Published:Updated:

ஜெயலலிதா சாய்ஸ், 750 படுக்கைகள்... புதிய கோவிட்-19 மருத்துவமனையின் சிறப்புகள் என்ன?

புதிய கோவிட் -19 மருத்துவமனை
News
புதிய கோவிட் -19 மருத்துவமனை

கோவிட்-19 சிகிச்சைக்குத் தேவையான சி.டி ஸ்கேன் உள்ளிட்ட அதிநவீன பரிசோதனை வசதிகள், ஆக்ஸிஜன் இணைப்புகள் அனைத்தும் குறுகிய காலத்தில் நிறுவப்பட்டன.

Published:Updated:

ஜெயலலிதா சாய்ஸ், 750 படுக்கைகள்... புதிய கோவிட்-19 மருத்துவமனையின் சிறப்புகள் என்ன?

கோவிட்-19 சிகிச்சைக்குத் தேவையான சி.டி ஸ்கேன் உள்ளிட்ட அதிநவீன பரிசோதனை வசதிகள், ஆக்ஸிஜன் இணைப்புகள் அனைத்தும் குறுகிய காலத்தில் நிறுவப்பட்டன.

புதிய கோவிட் -19 மருத்துவமனை
News
புதிய கோவிட் -19 மருத்துவமனை

சென்னை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நாள்தோறும் சராசரியாக 1,800 புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். அறிகுறிகளற்றவர்கள், மிகவும் லேசான பாதிப்புள்ளவர்களுக்கு ஹோம் க்வாரன்டீன் பரிந்துரைக்கப்பட்டாலும், கணிசமான எண்ணிக்கையில் நாள்தோறும் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, சென்னையில் தனியார் மருத்துவமனைகள் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகம்.

Health minister Vijayabaskar visited the new hospital
Health minister Vijayabaskar visited the new hospital

ஏற்கெனவே ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கென்றே பிரத்யேக மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து 3,500 படுக்கைகள் கொண்ட சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பிரத்யேக கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்திலுள்ள மத்திய முதியோர்நல நிறுவனத்தின் மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சாய்ஸ்!

மத்திய அரசின் நிதியுதவியுடன் மாநில அரசின் சார்பில் தேசிய முதியோர்நல நிறுவனத்தைத் தொடங்க 2014-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்திலுள்ள இடத்தை அதற்காகத் தேர்வு செய்து அளித்தார். மத்திய அரசின் குழுவினர் வந்து ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தனர்.

Bed facilities in new hospital
Bed facilities in new hospital

அதைத் தொடர்ந்து பலகட்டங்களாக வேலைகள் நடைபெற்று வந்தன. மருத்துவ சிகிச்சைக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்ததையடுத்து கோவிட்-19 பெருந்தொற்றுக்காக இந்த மருத்துவமனையைப் பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு தீர்மானித்தது.

என்னென்ன வசதிகள்?

மருத்துவமனையிலுள்ள வசதிகள் குறித்துப் பேசிய சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி, "பேஸ்மென்ட், தரைத்தளத்துடன் கூடிய 3 தளங்கள் இந்த மருத்துவமனையில் உள்ளன. லேசான, மிதமான, தீவிர கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படும். தரைத்தளம் மற்றம் முதல் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன.

ஆக்ஸிஜன் வசதியுள்ள 300 படுக்கைகள், வென்டிலேட்டர் வசதியுள்ள 71 படுக்கைகள் உள்ளன. மீதமுள்ள 379 படுக்கைகள் லேசான, மிதான பாதிப்புள்ள நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

front view of the hospital
front view of the hospital

100 மருத்துவ நிபுணர்கள்

சிறப்பான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகப் பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து பல்துறையைச் சார்ந்த 100 மருத்துவர்கள் இந்த மருத்துவமனைக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 90-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, கூடுதல் பணியாளர்கள் தேவைப்படும் பட்சத்தில் உடனுக்குடன் நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

2 வாரங்களில் நிறைவடைந்த பணிகள்!

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் விமலா மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோவிட்-19 மருத்துவமனையாக மாற்றும் பணிகளைக் கண்காணித்தனர். மருத்துவமனையின் உருவாக்கத்துக்கு வாகனங்களில் கொண்டு வரும் பொருள்களை மருத்துவர்களே பொருள்களைச் சுமந்து சென்று கொடுத்த நிகழ்வுகளும் நடைபெற்றன.

வாகனத்திலிருந்து பொருளை இறக்கும் மருத்துவர்
வாகனத்திலிருந்து பொருளை இறக்கும் மருத்துவர்

சி.டி ஸ்கேன் உள்ளிட்ட அதிநவீன பரிசோதனை வசதிகள், ஆக்ஸிஜன் இணைப்புகள் அனைத்தும் குறுகிய காலத்தில் நிறுவப்பட்டன. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குநர் மருத்துவர் உமாநாத் ஆகியோர் மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று பணிகளைத் துரிதப்படுத்தினர். வெறும் இரண்டு வாரங்களில் கோவிட்-19 மருத்துவமனையாக மாற்றும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன.

திறக்கப்படும் மருத்துவமனை!

பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக முதல்வர் எடப்படாடி பழனிசாமி மருத்துவமனையை வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் திறந்து வைக்கிறார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் நாராயணசாமி இந்த மருத்துவமனையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் துறை பேராசிரியர், பல வருடங்களாக நிர்வாகப் பொறுப்பையும் கவனித்து வருபவர் என்பதால் கூடுதல் அனுபவமுள்ள மூத்த மருத்துவர் நாராயணசாமி இம்மருத்துவமனையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தனியார் மருத்துவமனைகளில் சென்று மருத்துவம் பார்க்கும் அளவுக்குப் பொருளாதாரம் வசதியற்ற நிலையில்தான் பெரும்பாலான மக்களின் நிலை உள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் சாமானிய நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள் வரப்பிரசாதமாகவே அமையும்.