Published:Updated:

பாலில் கலக்கப்படும் புற்றுநோய் உண்டாக்கும் பொருள்!- உணவு பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி அறிக்கை

அத்தியாவசியப் பொருளான பாலில், உடலுக்குத் தீங்கு விளைக்கும் பல்வேறு நச்சுப் பொருள்கள் கலக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பால்
பால்

இந்தியா முழுவதும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. அதன் வரிசையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக்கும், மிகவும் முக்கியமான பொருளான பாலில் ரசாயன கலப்படம் உள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

பால்
பால்

கடந்த வருடம் முதல் இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை இந்தியாவில் உள்ள சுமார் 1,103 நகரங்களில் விற்பனை செய்யப்படும் 6,432 பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா பால் நிறுவனங்கள் சந்தையில் விற்கக்கூடிய சில பால் மாதிரிகள், உணவு பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்துள்ளன.

அந்தப் பால் மாதிரிகளில் அஃப்லாடாக்சின் எம் 1 (Aflatoxin M1) என்ற புற்றுநோயை உண்டாகக்கூடிய பொருள், கல்லீரலுக்குத் தீங்கு விளைக்கும் நச்சு, மைக்ரோ தொற்றுப் பொருள் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாடு முழுவதும் விற்கப்படும் பெரும்பாலான பால், குடிப்பதற்குப் பாதுகாப்பானது. ஆனால் 7% பால் குடிப்பதற்கு ஏற்றதல்ல. அதில் சோப்பு பொருள், யூரியா போன்றவை கலந்துள்ளன. நாங்கள் சேகரித்த 12 பால் மாதிரிகளில், இந்த சோப்புப் பொருள்கள் கலந்திருந்தன” என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைவர் பவன் அகர்வால் கூறியுள்ளார்.

உணவு பாதுகாப்பு ஆணையம்
உணவு பாதுகாப்பு ஆணையம்

அஃப்லாடாக்சின் எம் 1 அதிகமாகப் பயன்படுத்தும் 3 மாநிலங்களில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட 551 மாதிரிகளில் 88 மாதிரிகளில் அஃப்லாடாக்சின் எம் 1 கலக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 262-ல் 38 மாதிரிகளிலும் கேரளாவில் சேகரிக்கப்பட்ட 187 -லில் 37 மாதிரிகளிலும் புற்றுநோய் உண்டாகும் பொருள் கலக்கப்பட்டுள்ளது.

Vikatan

“பொதுவாக, கவனக்குறைவினால் மாசு கலந்த பால் உருவாக்கப்படலாம். அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி அஃப்லாடாக்சின் எம் 1, கால்நடை தீவனத்தில் கலக்கப்படுவதால் அது அப்படியே பாலிலும் படிந்துவிடுகிறது. பண்ணை வைத்துள்ள உள்ளூர் பால் விற்பனையாளர்களால் வழங்கப்படும் பாலில் தண்ணீர் கலப்பது போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் உள்ளன.

உள்ளூர் பால் விற்பனை
உள்ளூர் பால் விற்பனை

தீவனத்தில் கலக்கப்படும் நச்சுத்தன்மையை முற்றிலும் தடை செய்வதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்டுவருகிறோம். இதன் மூலம், பொதுமக்கள் குடிக்கும் பாலில் எந்த வகையிலும் நச்சுத்தன்மை கலக்காது. இந்தப் பால் சுகாதாரம் தொடர்பான புள்ளிவிவரங்கள் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன” என்று பவன் அகர்வால் தெரிவித்துள்ளார்.