
அரசியலில் அ.தி.மு.கதான் பிடிக்கும் என்றாலும், தீவிர ரஜினி ரசிகர். அ.தி.மு.க பொதுக்கூட்டம் என்றால் அங்கு ஆஜராகிவிடுவார்.
‘`விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் ராஜேந்திர பாலாஜியை மக்கள் தோற்கடிப்பார்கள்...’’ இப்படிக் கூறியது எதிர்க்கட்சியினர் அல்ல. சாத்தூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜவர்மன். மாவட்டச் செயலாளராகவும் அமைச்சராகவும் உள்ளவரை, ஆளுங்கட்சி எம்.எல்.ஏவே இப்படி வெளிப்படையாகப் பேசுவது தமிழகத்தில் வேறு எங்கும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதுமட்டுமல்ல, ‘என்னைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்’ என்றும் அமைச்சரைப் பற்றி அதே எம்.எல்.ஏ குற்றம் சாட்டி வருவது அதைவிட அதிர்ச்சி.
சமீபத்தில் விருதுநகரில் மினி கிளினிக் திறக்கச் சென்ற இடத்தில், ரிப்பனை வெட்டிவிட்டு அலங்காரத்துக்குக் கட்டப்பட்டிருந்த பலூன்களைக் கத்தரிக்கோலால் உடைத்து விளையாடினார் அமைச்சர். அங்கிருந்த டாக்டர்கள், நர்ஸ்கள், அரசு அதிகாரிகள் மட்டுமல்ல... வந்திருந்த கட்சியினரும் அமைச்சரை ஒரு மாதிரியாகப் பார்த்த சம்பவம் சோஷியல் மீடியாவில் வைரலானது.

பளிச் மஞ்சள் சட்டை, நெற்றியில் சிவப்புத் திலகம், தாயத்து விற்பவர் போல் கை முழுக்கப் பல வண்ணக்கயிறுகள். உதவியாளரும் உடன் வரும் பலரும்கூட மஞ்சள் சட்டையில் பளபளக்கிறார்கள். அறையில் அவர் உட்காரும் நாற்காலிகூட மஞ்சள் துண்டு போர்த்தியிருக்கும். ‘அமைச்சரின் தனுசு ராசியை குரு கோபப் பார்வை பார்ப்பதால் இந்த கெட்டப்’ எனக் கிசுகிசுக்கிறார்கள் ஆஸ்தான ஜோதிடர்கள். விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் அமைந்துள்ள தன் குலதெய்வம் ஸ்ரீதவசிலிங்கம் சுவாமி திருக்கோயில் தொடங்கி திருப்பதி வரை கோயில் கோயிலாக ஏறி இறங்குவார்.
பாதுகாப்பு போலீஸ் மட்டு மல்லாமல் கரடுமுரடான ஆட்கள் சிலரும் உடன் வர, தெலுங்குப் பட அரசியல்வாதி திரையைக் கிழித்துக்கொண்டு தரைக்கு வந்ததுபோல இருக்கும் இவர் நடமாட்டம். இப்படி ஹாரராகவும் காமெடியாகவும் பக்திப்பழமாகவும் மாறி மாறிக் காட்சியளிக்கும் ராஜேந்திர பாலாஜி, மீம்ஸ் கிரியேட்டர்கள் கொண்டாடும் ஹீரோ.
