“எக்ஸ்கியூஸ் மீ... ஐயம் இன்கம்டாக்ஸ் ஆபீஸர்...’ - கல்வி நிறுவனங்களில் கல்லாகட்டிய தாத்தா!

நான் கிளம்பிட்டேன். பணத்தோடு தயாரா இருங்க’ என்று சொல்லியிருக்கிறார். “வாங்க சார்” என்று சொன்ன ரகுபதி, பணம் கொடுப்பதுபோல் பாவ்லா காட்டி, தாத்தாவைக் காவல்துறையிடம் வசமாக மாட்ட வைத்திருக்கிறார்.
‘எக்ஸ்கியூஸ் மீ. ஐயம் இன்கம்டாக்ஸ் ஆபீஸர்’ என்று கலர் கலராக ரீல்விட்டு, கல்வி, தொழில் நிறுவன உரிமையாளர்களிடம் பணம் பறித்த தாத்தா இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
அதிகாரிகளுக்கே உரித்தான தோரணை, நுனிநாக்கு ஆங்கிலம், ‘பளீர்’ உடை எனத் தனது நடை, உடை, பாவனை மூலம் இப்படிப் பலரை ஏமாற்றியவரின் பெயர் சந்திரசேகரன். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்ட கதையாக, கரூரிலுள்ள ஒரு தனியார் பள்ளி உரிமையாளரிடம் மாட்டிக்கொண்டார். சம்பவத்தன்று திண்டுக்கல் நெடுஞ்சாலையிலுள்ள அட்ரியன் லாயல் ஸ்கூல் என்ற அந்தத் தனியார் பள்ளிக்கு வழக்கம்போல், வாடகை காரில் போய் ஜம்பமாக இறங்கியிருக்கிறார் தாத்தா.

‘ஐயம் இன்கம்டாக்ஸ் ஆபீஸர்’ என்று ஆரம்பித்தவர், ‘இன்கம்டாக்ஸ் துறையில் இன்ஜினீயரிங் பிரிவு ஆபீஸர் நான். உரிய அனுமதியில்லாமல் கட்டடங்கள் கட்டியிருக்கீங்க. எந்த வருவாயில் கட்டுன கட்டடம் இது என்பதற்கான சான்றை ஏன் எங்களிடம் சமர்ப்பிக்கவில்லை... அதனால், ரூ. 2 லட்சம் அபராதம் விதித்திருக்கிறோம். அதை வசூலிக்க நாளை எங்கள் குழு வரும்’ என்று கேப் விடாமல் பேசியிருக்கிறார். பள்ளி உரிமையாளர் ரகுபதியின் முகத்தில் கவலை ரேகை பரவுவதை கவனித்த ‘ஆபீஸர்’, “பயப் படாதீங்க. ஃபைனைத் தவிர்க்கணும்னா, எனக்குத் தனியா ரூ.15,000 கொடுத்துடுங்க... எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிடுறேன்” என்று தூண்டில் போட்டிருக்கிறார். அதற்கு ரகுபதி, “சார்... சாயந்தரம் வாங்க ப்ளீஸ்... கண்டிப்பா பணத்தைக் கொடுத்துடுறேன்” என்று சொல்ல, அவரின் தொடர்பு எண்ணை வாங்கிக்கொண்டு, காரில் டாம்பீகமாக ஏறிச் சென்றிருக்கிறார் தாத்தா.
கரூரில் நேரத்தைக் கடத்தியவர், மாலையானதும் ரகுபதிக்கு போன் போட்டு, “நான் கிளம்பிட்டேன். பணத்தோடு தயாரா இருங்க’ என்று சொல்லியிருக்கிறார். “வாங்க சார்” என்று சொன்ன ரகுபதி, பணம் கொடுப்பதுபோல் பாவ்லா காட்டி, தாத்தாவைக் காவல்துறையிடம் வசமாக மாட்ட வைத்திருக்கிறார். இதற்கிடையே, “எந்த ஊர்ல 70 வயசுக் கிழவரை அரசாங்க வேலையில வெச்சுருப்பாங்க?” என்று ரகுபதிக்குச் சந்தேகம் வந்திருக்கிறது. எனவே, கிழவரை மாலையில் வரச் சொல்லிவிட்டு, வெள்ளியணை காவல் நிலையத்துக்கு போன் செய்து, தன் சந்தேகத்தைச் சொல்லியிருக்கிறார். ‘உங்க ஸ்கூல்ல இன்கம்டாக்ஸ் ரெய்டு எதுவும் நடப்பதாக எங்களுக்கும் தகவல் இல்லையே’ என்று அவர்களும் உஷாராகி, நேரில் வந்து, கிழவரைப் பொறிவைத்துப் பிடித்திருக்கிறார்கள்.

