லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

முதல் பெண்கள்: கதீஜா யாகூப் ஹாசன்

கதீஜா யாகூப் ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
கதீஜா யாகூப் ஹாசன்

ஹம்சத்வனி

தமிழகத்தின் முதல் இஸ்லாமியப் பெண் கௌரவ நீதிபதி தமிழகத்தின் முதல் இஸ்லாமியப் பெண் சட்டமன்ற உறுப்பினர்

யாகூப் ஹாசன் சேட் என்ற பெயர் தெரிந்தவர்களுக்குக் கூட கதீஜாவை அதிகம் தெரியவில்லை. ஆணும் பெண்ணுமாக இந்திய விடுதலைப் போரில் ஒன்றிணைந்து பணியாற்றியவர்களில் யாகூப்புக்கும் அவர் மனைவி கதீஜாவுக்கும் பெரும் பங்குண்டு. வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா எழுதுகையில், `ஆந்திரப் பத்திரிகையின் பழைய செய்தித் துளிகளில் 1937-ம் ஆண்டு, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த யாகூப் ஹாசன் பற்றி அன்றைய முதல்வர் ராஜாஜி புகழ்ந்து பேசுகையில், ஹாசனின் மனைவியான துருக்கி நாட்டைச் சேர்ந்த கதீஜா என்ற சட்டமன்ற உறுப்பினரையும் பாராட்டிப் பேசியுள்ளார்' என்று குறிப்பிடுகிறார்.

பிறந்தது துருக்கி. வளர்ந்ததும் அங்கே தான். படித்தது கான்ஸ்டான்டினோபிள் பல்கலைக்கழகம்; உயர்படிப்பு இங்கிலாந்தில். இப்படி பணமும் அதிகாரமும் படைத்த செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தான் கதீஜா இருந்திருக்க வேண்டும். யாகூப் ஹாசன் சேட் என்ற மனிதரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு தான் இந்தியாவுக்குள் நுழைகிறார் கதீஜா.

1875-ம் ஆண்டு, நாக்பூரில் பிறந்த வடஇந்திய இஸ்லாமியரான யாகூப், அலிகார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, 1893-ம் ஆண்டு, வணிகம் செய்ய பெங்களூருக்கு வந்தார். தென்னிந்தியா மிகவும் பிடித்துப் போக, இங்கேயே தங்கிவிட்டார். 1901-ம் ஆண்டு மதராஸுக்குக் குடிபெயர்கிறார்.

யாகூப்-கதீஜா தம்பதிக்குத் திருமணம் ஆன ஆண்டு குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. கதீஜாவின் வயதைக் கருத்தில்கொண்டு அநேகமாகத் திருமணத்துக்குப் பிறகு அவர் மதராஸ் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வடஆற்காட்டைச் சேர்ந்த நவாப் சி.அப்துல் ஹக்கீமிடம் வணிக ஏஜென்டாக வேலையைத் தொடங்கினார் யாகூப். அரசியல் ஆர்வம் காரணமாக சென்னை மாநகராட்சி உறுப்பினரான யாகூப், அனைத்திந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்படும் போது அதன் ஆரம்பக்கால நிர்வாகத்தில் பெரும்பங்காற்றினார். 1916 முதல் 1919-ம் ஆண்டு வரை இந்திய முஸ்லிம் லீக்கின் மதராஸ் மாகாண சட்ட மேலவை உறுப்பினராகச் செயற்பட்டார் யாகூப் ஹாசன். மனைவி கதீஜாவும் கணவருடன் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். சென்னை மாகாணத்தின் முதல் இஸ்லாமியப் பெண் கௌரவ நீதிபதியாகப் பணியாற்றத் தொடங்கினார். `இவர் தவிர ஒன்றிரண்டு இஸ்லாமியப் பெண்களே இந்தியா முழுக்க மாஜிஸ்டிரேட்டுகளாகப் பணியாற்றுகின்றனர்' என்று கமலா சத்தியனாதன் தன் `இந்தியன் லேடீஸ் மேகஸின்' பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை போன்ற தென்னகத்து நகரத்தில் வாழத் தொடங்கினாலும், புரட்சிகர துருக்கிப் பெண்கள் போலவே தலையை மட்டும் துணிகொண்டு மூடியபடி, மேற்கத்திய ஆடை அணிந்து காணப்பட்டார் கதீஜா. 1917-ம் ஆண்டு, இந்திய மகளிர் கழகம் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்க உறுப்பினர்களில் ஒருவராக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அம்மு சுவாமிநாதன், அன்னி பெசன்ட், டாரதி ஜீனராஜதாசா போன்றோருடன் இணைந்து பணியாற்றினார் கதீஜா. 1919-ம் ஆண்டு, இந்தியா முழுக்க `கிலாபத் இயக்கம்' பரபரப்பாகத் தொடங்கி இஸ்லாமிய மக்களிடையே பெரும் எழுச்சியை உண்டாக்கி வந்தது. ஓட்டோமானிய கலீபகத்தை ஆங்கிலேயரின் பிடிகளில் இருந்து காப்பாற்ற இந்தப் போராட்டத்தை முகமது அலி மற்றும் சௌகத் அலி சகோதரர்கள் முன்னெடுத்தனர்.

கதீஜா ஹாசன் பெண்களுக்கான தனி கிலாபத் அமைப்பு ஒன்றைத் தொடங்கி அரசுப் பள்ளிகளிலிருந்து தங்கள் பெண் பிள்ளைகளை விலக்கிக்கொள்ளுமாறு இஸ்லாமியப் பெண்களிடம் வலியுறுத்தி வந்தார். அரசுக் கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த மாணவர்கள் மேல் ஆங்கிலேய அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட, இந்தப் போராட்டத்தின் முதல் சென்னைக் கூட்டத்தை முஸ்லிம் கல்வி சம்மேளனத்தின் தலைவரான யாகூப் சேட் திருவல்லிக்கேணி கடற்கரையில் நடத்தினார்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்துடன் கைகோத்துக்கொண்டது கிலாபத் இயக்கம். `நமக்கும் ஆங்கிலேய அரசுக்கும் இடையே பெரும் பிளவு உள்ளது, நமக்கு சுயாட்சி வேண்டும்; அது கிடைக்கும் வரை ஓயமாட்டோம்' என்று முழங்கினார் யாகூப். கணவருடன் கூட்டத்தில் துணையிருந்தார் கதீஜா. 1921 பிப்ரவரி 15 அன்று அரசின் உத்தரவின்றி, கோழிக்கோட்டில் கிலாபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றனர் தம்பதி. அடுத்த நாளே கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடுங்காவலில் வைக்கப்பட்டார் யாகூப். கணவர் கண்ணூர் சிறையில் அடைக்கப்பட, கதீஜா சென்னை திரும்பினார்.

கதீஜா யாகூப் ஹாசன்
கதீஜா யாகூப் ஹாசன்

கைதான காரணத்தால், ராஜாஜியின் நெருங்கிய நண்பராக இருந்தபோதும் யாகூப்பால் அடுத்த தேர்தலில் நிற்க முடியவில்லை. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற மற்றொரு கிலாபத் போராட்டக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்காக மீண்டும் யாகூப் ஹாசன் கைது செய்யப்பட, சிறையில் அவருடன் நட்பு பாராட்டினார் டி.ஸ்ரீனிவாசன். சிறையில் நடந்த சச்சரவு ஒன்றில் பிற கைதிகளிடமிருந்து ஸ்ரீனிவாசனைக் காப்பாற்றினார் யாகூப் ஹாசன். இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். இந்த ஹாசனின் நினைவாக தன் வீட்டு ஆண் குழந்தைகள் அனைவருக்கும் ஹாசன் என்ற பெயரை இணைத்தே பெயரிட்டு மகிழ்ந்தார் ஸ்ரீனிவாசன். பின்னாளில் இதை பேட்டி ஒன்றில் உறுதி செய்தார் ஸ்ரீனிவாசனின் மகன் சாருஹாசன். நடிகர் கமல்ஹாசனின் பெயரொட்டான `ஹாசன்' கதீஜாவின் கணவர் ஹாசனேதான்! 1930-ம் ஆண்டு, தென்னிந்திய முஸ்லிம் லீக் என்ற கட்சியைத் தோற்றுவித்தார் யாகூப் ஹாசன். ஆனால், முஸ்லிம் லீக்கா, காங்கிரஸா… யாருடன் சேர்ந்து இயங்குவது என்கிற குழப்பத்தால் விரைவில் கட்சி கலைந்துபோனது.

