Published:Updated:

காரைக்குடி: தி.மு.க பிரமுகரின் கந்துவட்டி வசூல்... தற்கொலைக்கு முயன்ற குடும்பம்

தி.மு.க பிரமுகர் ரவி
News
தி.மு.க பிரமுகர் ரவி

தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் கந்துவட்டிக்குப் பணம் பெற்ற, சமையல் பாத்திரக்கடை உரிமையாளரின் குடும்பத்தினர் எலி பேஸ்ட் மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:

காரைக்குடி: தி.மு.க பிரமுகரின் கந்துவட்டி வசூல்... தற்கொலைக்கு முயன்ற குடும்பம்

தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் கந்துவட்டிக்குப் பணம் பெற்ற, சமையல் பாத்திரக்கடை உரிமையாளரின் குடும்பத்தினர் எலி பேஸ்ட் மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க பிரமுகர் ரவி
News
தி.மு.க பிரமுகர் ரவி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ளது பள்ளத்தூர் கிராமம். பள்ளத்தூர் கிராமத்தினர் பலர், தமிழகம் முழுவதும் சென்று, சுபநிகழ்ச்சிகளில் செட்டிநாடு சமையல் செய்யும் சமையல் கலைஞர்களாக இருக்கிறார்கள்.

பள்ளத்தூரில், சமையலுக்கான பாத்திரங்கள் உட்பட விசேஷத்துக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாடகைக்குவிடும் தொழில் செய்துவருகிறார் ராமநாதன். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இந்தநிலையில், தன்னுடைய தொழில் தேவைக்காக, பலரிடமும் ராமநாதன் கடன் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், பள்ளத்தூரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ரவி என்பவரிடமும், ராமநாதன் 18 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருப்பதாகவும், அதற்கான வட்டித் தொகையை தவறாமல் ராமநாதன் செலுத்திவந்ததாகவும் கூறப்படுகிறது.

ராமநாதன்
ராமநாதன்

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர், உடல்நிலைக் கோளாறு காரணமாக அவதியுற்ற ராமநாதன், தன்னுடைய தொழிலைச் சரிவர கவனிக்க முடியாமல், ரவிக்குச் செலுத்த வேண்டிய வட்டித் தொகையை கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஒருகட்டத்தில், தீவிர உடல்நலக் குறைவு காரணமாக, காரைக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதை அறிந்த தி.மு.க பிரமுகர் ரவி, தன்னுடைய பணத்தைப் பெற முடியாமல் போய்விடுமே என்ற அச்சத்தில், ராமநாதனின் கடையிலிருந்த, சமையல் பாத்திரங்கள், டேபிள், சேர், வாட்டர் டேங்க், அடுப்புகள், பந்தல் சாமான்கள், மின்சாதனங்கள் என சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்களை அள்ளிச்சென்றிருக்கிறார்.

தி.மு.க பிரமுகர் ரவி
தி.மு.க பிரமுகர் ரவி

இதை அறிந்த ராமநாதனின் மனைவி மீனாள், மகள் நாச்சம்மை (வயது 21) ஆகியோர் அவமானத்தில் எலி பேஸ்ட்டை, குளிர்பானத்தில் கலந்து குடித்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக, ராமநாதனிடம் புகார் பெற்ற பள்ளத்தூர் காவல்துறையினர், ரவி, வைரவன், ஆனந்த், வடிவேல் ஆகிய நால்வர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இது தொடர்பாக தி.மு.க பிரமுகர் ரவியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். ``எனக்கு 18 லட்ச ரூபாய் வரை அவர்கள் கொடுக்க வேண்டும். வாடகைப் பாத்திரக் கடையை காலி செய்யும்போது, 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை அவர்களே எனக்குக் கொடுத்து, அது தொடர்பாக கைப்பட எழுதியும் கொடுத்தனர். கடந்த 2-ம் தேதிக்குப் பிறகு அவர்கள் பக்கமே நான் போகவில்லை. ஆனால், வேறு சிலர் அவர்களிடம் கடன் கேட்டுச் சென்றிருக்கிறார்கள். அதற்கு நான் பணம் கேட்டு மிரட்டுவதாக பொய்யான குற்றச்சாட்டை என்மீது சுமத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் என் பெயரைக் கெடுக்க வேண்டும் என்று செயல்படுகின்றனர். என்னிடம் அவர்கள் எழுதிக் கொடுத்தது, போன் ரெக்கார்டு என எல்லா ஆவணங்களும் இருக்கின்றன. அவற்றை நிரூபிப்பேன்” என்றார்.

கந்துவட்டி கொடுமையால், தாய் மகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.