
மாடுபிடி வீரர்களும், காளைகளும் போட்டியில் கலந்துகொள்வதற்கான வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்.
ஜல்லிக்கட்டு... இந்த ஆண்டு முதன்முறையாகச் சென்னையில் நடக்கவிருக்கிறது.
ஜல்லிக்கட்டு ஏன், எப்படி நடத்தப்படுகிறது? உள்ளூர் நாட்டு மாட்டினங்களின் மரபணு வளத்தைப் பாதுகாப்பதற்கான இனப்பெருக்கம்... ஜல்லிக்கட்டின் அடிப்படை நோக்கம். ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் காளையின் திமிலைப் பிடித்தவாறு குறிப்பிட்ட தூரம், குறிப்பிட்ட நேரம் வரை ஓடினால், அவர் வெற்றியாளர். மாடுபிடி வீரர்களால் அடக்க முடியாமல்போனால், அந்தக் காளை வெற்றிபெறும். இப்படி ஜெயிக்கும் காளைகள் சிறந்த காளைகளாக இனம்காணப்பட்டு, உள்ளூர்ப் பசுக்களுடன் இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தப்படும்.

2017-ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டபோது, சென்னை, மெரினாவில் தன்னெழுச்சியுடன் நடைபெற்ற போராட்டம் உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. அந்தப் போராட்டத்தின் நிர்ப்பந்தம் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து அப்போதே, சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றிய யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஐந்து ஆண்டுகள் கழித்து, இந்த வருடம் வருகிற மார்ச் 5-ம் தேதி சென்னையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சென்னையை அடுத்த படப்பையில், கரசங்கால் கிராமத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் 10,000 பார்வையாளர்கள், 500 மாடுகள், 500 மாடுபிடி வீரர்களுடன் களம் காண உள்ளது ஜல்லிக்கட்டு. இதுகுறித்துப் பேசியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை பிரமாண்டமாக நடத்தவிருக்கிறோம். சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ள மக்களின் நீண்டகால ஏக்கம் தீரும் வகையில் இந்தப் போட்டி இருக்கும். ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துபவர்கள், ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோரைக் கொண்டு இந்தப் போட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த 501 காளைகள், சிறந்த மாடுபிடி வீரர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு களமிறக்கப்பட இருக்கிறார்கள். மாடுபிடி வீரர்களுக்குக் காப்பீடு வழங்கவும் திட்டமிட்டிருக்கிறோம். வெற்றிபெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், காளையை அடக்கும் வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளன.
மாடுபிடி வீரர்களும், காளைகளும் போட்டியில் கலந்துகொள்வதற்கான வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும். விலங்கு நல வாரியம் அறிவித்துள்ள விதிமுறைகளின்படி காளைகளுக்கும், மனிதர்களுக்கும் எந்தவித சேதமும் ஏற்படாதவாறு இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும்” என்றார்.
பொங்கல் என்றால் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, மல்ட்டி ஃபிளக்ஸ் தியேட்டர், ஷாப்பிங் மால் என்று பொழுதுபோக்கி வந்த சென்னைவாசிகளுக்கு, இந்த முறை நேரில் ஜல்லிக்கட்டு பார்க்கும் வாய்ப்பு. ‘‘இதுவரை டி.வி-யிலதான் ஜல்லிக்கட்டு பார்த்திருக்கோம். இப்போ களத்துல பார்க்கப்போறதை நினைச்சா பரவசமா இருக்கு’’ என்கிறார்கள் எதிர்பார்ப்பும் சந்தோஷமுமாக.