
இந்தியா முழுவதும் தென்பகுதி, தமிழகம் உட்பட பாலியல் வன்முறைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.
ஓவியா பெண்ணியலாளர்
ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை; அதைத் தொடர்ந்த காவல் துறை, நீதித்துறையின் அதிர்ச்சி தரத்தக்க நடவடிக்கைகள்; உடலைக்கூட, பெற்றோரை வீட்டில் சிறைப்படுத்திவிட்டு எரித்த கொடூரம்; தொடரும் உத்தரப்பிரதேச அரசின் அடக்குமுறைகள்; வழக்கம் போல பாரதிய ஜனதாக் கட்சியினரின் பொறுப்பற்ற பேச்சுகள் எனக் காட்சிகள் தொடர்ந்து விரிந்துகொண்டே இருக்கின்றன.
நடந்திருப்பது பாலியல் வன்முறை என்கிற ஒரு தனித்த குற்றச் செயல் என்பதே பொதுவாக உரத்துச் சொல்லப் படுகிறது. ஆனால் உண்மை அதுதானா?

இந்தத் தொடர் நிகழ்வுகளை ஆண்களின் காம வெறி என்று மட்டும் விவரித்துவிட்டு அதற்குக் கண்டனமும் செய்துவிட்டுக் கடந்து போக முடியுமா? இந்தியா முழுவதும் தென்பகுதி, தமிழகம் உட்பட பாலியல் வன்முறைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் நிர்பயா வழக்காக இருக்கட்டும், இந்த ஹத்ரா நிகழ்வாக இருக்கட்டும்… பாலியல் வன்முறையைத் தாண்டி அந்தப் பெண்ணின் உடல்மீது அவர்கள் காட்டும் வக்கிரம் நம்மைத் திகைக்க வைக்கிறது. உண்மையில் அந்தப் பெண்ணின் மரணம்கூட அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. இந்த வக்கிரத்தை வெறும் ஆணாதிக்கம் என்கிற வரையறைக்குள் சுருக்கி விட்டுப் போக முடியாது. வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண். ஒரு முழு மனுசி…அவளை அவளுடைய இருத்தலையே பொருட் படுத்தாமல் இழுத்துச் செல்கிற மனநிலைக்கு என்ன பெயர்..? அப்படியொரு பெண்ணை அவள் உடல்மீது கையே பட வேண்டாம், அந்தத் துப்பட்டாவை வைத்து இழுத்துச் செல்ல முடியு மென்றால்… அவள்மீது நடத்தப்பட்ட வன்புணர்ச்சி அதைவிட மேம்பட்ட குற்றமல்ல என்பதை உணர்கிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இழுத்துச் சென்றவர்கள் ஆண்கள் இழுத்துச் செல்லப்பட்டவள் பெண் என்பதால் இது நடக்க முடிகிறது என்றால், அவர்களால் எந்தவொரு பெண்ணை வேண்டுமானாலும் இப்படிச் செய்யவியலுமா என்கிற கேள்வியையும் நாம் எழுப்பி விடை தேட வேண்டும். ஏதுமற்றவர்கள் சமுதாயத்தின் விளிம்புநிலையில் எந்த அதிகாரமுமின்றி வைக்கப் பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள். ஆதிக்கச்சாதி ஆண்களுக்குத் தினவெடுத்தால் இந்தச் சமுதாயப் பெண்களை எப்படி வேண்டுமானாலும் கையாண்டுகொள்ளலாம் என்கிற சாதித் திமிரல்லவா இங்கு முந்தி நிற்கிறது?

ரத்தம் வழிய தூக்கிக் கொண்டு வந்து நியாயம் கேட்ட தாயிடம் பரிகாசம் செய்யும் கூட்டத்துக்குக் காவலர்கள் என்றா பெயர்..? பாதிக்கப்பட்ட பெண்ணைத் தூக்கிக்கொண்டு நியாயம் கேட்கக் காவல் நிலையத்துக்குச் சென்றபோது தாங்கள் பரிகசிக்கப்பட்டோம் எனக் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இன்னார்மீது இன்னார் புகாரளித்தால் அந்தப் புகாரை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இவர்கள் ரத்தத்தில் அல்லவா எழுதப் பட்டிருக்கிறது. சட்டப் புத்தகம் இவர்கள் மேஜையில் ஓரத்தில் கிடக்கிறது. அந்தப் பாலியல் வன்முறை செய்தவர்கள் குற்றவாளிகள் என்றால் அந்தக் குற்றவாளி களைப் பெற்றெடுத்துப் பராமரிக்கும் தாய் தகப்பன்மார் இந்தக் காவல் துறை அதிகாரிகள் தானே..?
சமூக ஊடகங்கள் வாயிலாக இந்தச் சம்பவம் வெளி உலகத்திற்குக் கொண்டுவரப் படாமல் போயிருக்கு மேயானால் இவர்கள் சொன்னதுபோல், அல்லது, சொல்லிவருவது போல் இப்படியொரு விஷயம் நடக்கவேயில்லை என்பதுதான் உண்மையாக உருவகிக்கப் பட்டிருக்கும்.

காவல்துறை மட்டுமா… அந்த மாவட்ட நீதிபதிகூட இந்தச் சம்பவம் சமூக ஊடகங்கள் வழியாகக் கசியத் தொடங்கிய வுடன் இது பொய்ச் செய்தி என்றுதானே சொல்லியிருக்கிறார். ஒரு மாவட்ட நீதிபதி இப்படி யெல்லாம் கருத்து தெரிவிப்பது வேறு எந்த மாநிலத்தில் நடக்கிறது என்று நமக்குத் தெரியவில்லை. ஒரு குற்றம் பற்றிய செய்தி வரும்போது அதுபற்றி அந்த மாவட்ட நீதிபதி கருத்து தெரிவிக்கலாமா? அவர் வேலையா இது? மேலும், பதிவு செய்யப் பட்டிருக்கும் வீடியோக் காட்சியொன்றில் அவர் பாதிக்கப் பட்ட பெண்ணின் குடும்பத் தாரிடம் “இந்தப் பிரச்னையில் ஊடகங்களை நம்பாதீர்கள். இரண்டு நாள்களில் அவர்கள் போய்விடுவார்கள் அதன்பின் நீங்கள் எங்களிடம்தான் வர வேண்டும்” என்று கூறியதாகச் செய்தி காணப்படுகிறது. இது நம்மை அதிர்ச்சியின் எல்லைக்கே இட்டுச் செல்கிறது. அவரே இப்படிப் பேசும்போது காவல்துறை அதிகாரிகள் ஒரு படி மேலே போய் அந்தப் பெண்ணின் உடலில் அந்த ஆணின் விந்து காணப்படவில்லை. எனவே இது பாலியல் வன்முறை அல்ல என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை எதற்காக ஒரு காவல் துறை அதிகாரி தனது முடிவான கருத்தாகச் சொல்ல வேண்டும்?
இது ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் தன்மானம் சார்ந்த பிரச்னை. எதிரியின் தோட்டத்து ஆடுமாடுகளைக் கவர்வது போல் ஒரு கூட்டத்தின் பெண்களை எடுத்துக் கொள்வதும் குழு வாழ்க்கையிலிருந்து ஆணாதிக்க மனங்களில் பதிந்துபோன ஒரு விஷயம்தான். அதுதான் தொடர்ந்து நடக்கிறது. ஆதிக்க வெறி இங்கு சாதி வெறியாகத் தலைவிரித்தாடுகிறது. மதுரா… நிர்பயா என்று சமூக அடையாளங்களிலிருந்து பிரித்தெடுத்து வெறும் பாலியல் வன்கொடுமையாக இக்கொடுமைகளைச் சுருக்கிக்கொண்டு போக முடியாது. அப்படிப் பார்ப்பதன் விளைவுதான் அப்படியே இந்தப் பிரச்னையை நீர்த்துக் கொண்டு போய் பாதிக்கப் பட்டவர்களுக்கே அறிவுரை கூறும் அரைவேக்காட்டு ஆலோசனைகளில் முடிந்து போகிறது.

ஒவ்வொரு பாலியல் வன்முறை நடக்கும் போதும் அது குறித்துப் பெரிய கூக்குரல் ஒன்றினை இந்த நாடு ஒருமித்து எழுப்புகிறது. ஆனால் வசதியாக அந்தக் குற்றத்தின் முழுப் பரிணாமத்தையும் மறைத்துவிட்டு ஏதோ சில இளைஞர்களை மட்டும் குற்றவாளிகளாகக் கையைக் காட்டுகிறது. அவர்களை மட்டும் தூக்கில் போடச் சொல்லி உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளிக்கிறது. ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்பது வள்ளுவன் கூற்று. இங்கு நோய் பற்றிய ஆய்வறிக்கையே முழுமையாகத் தயாரிக்கப் படுவதில்லை. முதலில் இதைப் பெண்கள் பிரச்னையாக மட்டும் பார்ப்பதே தவறு. இது சாதிப் பிரச்னை. இதை சாதிப் பிரச்சினையாகவும் அணுகினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
பெண்கள் இதில் வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை பெண்கள் பாலியல் வன்கொடுமையைத் தாண்டி எவ்வளவோ மோசமான கொடுமைகளுக்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்பதும். ஒரு புள்ளி விவரத்தை இங்கு பகிர வேண்டும். பெண்கள்மீது நடத்தப் படும் மொத்த வன்கொடுமைகளில் 7 சதவிகிதம்தான் பாலியல் வன்கொடுமை. ஆனால் மீதி 93 சதவிகிதக் கொடுமைகளைப் பற்றி எதுவும் பேசாத, அல்லது, அதனை ஆதரிக்கிற மக்கள்தான் பாலியல் வன்கொடுமையை ஒழித்தே தீர வேண்டும் என்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? மீதி 93 சதவிகிதக் கொடுமைகளைத் தாங்கித் தீர வேண்டிய நிலையிலுள்ள பெண் எப்படி பாலியல் வன்கொடுமையை மட்டும் எதிர்த்து நிற்பாள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அந்தப் பெண்ணின் உடலை எரித்த காவல் துறை, அந்த ஊருக்கே எதிர்க்கட்சித் தலைவர் போகக் கூடாது எனத் தடுத்த யோகி ஆதித்யநாத் அரசு, ராகுல் காந்தியைப் பிடித்துத் தள்ளுகிற அளவுக்கு அராஜகத்திற்கு அஞ்சாத அரசியல், பாதிக்கப்பட்ட பெண்ணின் மரணத்தைத் தாண்டி என்ன நடக்கிறது இந்தியாவில் என்கிற கேள்வி அலைகளை உலகமெங்கும் எழுப்பியிருக்கிறது. ஒருவேளை இனிமேல் அமைக்கப்படும் சி.பி,ஐ விசாரணையில் அந்த ஆதிக்கச் சாதி இளைஞர்கள் தண்டிக்கப் படலாம். ஆனால் யோகி அரசின் நிர்வாகம் நடத்திய இந்த அளவுக்கான அராஜகங்கள் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை. சாதியும் மதமும் ஆணாதிக்கமும் கைகோக்க இன்னும் ஒரு கொடுமையான எதிர்காலத்துக்குள் நாம்
நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது.