லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

‘குட் டச் பேட் டச்’ சொல்லிக் கொடுத்திருக்காங்க! - ஹியா

ஹியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹியா

தெரிந்த முகம்... தெரியாத செய்தி

‘குட்டி ஜோதிகா’ என்கிறார்கள் குட்டிப்பெண் ஹியாவை. பத்து வயதில் அவ்வளவு எக்ஸ்பிரஷன்ஸ்.. அத்தனையும் க்யூட். குட்டீஸ் நடிக்கும் விளம்பரங்களில் முதல் வரிசையில் இருப்பார் ஹியா!

‘`ஹியான்னா ஹார்ட்டுன்னு அர்த்தம். நிஜமாவே நான் எல்லாருக்கும் ஸ்வீட் ஹார்ட்'’ - செம ஸ்வீட்டாகப் பேசுகிறார் ஹியா. ஹரிஸ்ரீவித்யாலயம் பள்ளியில் ஐந்தாவது படிக்கிற ஹியா படிப்பிலும் படுசுட்டி.

‘`நாங்க குஜராத்தீஸ். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். ஒருமுறை நவராத்திரி சீசன்ல தாண்டியா ஆட அம்மாகூட ஒரு மாலுக்குப் போயிருந்தேன். அப்போ நான் ரொம்பக் குட்டிப் பொண்ணு, ரெண்டரை வயசு. அந்த புரோகிராமை கவர் பண்ண வந்திருந்த போட்டோகிராபர் அங்கிள் என்னைப் பார்த்துட்டு, என்னை வெச்சு ஒரு போட்டோஷூட் பண்ணலாமான்னு கேட்டார். முதல்ல அம்மா அப்பாவுக்குக் கொஞ்சம் தயக்கமா இருந்ததாம். அப்புறம் அந்த தாண்டியா குரூப்ல அவரைப் பற்றி நல்லவிதமா சொல்லியிருக்காங்க. அப்புறம்தான் போட்டோஷூட்டுக்கு ஓகே சொல்லியிருக்காங்க. அவர் மூலமாதான் எனக்கு முதல் சான்ஸ் வந்ததாம். நான் பண்ணின முதல் அட்வர்டைஸ்மென்ட் என்ன தெரியுமா... டவ் சோப்’’ - ஹியாவின் வார்த்தைகளில் தங்கிலீஷ் தட்டுத்தடுமாறுகிறது.

``உன்னை நாங்க யாரும் ஃபோர்ஸ் பண்ணலை. ஒண்ணு, ரெண்டு அட்வர்டைஸ்மென்ட்ஸ் பண்ணிப் பாரு... உனக்குப் பிடிச்சா கன்டின்யூ பண்ணலாம். பிடிக்கலைன்னா விட்டுடலாம்’’ன்னு அம்மாவும் அப்பாவும் சொன்னது இப்போதும் எனக்கு ஞாபகமிருக்கு. ஆனா, அவங்க பயந்த மாதிரியெல்லாம் இல்லை. ஷூட்டிங் ஸ்பாட் செம ஜாலியா இருந்துச்சு. எல்லாரும் என்கிட்ட ரொம்ப ஸ்வீட்டா நடந்துக்கிட்டாங்க!’’ - வேகவேகமாகப் பேசுகிறவர், அதைவிட வேகமாக ஆர்எம்கேவி, சரவணா ஸ்டோர்ஸ், மில்கி மிஸ்ட், பவன்ட்டோ, டபே எனக் கிட்டத்தட்ட 300-க் கும் மேலான விளம்பரங்களில் நடித்து முடித்துவிட்டார். ‘நண்பேன்டா’, ‘களம்’ படங்களிலும் நடித்திருக்கிறார்.

