
எட்டு மாதங்களாக கொழுமத்தில் வாடகை வீடு எடுத்துத் தங்கியிருந்த பிரபு, தன்னை ஸ்பெஷல் டூட்டியில் வந்திருக்கும் வனத்துறை அதிகாரி என அக்கம் பக்கத்தினரை நம்பவைத்திருக்கிறார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கனிராஜ் என்பவர், கடந்த டிசம்பர் மாதம் மூணாறு பகுதியிலுள்ள எஸ்.பி.ஐ வங்கியின் பணம் செலுத்தும் இயந்திரத்தின் மூலம் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை தனது வங்கிக் கணக்கில் செலுத்த முயன்றிருக்கிறார். கள்ளநோட்டு என்பதால், அந்தப் பணத்தை இயந்திரம் எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்ததுடன், இது தொடர்பான தகவலையும் வங்கிக்கு அனுப்பியது.
வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், கனிராஜைக் கைதுசெய்த கேரள போலீஸார், அவரிடமிருந்து 76 ஐந்நூறு ரூபாய் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், கொழுமத்தில் தங்கியிருந்த பிரபு என்பவரையும் கைதுசெய்தனர்.

இது தொடர்பாக கேரள மாநிலம், மறையூர் போலீஸாரிடம் பேசினோம். “கள்ள நோட்டுகளைத் தன் கணக்கில் போட முயன்று கைதான கனிராஜ் கொடுத்த தகவலின் அடிப்படையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராம்குமார், அழகர், திருமயத்தைச் சேர்ந்த பழனிகுமார், குமரலிங்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் ஆகியோரைக் கைதுசெய்தோம். விசாரணையில் தேனி மாவட்டம், கரிமேடு பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர்தான் கள்ளநோட்டுகளை இவர்களுக்கு அச்சிட்டுக்கொடுத்திருப்பது தெரியவந்தது. தற்போது, அவர் திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த கொழுமத்தில் வசித்துவருவதை அறிந்து, அவரைக் கைதுசெய்தோம். அவரிடமிருந்து 1.78 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளும், பிரின்ட்டரும் பறிமுதல் செய்யப்பட்டன.

எட்டு மாதங்களாக கொழுமத்தில் வாடகை வீடு எடுத்துத் தங்கியிருந்த பிரபு, தன்னை ஸ்பெஷல் டூட்டியில் வந்திருக்கும் வனத்துறை அதிகாரி என அக்கம் பக்கத்தினரை நம்பவைத்திருக்கிறார். இதற்காக காலை, மாலை வேளைகளில் வேட்டைத் தடுப்புக் காவலர் போன்று சீருடை அணிந்து வெளியே சென்றிருக்கிறார். ஆனால், வீட்டுக்குள் நல்ல 500 ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து, அதை பிரின்ட் எடுப்பதும், வெளியே கனிராஜ் கும்பலுக்கு சப்ளை செய்வதுமே அவரது வேலையாக இருந்திருக்கிறது. இந்தப் பணத்தை ஏ.டி.எம் மையங்களிலுள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தின் மூலம் தங்களது வங்கிக் கணக்குக்கே செலுத்திவந்திருக்கிறது இந்தக் கும்பல். பழைய இயந்திரங்கள் அந்தப் பணத்தை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அடித்த நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதற்காக நாளொரு வேஷம் போட்டிருக்கிறார் பிரபு. அவற்றில் தேங்காய் வியாபாரி வேடமும் ஒன்று. எத்தனை பேரிடம் அவர் வரவு, செலவு வைத்திருந்தார் என்ற விவரத்தையும் சேகரித்துவருகிறோம். இதுவரை இந்தக் கும்பல் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கிறது. கைதுசெய்யப்பட்டிருக்கும் ஆறு பேர் மீதும் ஏற்கெனவே கள்ளநோட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன’’ என்றனர்.
தெரிந்தது 5 லட்சம்... தெரியாமல் எவ்வளவு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றனவோ?!