
ஏற்கெனவே திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 68 லட்சம் ரூபாய் கையாடல் செய்த வழக்கில் ஜெய்சங்கரை குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரிப்பதற்காக, உயிரோடு இருப்பவருக்கு போலியாக இறப்புச் சான்றிதழ் தயாரித்து, பத்திரப்பதிவு செய்த மோசடி திருப்பூரில் அரங்கேறியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை அடுத்த கருக்குப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சிதம்பரம் - சரஸ்வதி. இவர்களின் மகன் கருப்புசாமி. கடந்த 2008-ம் ஆண்டு சரஸ்வதி, இறந்துவிட்டார். இந்த நிலையில், நெருப்பெரிச்சல் என்ற கிராமத்திலிருந்த சரஸ்வதிக்குச் சொந்தமான 9 சென்ட் நிலத்துக்கு உரிமை கோருவது தொடர்பாக சிதம்பரத்துக்கும் கருப்புசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் ‘தான் இறந்துவிட்டதாக, போலியாக இறப்புச் சான்றிதழ் தயார்செய்து, சொத்தை அபகரித்துவிட்டதாக’ மகன் கருப்புசாமி மீது புகார் சொல்கிறார் தந்தை சிதம்பரம்.

கருக்குப்பாளையத்தில் வசிக்கும் நெசவுத் தொழிலாளியான சிதம்பரம் இது குறித்து நம்மிடம் பேசியபோது, “எனக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள் சரஸ்வதிக்குப் பிறந்தவன் கருப்புசாமி. சரஸ்வதி இறந்துவிட்ட பிறகு அவள் பெயரில் இருந்த 9 சென்ட் நிலத்துக்கு நானும் கருப்புசாமியும்தான் சட்டபூர்வ வாரிசு. ஆனால், நிலத்தை அபகரிக்கத் திட்டமிட்ட கருப்புசாமி, நான் உயிரோடு இருக்கும்போதே, ‘திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி நான் இறந்துவிட்டதாக’ போலி இறப்புச் சான்றிதழைத் தயாரித்திருக்கிறான். அதைவைத்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 9 சென்ட் நிலத்தையும் கருப்புசாமி தனது பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்துகொண்டதோடு, பட்டாவும் பெற்றுவிட்டான். அடுத்த 15 நாள்களுக்குள், அதாவது ஜூலை 4-ம் தேதி, அவனுடைய மனைவி தனலட்சுமிக்கு மேற்படி சொத்தை தான செட்டில்மென்ட்டும் செய்துவிட்டான்” என்றார் விலகாத அதிர்ச்சியுடன்.
இது தொடர்பாக சிதம்பரத்தின் இரண்டாவது மனைவியின் மகன் சேகர் நம்மிடம் கூறுகையில், “இந்த விவகாரத்தில் போலியாகத் தயாரிக்கப்பட்ட இறப்புச் சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு வாரிசு சான்றிதழ் இல்லாமலும், நேரடியாகக் கள ஆய்வு செய்யாமலும் கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன், பட்டாவில் கருப்புசாமியின் பெயரைச் சேர்ப்பதற்குப் பரிந்துரைத்திருக்கிறார். இதை ஆதாரமாகவைத்து, திருப்பூர் இணைப் பதிவாளர் பூபதி, ஜாயின்ட்-1, சிதம்பரம் இறப்புச் சான்றிதழ் தொடர்பாக எந்தவித உண்மைத்தன்மையையும் ஆராயாமல் கருப்புசாமியின் தான செட்டில்மென்ட்டுக்கான பத்திரப்பதிவை செய்து கொடுத்திருக்கிறார். பத்திரப்பதிவு அலுவலகம் அருகே தட்டச்சு அலுவலகம் வைத்திருக்கும் ஜெய்சங்கர்தான், இந்த முறைகேடுகளுக்கெல்லாம் மூளையாகச் செயல்பட்டிருக்கிறார்” என்றார்.

இதையடுத்து ஜெய்சங்கரிடம் விளக்கம் கேட்டோம். “கருப்புசாமிக்கு நான்தான் டாக்குமென்ட் தட்டச்சு செய்து கொடுத்தேன். அப்போது, அவர் கொண்டுவந்த சிதம்பரத்தின் இறப்புச் சான்றிதழ் உண்மையான சான்றிதழ்போலத்தான் இருந்தது. எனவே, இது தொடர்பாக கருப்புசாமி மீது அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவிருக்கிறேன்” என்றார்.
இந்த பத்திரப்பதிவு ஆவணத்தைத் தயார்செய்த வழக்கறிஞர் சண்முக பாரதி நம்மிடம், ‘‘ஜெய்சங்கர் எனது ரெகுலர் கிளையன்ட் என்பதால், கருப்பசாமியின் பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை நம்பிக்கையின் அடிப்படையில் ஆய்வு செய்யாமல் கையெழுத்திட்டேன். மற்றபடி, இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது தொடர்பாக கருப்பசாமி மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கவிருக்கிறேன்” என்றார்.
போலிச் சான்றிதழ் தொடர்பான சர்ச்சைகளுக்கு விளக்கம் கேட்டு சிதம்பரத்தின் மகன் கருப்புசாமியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். முதலில் தொடர்பில் வந்தவர், இறப்புச் சான்றிதழ் தொடர்பாகத் தன் அண்ணனிடம் பேசிவிட்டு அழைப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு நமது அழைப்பை அவர் எடுக்கவேயில்லை.
இதையடுத்து திருப்பூர் சார்பதிவாளர் ஜாயின்ட்-1 பூபதியிடம் விளக்கம் கேட்டுப் பேசியபோது, ‘‘நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடை பெறுகின்றன. பதிவுக்கு வருவோர் ஆவணங்களை போலியாகத் தயாரித்து வருகிறார்களா அல்லது உண்மை யானதுதானா என அனைத்து ஆவணங்களையும் ஆய்வுசெய்து கையெழுத்திடுவ தெல்லாம் முடியாத காரியம். கருப்புசாமி விவகாரத்தில், பத்திரத்தின் எண்ணைத் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன், “சரஸ்வதிக்குச் சொந்தமான 9 சென்ட் நிலப் பத்திரத்தில் சிதம்பரத்தின் மகன் கருப்புசாமி என்று இருந்தது. அதனால், பட்டாவில் பெயர் சேர்க்கப் பரிந்துரைத்தேன்’’ என்றார் சுருக்கமாக.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ‘‘ஏற்கெனவே திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 68 லட்சம் ரூபாய் கையாடல் செய்த வழக்கில் ஜெய்சங்கரை குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர். இரண்டு மாதங்கள் சிறையிலிருந்த ஜெய்சங்கர், தற்போது மீண்டும் திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் எவ்விதத் தடங்கலுமின்றி சென்று தனக்குவேண்டிய பணிகளை முடித்து வருகிறார். இதற்கு கருப்புசாமியின் விவகாரமே சாட்சி’’ என்றனர்.
சிதம்பரத்திற்கு என்ன செய்யப் போகிறது பத்திரப்பதிவுத்துறை?