கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட உத்தனப்பள்ளி கிராமத்தில், 5-வது சிப்காட் வளாகம் அமைக்க, மத்திய, மாநில அரசுகள் முடிவுசெய்தன. இதற்காக, உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகளிலும் சுமார் 3,034 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. ஆனால், இதில் பெரும்பாலானவை மூன்று போக நெல், வாழை, தென்னை, கேரட், முட்டைக்கோஸ் உட்பட பல பயிர்கள் பயிரிடப்படும் விளைநிலங்களாக இருக்கின்றன. இதனால், கடந்தாண்டு, ஏப்ரல் மாதம் முதல் விவசாயிகள், பல்வேறு போராட்டம் நடத்திவரும் நிலையில், கடந்த, 15 நாள்களாக உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு முன்பு, விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று மதியம், அந்தப் பகுதியிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்பிருக்கும் செல்போன் டவரில் ஏறி எட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்தப் பகுதிக்கு வந்த கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமார் விவசாயிகளுக்கு ஆதரவாக, உத்தனப்பள்ளி – ராயக்கோட்டை ரோட்டில் மறியலில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி சரோஜ்குமார் தாகூர், சப் – கலெக்டர் சரண்யா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. போராட்டம் தொடர்ந்த நிலையில், செல்போன் டவரில் ஏறிய எட்டு பேர், சாலைமறியலில் ஈடுபட்ட எம்.பி உட்பட, 141 பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், எம்.பி செல்லகுமார் நிருபர்களிடம், ``விளைநிலங்களைக் கையகப்படுத்தும் முடிவை, அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இந்தியா முழுவதிலும் தொழில் நிறுவனங்களுக்காக, நிலம் கையகப்படுத்துவதற்காக சட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், விவசாய நிலங்களை விவசாயிகள் அனுமதியின்றி கையகப்படுத்தக் கூடாது எனக் கூறியதுடன், நிலம் எடுக்கும் பகுதியில், 80 சதவிகிதம் விவசாயிகளிடம் ஒப்புதல் பெற்றால் மட்டுமே நிலம் எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொழில் நிறுவனங்களுக்காக விளைநிலங்களை எடுக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலினும் சட்டசபையில் உறுதியளித்தார். ஆனால், ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்’ என்பதுபோல, தங்கள் வாக்குறுதியை மீறி செயல்படுகின்றனர். அதேபோல், விவசாயிகளின் போராட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை; ஊழல் செய்வது, கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர்’’ எனக் காட்டமாகத் தெரிவித்தார்.