Election bannerElection banner
Published:Updated:

ஸ்ரீவில்லிபுத்தூர் டு மதுரை... மகளின் பசியாற்ற 80 கி.மீ சைக்கிள் மிதித்த செல்லத்துரை - கொரோனா துயரம்!

செல்லத்துரை
செல்லத்துரை

"புள்ளைக்காக ஏதாவது பண்ணணும்ங்கிற வைராக்கியத்தோடதான் ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு சைக்களில கிளம்புனேன். போக வர 160 கிலோ மீட்டர். ஆரம்பத்துல கொஞ்சம் மலைப்பாகதான் இருந்துச்சு."

கண்ணுக்குத் தெரியாத கொரோனா தொற்று மனித இனத்தையே வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. பயம் ஒரு புறம், பசி ஒரு புறமென தினமும் பதற்றத்தோடு நாள்கள் நகர்கின்றன. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், அடுத்தடுத்த விதிக்கப்படும் ஊரடங்குகளும் கட்டுப்பாடுகளும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்திருக்கின்றன. வேலையிழப்பு, தொழில் நிறுவனங்கள் மூடுதல் என அடுத்தடுத்து பிரச்னைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அப்படி, வேலையிழப்பைச் சந்தித்து, கொரோனா நேரத்தில் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளானவர்தான் 56 வயது செல்லத்துரை.

சைக்கிள் மிதிச்சு, காலு ஆணி இறங்குன மாதிரி வலிக்குது. ஆனா, நான் பட்ட கஷ்டத்தை என் மவகிட்ட சொல்லல. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடிச்சுக்கிச்சு. இன்னைக்கு என் மவள் மூணு வேளை சாப்பாடு சாப்பிடும்னு நினைக்கும்போது மனசு சந்தோஷமா இருக்கு.
செல்லத்துரை

மூன்று மாதங்களாக வேலையில்லாததால் குடும்பத்தில் உணவுக்கே சிரமமான சூழல். தான் தங்கியுள்ள ஶ்ரீவில்லிபுத்தூர் ரேஷன் கடையில் அரசு வழங்கும் இலவசப் பொருள்களை வாங்கச் சென்றுள்ளார். ஆனால், குடும்ப அட்டையில் மதுரை முகவரி இருந்ததால் மதுரையில்தான் பொருள் வாங்க முடியும் என்று பொருள் கொடுக்க மறுத்து திருப்பி அனுப்பி வைத்துள்ளார்கள் அங்கிருந்தவர்கள். வேறுவழியில்லாமல் ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு சைக்கிளிலே பயணத்தைத் தொடங்கியுள்ளார் செல்லத்துரை. பசி காரணமாக மதுரை திருமங்கலம் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட செல்லத்துரையிடம், என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

"மதுரையில உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டிரைவரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல குடும்பத்தோட மதுரையில இருந்தோம். வாங்குற சம்பளம் வாயிக்கும் வயித்துக்குமே பத்தல. அதனால் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, சொந்த ஊரான ஶ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துட்டோம். நான் மட்டும் மதுரைக்கு போயி வந்துக்கிட்டு இருந்தேன். ஆரம்பத்தில மதுரையில் இருந்ததால் ரேஷன் கார்டுல மதுரை முகவரிதான் இருந்துச்சு. ஶ்ரீவில்லிபுத்தூர் அட்ரஸ்க்கு கார்டை மாத்த ரெண்டு மூணு முறை முயற்சி செஞ்சேன். இன்னைக்கு, நாளைக்குனு அல்லாட வெச்சாங்க. ஒரு கட்டத்துக்கு மேல மதுரை அட்ரஸிலேயே இருந்துட்டு போகுதுனு விட்டுட்டேன்.

செல்லத்துரை
செல்லத்துரை

கொரோனா பரவ ஆரம்பிச்ச நேரம், எங்களோட நிறுவனத்திலிருந்து நிறைய பேரை வேலையைவிட்டு அனுப்பிட்டாங்க. எனக்கும் வேலை போயிருச்சு. வேலையை விட்டு அனுப்பும்போது 1 ரூபாய்கூட கையில கொடுக்கல. இந்த நேரத்துல வேற எங்கேயும் வேலை தேடவும் முடியல. என்ன பண்ணப்போறோம்னு தெரியாம, கையில இருந்த காசை வெச்சு ஶ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து சேர்ந்துட்டேன். ஊருக்கு வந்து நாலு மாசம் ஆகுது.

என்னோட வீட்டுக்காரம்மா பேரு வேலம்மாள். 48 வயசாகுது. செங்கல் சூளையில் வேலைபார்த்துட்டு இருந்தாங்க. அவங்களுக்கும் வேலை போயிருச்சு. வீட்டுல இருந்த காசை வெச்சு, அரை வயிறும் கால் வயிறும் கஞ்சியைக் குடிச்சு சமாளிச்சுட்டு இருந்தோம். இப்போ வீட்டில அரிசிகூட இல்ல. எனக்கு எட்டு வயசுல ஒரு மகள் இருக்கு. 'அப்பா பசிக்குதுப்பா, இன்னைக்கு கூழுகூட கிடையாதா'னு கேட்கும்போது, தாங்க முடியல" - குரல் தழுதழுத்து அமைதியாகிறார் செல்லத்துரை.

