பெங்களூரை சேர்ந்தவர் சுஜேத்தா (38). நீச்சல் வீராங்கனையான இவர், தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், இதுவரை யாரும் முயற்சி செய்யாத வகையில், பாக்ஜலசந்தி கடலில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் அதே வேகத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும் தொடர்ந்து நீச்சல் அடித்து சாதனை செய்ய முடிவு செய்தார். அதன்படி, கடந்த வியாழக்கிழமை தமிழகத்தின் கடைக்கோடி எல்லையான தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து காலை 8.23 மணிக்கு இலங்கை தலைமன்னாருக்கு நீச்சலடித்துச் சென்றார். சுமார் 10 மணி நேரத்திற்குள் இலங்கை தலைமன்னாருக்கு அதிவேகமாகச் சென்றடைந்தார். பின்னர் உடனடியாக சென்ற வேகத்திலேயே மீண்டும் தனுஷ்கோடிக்கு நீச்சலடித்து வந்தார்.

நள்ளிரவு 2 மணி அளவில் கடல் அலையின் வேகம் அதிகமானதால் நீச்சலடிக்க மிகவும் சிரமப்பட்டு உள்ளார். ஆனால் பின்வாங்காமல் 40 கிலோமீட்டர் தொடர்ந்து நீச்சலடித்து, தனுஷ்கோடியை அடைய 16 கிலோமீட்டர் இருந்த நிலையில் அவர் உடல் முழுவதும் விஷத்தன்மையுடைய ஜெல்லி மீன்கள் கடித்ததால் அவரால் தொடர்ந்து நீச்சல் அடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நீச்சலடிக்க முடியவில்லை எனக் கூறி அதோடு நிறுத்திக் கொண்டார். பின்னர் அவர் உடன் சென்ற தமிழகக் கடலோரக் காவல்படையினர் அவரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
சுஜேத்தா இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் 56 கிலோமீட்டர் தொலைவை 24 மணி நேரத்தில் சென்று, கடக்க வேண்டும் என்ற இலக்குடன் நீச்சலடித்து வந்தார். 40 கிலோமீட்டர் போராடி நீந்தி வந்த அவர் இலக்கை அடைய 16 கிலோமீட்டர் உள்ள நிலையில் விஷத்தன்மையுடைய ஜெல்லி மீன்கள் கடித்ததாலும், கடல் சீற்றம் காரணமாகவும் தொடர்ந்து நீந்த முடியாமல் போனது. சாதனை இலக்கை அடைய முடியவில்லையே என்ற சோகத்துடன் திரும்பினார்.
இருப்பினும் இந்தியா டு இலங்கை சென்று, பின் இலங்கை டு இந்தியா வரை 40 கிலோமீட்டர் தூரத்தை 17 மணி நேரத்தில் கடந்து வந்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய சுஜேத்தா, ``எப்படியாவது இலக்கை அடைந்துவிட வேண்டும் என்று போராடினேன். ஆனால் கடல் சீற்றமும், ஜெல்லி மீன்களின் தாக்குதலும் என்னை தொடர்ந்து நீந்த முடியாமல் செய்துவிட்டது. இதனால் நான் எண்ணிய இலக்கை என்னால் அடையமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், இந்த அளவிற்கு முன்னேறி வந்தது எனக்குப் பெருமையாக உள்ளது. மீண்டும் முயற்சி செய்து சாதனையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். எனக்கு உறுதுணையாக இருந்த இந்தியா, இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் கூறினார்.

இவர் கடந்த 2019-ம் ஆண்டு இந்தியன் எலைட் மாரத்தான் நீச்சல் போட்டியில், உலகத்திலேயே மிக நீளமான திறந்தவெளி நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 81 கிலோ மீட்டர் தூரத்தை 12 மணி நேரத்தில் கடந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரே பெண் என்ற பெருமைக்குரியவர்.
மேலும் மகாராஷ்டிரா மாநிலம் வொர்லி முதல் கேட் வே ஆப் இந்தியா வரையான 36 கிலோ மீட்டர் கடல் பகுதியை 8 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
அதுமட்டுமன்றி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நீச்சல் பயிற்சியாளராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.