ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

'ஊர் கூடி... உறவுகள் கூடி... இன்பம் பொங்கும் திருநாள் இது!'

தேவகோட்டை அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
News
தேவகோட்டை அபிராமி

கிராமியப் பாடகிகளின் பொங்கல் கொண்டாட்டம்!

உழவுக்கு வந்தனை செய்து, இயற்கைக் கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தி, உறவுகளுடன் அன்பு பாராட்டி மகிழ்வதுதான் பொங்கல் திருவிழா. கிராமத்தினர் பெரும்பாலானோரும் தங்களின் மரபுப்படி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஆண்டுதோறும் தமிழர் திருநாளைச் சிறப்பிக்கின்றனர். அவர்களில் பிரபல கிராமியப் பாடகிகள் சிலரின் பொங்கல் கொண்டாட்டம் குறித்துக் கேட்டோம்.

'ஊர் கூடி... உறவுகள் கூடி... இன்பம் பொங்கும் திருநாள் இது!'

இரண்டு வீட்டில் பொங்கல் கொண்டாடுவோம்! - தேவகோட்டை அபிராமி

இமான் இசையமைப்பில் தற்போது தயாராகி வரும் ‘பப்ளிக்’ படத்தில் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்

“சிவகங்கை மாவட்டத்துல எங்களோடது விவசாயக் குடும்பம். பல தலைமுறையாவே நெல் சாகுபடி பண்ணிட்டிருக்கோம். டிசம்பர் – ஜனவரி வாக்குல சம்பா பருவத்துக்கான நெல் அறுவடையை முடிப்போம். இந்தப் போகத்துல கிடைக்கிற புது அரிசியில பொங்கல் வைப்போம். பொங்கல் தினத்துல சூரியப் பொங்கலைத்தான் எங்க வீட்டுல சிறப்பா கொண்டாடுவோம். குடும்பத்துல எல்லோரும் புத்தாடை அணிஞ்சு, நல்ல நேரம் பார்த்து, வீட்டு வாசல்ல குடும்பமா பொங்கல் வைப்போம். அதைச் சூரியனுக்குப் படைச்சு, வருஷம் முழுக்க உழவுத்தொழில் செழிப்பா நடக்கணும்னு வழிபடுவோம். எங்க தோட்டத்துல வேலை செய்ற உழவர்களுக்குப் பொங்கல், கரும்பு கொடுத்துப் பொங்கல் வாழ்த்துகள் சொல்லுவோம். வீட்டுக்குப் பக்கத்துலயேதான் என் அம்மாச்சி வீடும் இருக்கு. அம்மாச்சி வீட்டுல மாட்டுப் பொங்கல்தான் சிறப்பா கொண்டாடுவாங்க. அந்தக் கொண்டாட்டத்துலயும் நாங்க குடும்பமா கலந்துப்போம். மாட்டுப் பொங்கல் தினத்துல பொங்கல் வெச்சு, மாடுகளுக்குப் பூஜை செஞ்சு, எல்லா மாடுகளுக்கும் பொங்கல் ஊட்டிவிடுவோம். அக்கம்பக்கத்துல கலைநிகழ்ச்சிகள் நடக்கும். கிராமியப் போட்டிகள்ல கலந்துக்கிறது, மக்களோடு மக்களா ஆடிப்பாடுறதுனு நேரம் போறதே தெரியாது. தொடர்ந்து நாலஞ்சு தினங்கள் கலகலப்பா இருக்கும். வருஷம் முழுக்க சந்தோஷம் செழிக்கணும்னு பொங்கலை மனநிறைவோடு கொண்டாடி மகிழ்வோம்!”

'ஊர் கூடி... உறவுகள் கூடி... இன்பம் பொங்கும் திருநாள் இது!'

பொங்கல் ஸ்பெஷல்மொச்சைப்பயறு குழம்பு! - கிடாக்குழி மாரியம்மாள்

‘கர்ணன்’ திரைப்படத்தில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடலைப் பாடியவர்

“என் பெற்றோர் விவசாயக்கூலிகளா இருந்தாங்க. அப்பல் லாம் எந்தப் பண்டிகைக்கும் நாங்க புத்தாடையே உடுத்தின தில்லை. ரேஷன் அரிசியிலதான் எங்கம்மா பொங்கல் காய்ச்சுவாங்க. அந்த வறுமைக்கு மத்தியிலயும் பொங்கல் திருவிழான்னா எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது மஞ்சள் நீராட்டு விழாதான். மச்சான் முறையிலேருக்கிற ஆண்களைத் தேடிப் பிடிச்சு மஞ்சத்தண்ணியை அவங்க மேல ஊத்தி விளையாடுவோம். நான் வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகுதான், நல்லபடியா பொங்கல் கொண்டாட ஆரம்பிச்சேன். பொங்கல் நேரத்துல தொடர்ச்சியா கச்சேரிகள் இருக்கும். காலையில வீட்டிலேயே பொங்கல் வெச்சு சாமி கும்பிட்டுட்டு, என்னோடவே என் பொண்ணையும் கச்சேரிக்குக் கூட்டிட்டுப் போயிடுவேன்.