கட்சிக்கூட்டத்திலோ, செய்தியாளர் சந்திப்பிலோ மைக்கைப் பிடித்து விட்டால் அவ்வளவுதான். வார்த்தைகள் நர்த்தனமாடும். ‘நாக்கை அறுப்பேன்’ என நாக் கூசாமல் பேசுவார். யாரை யாவது திட்ட அவர் முடிவெடுத்து விட்டால் யாராலும் தடுக்க முடியாது. தரை லோக்கலுக்கு இறங்கிவிடுவார். இதில் சொந்தக் கட்சியினரும் தப்பியதில்லை. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை ‘சீக்கு வந்த பிராய்லர் கோழி. அழுகிப்போன தக்காளி’ என்றெல்லாம் அமைச்சர் பேச, பதிலுக்கு அவர் ஏச... இந்த அக்கப்போர் வெகுகாலம் தொடர்ந்தது. காங்கிரஸ்காரரான விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூரை இவர் திட்ட, ‘எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார் அமைச்சர்’ என போலீஸில் புகார் செய்தார் அவர். ஸ்டாலினைப் பற்றி மோசமாக செய்தியாளர்களிடம் அமைச்சர் பேச, கொந்தளித்துப் போன தி.மு.க மாவட்டச் செயலாளர்களான கேகேஎஸ்எஸ்ஆரும் தங்கம் தென்னரசும் சேர்ந்து ராஜேந்திர பாலாஜியின் வரலாற்றையே சொல்லி வசை பாடினர். இப்படி எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நபராக இருந்துகொண்டிருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜியின் அரசியல் வளர்ச்சி, ‘விக்ரமன்’ படத்தில் வரும் பாடல் காட்சி போன்றது. 40 வருடங்களுக்கு முன் அருப்புக்கோட்டை பக்கமுள்ள குருந்தமடத்திலிருந்து தச்சு வேலை செய்து பிழைப்பதற்காகத் திருத்தங்கலுக்குக் குடிபெயர்ந்தது அவர் குடும்பம். அப்போது அவர் பெயர் ராஜேந்திரன். அப்பா செய்த தச்சு வேலையில் அவருக்கு ஆர்வமில்லை. பள்ளியில் படித்துக்கொண்டே பகுதிநேர வேலை பார்த்த ராஜேந்திரன், பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு போஸ்டர் ஒட்டும் வேலைக்கும் பெயின்டர் வேலைக்கும் சென்று குடும்பத்தின் சுமையைக் குறைத்தார்.
அரசியலில் அ.தி.மு.கதான் பிடிக்கும் என்றாலும், தீவிர ரஜினி ரசிகர். அ.தி.மு.க பொதுக்கூட்டம் என்றால் அங்கு ஆஜராகிவிடுவார். போஸ்டர் ஓட்டுவது, கட்சிக் கூட்டங்கள் பற்றி மைக்கில் அறிவிப்பு செய்வது என அரசியலில் வருமானமும் வந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் ஆர்வம் ஏற்பட்டது அவருக்கு.
பணபலமும் சாதிய செல்வாக்கும் அதிகமுள்ளவர்கள் நிறைந்திருந்த விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க-வில் ‘எப்படியாவது வார்டு செயலாளராக ஆகிவிட வேண்டும்’ என்பதுதான் அவருடைய உச்சபட்ச ஆசையாக இருந்தது. சிவகாசி எம்.எல்.ஏவாக இருந்த பாலகிருஷ்ணன், மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்த பாலகங்காதரன் ஆகியோருக்குப் பணிவிடைகள் செய்து, ‘ராஜேந்திரன் எங்கே’ என்று விசாரிக்கும் அளவுக்கு வளர்ந்தார்.

விருதுநகர் மாவட்டச் செயலாளராக ஆன பாலகிருஷ்ணன், ராஜேந்திரனை திருத்தங்கல் பேரூராட்சி அ.தி.மு.க செயலாளராக நியமித்தார். அங்கிருந்து தொடங்கியது ராஜேந்திரனின் கிராஃப்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வார்டு கவுன்சிலராக ஆனார். கட்சி நிர்வாகிகளிடம் காட்டிய பவ்யத்தால் அனைவருக்கும் பிடித்தவரானார். அந்த ஆதரவில் 1996-ல் திருத்தங்கல் பேரூராட்சி துணைத்தலைவரானார். அதன்பின்பு அது நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. சிவகாசியின் புறநகர்ப் பகுதிகள் திருத்தங்கல் பேரூராட்சி லிமிட்டில் இருந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சியடைந்து. அதனால் ப்ளாட்டுகளுக்கு அப்ரூவல் கொடுக்கும் பணியில் பேரூராட்சியின் தயவுக்காக லட்சங்கள் புரண்டன. ராஜேந்திரனின் வாழ்வு வளமாகத் தொடங்கியது.