‘நண்பேன்டா’ படத்துல நயன்தாரா ஆன்ட்டிகூட நடிச்சேன். தஞ்சாவூர்ல ஷூட்டிங் நடந்தது. அந்தப் படத்துல என்கூட நிறைய குட்டீஸ் நடிச்சாங்க. ஆனாலும், நயன்தாரா ஆன்ட்டி என்னை மட்டும்தான் கிஸ் பண்ணினாங்க. சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்கூட நடிச்சபோ அந்த அங்கிளும் என்னை ரொம்பவே பாராட்டினார். ஹன்சிகா ஆன்ட்டி, காஜல் அகர்வால்னு எல்லாருக்கும் நான் ரொம்ப பெட். ‘கத்தி’ படத்துல விஜய் அங்கிள்கூட ஒரு சீன்ல நடிச்சிருக்கேன். சூர்யா அங்கிள்கூட சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்துல நடிச்சிருக்கேன்’’ - பெருமையாகச் சொல்லும் ஹியா, சூர்யாவின் ரசிகையாம்.

``எனக்கு மாடலிங்கும் ஆக்டிங்கும் ரொம்பப் பிடிக்கும். ஆனா, ஒரு கண்டிஷன். இன்னிக்கு டி.வி கமர்ஷியல், நாளைக்கு சினிமான்னு தினமும் ஷூட்டிங் இருந்தா மட்டும் லேசா கடுப்பா இருக்கும். நடிப்பு மாதிரியே எனக்குப் படிப்பும் முக்கியம். அப்பப்போ எனக்கு பிரேக் இருக்கணும்’’ - ஸ்ட்ரிக்ட் ஹியாவுக்கு டான்ஸும் மியூசிக்கும் பிடிக்குமாம்.

ஹியா
ஹியா

``தவிர, கொஞ்ச நாளா தியேட்டர் கிளாஸ் போயிட்டிருக் கேன். இதுக்கும் சினிமாவுக்கும் தொடர்பில்லை. ஸ்டேஜ் பர்ஃபாமன்ஸ் கத்துக்கறதுக்காக இந்த கிளாஸ். எனக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க. நான் குழந்தையா இருந்தபோதே அம்மாவும் அப்பாவும் ஒரு விஷயம் சொல்லிக்கொடுத்திருக்காங்க. ‘நீ எவ்வளவு பெரிய செலிபிரிட்டியானாலும் தரையில கால்படற மாதிரி இருக்கணும். எல்லார்கிட்டயும் நல்லவிதமா பேசணும். பந்தா பண்ணக் கூடாது. உன்கூட போட்டோ எடுத்துக்கவும் பேசவும் நிறைய பேர் ஆசைப்படுவாங்க. அதுக்கெல்லாம் கோபப்படக் கூடாது’ன்னு சொல்லியிருக்காங்க.

`கேமராவுக்கு முன்னாடி நிற்கற வரைக்கும்தான் நீ ஒரு செலிபிரிட்டி. கேமராவை ஆஃப் பண்ணினதும் நீ அந்த எண்ணத்தை மறந்துடணும்'னு சொல்லியிருக்காங்க. அப்போ புரியலை... இப்போ புரியுது. அப்படித்தான் நடந்துக்கிறேன். அதே மாதிரி அம்மா எனக்கு `குட் டச் பேட் டச்' பத்தியும் சொல்லிக்கொடுத்திருக்காங்க. யாராவது கூப்பிட்டு மடியில உட்காரச் சொன்னா உட்காரக் கூடாது. தப்பா தொட டிரை பண்ணினாங்கன்னா அனுமதிக்கக் கூடாதுன்னெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்காங்க’’ - பொறுப்போடு பேசும் ஹியாவுக்கு இரண்டு ஆசைகளாம்.

‘`நம்பர் ஒன் மாடலாகணும்... இது என் லட்சியம்.அம்மா அப்பாவுக்கு என்னை வெளிநாட்டுக்கு அனுப்பி நிறைய படிக்கவைக்கணும்னு ஆசை. ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி ரெண்டு பேர் ஆசைகளையும் நிறைவேத்துவேன்...’’ - ஹியாவின் பேச்சில் நம்பிக்கையும் உறுதியும்!