பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள ஃபாஸ்டென்சர் தொழிற்சாலையில் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கிறது. தொழிற்சாலையின் பின்பக்க சுவரில் துளையிட்டக் கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து தொழிலாளி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். திங்கள்கிழமை அதிகாலை சாஹ்னேவாலில் உள்ள ஜஸ்பால் பங்கர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக போலீஸார், ``அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் தொழிற்சாலை சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்திருக்கின்றனர். அப்போது தொழிற்சாலை உரிமையாளரின் உறவினர் ஐஸ் பிரித் சிங், தொழிற்சாலையில் பணிபுரியும் பவானி பிகாம் இருவரும் அவர்களைக் கண்டு அச்சமடைந்து கூச்சலிட்டுள்ளனர். மேலும் எச்சரிக்கை எழுப்பி கொள்ளையர்களைத் தடுக்க முயன்றிருக்கின்றனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் கொள்ளையர்கள் பவானியின் வயிற்றில் சரமாரியாக சுமார் ஆறு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.

இதையடுத்து போலீஸாருக்கு இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பவானி பிகாம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. எங்களின் முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் மஹிந்திரா பொலேரோ காரில் வந்தது தெரியவந்திருக்கிறது. தொழிற்சாலையில் ஒரு சிசிடிவி கேமரா-கூட இல்லை. இருப்பினும், அருகிலுள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.