அலசல்
Published:Updated:

நாடகத் திருமணம், பண மோசடி, தற்கொலை விவகாரம், மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘வில்லங்க’ விஜி பழனிசாமி!

சிவா என்கிற ரத்தினசீலன் - விஜி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
சிவா என்கிற ரத்தினசீலன் - விஜி பழனிசாமி

ஆரம்பத்திலிருந்தே அந்தப் பெண்மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. எங்கள் மகனுக்காக அமைதியாக இருந்தேன். புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று நம்பி அவனும் மோசம் போய்விட்டான்.

“நான் கனவில்கூட நினைக்காத விஷயங்களெல்லாம் வாழ்க்கையில் நடந்துவிட்டன. கணவனுக்கு நல்ல மனைவி அமைவது வரம். நான் சாக்கடையில் விழுந்துவிட்டேன். அதிலிருந்து மீள முடியவில்லை. இந்த அழுக்கான உடலோடு என்னால் வாழ முடியாது” கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு பேசி வெளியிட்ட ஆடியோவிலுள்ள வார்த்தைகள் இவை. இப்படி அவர் பேசிய 43 ஆடியோ செய்திகளை நம் ஜூ.வி ஆக்‌ஷன் செல்லுக்கு அனுப்பியிருந்தனர் அந்த இளைஞரின் தரப்பினர். ‘அவரது தற்கொலைக்கு நீதி வேண்டும்’ என்று அவர்கள் வைத்த கோரிக்கையின் பின்னணி குறித்து அலசினோம்.

கோவை, தென்னம்பாளையத்தைச் சேர்ந்த சிவா என்கிற ரத்தினசீலன்தான் அந்த இளைஞர். “சென்னையைச் சேர்ந்த விஜி பழனிசாமி என்பவருக்கும் சிவாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு இருவரும் திருமணம் செய்திருக்கிறார்கள். சிவாவைவிட ஏழு வயது மூத்தவரான விஜிக்கு இது மூன்றாவது திருமணம். அதன் பிறகு ஏற்பட்ட பிரச்னைகளால் மனமுடைந்த சிவா, விஷம் சாப்பிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார். இந்த விவகாரத்தில் நீதி கேட்டு காவல்துறையை நாடியிருக்கின்றனர் சிவாவின் பெற்றோர்” என்கின்றனர் சிவா தரப்பினர்.

விஜி பழனிசாமி
விஜி பழனிசாமி

தென்னம்பாளையத்திலுள்ள சிவாவின் வீட்டுக்குச் சென்றோம். நம்மிடம் பேசிய அவரின் தாய் ஈஸ்வரி, “என் மகன் சிவாவின் தோழியாக அறிமுகமானவர் விஜி. கடந்த மார்ச் மாதம், தனக்கு வயிற்றில் ஆபரேஷன் செய்திருப்பதாகவும், ‘ஒரு வாரம் மட்டும் உங்கள் வீட்டில் ஓய்வெடுக்க வரலாமா அம்மா...’ என்று என்னிடம் போனில் கேட்டார் விஜி. நானும் சம்மதித்தேன். ஒரு வாரம் என்றவர், இரண்டு மாதங்களாக எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

அப்போது அவரைப் பார்க்க, கல்லூரி படிக்கும் வயதிலுள்ள இரண்டு பெண் பிள்ளைகள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களைத் தன் அக்காவின் பிள்ளைகள் என்றார் விஜி. பிறகுதான் தெரிந்தது அவர்கள் விஜியின் மகள்கள் என்று. இந்த நிலையில் என் மகன் சிவா, விஜியைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாகச் சொன்னான். எங்களால் அதை முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கிடையே, விஜியின் செல்போனை என் மகன் சிவா எடுத்துப் பார்த்தபோது, அவரின் ஆண் நண்பர் ஒருவர் அவளுக்கு மெசேஜ் அனுப்பியிருப்பது தெரியவந்தது. அதில், ‘திருமணம் தள்ளிப் போய்விட்டதா... சரி, நாம எப்பவும்போல ஜாலியா இருக்கலாம்...’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு, பல ஆண்களுடன் அவர் நெருக்கமாகப் பேசியதும், தனது அந்தரங்கப் படத்தை அவர்களுக்கு அனுப்பியிருப்பதும் என் மகனுக்குத் தெரியவந்தது. இதனால் கோபமடைந்து, விஜியை வீட்டைவிட்டு வெளியேற்றினான். அதன்பிறகு என் மகனின் அலுவலகத்துக்கு சென்ற விஜி, “இனி நான் தவறு செய்யமாட்டேன். என் குழந்தைகள் உள்பட எனக்கு யாரும் வேண்டாம். எல்லாவற்றையும் விட்டுவிடுகிறேன்.’ என்று அவன் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டிருக்கிறார்.

நாடகத் திருமணம், பண மோசடி, தற்கொலை விவகாரம், மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘வில்லங்க’ விஜி பழனிசாமி!

அதன் பிறகு, கடந்த ஜூலை 5-ம் தேதி மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்த விஜி, ‘நானும் சிவாவும் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம்’ என்றார். அடுத்த நாள் காலை மருதமலை கோயிலில் அவர்கள் இருவர் மட்டும் சென்று திருமணம் செய்துகொண்டனர். சில நாள்களிலேயே இருவருக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. சிவாவிடம் தனக்கு ரூ.2 லட்சம் லோன் வாங்கித் தரச் சொல்லி சண்டை போட்டார் விஜி. பிறகு, ‘உங்கள் வீட்டில் ஏன் எனக்குத் தாலிக்கொடி போடவில்லை?’ என்றார். அடுத்தடுத்து நடந்த சண்டைகளால் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகுதான் விஜி, அவரின் அக்கா, தோழிகள் உள்ளிட்டோர் என் மகன் சிவாவைத் தொடர்ந்து கேவலமாகப் பேசி அசிங்கப்படுத்தினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிவா, இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டான்” என்றார்.

சிவாவின் தந்தை முத்துக்குமார் பேசும்போது, “ஆரம்பத்திலிருந்தே அந்தப் பெண்மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. எங்கள் மகனுக்காக அமைதியாக இருந்தேன். புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று நம்பி அவனும் மோசம் போய்விட்டான். எந்தவிதக் கூச்சமுமின்றி அவனுக்கு துரோகம் செய்துவிட்டாள் அந்தப் பெண். வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே அவளுக்கு இன்னோர் ஆணுடன் தொடர்பு இருந்திருக்கிறது. இதெல்லாம் தெரியவந்து, எங்கள் மகன் திருமணத்தை முறித்துக்கொள்ளலாம் என்றபோது, தன் அரசியல் தொடர்புகளைவைத்து மிரட்டியிருக்கிறாள். இவளைத் திருமணம் செய்தது முதல் ஏற்பட்ட வெளியே சொல்ல முடியாத அவமானங்களால், இப்படியொரு முடிவை அவன் எடுத்துவிட்டான்” என்றார் வேதனையுடன்.

நாடகத் திருமணம், பண மோசடி, தற்கொலை விவகாரம், மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘வில்லங்க’ விஜி பழனிசாமி!
சிவா என்கிற ரத்தினசீலன் - விஜி பழனிசாமி
சிவா என்கிற ரத்தினசீலன் - விஜி பழனிசாமி

பெயரை வெளியிட விரும்பாத விஜியின் ஆண் நண்பர் ஒருவர் நம்மிடம் பேசினார். “எல்லோரிடமும் சொல்லும் தன் ‘பழைய’ கதையையே என்னிடமும் சொன்னார். அவர்மேல் ஏற்பட்ட நம்பிக்கையில், ஒரு கட்டத்தில் நானும் விஜியைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தேன். ஆனால், எங்களுக்குள் உடல்ரீதியான உறவு ஏற்பட்ட பிறகு என்னிடம் அடிக்கடிப் பணம் கேட்கத் தொடங்கினார். என்னைப்போல பல ஆண்களுடன் அவர் தொடர்பிலிருப்பதும், அரசியல் கட்சித் தலைவர் ஒருவருடன் தனக்கிருந்த நெருக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, அவர் பல வி.வி.ஐ.பி-களுக்கு வலைவீசுவதும் எனக்குத் தெரியவந்தது. இதனால் அவரிடமிருந்து விலகிவிட்டேன். அதன் பிறகு என்னைக் குறித்து தவறாகச் சித்திரிக்கத் தொடங்கினார்” என்றார்.

விஜியின் முதல் கணவர் சண்முகசுந்தரத்திடம் இது குறித்து விசாரித்தோம். “நீங்கள் குறிப்பிடும் இளைஞர் சிவாவின் மரணமோ, அவர் விஜியைத் திருமணம் செய்த தகவலோ எனக்குத் தெரியாது. என்னை விட்டுவிட்டு, என் உறவினர் கோபால் என்பவருடன் ஓடிப்போனவர் விஜி. அதைத் தட்டிக்கேட்ட என்னை ஆள்வைத்து அடித்தார். அந்த வழக்கில் விஜியையும், அவரின் சகோதரியையும் போலீஸ் கைதுசெய்து சிறையிலடைத்தது. பிறகு, எனக்குப் பல பெண் களுடன் தொடர்பு இருப்பதாகப் பரப்பினார். இன்னும் அவர் திருந்தவில்லை. சமீபத்தில்கூட 26 வயது மதிக்கத்தக்க இளைஞனுடன் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார். அவர்மீது சட்டப்படி எந்த நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அவரிடம் சிக்கியிருக்கும் என் மகள்கள் இருவரையும் மீட்க உதவுங்கள், ப்ளீஸ்...” என்றார்.

முத்துக்குமார், ஈஸ்வரி
முத்துக்குமார், ஈஸ்வரி

இதே விஜி என்ற விஜயலட்சுமி மீது, கடந்த 2012-ம் ஆண்டில், `கவிஞர் தாமரை – தியாகு தம்பதியரின் பிரிவுக்குக் காரணமானவர்’ எனப் புகார் எழுந்தது. அது குறித்து கவிஞர் தாமரை பேசும்போது, “கணவன் கொடுமையால் இரண்டு குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறிய விஜி பழனிசாமிக்கு, எங்கள் பள்ளியில் வேலை கொடுத்தோம். பின்னர் அவர் தியாகுவுடன் திருமணம் தாண்டிய உறவுவைத்துக்கொண்டார். அது என் வாழ்க்கையையே சீர்குலைத்தது. ஆடம்பர வாழ்க்கைக்காக ‘லிவிங் டுகெதர்’ முறையில் இணை தேடுவது, பிறகு பிளாக்மெயில் மூலம் மாதம் ஒரு தொகையை அவர்களிடமிருந்து கறப்பது என விஜியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல் நீளமானது” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விஜி பழனிசாமியிடம் விளக்கம் கேட்டோம். “சிவாவுக்குத் திருமணம் செய்ய வரன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் என்னிடம் பேசினார். எனக்குத் திருமணமானது, குழந்தைகள் இருப்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கூறிய பிறகே என்னைத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். எங்களுக்குள் பிரச்னை வரக் காரணம் சிவாவின் அம்மாதான். ‘ஆடி மாதத்துக்குச் சீர் கொடுக்கவில்லை’ என்று அவர்தான் முதலில் சண்டை போட்டார். என் செல்போனில் உள்ள தொடர்புகளுக்கு, நான் பேசுவதுபோல சிவாதான் தவறாக மெசேஜ் அனுப்பினார். அவர் நிதானமாக இருக்க மாட்டார். திடீரென்று அடிப்பார். என் மகள்கள், அம்மா, அக்கா என அனைவரையும் தவறாகப் பேசுவார். அதனால் அவரிடமிருந்து நான் விலகி வந்துவிட்டேன்.

தாமரை
தாமரை

கவிஞர் தாமரை பழைய காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்போது என்னைப் பழிவாங்க முயல்கிறார். நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. எனக்கு ஒரு துணை வேண்டும் என்றுதான் திருமணம் செய்தேன். என் அலுவலகத்தில் ஒருவருடன் உறவில் இருந்த தகவலை, நானேதான் சிவாவிடம் கூறினேன். அரசியல் தொடர்புகளையெல்லாம் சொல்லி மிரட்டவில்லை. அவரின் இழப்பு ஒருவிதத்தில் என்னையும் பாதித்திருக்கிறது. ஆனால், அவரின் தற்கொலைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்..?” என்றார்.

தற்கொலை செய்துகொண்ட சிவா, தன் கடைசி ஆடியோவில், “நான் உன்னைப்போல இல்லை விஜி. யாருடைய வாழ்க்கையையும் கெடுக்க நான் விரும்பவில்லை. என் சாவுக்கு நான்தான் காரணம்” என்று முடித்திருக்கிறார்!

காதல், திருமணம் உள்ளிட்ட உறவுகளின் அடிப்படையே உண்மை தான். அது இல்லாமல் போகும் போது எல்லா குற்றங்களும் தொடங்குகின்றன!