நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள அரவங்காடு பகுதியில் இருக்கிறது கார்டைட் வெடி மருந்து தொழிற்சாலை. நூற்றாண்டு பழைமையான இந்தத் தொழிற்சாலையில் இந்திய ராணுவத்துக்கான வெடிபொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கார்டைட் எனும் மூலப்பொருளைக்கொண்டு இயங்கும் இந்தத் தொழிற்சாலை மத்திய பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இங்கு பணியாற்றிவருகின்றனர்.

கடந்த வாரம் சனிக்கிழமை காலை 8:20 மணியளவில் இந்தத் தொழிற்சாலையில் பயங்கரச் சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. சி டிவிஷன் எனப்படும் கார்டைட் ரசாயனங்களைக் கையாளும் பிரிவில் ஏற்பட்ட இந்த விபத்தில் எட்டு பணியாளர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிகிறது.
இந்ந நிலையில், இன்று காலை சி டிவிஷன் அருகில் நடைபெற்றுவந்த வெல்டிங் பணியின்போது தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். சக தொழிலாளர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வெல்டிங் பணியின்போது தீப்பொறி தெறித்ததில் விபத்து ஏற்பட்டது. பணியில் ஈடுபட்டுவந்த மனோஜ், இமாம் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்துவருவதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.