1933-ம் ஆண்டு, லக்னோ நகரில் நடைபெற்ற ஏழாவது அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டில் மதராஸ் மாகாண இஸ்லாமியப் பெண்களின் பிரதிநிதியாக, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து கலந்துகொண்டார் கதீஜா. தொடர்ச்சியாக இஸ்லாமியப் பெண்களுக்குக் கல்வியின் அவசியத்தை எடுத்துச்சொல்லிவந்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப்பணிகளில் கதீஜாவின் ஈடுபாடு பற்றி 1936-ம் ஆண்டு வெளிவந்த இந்தியன் லேடீஸ் மேகஸினில் பாராட்டி எழுதுகிறார் கமலா சத்தியனாதன். `தேசிய உடல்நலக் கழகம், தாய் சேய் நலக் கழகம், இந்தியன் ரெட் கிராஸ், குழந்தைகளுக்கான சில்ட்ரன்ஸ் எய்ட் சொசைட்டி போன்றவை தவிர இரண்டு மூன்று பெண்கள் பள்ளிகளிலும் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களிலும் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அனைத்திந்தியப் பெண்கள் கூட்டமைப்பின் சென்னை மாநாட்டை முன்னின்று நடத்திய பெண்களில் இவரும் ஒருவர்' என்று குறிப்பிடுகிறார்.

1937-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒன்பது பெண்கள் வெற்றிபெற்றனர். அம்மண்ண ராஜா, அஞ்சலை அம்மாள், ஜெபமணி மாசிலாமணி, ருக்மிணி லட்சுமிபதி போன்றோருடன், காங்கிரஸ் ஆதரவில் முஸ்லிம் பெண்களுக்கான ஒதுக்கீட்டில் வென்று சட்டமன்றம் சென்றார் கதீஜா. இஸ்லாமியப் பெண் ஒருவர் சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்தது அதுவே முதன்முறை.இதற்கான அடித்தளமும் அவர் அமைத்ததே என்பதுதான் ஆச்சர்யம். 1935-ம் ஆண்டு, இஸ்லாமியப் பெண்களின் அரசியல் பங்கேற்பு மேம்பட, அன்றைய சென்னை மாகாணத்தின் தலைமைச் செயலராகச் செயலாற்றிவந்த சி.எஃப்.பிரேக்கத்புரியைச் சந்தித்து மகளிர் கூட்டமைப்பைச் சேர்ந்த முத்துலட்சுமி ரெட்டி, திருமதி சோப்ரா, திருமதி பொன்னுசாமி ஐயர் ஆகியோருடன் கோரிக்கை வைத்தார் கதீஜா.

பர்தா முறை அதிகமாகப் பயன்பாட்டில் இருந்த காலகட்டத்தில், பெண்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய பர்தாவில் அனுமதி இல்லை என்ற ஆங்கிலேய அரசின் நிலைப்பாட்டைத் தளர்த்தி அவர்களது ஆண் துணை, யார் வேண்டுமானாலும் தேர்தல் அதிகாரியிடம் பெண்களின் கையொப்பமிட்ட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம் என அனுமதி கோரப்பட்டது.

1936 மே 19 அன்று இஸ்லாமியப் பெண்களுக்குப் பதிலாக குடும்ப ஆண் உறுப்பினர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

பெண்களுக்கான தனி இட ஒதுக்கீட்டில், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவப் பெண்களுக்கான உள் இட ஒதுக்கீடு 1937-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமலுக்கு வந்தது. அதே ஆண்டு, தேர்தலில் வென்று யாகூப் ஹாசன் பொதுப்பணித்துறை அமைச்சரானார். இரண்டு ஆண்டுகள் கணவன் மனைவி இருவரும் சட்டமன்றப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். 1939 அக்டோபர் 9 அன்று ஆங்கிலேய அரசு இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றதைக் கண்டித்து ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்தது. ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. 1940 மார்ச் 23 அன்று ராம்கர் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய ஹாசன், நெஞ்சுவலியால் தன் நுங்கம்பாக்கம் இல்லத்தில் காலமானார். அதன்பின் கதீஜா என்ன ஆனார் என்பது பற்றிய குறிப்புகள் எங்கும் இல்லை. தம்பதியின் குடும்ப வாழ்க்கை, அவர்களுக்குப் பின்னான வழித்தோன்றல்கள் பற்றியும் தகவல் கிடைக்கவில்லை.

எங்கிருந்தோ வந்து சென்னையின் முதல் இஸ்லாமியப் பெண் சட்டமன்ற உறுப்பினராகவும், முதல் கௌரவ நீதிபதியாக வும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் மக்கள் தொண்டாற்றிய கதீஜாவை இன்று நினைவு கொள்வாரில்லை. இவர் வாழ்ந்த நகரம், இவர் பற்றிய எந்த வரலாற்றுச் சுவடும் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது.