கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பி காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த நீர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு துறைமுகத்தை ஒட்டி, வங்கக் கடலில் கலக்கிறது. இன்று (18.10.2022) காலை நிலவரப்படி சுமார் 1 லட்சத்து 95 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் சென்றுகொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துவரும் சூழலில், ஆற்றின் உள்ளே அமைந்திருக்கும் திட்டு கிராமங்களில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் சென்று பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் மேடான இடங்களில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் லலிதா பேசுகையில், ``கொள்ளிடம் ஆற்றில் சுமார் 2 லட்சம் கனஅடிக்குமேல் தண்ணீர் வருமென எதிர்பார்க்கப்படுவதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகப்படியான வெள்ளநீர் திறக்கப்பட்டிருப்பதால் படுகையிலுள்ள கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் இருக்கிறது. எனவே ஏழு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றின் கரையைப் பலப்படுத்தும் பணிகளுக்காக 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்குக் கட்டைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்புப்பணிகளுக்காக தீயணைப்புத்துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுவினர் படகுகளுடன் தயார் நிலையில் இருக்கின்றனர்" என்றார்.