கோயில்களில் ஒலிக்கும் பிரார்த்தனைகளைவிட மருத்துவமனையில் ஒலிக்கும் பிரார்த்தனைகள் உடனே சரிசெய்யப்பட வேண்டும்னு சொல்வாங்க. நோயில் உழன்று தவிப்பவர்களை அக்கறையும் மருத்துவமும் அளித்து மீண்டும் பழைய வாழ்வுக்கு அனுப்பும் ரட்சர்களாகவே மருத்துவர்கள் இவ்வுலகில் பார்க்கப்படுறாங்க. அப்படி பலருக்கும் ரட்சகராக இருந்தவர்தான் உலகப் புகழ்பெற்ற மருத்துவரும், அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டின் முன்னாள் தலைவருமான தமிழன்னை டாக்டர் வி சாந்தா. அவங்களோட நினைவு தினம் இன்று.

புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்... அதற்கு தீர்வு இல்லைனு மக்கள் விரக்தியோடு இருந்த காலத்துல, எல்லா வகைப் புற்றுநோய்களுக்கும் தீர்வு உண்டுனு சொல்லி எளிய மக்களுக்கு நம்பிக்கைக் கரம் நீட்டுனவங்க சாந்தா!
1927 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்த சாந்தா பெரிய அறிவியல் குடும்பத்தைச் சார்ந்தவர். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன் இவரோட தாத்தா. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் சந்திரசேகர் இவரோட தாய் மாமா. அறிவியல் பின்னணி கொண்ட இவரின் விருப்பமோ மருத்துவம் சார்ந்தே இருந்தது. ஏழை, எளியவர்களின் பிணி தீர்க்கும் மருத்துவத் துறையில் சாதனைகளளையும், சேவைகளையும் செய்யணும்ங்கிற குறிக்கோளுடன் வழந்திருக்காங்க.

ஆரம்ப கல்வியை தன் அன்னையிடம் கற்றார். பின்பு சென்னையில் உள்ள பி.எஸ்.சிவகாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1949இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார். 1952 டி ஜி ஓ பட்டமும், பின்னர் எம்.டி பட்டமும் பெற்றார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றினாங்க. அந்த காலம் மருத்துவம் குறித்த புரிந்துணர்வு இல்லாத பெரிய அளவுல இல்லாத காலம். பலரும் விழிப்புணர்வு இல்லாம இருந்தாங்க. அப்படி ஒரு முக்கியமான சூழல்ல அரசு மருத்துவர் பணியில் இருந்து விலகி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கின புற்றுநோய் நிறுவனத்தில் பெரும் முயற்சிக்குப் பிறகு இணைஞ்சாங்க.
இன்று 130 மருத்துவர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும்... நாள்தோறும் லட்சக்கணக்கான புற்றுநோய் நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் பிரமாண்டமான அடையாறு மருத்துவமனை, 1954 -ல்ல வெறும் இரண்டு படுக்கைகள், இரண்டு மருத்துவர்கள் மற்றும் நான்கு ஊழியர்களுடன் ஒரு குடிசையில் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் ஏழை நோயாளிகளிடம் சிகிச்சைக்கான கட்டணம் பெறாமல் இலவசமாக சிகிச்சை வழங்குகின்றனர். ஓரளவு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே சிகிச்சை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மருத்துவ வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில், புற்றுநோய் வருவதற்கான காரணமும், சிகிச்சை முறைகளும் மருத்துவர்களுக்கே அதிகம் தெரியவில்லை. இதனால, குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழப்பது அதிகமாக இருந்தது. ஒன்று அறிந்திடாத அந்தப் பிஞ்சுக் குழந்தைங்க வாழ்க்கையை தொடங்குறதுக்கு முன்னாடியே இறந்ததை தாங்கிக்க முடியாம மனம் வருந்தினாங்க சாந்தா. வருந்தினதோட இல்லாம அதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்யவும் ஆரம்பிச்சாங்க. புற்றுநோயில இருந்து மக்களைக் காப்பாத்த உலகில் எங்கு புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை உடனடியாக அடையாறு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து நோயாளிகளிடம் சேர்த்தாங்க.
முத்துலட்சுமி ரெட்டி மற்றும் அவரின் மகனும் மருத்துவருமான கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் இணைஞ்சு, புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராம உழைச்சாங்க சாந்தா . தமிழகம் தவிர, வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் இந்த மையத்தை நாடி வந்து பயனடைஞ்சாங்க. முத்துலட்சுமி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்குப் பிறகு, 1997-ம் ஆண்டு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவரானார் சாந்தா. மிகப்பெரிய பொறுப்பு, சின்ன வயசுல இருந்து அவங்களோட மனசுல இருந்த லட்சியம், கண்முன்னாடி நோய்மையோட போராடு மக்கள் இந்த சூழல்லதான், ஆயிரக்கணக்கான திறமையான மருத்துவர்களையும், செவிலியர்களையும் உருவாக்கி மருத்துவ ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