இப்போ ஓரளவுக்கு நல்லா வாழுறோம். பொங்கல், தீபாவளினு முக்கியமான பண்டிகையில என் மவ, பேரப் பிள்ளைகளுக்குப் புதுத்துணி வாங்கிக் கொடுப்பேன். ஆனா, பழைய நினைவுகளை மறக்காம, நான் மட்டும் புதுத்துணி உடுத்தவே மாட்டேன். இப்ப புதுக்கோட்டை நகரத்துல வசிக்கிறோம். அதனால, கிராம மரபுப்படி பொங்கல் கொண்டாட முடியறதில்லை. ஆனாலும், வீட்டை நல்லா சுத்தம் பண்ணிடுவோம். காஸ் அடுப்புலதான் சர்க்கரைப் பொங்கல் வைப்பேன். கடவுளுக்குப் படைச்சுட்டு, குடும்பமா பொங்கல் சாப்பிடுவோம். பொங்கல் தினத்துல, மதியம் சாதம் வடிச்சு, பச்சை மொச்சைப்பயறு போட்டு குழம்பு செஞ்சு சாப்பிடுறதை மரபா கடைப்பிடிப்போம். அதுக்கப்புறமாதான் கோயில், கச்சேரி, பொங்கல் விழாக்கள்ல கலந்துக்கிறதுனு வெளியில போவோம்!

'ஊர் கூடி... உறவுகள் கூடி... இன்பம் பொங்கும் திருநாள் இது!'

”ஊரே திரண்டு பொங்கல் வைப்போம்! - சின்னப்பொண்ணு

‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தில் ‘நாக்கு முக்கா’ பாடலைப் பாடியவர்

“தஞ்சாவூர் பக்கத்திலேருக்கிற ரெட்டிப்பாளையம் கிராமம்தான் என் கணவர் ஊர். வேலைக்காக சென்னையில வசிச்சாலும், பொங்கல் உட்பட முக்கியமான பண்டிகை களுக்கு தவறாம அவர் ஊருக்குப் போயிடுவோம். ஒரு வாரத்துக்கு முன்பே வீட்டைச் சுத்தம் பண்ணி, மாவிலை தோரணம் கட்டுவோம். ஊர் பெரியவங்க ஒண்ணுகூடி பொங்கல் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளைத் திட்டமிடுவாங்க. பொங்கல் வைக்கவும் நேரம் குறிப்பாங்க. அவங்கவங்க வீட்டு வாசல்ல கோலம் போட்டு, புதுப்பானையில அலங்காரம் பண்ணி, பொங்கல் வைக்கிறதுக்கான ஏற்பாடுகளோட தயாரா இருப்போம். பிறகு, தண்டோரா மூலமா அறிவிப்பு வந்ததும் எல்லோரும் ஒரே நேரத்துல பொங்கல் வைப்போம்.

பொங்கல் பொங்கும்போது குலவை சத்தத்துடன் பானையை வட்டமிட்டு நடனமாடுவோம். பொங்கல் தயாரானதும் சூரியனுக்குப் படைப்போம். கடந்த 35 வருஷங்களா இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கிறேன். ஒரே வீட்டுல 20 பேருக்கு மேல ஒண்ணா சில தினங்கள் தங்கியிருந்து, ஆளுக்கொரு வேலையா செஞ்சு, ரொம்ப சந்தோஷமா பண்டிகையைக் கொண்டாடுவோம். கோலப்போட்டி, உறியடி, மஞ்சு விரட்டு, மஞ்சள் நீராட்டு விழானு ஒரு வாரத்துக்கும் மேல நடக்கிற ஒவ்வொரு நிகழ்வும் மனசை குஷிப்படுத்தும்!”

'ஊர் கூடி... உறவுகள் கூடி... இன்பம் பொங்கும் திருநாள் இது!'

பறை அடித்துப் பொங்கலை வரவேற்போம்! - மகிழினி மணிமாறன்

‘கும்கி’ திரைப்படத்தில் ‘கையளவு நெஞ்சத்திலே’ பாடலைப் பாடியவர்

“வேடந்தாங்கல் பக்கத்திலிருக்கிற வளையப்புத்தூர் கிராமம்தான் எங்க ஊர். பறவைகளுக்குத் தொந்தரவு தரக்கூடாதுனு தீபாவளியை எங்க கிராமத்தினர் பெரிசா கொண்டாட மாட்டோம். பொங்கல் பண்டிகையை மட்டும்தான் ரொம்பவே ஆரவாரமா கொண்டாடுவோம். ஒவ்வொரு வீட்டு வாசல்லயும் குழி எடுத்து, அந்த மண்ணுல அடுப்பு செஞ்சு அதுலதான் பொங்கல் வைப்போம். பொங்கல் தினத்துல விடியற்காலையிலயே வாசல்ல வண்ணக் கோலமிட்ட புதுப்பானையை அலங்கரிச்சு பொங்கல் வைப்போம். பொங்கல் பொங்கும்போது குலவை சத்தத்துடன் நடனமாடுவோம்; பறை அடிப்போம்; கிராமியப் பாடல்களைப் பாடுவோம். பிறகு, வாழையிலையில பொங்கலைப் படைச்சு, சூரியனுக்கு நன்றி சொல்லி வழிபடுவோம்.

என் கணவரும் நானும் கிராமியக்கலைகளுக்கான பயிற்சி மையத்தை நடத்திட்டிருக்கோம். எங்க குழுவின் சார்புல சில தினங்களுக்குப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளை நடத்தி, ஊர் மக்களை சந்தோஷப்படுத்துவோம். போட்டியில ஜெயிக்கிறவங்களுக்கு புத்தகங்களைப் பரிசா கொடுப்போம். பனை ஓலையால செய்யப்பட்ட ஆபரணங்களை மாடுகளுக்கு அணிவிச்சு, அதுங்க கால்கள்ல கொலுசு மாட்டி, ஊருக்குள்ள ஊர்வலமா கூட்டிட்டு வருவாங்க. அலங்கரிச்ச அந்த மாடுகள் பூட்டிய வண்டியில குழந்தைகள் பவனி வருவாங்க. பொங்கல் முடியற வரைக்கும் எல்லா நிகழ்வுகளுமே கொண்டாட்டமா இருக்கும்!”