குடும்ப அட்டை எந்த ஊருல இருந்தாலும், பக்கத்துல இருக்க ரேஷன் கடையில்பொருள்கள் வாங்கலாம்னு டிவியில் சொன்னாங்களேனு கேட்டேன். 'அந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரலை'னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க.
செல்லத்துரை
செல்லத்துரை

வீட்டுல சுத்தமா அரிசி இல்லைங்கிற நிலைமை வந்ததும் எங்க ஏரியால இருக்க ரேஷன் கடைக்குப் போனேன். 'இந்த கார்டுக்கு மதுரையிலதான் வாங்கணும்'னு சொல்லிட்டாங்க. குடும்ப அட்டை எந்த ஊருல இருந்தாலும், பக்கத்துல இருக்க ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கலாம்னு டிவியில் சொன்னாங்களேனு கேட்டேன். 'அந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரலை'னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க. பெரியவங்க பசி தாங்கிக்கலாம். எட்டு வயசு புள்ளைக்கு என்ன தெரியும். 'அப்பா பசிக்குது. சாப்பிட எதாவது வாங்கிக்கொடு'னு கேட்கும்போது செத்துப் போயிரலாம் போல இருந்துச்சு.

புள்ளைக்காக ஏதாவது பண்ணனும்ங்கிற வைராக்கியத்தோடதான் ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு சைக்களில கிளம்புனேன். போக வர 160 கிலோ மீட்டர். ஆரம்பத்துல கொஞ்சம் மலைப்பாகதான் இருந்துச்சு. 15-ம் தேதி காலையில் 6 மணிக்கு சைக்கிளை எடுத்துட்டு ஶ்ரீவில்லிபுத்தூரில இருந்து கிளம்புனேன். நேரம் அதிகரிக்க வெயில் தாங்க முடியல. பசி வேற. திருமங்கலம் வரும்போது, மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு. வியர்த்து கொட்டி மயங்கி விழுந்துட்டேன். போலீஸ்காரங்கதான் தூக்கி தண்ணி கொடுத்தாங்க.

செல்லத்துரை
செல்லத்துரை

சைக்கிளில் வந்ததுக்கு திட்டுனாங்க. குடும்ப சூழ்நிலையைச் சொன்னதும் இரக்கப்பட்டுப் பேசினாங்க. ஒரு வக்கீல் ஐயா, திருமங்கலத்துல இருந்து மதுரை வரை அவரோட கார்ல என்னை கூட்டிட்டு வந்தாரு. சைக்கிளை காரில் ஏத்திக்கிட்டேன். மதுரை ரேஷன் கடையில் போயி, அட்டையைக் கொடுத்ததும் அரிசியைத் தவிர வேற எந்தப் பொருளும் இல்லைனு சொல்லிட்டாங்க. அரசு கொடுத்த 1,000 ரூபாய் பணமும் போனமாசம் வரை... இந்த மாசத்துக்கெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டும் பொருள் எதும் வாங்க முடியலேன்னு கஷ்டமா இருந்துச்சு..." செல்லத்துரையால் பேசமுடியவில்லை.

ஆசுவாசப்படுத்திக்கொண்டு, "என் மகளுக்கு இந்த மாசம் பொறந்தநாளு. அரசாங்கம் கொடுக்குற 1,000 ரூபாய் கிடைச்சா அதுக்கு புது டிரெஸ் வாங்கிக் கொடுத்துட்டு, வீட்டு செலவையும் பார்த்துக்கலாம்னு நினைச்சேன். அதுக்கும் வழியில்லாமப் போச்சு" குரல் உடைந்து அமைதியாகிறார் செல்லத்துரை.

" 'ரொம்ப தூரத்துல இருந்து வாரேன்... ஏதாவது பொருள் இருந்தா கொடுங்க ஐயா'னு கெஞ்சுனேன். கடைசியா 10 கிலோ அரிசி மட்டும் கொடுத்தாங்க. ஒருநாள் மதுரையிலேயே தங்கிட்டு, மறுநாள் காலையில 5 மணிக்கெல்லாம் சைக்கிளில் ஊருக்குக் கிளம்பிட்டேன். உண்மையைச் சொல்லணும்னா மனசுல இருக்க தெம்பு உடம்புல இல்ல. வயசாகிப் போச்சு. இவ்வளவு தூரம் சைக்கிள் மிதிச்சது காலெல்லாம் நடுக்கம் கொடுக்க ஆரம்பிச்சுருச்சு. குடும்பத்தைப் பார்த்தா போதும்னு மனசுக்குள்ள பயம் வந்துருச்சு.

இன்னும் ஒரு மாசம் இதேமாதிரி வீட்டுல இருந்தா, எங்களை கொரோனா கொல்லுதோ இல்லையோ, பசி கொன்னுரும்...
செல்லத்துரை
பசி தாங்காமல் கூட்டமாக குப்பைக்கிடங்குக்கு வந்த நாய்கள்! கோழிக்கழிவில் விஷம் வைத்துக் கொன்ற சோகம்

ராத்திரி 6 மணிக்குதான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். நிக்கக்கூட தெம்பு இல்ல. காலுல ஆணி இறக்குன மாதிரி வலிக்குது. ஆனா, நான் பட்ட கஷ்டத்தை என் மவகிட்ட சொல்லல. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடிச்சுக்குச்சு. இன்னைக்கு என் மவள் மூணு வேளை சாப்பாடு சாப்பிடும்னு நினைக்கும்போது மனசு சந்தோஷமா இருக்கு. இன்னும் ஒரு மாசம் இதேமாதிரி வீட்டுல இருந்தா, எங்களை கொரோனா கொல்லுதோ இல்லையோ, பசி கொன்னுரும். அரசாங்கம்தான் ஏதாவது செய்யணும். செய்யுறத எல்லாருக்கும் கிடைக்குற மாதிரி செய்யணும். செய்யும்ங்கிற நம்பிக்கையிலதான் இன்னும் நாங்க உசுரை கையில பிடிச்சுட்டு இருக்கோம்" - கண் கலங்கச் சொல்கிறார் செல்லத்துரை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு