன்கு பழகி அன்போடும் நன்றியோடும் நடந்துகொள்ள முடிந்த சிவிங்கிப் புலிகளால், அடைப்பிடத்தில் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் போனதுதான் காரணம். முதலும் கடைசியுமான பதிவாக 1613-ம் ஆண்டில் பேரரசர் ஜஹாங்கீருடைய வாழ்க்கை வரலாற்று நூலில், அவர் வளர்த்த ஒரேயொரு சிவிங்கிப் புலி மட்டுமே அப்படிச் செய்தது. அதைத் தவிர அவை அடைப்பிடத்தில் இனப்பெருக்கம் செய்ததற்கான ஆதாரம் ஒன்றுகூட உலக அளவில் கிடைக்கவில்லை.
இந்தியாவின் கடைசி சிவிங்கிப் புலி 1947-ம் ஆண்டில், அன்று மத்தியப் பிரதேசத்திலிருந்த, இப்போது சத்தீஸ்கரில் இருக்கும் சுர்குஜா என்ற பகுதியில் மகாராஜா ராமானுஜ் பிரதாப் சிங் டியோவால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாகச் சொல்லப்படுகிறது. அதிகாரபூர்வமாக 1952-ம் ஆண்டு, இந்தியாவில் இந்த இனம் அழிந்துவிட்டதாக இந்திய அரசாங்கத்தால் சொல்லப்பட்டது.

அதன்பிறகு ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை இந்தியக் காடுகளில் அறிமுகப்படுத்த 2009-ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய காட்டுயிர் மையம் செய்த விடாமுயற்சியின் பலனாக, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் சில சிவிங்கிப் புலிகளை முதல்கட்டமாகக் கொண்டு வந்து அறிமுகப்படுத்த உத்தரவிட்டது. பிறகு கொரோனா பேரிடரால் கடந்த ஆண்டில் இதை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் முடங்கிய திட்டம், தற்போது மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ-பால்பூர் என்ற காட்டுயிர் சரணாலயத்தில் முதல்கட்டமாக 10 ஆண் மற்றும் 10 பெண் என்ற வீதத்தில் 20 சிவிங்கிப் புலிகளை வரும் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்போவதாக அம்மாநில வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, பல்வேறு வல்லுநர்கள், இதன் நம்பகத்தன்மை, தேவை, இதற்கு ஆகக்கூடிய செலவு ஆகியவற்றைப் பற்றிக் கேள்வியெழுப்பி வருகின்றனர். இப்போது சிவிங்கிப் புலிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்தானா என்ற கேள்வி எழுகின்ற அதேநேரம், அவற்றுக்கு இருக்கும் நோய்ப்பரவல் ஆபத்து குறித்தும் காட்டுயிர் வல்லுநர்கள் தரப்பிலிருந்து தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
பொதுவாக, வேறு உயிரினம் ஒரு நிலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும்போது, அவற்றுக்கும் சரி, அவை அறிமுகப்படுத்தப்படும் நிலத்தில் ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருக்கும் மற்ற உயிரினங்களுக்கும் சரி, நோய்ப் பரவல் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, குனோவில் அறிமுகப்படுத்தப்படும் 20 சிவிங்கிப் புலிகள் முழு ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்பதோடு, புதிய வகை நோய்த்தொற்றுகளை இங்குள்ள உயிரினங்களிடையே பரப்பாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

சர்வதேச காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு (Union for Conservation of Nature, IUCN) இதுபோல் உயிரினங்களை அறிமுகப்படுத்துவது குறித்த கையேட்டின்படி, ``ஓரிடத்திலிருந்து வேறு பகுதிக்கு இடம் மாற்றப்படும் எந்தவோர் உயிரினமும் நுண்ணுயிரிகள், ஒட்டுண்ணிகளால் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆகவே, அவற்றிடமிருந்து அத்தகைய தொற்றுகள் பரவும் ஆபத்தும் இருக்கவே செய்கிறது" என்று கூறுகிறது. இதுகுறித்த வழிகாட்டுதலின்படி, நோய்த்தொற்று குறித்த மதிப்பீட்டை அறிமுகத்துக்கான திட்டமிடலின்போதே செய்து அப்படி எந்த ஆபத்தும் இல்லையென்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், ``தனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத, தன் இயல்புக்கு விரோதமான வேறு இடத்துக்கு மாற்றும்போது, அதனால் ஏற்படும் அச்சம், அழுத்தம் ஆகியவையும் நோய்த்தொற்று வளர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது" என்றும் சர்வதேச காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பின் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 20 சிவிங்கிப்புலிகளும் குனோ நிலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படுவதால், அவற்றிடமிருந்து இங்குள்ள உயிரினங்களுக்குப் புதிய நோய்த்தொற்றுகள் பரவலாம்.
இதுபோன்ற தொற்றுநோய்களைப் பரப்புவதில், அவற்றைக் கொண்டு வருகின்ற கன்டைனர்கள், அதிக நேரம் பயணிக்க வேண்டிய சூழல், நோய்த்தொற்று பாதுகாப்பு நெறிமுறைகளின் போதாமை என்று இன்னும் பல காரணிகள், இடம் மாற்றப்படும் உயிரினத்திடமிருந்து புதிய நோய்த்தொற்றுகள் பரவக் காரணமாக அமையலாம். ஆகையால், அவை இங்கு கொண்டு வரப்படுவதால் குனோவில் வாழும் உயிரினங்களுக்கு அவற்றால் எவ்விதத் தொற்றுகளும் பரவும் ஆபத்து இல்லையென்பதை உறுதி செய்ய, நோய்த்தொற்று அபாயம் பற்றிய மதிப்பீட்டைச் செய்ய வேண்டும் என்கிறார் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கார்த்திகேயன் வாசுதேவன்.

மேற்கொண்டு அவரிடம் பேசியபோது, ``ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் சிவிங்கிப் புலிகளிடமிருந்து இங்கு ஏற்கெனவே வாழும் உயிரினங்களுக்கு நோய்த்தொற்று பரவுவது மற்றும் இங்குள்ள உயிரினங்கள் மத்தியிலுள்ள நோய்த்தொற்றுகள் அறிமுகப்படுத்தப்படும் சிவிங்கிப் புலிகளுக்குப் பரவுவது என்று இரண்டுவிதமான அபாயங்கள் உள்ளன. முதலில், அவற்றுக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. இரண்டாவதாக, இங்குள்ள உயிரினங்கள் அத்தகைய நோய்களுக்கு எப்படிப் பாதிக்கப்படும் என்பதும் தெரியாது. இதுபோக, இங்கிருந்து என்ன மாதிரியான தொற்றுகள் அவற்றைப் பாதிக்கும் என்பதற்கும் நம்மிடம் போதுமான விவரம் இல்லை.
அதோடு, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் சிவிங்கிப் புலிகளுக்கு என்ன மாதிரியான நோய்த்தாக்குதல்கள் நடந்துள்ளன என்பதையும் கண்டறிய வேண்டும். அப்போதுதான் நமக்கு முழுமையான தரவுகள் கிடைக்கும். மற்ற பெரும்பூனைகளை விட, இவற்றுக்கு நோய்த்தொற்று அபாயங்கள் சற்று அதிகமாகவே உள்ளது. மேலும், அங்கேயே அவற்றின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளதால், மரபணுக் குறைபாடு பிரச்னையும் இருக்கலாம். இது, அவற்றிடையே எளிதில் நோய்த்தொற்று பாதிக்கப்படும் விகிதத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. ஆகவே, முதலில் இவற்றைக் கண்டறிய நோய்த்தொற்றுகள் குறித்த பகுப்பாய்வைச் செய்ய வேண்டும்" என்று கூறினார்.
இந்தியாவிலுள்ள மற்ற வேட்டையாடி உயிரினங்களையும் போலவே இப்போது அறிமுகப்படுத்தப்போகும் சிவிங்கிப்புலிகளுக்கு, இங்கு சுதந்திரமாகச் சுற்றும் நாய்களிடமிருந்து கெனைன் டிஸ்டம்பர் வைரஸ் போன்ற தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் காட்டுயிர் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 20 சிவிங்கிப்புலிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், அவற்றுக்கு தொற்றுநோய்களை உண்டாக்கக்கூடிய ஆபத்துகள் குனோ நிலப்பகுதியில் இருக்கின்றனவா என்பதைப் பற்றிய ஆய்வை நடத்த வேண்டும். ஆனால், பூனை, நாய் போன்றவற்றிடமிருந்து பரவக்கூடிய நோய்கள் மற்றும் அதுபோல் ஓர் உயிரினத்திடமிருந்து மற்றோர் உயிரினத்துக்குப் பரவும் தொற்றுநோய்கள் குறித்த அடிப்படை தரவுகள்கூட இந்தியாவிடம் இல்லை என்பது, இந்தப் பிரச்னையை இன்னும் சிக்கலாக்குகிறது.

குஜராத் கிர் காட்டில் வாழும் சிங்கங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவரும் பல்லுயிரிய வளக் கூட்டமைப்பின் (Biodiversity Collaborative) உறுப்பினரும் மெடாஸ்ட்ரிங் ஃபவுண்டேஷனின் (Metastring Foundation) தலைமை செயல் அதிகாரியுமான, காட்டுயிர் ஆய்வாளர் ரவி செல்லம், சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்துப் பேசியபோது, ``நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் 1% தான் இருக்கிறது என்றாலும்கூட, அதைக் கவனிக்காமல் விடக் கூடாது. குனோவில் வாழும் உயிரினங்களிடமிருந்து சிவிங்கிப் புலிகளுக்கு என்ன நோய் பரவும் என்பதைவிட முக்கியமாக, அவற்றிடமிருந்து இங்கு வாழும் உயிரினங்களுக்கு என்ன நோய் பரவலாம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், சிவிங்கிப் புலிகளிடமிருந்து வேறு ஏதேனும் ஓர் உயிரினத்துக்குப் பரவினாலும், அது வேறு எங்கெல்லாம் பரவும் என்பதைக் கணிக்க முடியாது. அதை நாம் உணரும் நேரத்தில் காலம் கடந்திருக்கலாம். ஆகையால், சிவிங்கிப் புலிகளிடமிருந்து நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளை முழுமையாக ஆராய வேண்டும்.
இப்போது சிவிங்கிப் புலிகளை அறிமுகப்படுத்த வேண்டியது அவ்வளவு அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது. 2013-ம் ஆண்டில் நீதிமன்றமே, இது தேசிய காட்டுயிர் பாதுகாப்பு திட்டத்தில் இல்லாதபோது, இது எப்படி முதன்மைத்துவம் பெறுகிறது என்ற கேள்வியை எழுப்பியது" என்று கூறியவர், ``புல்வெளிகளைப் பாதுகாக்க இந்தியாவில் கான மயில், காட்டுப்பூனை, ஓநாய், சிங்காரா என்று பல்வேறு உயிரினங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதைவிட சிவிங்கிப் புலிகளை அறிமுகப்படுத்துவது அவ்வளவு அவசியமா?" என்றும் கேள்வியெழுப்புகிறார்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சிவிங்கிப் புலி அறிமுகம் மீதுள்ள விமர்சனங்களுக்கு, ``நோய்த்தொற்றுகள் குறித்து முறையான பகுப்பாய்வு செய்வதோடு, அவற்றுக்கு கெனைன் டிஸ்டம்பர் வைரஸ் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசி செலுத்திய பிறகே இந்தியாவுக்குக் கொண்டுவருவோம். சர்வதேச அளவிலான விலங்கு மருத்துவர்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தெந்த தடுப்பூசிகளைப் போடச் சொல்கிறார்களோ அவற்றைச் செலுத்திய பிறகே கொண்டுவரப்படும்" விளக்கம் கொடுத்துள்ளது.
சிவிங்கிப் புலிகளை நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் சிவிங்கிப் புலிகளுக்கு இருக்கும் தொற்று அபாயங்கள் என்னென்ன, அவற்றால் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுபவை பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து, குனோவிலும் அதேபோல் மற்ற உயிரினங்களிடமிருந்து சிவிங்கிப் புலிகளைப் பாதிக்கும் அளவுக்கு ஏதேனும் நோய்த்தொற்று அபாயங்கள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்வது இப்போது இருக்கின்ற குறைந்த காலகட்டத்துக்குள் சாத்தியமில்லை என்று பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
அதேநேரம், ஆண்டுக்கு 6 கோடி செலவில் சிவிங்கிப் புலிகள் அறிமுகப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்திய காட்டுயிர் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டில் இவ்வளவு பெரிய தொகையை சிவிங்கிப் புலி அறிமுகத்துக்காக மட்டுமே ஒதுக்கினால், அது மற்ற உயிரினங்களின் பாதுகாப்புக்குத் தேவைப்படும் செலவைப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் தரப்பில் அஞ்சுகின்றனர்.

இந்தியாவில் முன்னர் முற்றிலுமாக அழிந்துபோன ஓர் உயிரினத்தை மீண்டும் அறிமுகப்படுத்த முயல்வது பாராட்டத்தக்க முன்னெடுப்புதான். ஆனால், அதற்குரிய ஆய்வுகளை உரிய நேரம் எடுத்து முழுமையாகச் செய்து, எந்த ஆபத்துமில்லை என்பதை உறுதி செய்த பிறகு, கொண்டுவருவதே நேர்மறையான பலன்களைக் கொடுக்கும். அதேநேரம், இப்போது இவ்வளவு சிரத்தை எடுத்து இந்தத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்னவென்ற கேள்வியும் எழும்புகிறது. குஜராத் கிர் காடுகளில் வாழும் சிங்கங்களின் பரிதாப நிலை, அவை எதிர்கொள்ளும் நோய்த்தொற்று, மரபணுக் குறைபாடு ஆகிய பாதிப்புகளால் அவை சந்திக்கும் சிக்கல்களைச் சரிசெய்ய காட்டுயிர் ஆய்வாளர்கள் நெடுங்காலமாகப் போராடி வருகிறார்கள். இந்நிலையில், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட இப்போது சிவிங்கிப் புலிகளைக் கொண்டு வர வேண்டியது அவ்வளவு அவசியமா என்று காட்டுயிர் ஆய்வாளர்களின் கேள்வி எழுப்புகின்றனர்.