சிவகாசி ஒன்றிய சேர்மனாக இருந்த ராதாகிருஷ்ணன் மாவட்டச் செயலாளர் ஆனதும், அவருடன் ஒட்டிக்கொண்டார். இந்த நேரத்தில்தான் ஜோதிடர் ஒருவர் சொன்ன ஆலோசனையைக் கேட்டு தன் பெயருக்குப் பின்னால் பாலாஜியைச் சேர்த்துக்கொண்டார். அதன்பின் அவருடைய வாழ்க்கை ராக்கெட் வேகத்தில் மாற ஆரம்பித்தது. (இந்த நம்பிக்கையால் லோக்கல் அ.தி.மு.க-வினர் பலர் தங்கள் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு அலைகின்றனர்!)
ராஜேந்திர பாலாஜி சில மாதங்களில் இளைஞரணி மாவட்டச் செயலாளர் ஆனார். ஆர்.பி.உதயகுமாரின் நட்பால் மன்னார்குடி குடும்பத்தில் பவர் சென்டராக இருந்த டாக்டர் வெங்கடேஷ் அறிமுகம் கிடைத்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கி வெற்றி பெற்று, சில மாதங்களில் அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் கிடைத்தது. 2016-ல் மீண்டும் வாய்ப்பைப் பெற்று பால்வளத்துறை அமைச்சரானார்.
தன்னைக் கைதூக்கிவிட்ட ராதாகிருஷ்ணனுக்கு மட்டும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சீட் வாங்கிக்கொடுத்து நன்றியைக் காட்டியவர், கட்சி சீனியர்கள் பலருக்கு பொறுப்புகள் வழங்காமல் அல்வா கொடுத்தார்.
அதிகாரம், வசதி வாய்ப்பில் உச்சத்துக்கு வந்தபோதும் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை மந்திரி. அரசியலைக் கடந்த நண்பர்கள் கூட்டம் ஒன்று அவருடன் எப்போதும் இருக்கும். தன் நண்பர்களுக்காக எதையும் செய்வார். அந்த அடிப்படையில்தான் தனக்கு விசுவாசியாக வந்து ஒட்டிக்கொண்ட சுப்பிரமணியனை 2016-ல் சாத்தூர் வேட்பாள ராக்கினார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அவர் தினகரன் அணிப் பக்கம் போய் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். அந்த இடைத்தேர்தலில், தன் விசுவாசியான ராஜவர்மனுக்கு சீட் வழங்கி எம்.எல்.ஏ-வாக்கி அழகு பார்த்தார்.
சர்ச்சைக்குரிய பேச்சுகளாலும், உள்ளாட்சித் தேர்தலில் கழற்றிவிட்டதாலும் கடுப்பான கட்சியினர் பலர், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அணி திரண்டனர். அவர்களுடன் ராஜவர்மனும் சேர்ந்ததுதான் ட்விஸ்ட்!
ஒண்ணும் மண்ணுமாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் என்னதான் பிரச்னை என்று விசாரித்தால், மணல் விவகாரம் தொடங்கி கான்ட்ராக்ட் வரை பல கதைகள் சொல்கிறார்கள். கடுப்பான ராஜேந்திர பாலாஜி கடும் ஆத்திரத்தில் சாத்தூர்த் தொகுதியில் ராஜவர்மன் ஆதரவாளர்களைப் பொறுப்பிலிருந்து நீக்கினார். இவர்களின் மோதல் உச்சத்துக்குப் போனதால், ஆத்திரமடைந்த எடப்பாடி இவரிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடுங்கினார். இதனால் மிகவும் நொந்துபோனார் ராஜேந்திர பாலாஜி. கட்சிக்காரர்கள் யாரும் அவரை மதிக்கவில்லை. கடைசியில் ஒரு சமாதான ஏற்பாடாக மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, விருதுநகர் மேற்கு மாவட்டத்துக்கு ராஜேந்திர பாலாஜியை மாவட்டச் செயலாளர் ஆக்கியுள்ளனர்.
