தவளை விழுந்த ஐஸ்க்ரீம் சாப்பிட்ட 3 குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஐஸ் கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை டிவிஎஸ் நகர் அருகே கோவலன் நகரில் வசிக்கும் அன்புச் செல்வம் - ஜனனிஸ்ரீ தம்பதியின் 8 மற்றும் 7 வயதாகும் 2 மகள்களும், தமிழரசன் - ரஞ்சிதா தம்பதியின் 3 வயது மகளும் திருப்பரங்குன்றம் தைப்பூச விழாவுக்கு பெற்றோர், உறவினர்களுடன் கோயிலுக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தனர்.
கோயில் அருகே இருந்த கடையில் ஐஸ்க்ரீம் வாங்கி குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளனர். சாப்பிட்ட ஐஸ்கிரீமில் உயிரிழந்த நிலையில் தவளை ஒன்று கிடந்ததை குழந்தை நித்ராஸ்ரீ, தன் அப்பா அன்பு செல்வத்திடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் 3 குழந்தைகளும் வாந்தி எடுத்து மயக்கமாக, உடனடியாக 3 குழந்தைகளையும் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்து பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட கடை குறித்து காவல்துறை, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு துறையினர், மாநகராட்சி சுகாதாரத்துறையினர் உடனே சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கடையை சுகாதாரமில்லாமல் வைத்திருந்ததற்காக கடைக்காரர் துரைராஜனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
காவல்துறையினர், கடைக்காரர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஜெயராமபாண்டியனிடன் பேசினோம். ``சம்பந்தப்பட்ட கடையில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிரீமிலிருந்து சோதனைக்காக சாம்பிள் எடுத்து அனுப்பிவிட்டு, அந்த ஐஸ்கிரீம் முழுவதையும் அழித்து விட்டோம். சோதனை முடிவு தெரிந்த பின்பு அடுத்த நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் கடையை சுகாதாரமில்லாமல் வைத்திருந்ததற்காக அபராதம் விதித்துள்ளோம்.
இந்த ஐஸ்க்ரீம் வெளியில் வாங்கி விற்பனை செய்யப்பட்டதா என்பதை விசாரித்தபோது கடைக்காரரே தயாரித்ததை உறுதி செய்தோம். மேலும் அனைத்து உணவுப்பொருள் விற்பனை கடைகளையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். சுகாதாரமற்ற, காலாவதியான உணவுப்பொருள் விற்பவர்கள் குறித்து பொதுமக்கள் உடனே எங்களிடம் புகார் செய்யலாம், நடவடிக்கை எடுப்போம்" என்றார்.