சினிமா
பேட்டிகள்
Published:Updated:

மருத்துவ வரலாற்றின் மைல்கல்

மருத்துவ வரலாற்றின் மைல்கல்
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவ வரலாற்றின் மைல்கல்

மலேரியாவுக்கான முதல் தடுப்பூசியைப் பரிந்துரை செய்திருக்கிறது உலக சுகாதார அமைப்பு (WHO).

உலகிலேயே மனிதனுக்கு அடுத்து மிக ஆபத்தான உயிரினம் எது தெரியுமா? அவ்வப்போது நாம் தட்டித் தூக்கிப்போடும் கொசுதான். மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா என ஒவ்வொரு வருடமும் சுமார் ஏழரை லட்சம் பேரைக் கொல்கிறது கொசு. இதில் மலேரியாவால் இறப்பவர்கள் மட்டும் நான்கு லட்சத்துக்கும் அதிகம். இந்த மலேரியாவுக்கு எதிராகப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் போராடிவருகிறார்கள் மனிதர்கள். கி.மு 2700-ம் ஆண்டிலேயே மலேரியா நோய் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ரோமாபுரி சாம்ராஜ்யம் சரிந்ததில்கூட மலேரியாவுக்குப் பங்குண்டு. இத்தனை ஆண்டுகள் கழித்து இன்றும் மலேரியாவுடனான மனிதனின் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மருத்துவ வரலாற்றின் மைல்கல்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலேரியாவின் தீவிரத்தை உணர்ந்த மேற்கத்திய நாடுகள் 1950-களில் மலேரியாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தன. கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதைச் செய்தனர். ஆனால், பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் இன்றுவரை இது சாத்தியமற்ற ஒரு விஷயமாகவே இருக்கிறது. உலகில் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களில் 94% ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

அனோபிலஸ் (Anopheles) என்ற வகைக் கொசுக்களாலேயே மலேரியா பரப்பப்படுகிறது. இந்தக் கொசுக்கள் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை ஆப்பிரிக்காவில் நிலவுகிறது. இது மட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் இந்த நாடுகளில் வலுவான சுகாதாரக் கட்டமைப்பு இல்லை, நீர் மேலாண்மை இல்லை. இதனாலேயே மலேரியாவைக் கட்டுக்குள் வைத்திருப்பது இந்த நாடுகளுக்குப் பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. இப்போது கொரோனாவும் உடன் சேர்ந்ததால் மலேரியாத் தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் தொய்வடையவே செய்திருக்கின்றன. இந்தச் சூழலில்தான் மலேரியாவுக்கான முதல் தடுப்பூசியைப் பரிந்துரை செய்திருக்கிறது உலக சுகாதார அமைப்பு (WHO).

மருத்துவ வரலாற்றின் மைல்கல்

மஸ்க்யூரிக்ஸ் (Mosquirix) என்ற பெயரில் GlaxoSmithKline என்ற ஃபார்மா நிறுவனம் இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கிறது. குழந்தைகளுக்கான இந்தத் தடுப்பூசி மலேரியா நோய்க்குக் காரணமான ஐந்து ஒட்டுண்ணிகளில் முக்கியமான Plasmodium falciparum-க்கு எதிரான எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது. குழந்தை பிறந்த 5 மாதங்களிலிருந்து 17 மாதங்களுக்குள் முதல் மூன்று டோஸ் தடுப்பூசிகள் போடப்படும். அதிலிருந்து 18 மாதங்களுக்குப் பிறகு நான்காவது டோஸ் போடப்படும். மலேரியாவைப் பொறுத்தவரையில் மிக அதிக உயிரிழப்புகள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடத்திலேயே நிகழ்கிறது. ஆண்டுக்கு சுமார் இரண்டரை லட்சம் குழந்தைகள் மலேரியாவால் இறக்கின்றன. இதனாலேயே மலேரியாவுக்கு எதிரான போரில் இந்தத் தடுப்பூசி மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இது மலேரியாவுக்கு எதிரான முதல் தடுப்பூசி மட்டுமல்ல, ஒரு ஒட்டுண்ணிக்கு (Parasite) எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் முதல் தடுப்பூசியும்கூட. வைரஸ், பாக்டீரியாவைவிடச் சிக்கலான நுண்ணுயிரிகளாகப் பார்க்கப்படுகின்றன ஒட்டுண்ணிகள். அதனால்தான் பாதுகாப்பான, பலனளிக்கும் ஒரு மலேரியாத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர இத்தனை காலம் ஆகியிருக்கிறது. இப்போதும் மற்ற வைரஸ் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது மஸ்க்யூரிக்ஸ் திறன் குறைவுதான். முதல்கட்ட சோதனைகளில் தடுப்பூசி போடப்பட்ட ஒரு ஆண்டில் இதன் திறன் சுமார் 50% இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தத் திறன் இன்னும் குறையவே செய்திருக்கிறது. ஆனால் கொரோனாத் தடுப்பூசிகள் போல் நோயின் தீவிரத்தைக் குறைத்து மலேரியா உயிரிழப்புகளை நிச்சயம் இந்தத் தடுப்பூசியும் குறைக்கும் என நம்புகின்றனர் ஆய்வாளர்கள். இந்தத் தடுப்பூசி அனைவருக்கும் சென்றுசேரும் பட்சத்தில் ஆண்டுக்கு 23,000 குழந்தைகள் வரை மலேரியாவால் உயிரிழக்காமல் தடுக்கமுடியும் எனக் கணிக்கின்றனர்.

மருத்துவ வரலாற்றின் மைல்கல்

இப்போது இதிலிருக்கும் முக்கிய சவால் தடுப்பூசிகளை மக்களிடம் கொண்டு செல்வதே. ஆப்பிரிக்காவில் ஏற்கெனவே கொசுவலைகள் தருவது, பூச்சிக்கொல்லிகள் தெளிப்பது போன்ற மலேரியா தடுப்புப் பணிகள் நடந்துவருகின்றன. அத்துடன் தடுப்பூசி போடுவதையும் சேர்ப்பதே முதல்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு டோஸ் தடுப்பூசியாக இது இருப்பது கூடுதல் சவால். கொரோனாத் தடுப்பூசிகளை அனைவருக்கும் எடுத்துச்செல்லும் பணிகள் பாதியில்தான் நிற்கின்றன. அதில் நாம் கடந்து வர வேண்டிய தூரமே இன்னும் அவ்வளவு இருக்கிறது. அதனால் முதலில் கொரோனாத் தடுப்பூசிகள் தயாரிப்பதற்கே மருந்து நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும். கொரோனா எப்போது முழுவதுமாகக் கட்டுக்குள் வருகிறதோ, அப்போதே மலேரியாவுக்கான முடிவும் தொடங்கும்!