அலசல்
சமூகம்
Published:Updated:

கடலூர் கொடூரம்... பூட்டிய வீட்டுக்குள் எரிந்து கருகிய 5 உயிர்கள்!

சற்குரு, லக்‌ஷன், தனலட்சுமி, ஹாசினி, தமிழரசி
பிரீமியம் ஸ்டோரி
News
சற்குரு, லக்‌ஷன், தனலட்சுமி, ஹாசினி, தமிழரசி

என் வீட்டுக்காரர் சற்குரு அவர்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டார். அப்போது நான் அவரைத் தள்ளிவிட்டேன். அங்கு அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. அதனால் அனைவர் மீதும் தீப்பற்றிவிட்டது

விவாகரத்துக்குச் சம்மதிக்காத மனைவியை மிரட்டுவதற்காக கணவர் தன்மீது ஊற்றிக்கொண்ட பெட்ரோல், இரண்டு குழந்தைகள் உட்பட 5 உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அம்மாபேட்டையைச் சேர்ந்த காதல் தம்பதி சற்குரு - தனலட்சுமி. இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மஞ்சக்குப்பத்திலுள்ள தன் தாய் செல்வி வீட்டில் கைக்குழந்தை லக்‌ஷனுடன் தஞ்சமடைந்தார் தனலட்சுமி. இதையடுத்து விவாகரத்து கேட்டு தனலட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்திருக்கிறார் சற்குரு.

கடலூர் கொடூரம்... பூட்டிய வீட்டுக்குள் எரிந்து கருகிய 5 உயிர்கள்!

இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி செல்லாங்குப்பத்திலுள்ள தன் அக்கா தமிழரசி வீட்டுக்கு தாய் செல்வி, குழந்தை லக்‌ஷனுடன் சென்றிருக்கிறார் தனலட்சுமி. அப்போது அங்கு வந்த சற்குரு, அவர்களிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். சிறிது நேரத்தில் அந்த வீட்டுக்குள்ளிருந்து ‘‘ஐயோ... காப்பாத்துங்க... காப்பாத்துங்க...” என மரண ஓலம் கேட்டிருக்கிறது. அக்கம் பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அங்கே 80% தீக்காயங்களுடன் சற்குரு, தனலட்சுமி, அவரின் தாய் செல்வி ஆகியோர் உயிருக்குப் போராடியநிலையில் துடிதுடித்துக் கிடந்திருக்கின்றனர். தமிழரசி, அவரது நான்கு மாதக் குழந்தை ஹாசினி, தனலட்சுமியின் எட்டு மாதக் குழந்தை லக்‌ஷன் ஆகியோர் கருகி உயிரிழந்திருந்தனர். இதையடுத்து தீக்காயம் அடைந்த மூவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

‘‘என் வீட்டுக்காரர் சற்குரு அவர்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டார். அப்போது நான் அவரைத் தள்ளிவிட்டேன். அங்கு அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. அதனால் அனைவர் மீதும் தீப்பற்றிவிட்டது” என்று தனலட்சுமியும், “சற்குரு, அவர்மீது பெட்ரோல் ஊற்றியபோது நாங்கள் தடுத்தோம். அப்போது எங்கள்மீதும், குழந்தைகள்மீதும் பெட்ரோல் பட்டது. அடுப்பிலிருந்த நெருப்பு மூலம் தீப்பற்றிவிட்டது” என்று அவரின் தாய் செல்வியும் நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்த வீடியோ காட்சிகள் பார்த்தவர்களின் நெஞ்சைப் பதறவைத்திருக்கின்றன.

சற்குரு, லக்‌ஷன், தனலட்சுமி, ஹாசினி, தமிழரசி
சற்குரு, லக்‌ஷன், தனலட்சுமி, ஹாசினி, தமிழரசி

இது குறித்து நம்மிடம் பேசிய முதுநகர் காவல் நிலைய விசாரணை அதிகாரிகள், “திருமணத்துக்குப் பின்பு சற்குருவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தனலட்சுமிக்கு தெரியவந்ததால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. சம்பவத்தன்று தமிழரசியின் வீட்டுக்குச் சென்று சண்டை போட்ட சற்குரு, பெட்ரோலைத் தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அப்போது பெட்ரோல் அனைவர்மீதும் பட்டிருக்கிறது. அடுப்பிலிருந்த நெருப்பு பரவி அனைவர்மீதும் தீப்பற்றிக்கொண்டுவிட்டது” என்றனர்.

தமிழரசி, இரண்டு குழந்தைகளைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சற்குருவும் தனலட்சுமியும் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கிறார்கள். தனலட்சுமியின் தாய் செல்வி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்!