சரி, பால்வளத் துறை அமைச்சராக அவர் சாதித்தது என்ன?

ஆவின் அமைப்பில் முறைகேடுகள், பிரச்னைகள் தொடர்கின்றன. ஆவின் ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் பஞ்சாயத்துகள் நீதிமன்றப் படியேறின. தமிழகத்தில் 17 ஆக இருந்த பால் கூட்டுறவு ஒன்றியங்களை 25 ஆக உயர்த்தி தலைவர்களாக ஆளும்கட்சிப் புள்ளிகளையே உள்ளே நுழைத்தனர். பால் கொள்முதல், டாங்கர் லாரி ஒப்பந்தம், பால் உற்பத்திப் பொருள்களில் முறைகேடு என்று ஒவ்வொரு புகாராக வெடித்துக் கிளம்பின. சமீபகாலமாக ஆவின் பால் மலேசியா, துபாய்க்கு ஏற்றுமதி ஆவதாக விளம்பரம் செய்தாலும், உள்நாட்டு விற்பனையில் பாலின் தரத்தைக் கண்காணிப்பதில் அக்கறை செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
‘`ஆவினில் தனக்கு நெருக்கமான ஒருவரை தனி அதிகாரியாக நியமித்தார் அமைச்சர். அவர் மூலம்தான் ஆவினில் எதுவுமே நடக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் நிர்வாகத்தில் பல குளறுபடிகள் நடந்தன. ஐ.ஏ.எஸ் அதிகாரி வள்ளலார் ஆவின் நிர்வாக இயக்குநராக வந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். வள்ளலாருக்குப் பல நெருக்கடிகள், மிரட்டல்கள் விடப்பட்டன. ஆவினுக்கு முறைகேடாக பணி நியமனங்களைச் செய்வதில் காட்டிய ஆர்வத்தை, ஆவின் பாலின் தரத்தை உயர்த்துவதில் அமைச்சர் காட்டவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நியமனங்கள் நடந்தன. நிறைய பணம் விளையாடியுள்ளது.
மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் தனி ஒன்றியமாக மாறியுள்ள சூழலில், பழைய பட்டியலில் உள்ள காலியிடங்கள் அடிப்படையில் 62 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தியதும் புகாருக்குள்ளானது. இப்போது பல மாவட்டங்களில் பால் கொள்முதலுக்குப் பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலை இருக்கும்போது 460 புதிய நியமனங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. தேர்தல் செலவுக்காகவே இதைச் செய்கிறார்கள்’’ என்கிறார்கள் ஆவின் ஊழியர்கள்.
தொகுதியிலும் இதேபோல குமுறல்கள். ‘`நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிவகாசி - திருத்தங்கல் சாலையிலும், சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையிலும் ரயில்வே மேம்பாலம் கட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பட்டாசு விபத்துகள் ஏற்படும் அபாயமுள்ள சிவகாசியில் இ.எஸ்.ஐ மருத்துவமனையை மேம்படுத்தவில்லை. சிவகாசி நகரின் வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை’’ என்கிறார்கள் மக்கள்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பேசினோம். ‘`நீண்ட நாள் கோரிக்கையான பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்துள்ளோம். சிவகாசிக்குப் புதிய கலை அறிவியல் கல்லூரியைக் கொண்டுவந்திருக்கிறேன். திருத்தங்கலில் புதிய மருத்துவமனை, சிவகாசி மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. சிவகாசி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்திருக்கிறேன். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலமாக மத்திய அரசிடம் பேசி, 28 சதவிகிதமாக இருந்த ஜி.எஸ்.டி வரியை, 18 சதவிகிதமாகக் குறைத்துள்ளோம். அதேபோல, தீப்பெட்டித் தொழிலில் 18 சதவிகிதமாக இருந்த வரி, 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 4,000 பேருக்கு இலவசப் பட்டா வழங்கியிருக்கிறேன். என் தொகுதிக்குள் வரும் ஈஞ்சாறு கிராமத்தில் டெட்ரா பால் தொழிற்சாலை அமைக்க 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கியிருக்கின்றன. 2-வது கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான பணிகள் நடைபெறுகின்றன” என்றவரிடம், “உங்களுக்கும் ராஜவர்மனுக்கும் இடையே பனிப்போர் நடைபெறுகிறதே?” என்றோம்.
