சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு கிளர்ச்சி தொடங்கியது. அதிபர் ஆதரவுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப்போரில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றாட வாழ்க்கையில் போரினால் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
போரின் காரணமாக சிரியாவில் இத்லிப் என்ற பகுதியிலுள்ள சாராகிப் என்ற நகரில் வசித்துவந்த பல குடும்பங்கள் அந்நகரை விட்டு வெளியேறியுள்ளது. அப்துல்லா அல் முகமது என்பவரின் குடும்பமும் அதில் ஒன்று. தற்போது அவர், சர்மதா எனும் நகரிலுள்ள தன்னுடைய நண்பரின் வீட்டில் தன் 3 வயது குழந்தையுடன் வசித்துவருகிறார். அந்தப் பகுதியும் குண்டுகளின் சப்தம் இடைவிடாது ஒலிக்கும் ஒரு பகுதிதான்.
குண்டுகள் விழும் சப்தங்கள், துப்பாக்கிகள் சுடும் சப்தங்கள் ஆகியன குழந்தைகளுக்கு மன அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய பாதிப்பிலிருந்து தன்னுடைய குழந்தையான சல்வாவைக் காப்பாற்ற அப்துல்லா வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொள்கிறார். குண்டுகள் விழும்போதெல்லாம் சல்வாவை அப்துல்லா சிரிக்க வைக்கிறார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அப்துல்லா தன்னுடைய 3 வயதுக் குழந்தை சல்வாவிடம் வீட்டின் வெளியே கேட்கும் சப்தத்தைக் குறிப்பிட்டு, `இது ஜெட்டா அல்லது குண்டா?' என கேட்கிறார். அதற்கு சல்வா, `குண்டு' என்கிறார். `குண்டுகளின் சப்தம் கேட்கும்போது நாம் சிரிப்போம்' என அப்துல்லா கூறிய உடனேயே மீண்டும் குண்டுகளின் சப்தம் கேட்கிறது. என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் சல்வா தன்னுடைய குழந்தை சிரிப்பை வெளிப்படுத்துகிறாள். `உனக்கு சிரிப்பு வருதா' என அவர் மீண்டும் கேட்க. `ஆமாம்' என சிரித்தபடியே கூறுகிறாள். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களுடைய வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அப்துல்லா அந்நாட்டு ஊடகத்திடம் பேசும்போது, ``வீட்டின் அருகில் உள்ள குழந்தைகள் வெடிபொருள்களின் மீதியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஒருமுறை அவர்கள் அந்த மீதியை எறிந்தபோது வெடித்துவிட்டது. இந்த சப்தத்தைக் கேட்ட சல்வா பயந்துவிட்டாள். அவளை மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்று அது வெறும் பொம்மை என்றும் பண்டிகையைக் கொண்டாட சிறுவர்கள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருள் என்றும் சமாதானம் செய்தேன். இந்த பயத்தை அவளுடைய இதயத்திலிருந்து அகற்ற விரும்பினேன்" என்றார்.
மேலும்,``போரை புரிந்துகொள்ள முடியாத குழந்தை அவள். சல்வா, மன அளவில் பாதிகக்கப்படக் கூடாது என்பதற்காக இதை விளையாட்டாக மாற்ற முடிவு செய்தேன். இதனால், பயம் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளால் அவள் பாதிப்படைய மாட்டாள். எனவே, அவளை பயமுறுத்தும் சப்தங்களை மகிழ்ச்சியின் அடையாளமாக மாற்றினேன். ஒவ்வொரு குண்டும் விழுவதற்கு முன்பு மனஅளவில் அவளை தயார்படுத்தினேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ``சல்வா, சிரிப்பதும் விளையாடுவதுமாக இப்போது நன்றாக இருக்கிறாள். என்னுடைய பயம் என்னவென்றால், அவள் வளரும்போது தாக்குதல்களும் வளர்ந்துகொண்டே செல்கிறது. மன அளவில் அவளைப் பாதிப்படையாமல் பாதுகாக்க இனியும் என்னுடைய விளையாட்டுக்கள் போதுமானதாக இருக்காது. எதிர்காலத்தைப் பற்றி எந்த எதிர்பார்ப்பும் எங்களிடம் இல்லை. இப்படியான சூழலில் இருக்கும் எங்களுக்கு அதைப்பற்றித் தெரியாது. ஆட்சியாளர்கள் எங்களை வெளியேற்ற நாங்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல. நாங்களும் மனிதர்கள்தான். உலகில் மற்ற மனிதர்களைப்போல வாழ எங்களுக்கும் உரிமை உண்டு" என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
`போரின் பயங்கரத்தை ஒரு குழந்தையின் அப்பாவித்தனமான சிரிப்பு வெளிப்படுத்துகிறது', `குண்டுகள் வெடிக்கும் சப்தங்களைவிட குழந்தையின் சிரிப்பு சப்தம் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது" போன்ற கமென்டுகளை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களின் முகாமில் தவிக்கும் தந்தை மற்றும் மகனைப் பற்றிய திரைப்படமான `லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' என்ற படத்துடன் ஒப்பிட்டும் நெட்டிசன்கள் பதிவிட்டிருந்தனர். முகாமில் நடைபெறும் கொடூரங்கள் ஒரு விளையாட்டு என தந்தை தன்னுடைய மகனை நம்ப வைப்பதாக படத்தின் சூழல் இருக்கும்.

ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடந்துவரும் போரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி இடமாக இத்லிப் மாகாணம் அறியப்படுகிறது. எனவே, இந்தப் பகுதிகளில் போரின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.