
வரி மதிப்பீடு, கட்டட வரி தொடர்பாக நீண்டநாள்களாக பெண்டிங்கில் இருந்த ஃபைல்கள் ஒரே நாளில் க்ளியர் செய்யப்பட்டுள்ளன.
“பிறப்புச் சான்றிதழ் முதல் கட்டட வரி வரை… லஞ்சத்தில் புரளும் கோவை மாநகராட்சி” என்ற தலைப்பில் 16.1.2022 தேதியிட்ட ஜூ.வி இதழில், ஸ்கேன் ரிப்போர்ட் வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரை கோவை மாநகராட்சியைப் பரபரக்கவைத்திருக்கிறது!
நமது செய்தி காதுக்கு வந்ததும், கோவை மாநகராட்சியிலுள்ள 100 வார்டு பில் கலெக்டர்களையும் வரச்சொல்லி டோஸ் விட்டிருக்கிறார் ஆணையர் ராஜகோபால் சுன்கரா. “உங்கள் கையில் எத்தனை ஃபைல்கள், என்ன காரணங்களுக்காக பெண்டிங்கில் உள்ளன?” என்று கேட்டவர், “அவற்றையெல்லாம் உடனடியாக க்ளியர் செய்துவிட்டுத்தான், அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும்” என்று உத்தரவு போட்டிருக்கிறார்.

அவரது உத்தரவுக்கடுத்து, வரி மதிப்பீடு, கட்டட வரி தொடர்பாக நீண்டநாள்களாக பெண்டிங்கில் இருந்த ஃபைல்கள் ஒரே நாளில் க்ளியர் செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் மட்டும், வரி மதிப்பீடு தொடர்பாகக் கிடப்பிலிருந்த பல நூறு ஃபைல்கள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. வடக்கு மண்டல அலுவலகத்தில், மாலை 6 மணிக்குப் பணி நேரம் முடிந்தும், கதவுகளை மூடிக்கொண்டு இரவு 10:30 மணி வரை வேலை செய்திருக்கிறார்கள்.
கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களையும் சேர்த்து, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வரி இனங்கள் தொடர்பாக 514 விண்ணப்பங்கள் முடித்து, தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பெயர் மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களும் இதே வேகத்தில் தபால் மூலம் அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆணையரின் இந்த நடவடிக்கையால், பில் கலெக்டர்கள் முதல் உயரதிகாரிகள் வரை பலரும் ஆடிப்போயிருக்கின்றனர்.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவிடம் பேசினோம். “மாநகராட்சியில் உள்ள பிரச்னைகளுக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஃபைல்கள் பெண்டிங்கில் இருக்கக் கூடாது என்று ஏற்கெனவே உத்தரவு போட்டிருக்கிறேன். சில சமயம், உரிய ஆவணங்கள் இல்லாவிடினும் தாமதம் ஏற்படும். கட்டட அனுமதி தொடர்பாக தனியாக ஓர் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இணையத்திலுள்ள இடையூறுகள் தொடர்பாகவும் எங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து 735 கோப்புகளுக்கு, கட்டட அனுமதிக்கான உரிமம் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பு 28 சதவிகிதமாக இருந்த கட்டட அனுமதி, தற்போது 85 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதைச் சரியான வழியில் எடுத்துக்கொண்டு எங்கள் ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

இந்த அதிரடி நடவடிக்கை பாராட்டுக்குரியது. தொடர்ந்து கண்காணித்து மீண்டும் இந்தநிலை வராமலிருக்கவும் ஆணையர் ஆவன செய்ய வேண்டும்!