“அவரெல்லாம் ஒரு ஆளாங்க? அவருக்கு தி.மு.க பின்னணி இருப்பதால்தான், கட்சியிலிருந்து ஓரங்கட்டி வைத்தேன். அது பொறுக்க முடியாமல் அவதூறு பரப்பிவருகிறார். கட்சித் தலைமைக்கும், பொதுமக்களுக்கும் என்னைப் பற்றித் தெரியும். ராஜவர்மன் பேசுவதையெல்லாம் நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை” என்றார் ராஜேந்திர பாலாஜி.
அமைச்சரின் அட்ராசிட்டி வாய்ஸ்!
*அ.தி.மு.க-வை யாரும் கைப்பற்ற முடியாது. அமித் ஷா எங்களுடைய நண்பர்.
*ஜெயலலிதா என்ற ஆளுமை இப்போது இல்லாத நிலையில், மோடிதான் எங்கள் டாடி!
*அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பே இரட்டை இலைச் சின்னத்தைத்தான் காட்டுகிறார்.
*ஒபாமா, ட்ரம்ப் வந்தாலும்கூட எங்களுக்கு பயம் கிடையாது; எங்களுக்கு மோடி இருக்கிறார். எல்லாத்தையும் மேல இருக்கிற அவன் பார்த்துக்குவான்!
*வெளிநாட்டுப் பயணம் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்கிறார் ஸ்டாலின். வெள்ளை என்ன, மஞ்சள், பச்சை அறிக்கையுடன் கூடவே வெள்ளரிக்காயையும் சேர்த்துத் தருகிறோம்.
*எனக்கு திராவிடமும் தெரியாது, பெரியாரும் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் எம்.ஜி.ஆர் படங்கள்தான்.
*தேர்தல் அறிவித்துவிட்டால், எடுப்பதும் தெரியக்கூடாது. கொடுப்பதும் தெரியக்கூடாது; வாங்குவதும் தெரியக்கூடாது. எப்படி எப்படி ஜெயிப்பது என்று எங்களுக்குத் தெரியும்.
விரட்டும் வழக்குகள்!
‘`மண்டை உடைப்பு உள்ளிட்ட 16 வழக்குகளைச் சந்தித்தவன் நான். அதனால்தான் மந்திரியானேன்’’ என்று மேடையில் வெளிப்படையாகப் பேசத் தயங்காதவர் ராஜேந்திர பாலாஜி. மந்திரியான பிறகும் வழக்குகள் அவரைத் துரத்துகின்றன.
*2011 முதல் 2013-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக மந்திரி ஏழு கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், இதை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்றும் 2014-ல் மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு தற்போதும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணையில் இருந்து வருகிறது.
*ராஜபாளையம் நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம் கொலை செய்யப்பட்ட வழக்கில், ‘குற்றவாளிகளின் பின்னணியில் ராஜேந்திர பாலாஜி இருக்கிறார். அவரைக் காவல்துறை வழக்கில் சேர்க்கவில்லை’ என்று கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
*கடந்த ஆண்டு சிவகாசியில் பத்திரிகையாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். ராஜேந்திர பாலாஜி பற்றி எழுதியதால்தான் இந்தச் சம்பவம் நடந்ததாகப் புகார் எழுந்தது. அதில் இரண்டு அ.தி.மு.க-வினரை மட்டும் கைது செய்தது போலீஸ்.