இந்த ‘இன்கம்டாக்ஸ் தாத்தா’ இதுபோல், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங் களிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கல்லாகட்டியிருக்கிறாராம். அது பற்றி நம்மிடம் பேசிய போலீஸார் சிலர், “இவரோட சொந்த ஊர், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி. குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கிறார். இதனால், லாட்ஜுகளில் தங்கி மது, மாது என்று ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அப்படிச் செலவு செய்ய, ‘வாரத்துக்கு மூன்று பள்ளிகள் அல்லது கல்லூரிக்கு விசிட்’ என்று டார்கெட் வைத்து, பணம் பறித்திருக்கிறார். இந்தத் தாத்தாவின் தோரணையைப் பார்த்து ‘இன்கம்டாக்ஸ் ஆபீஸர்’ என நம்பிய பலரும், பணத்தை இழந்திருக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ரூ.18,000, திருச்செங்கோடு எலச்சிப்பாளையத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ரூ.25,000 பணம் பறித்திருக்கிறார். தொடர்ந்து திருப்பூர் மாவட்டம், மூலனூரில் இயங்கிவரும் பள்ளி நிர்வாகத்திடம் ரூ.32,000, கரூர் சின்ன தாராபுரம் தனியார் பள்ளியில் ரூ.18,000, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரி லுள்ள தனியார் கல்லூரியில் ரூ.5,000 எனப் பணம் வாங்கியிருக்கிறார்.
கரூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் ரூ.25,000, ஈச்சநத்தத்திலுள்ள ஒரு தனியார் கல்வி அறக்கட்டளையில் ரூ.1,000, வேலாயுதம்பாளையம், முத்தனூரிலுள்ள தனியார் பள்ளியில் ரூ.18,000, ஈரோடு மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் ரூ.15,000, திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியிலுள்ள ரைஸ் மில் ஒன்றில் ரூ.20,000 என அவரிடம் ஏமாந்தோரின் பட்டியல் ரொம்ப நீளம்.

ஆனால், கரூர் பள்ளி நிர்வாகி ரகுபதி மட்டும், இவரின் வயதை கணித்ததால், அவரது ஏமாற்று வேலை முடிவுக்கு வந்திருக்கிறது. ஆங்காங்கே வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு போகும் சந்திரசேகரன், அந்த கார் மற்றும் டிரைவரைத் தனக்காக வருமான வரித்துறை வழங்கியதுபோல் காட்டிக்கொள்வார். வருமானம் சம்பந்தப்பட்ட ரெய்டு என்று சொன்னால், ‘ஒன்மேன் ஆர்மியாக’ச் செல்லும் அவர்மீது அவர்களுக்குச் சந்தேகம் வந்துவிடும் என்பதால், வருமானம் குறித்து அதிகம் கிளறாமல், கட்டடச் சான்று சமர்ப்பிக்கவில்லை என்று சொல்லி, பணம் பறித்திருக்கிறார். வேறு எங்கெல்லாம் இவர் தன்னுடைய தில்லாலங்கடி வேலையைக் காட்டியிருக்கிறார் என்று விசாரித்து வருகிறோம்” என்றார்கள்.
இந்த வழக்கை விசாரித்துவரும், வெள்ளியணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியப்பிரியாவிடம் பேசினோம். “2005-லேயே குடும்பத்தை விட்டுத் தனியாகப் பிரிந்த சந்திரசேகரன், வெவ்வேறு முகவரிகள்கொண்ட இரண்டு ஆதார் அட்டைகள் வைத்திருக்கிறார். அதோடு, போலியாக இன்கம்டாக்ஸ் அதிகாரி அடையாள அட்டையையும் தயாரித்திருக்கிறார். பிடிபட்ட பிறகுகூட, தான் வருமான வரித்துறை ஆள்தான் என்று சாதித்தார். வருமான வரித்துறை அலுவலகத்தில் ‘இன்ஜினீயரிங் டெக்னிக்கல் கிரேட் 2’-ஆக பணியாற்றி கடந்த 2005-ம் ஆண்டு தான் ஓய்வு பெற்றேன் என்று சத்தியம்கூடச் செய்தார். ஆனால், விசாரணையில் அதெல்லாம் பொய் என்று தெரியவந்தது. தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் அவர் தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறார், அவர்மீது வேறு எங்கேனும் வழக்கு பதியப்பட்டிருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம்” என்றார்.
அதெல்லாம் சரி, இவங்கல்லாம் ஏன் பணம் கொடுத்தாங்க?!