இந்திய ஊடகங்களின் முன்னணிப் பெண் பத்திரிகையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் `மிரர் நவ்' செய்தி ஆசிரியர் ஃபேய் டிசௌசா (Faye D'Souza). இவரது நெறியாளுகைக்கு மிகப்பெரிய அளவில் ஃபாலோயர்கள் உண்டு. இவர் தற்போது பதவி விலகியிருக்கிறார்.
கடந்த 2017-ல் `டைம்ஸ் நவ்' தொலைக்காட்சியின் `மிரர் நவ்' தொலைக்காட்சி செய்திப் பிரிவுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார் ஃபேய் டிசௌசா. அவர் நெறியாளுகை செய்த `தி அர்பன் டிபேட்’ நிகழ்ச்சி, அர்னாப் கோஸ்வாமியின் `தி நியூஸ் ஹவர்’ நிகழ்ச்சிக்குப் போட்டியாக அமைந்தது. அந்நாளின் பரபரப்பான செய்தியை அர்னாப் உரத்த குரலில் விவாதிக்கும்போது, மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விவாதங்களே பெரும்பாலும் `தி அர்பன்' விவாதத்தில் இடம்பெறும்.

ஃபேயின் சார்புநிலையற்றுக் கேள்வி எழுப்பும் ஸ்டைலுக்கே அவர் ஸ்டாராகப் பார்க்கப்பட்டார். பெண்கள் புர்கா அணிவது தொடர்பான விவாதம் ஒன்றில் மௌலானா என்பவர், ``நீங்கள் ஏன் உள்ளாடை மட்டும் அணிந்து வந்து நெறியாளுகை செய்யக் கூடாது” என்று அவமதிக்கும் வகையில் கேள்வி எழுப்ப, அதற்கு ஃபேய் டிசௌசா அளித்த பதில் ஒரே இரவில் அவரை வைரலாக்கியது.
ஃபேய் டிசௌசா சொன்னது இதுதான், ``நீங்கள் இப்படிப் பேசுவதைக் கண்டு நான் உணர்ச்சிவசப்படுவேன் என்று எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் நம்புங்கள், இது எனக்குப் புதிதல்ல. இப்படிப் பேசுபவர்களில் நீங்கள் முதல் நபர் அல்ல. உங்களைப் போன்ற பலரை இந்தத் துறையில் சந்தித்திருக்கிறேன். அதனால் உங்கள் கேள்விகளுக்காக நான் கொந்தளித்துக் கோபப்பட மாட்டேன்” என்று பதிலளித்தார்.
இளைஞர்களைச் சென்றடையும் வகையிலான நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் இனி கவனம் செலுத்த இருக்கிறேன்.ஃபேய் டிசௌசா
ஃபேய் திடீரெனப் பதவி விலகியது விவாதத்தை ஏற்படுத்தினாலும், சிறிது நேரத்திலேயே அதற்கான விளக்கத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், ` மிரர் நவ் செய்தி நெறியாள்கை பணியிலிருந்துதான் விலகியிருக்கிறேனே தவிர `டைம்ஸ் நெட்வொர்க்'கில் தொடர்ந்து பணியாற்றுகிறேன். இளைஞர்களைச் சென்றடையும் வகையிலான நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் இனி கவனம் செலுத்த இருக்கிறேன். என் மீது அக்கறை கொண்டு என்னைத் தொடர்புகொண்ட அனைவருக்கும் நன்றி!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.