Published:Updated:

முதல் கடமை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

முதல் கடமை!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘‘தமிழக அரசின் மொத்தக் கடனைப் பிரித்தால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2.63 லட்சம் கடன் இருக்கிறது’’ என்றார். நிதியமைச்சர் சொன்ன இந்தக் கணக்கைப் பார்த்து, ‘எங்களைக் கேட்காமலே எங்கள் மீது எப்படிக் கடன் வாங்கினீர்கள்?’ எனவும், ‘என் பங்குக்கான பணத்தை நான் கொடுக்கத் தயார்’ எனவும் பலரும் பல விதங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள், மக்களுக்கு நல்லது செய்யப்போகிறோம் என்று சொல்லித்தான் கடன் வாங்குகின்றன. அப்படி வாங்கப்படும் கடன், தகுதியான மக்களுக்குப் போய்ச் சேராமல், தகுதியற்றவர்களுக்கும் ஊழல் அரசியல்வாதிகளின் பைநிரப்பவும்தான் பயன்படுகிறது. இதில் ஊழல் அரசியல்வாதிகள் பற்றி நிதியமைச்சர் பேசவில்லை. பதிலாக, அரசின் நலத்திட்டங்கள் மூலம் கிடைக்கும் பயன் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பது குறித்த தகவல் நம்மிடம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

ஒருவரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் அரசின் நலத் திட்டத்தைப் பெறத் தகுதியானவர் யார் என்பதைக் கண்டறிவது இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் செய்யவே முடியாத செயலல்ல. சமையல் எரிவாயு இணைப்பு தொடர்பான விவரங்களை வங்கியிலும், ரேஷன் கார்டிலும் அனைவரும் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசாங்கம் உத்தரவிட்டு செயல்படுத்திய பின்புதான், ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்ததுடன், சமையல் எரிவாயுவுக்கான மானியச் செலவும் மத்திய அரசுக்குக் கணிசமாகக் குறைந்தது. தமிழக அரசாங்கமும் இதேபோல செயல்பட்டு, அரசின் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியானவர்களைக் கண்டுபிடிக்க முடியாதா?

தமிழக அரசாங்கம் ஏற்கெனவே ஒவ்வொரு குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணையும் ரேஷன் கார்டுடன் இணைத்துள்ளது. ஆதாரையும் பான் கார்டு எண்ணையும் இணைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பான் கார்டு மூலம் ஒரு தனிநபர் வங்கிகளில் செய்யும் வரவு செலவுக் கணக்கைக் கண்டறிய முடியும். இந்த வரவு செலவுக் கணக்கை வைத்து, அரசின் நலத் திட்டங்கள் அவர்களைச் சென்று சேராதபடி செய்ய முடியும். இப்படி தொடர்ச்சியாகப் பல வலைகளை வீசுவதன்மூலமே தகுதியற்றவர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்த முடியும்!

அரசாங்கம் செய்யும் ஒவ்வொரு ரூபாய் செலவில் யாருக்கு, எவ்வளவு போய்ச் சேருகிறது என்கிற கணக்கு துல்லியமாக இருந்தால், கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. மக்களின் பொருளாதார நிலை குறித்த தகவல்களைத் திரட்டும் அடிப்படையான காரியத்தை மத்திய, மாநில அரசாங்கங்கள் எந்தக் காலத்திலேயோ செய்து முடித்திருக்க வேண்டும். அந்த உருப்படியான காரியத்தை, தன்னுடைய முதல் கடமையாக எடுத்துக்கொண்டு தி.மு.க அரசாங்கம் செய்ய வேண்டும் என்பதே நாட்டின் நலன் விரும்பும் அனைவரின் எதிர்பார்ப்பு!

- ஆசிரியர்