சாந்தா மார்ச் 2005 வரை புற்றுநோய் தொடர்பான உலக சுகாதார மையத்தின் ஆலோசனைக் குழுவில் இருந்தாங்க. புற்றுநோய்க்கான மாநில ஆலோசனைக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தார். ஐ.சி.எம்.ஆர் பணிக்குழுவின் உறுப்பினராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்திய புற்றுநோயியல் சங்கத்தின் தலைவராகவும், புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான ஆசிய மற்றும் பசிபிக் கூட்டமைப்பு அமைப்புகளின் தலைவராகவும் , 15 வது ஆசிய மற்றும் பசிபிக் புற்றுநோய் மாநாட்டின் தலைவராகவும் சாந்தா இருந்தார். பல அறிவியல் சர்வதேச ஒத்துழைப்பு திட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
Also Read
அதிகாலை 4.30 மணிக்கு எழுந்தால், இரவு 10 மணிவரை அவரது சிந்தனை எல்லாம் மருத்துவம் சார்ந்தாகத்தான் இருக்கும். பல லட்சக் கணக்கான மக்கள் அவருடைய வழிகாட்டுதல்படி மருத்துவம் பெற்றாங்க. தனது நேரத்தையெல்லாம் புற்றுநோயாளிகளின் நலனுக்கும் புற்றுநோய் நிறுவன வளர்ச்சிக்காவும் சிந்திக்க மட்டுமே செலவு செய்தார். ஒரு வேலையைக் கையில் எடுத்தால் வெற்றி கிடைக்கும் வரை இடைவிடாமல் போராடுவார்.

பலருக்கும் சாந்தாவோட அயராத இந்த உழைப்பு மேல பெரிய ஆச்சரியமிருந்தது. எப்படி இப்படி அயராம உழைக்குறீங்க. மக்களுக்காகவே சிந்திக்குறீங்கனு கேட்ட நேரத்துல `சிறிதும் சுயநலம் கூடாது என்பதையும், பெறுவதைவிட கொடுப்பதே சிறந்தது’ தான் தன்னோட கொள்கைனு சொல்வாங்க.
அப்துல்கலாம் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர். தன் உரைகளில் அப்துல் கலாம் பற்றி எப்பவுமே பேசுவார். சுய விருப்பு வெறுப்புகளை தவிர்த்து திருமணம் கூட செய்து கொள்ளாமல் தன் வாழ்நாள் முழுவதையும் புற்றுநோய் நோயாளிகளுக்காகவே அர்ப்பணித்தார் சாந்தா. தன்னலமில்லாத இவங்களோட சேவை எல்லைகள் கடந்து பரந்து விரிஞ்சது.

அதன் காரணமா, ஆசியாவின் உயரிய விருதான மகசேசே விருது, இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூசன், பத்ம விபூசன் என அனைத்தையும் வென்றவர். `வாங்கிய விருதுகள் போதும்' எனத் தன்னைத் தேடிவந்த விருதுகள் பலவற்றையும் வாங்க மறுத்தார். 2018-ம் ஆண்டு சாந்தாவுக்கு அவள் விகடனின் `தமிழன்னை விருது' வழங்கப்பட்டது.
எளிமை, அனைவரிடமும் அன்பு காட்டுதல், முதுமையிலும் ஓய்வின்றி உழைத்தல், சேவை மனப்பான்மை போன்ற உயரிய பண்புகளால் தனித்து நின்றார் சாந்தா. கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் உடல்நிலை குறைவால் காலமானார். தன் உயிர் நீங்கும் வேளை வரை உயிர்க் காக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார் சாந்தா. `என் மறைவுக்குப் பிறகு, எனது அஸ்தியை புற்றுநோய் நிறுவனம் முழுக்கத் தூவி விட வேண்டும்' என்று முன்கூட்டியே சொல்லியிருந்தாங்க. இவரது உழைப்பையும் சேவையையும் போற்றும் வகையில், சாந்தாவின் உடல் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தங்களோட வலியை, பிணியை எடுத்துச் சொல்ல குரலில்லாத பல மக்களோட வலியை, பிணியை புரிஞ்சு அவங்களுக்கு உதவினதோட இல்லாம, அடுத்த தலைமுறைக்கும் அந்த அன்பின், தாய்மையின் சிந்தனையை பரப்பினாங்க. மருத்துவர் சாந்தா தன் நேசத்தின் சிறகுகளாக மரணத்தை வென்று பல எளியவர்களோட வாழ்க்கைல எப்பவும் நிறைஞ்சுருக்காங்க.