Published:Updated:

உணவு யுத்தம்!

உணவு யுத்தம்!

உணவு யுத்தம்!

எந்த ஒரு புதிய உணவுப் பொருளையும் மேல்தட்டு அல்லது அடித்தட்டு மக்களிடம் அறிமுகப்படுத்தி அங்கீகாரம் பெறுவது கடினமானது. ஆனால், மத்திய தர வர்க்கத்தில் அந்தப் பிரச்னையே இல்லை. அவர்கள் எந்தப் புதிய உணவையும் எளிதாக அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுவிடுவார்கள். ஆகவே, பன்னாட்டு உணவு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள 25 கோடி மத்தியதர வர்க்கத்தினரைத்தான் குறிவைக்கின்றன. இவர்களால்தான் பன்னாட்டு உணவு வகைகள் இந்தியாவில் அறிமுகமாகிக் காலூன்றின.

மத்தியதர வர்க்கத்தின் மாறிவரும் உணவுப் பழக்கமே சமகால உடல் நலப் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணி. அடித்தட்டு மக்கள் இன்னமும் தங்களின் மரபான உணவு வகைகளில் இருந்து பெரிதும் மாறிவிடவில்லை. தங்களின் உழைப்புக்கு ஏற்றார் போலவே உணவைத் தேர்வு செய்கிறார்கள். மேல்தட்டினர் உணவு என்பது சாப்பிடும் பொருள் இல்லை. அந்தஸ்து மற்றும் ஆடம்பரத்தின் அடையாளம் என்பதால் அவர்கள் சுவையைப் பிரதானப்படுத்துகிறார்கள். தேர்வு செய்து சாப்பிடுகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உணவு யுத்தம்!

ஆனால், மத்தியதர வர்க்கம் தங்களின் மரபான உணவு பழக்கத்தை கைவிட்டு புதிய புதிய உணவு வகைகளைத் தேடுகிறார்கள். ஆரோக்கியம் குறித்த கவலையின்றி துரித உணவுகளை ரசித்து சாப்பிடுகிறார்கள். அதன் விளைவுதான் துரித உணவுப் பழக்கம் சிற்றூர் வரை பரவியிருக்கிறது.

மத்தியதர வர்க்கம் ஏன் புதிய உணவு வகைகளின் மீது இத்தனை மோகம் கொண்டிருக்கிறது. முக்கியமான காரணம், அவர்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலை மாற்றிக் கொள்வதன் அடையாளமாக உணவைக் கருதுகிறார்கள்.  பன்னாட்டு உணவு வகைகளை ருசிப்பதன் மூலம் தங்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இதே மிடில் கிளாஸ்தான் துரித உணவுகளைச் சாப்பிட்டு உடல் நலம் கெட்டுப்போய்​விட்டது என கூச்சலும் இடு​கிறார்கள். அவசர​மாக இயற்கை உணவுகளைத் தேடிப் போ​கிறார்கள். உணவுச் சந்தையின் போக்கைத் தீர்மானிப்பதில் இந்திய மத்திய தர வர்க்கமே முக்கியக் காரணியாக உள்ளது.

ஒரு புதிய உணவு வகையை விளம்பரப்படுத்தும்போது அது மத்திய தர வர்க்கத்துக்குப் பிடிக்கும்​படியாக உருவாக்கவே முயற்சிக்​கிறோம். காரணம், அவர்கள் அங்கீகரித்துவிட்டால் அன்றாட விற்பனையில் பிரச்னையிருக்காது. மத்தியதர வர்க்கம் விளம்பர மோகம் கொண்டது. எளிதாக அவர்களை கவர்ந்துவிடலாம் என்கிறார் உணவுப்பட விளம்பரங்களை எடுக்கும் சுபத்ரா முகர்ஜி.

பீட்சா, பர்கர், ஹாட் டாக், ஸ்பாஹெட்டி போன்ற பன்னாட்டு உணவு வகைகள் எந்த தானியத்தில் தயாரிக்கப்படுகின்றன என்றுகூட அதன் வாடிக்கையாளருக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் கூச்சப்படுவான். ஆகவே, விளம்பரங்கள்தான் ஒரே தூண்டில்.

வெறுமனே விளம்பரம் செய்வதுடன் 20 சதவித சலுகை, ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என கூப்பன்கள் தந்தால் வியாபாரம் எளிதாக விருத்தி அடையும். சலுகைக்காகவே மக்கள் உணவை வாங்க வருவார்கள்.  அன்றாடம் நாம் காணும் விளம்பரங்கள் இத்தகைய அழகிய பொய்களே. இந்தப் பொய்கள் நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடியவை. இதற்கு விலையாக நாம் மருத்துவர்களுக்குப் பல லட்சம் தரப் போகிறோம் என்ற அபாயத்தை உணரவில்லை.

இத்தனை காலமாக நாம் சாப்பிட்டு வருகிற இட்லிக்கு எப்போதாவது இப்படி விளம்பரம் செய்யப்படுகிறதா என்ன? அன்றாடம் நாம் சாப்பிடும் சோறு குறித்து எப்போதாவது டிவி-யில் விளம்பரம் வருகிறதா? உணவைப் பல கோடிகள் செலவழித்து விளம்பரப்படுத்துகிறார்கள் என்றாலே அதன் பின்னே கொள்ளை லாபம் அடிக்கும் வணிகநோக்கம் ஒளிந்திருக்கிறது என்றே அர்த்தம்.

இப்படி ஊடக விளம்பரங்களின் வழியே அறிமுகமாகி இன்று சிற்றூர் வரை விரிந்து பரவியிருக்கின்றன பீட்சா கடைகள். இரண்டாயிரத்தின் முன்பு வரை மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கூட ஒன்றிரண்டு பீட்சா கடைகள் மட்டுமே இருந்தன. ஆனால் கடந்த 13 வருஷங்களில் ஒரு வீதியில் நான்கு கடைகள் இருக்கின்றன. சில வணிக வளாகங்களில் உள்ளூர் உணவு வகைகளே கிடையாது.

பீட்சா கடைகளில் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டியிருக்கிறது. பள்ளி மாணவர்கள் யூனிஃபார்மோடு பீட்சா சாப்பிட வந்து நிற்கிறார்கள். ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய்களுக்கு பீட்சா விற்பனையாகிறது என்கிறார்கள்.

உலகின் அனைத்து முன்னணி பீட்சா தயாரிப்பாளர்களும் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டார்கள். கன்னியாகுமரியில் தொடங்கி இமயமலையின் அடிவாரம் வரை அவர்களின் கடைகள் காணப்படுகின்றன. 30 நிமிஷங்களில் வீடு தேடி வந்து பீட்சா சப்ளை செய்கிறார்கள். பள்ளி - கல்லூரி மாணவர்கள், இளைஞர்களே பெருவாரியான வாடிக்கையாளர்கள்.

பீட்சாவும் பர்கரும் இப்போதே சாப்பிடப் பழகிக் கொண்டால் அமெரிக்காவுக்கு வேலை செய்யப்போனால் எளிதாக இருக்கும். அங்கே உணவுப் பிரச்னை வராது என்கிறார்கள். கணிப்பொறியியல் படிக்கும் மாணவர்கள், இப்படி ஒரு கற்பிதம் இவர்கள் மனதில் ஆழமாக வேர் ஊன்றப்பட்டுவிட்டது.

மத்திய தர வர்க்கம் தனது உணவை எப்படி தேர்வு செய்கிறது. ஒவ்வொரு மாதமும் தனது வருமானத்தில் பத்து சதவிகிதத்தைப் புதிய உணவு வகைகளை ருசித்துப் பார்க்க அவர்கள் ஒதுக்குகிறார்கள். 'தங்களின் வருமானத்தைச் செலவு செய்வதில் உணவுக்கு அதிக முக்கியத்துவம் தருவது மிடில் கிளாஸ் இயல்பு’ என்கிறார் சமூக ஆய்வாளர் சதீஷ் தேஷ்பாண்டே.

மாறிவரும் இந்தியாவின் உணவுப் பண்பாடு என்ற கட்டுரையில் ஆஷிஷ் நந்தி, 'மத்திய தர வர்க்க மக்கள் உணவை மாற்ற விரும்புகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள். உலகமயமாக்கலின் விளைவுகளில் இதுவும் ஒன்று. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென தனியே உணவுப் பண்பாடு இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் விசேஷமான உணவு வகைகள் இருக்கின்றன. அந்த அடையாளங்களை அழித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரே உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தவே இந்த வணிக முயற்சிகள் செயல்படுகின்றன’ என்கிறார்.

இதை மறுத்து சித்ரா பானர்ஜி தனது இந்தியாவின் உணவுப் பண்பாடு என்ற நூலில், 'எப்போதுமே இந்திய மக்கள் வெளியில் இருந்து வரும் உணவு வகைகளை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள். அரபு நாடுகளில் இருந்தும் ஐரோப்பியர்களிடம் இருந்தும் அறிமுகமான உணவு வகைகள் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது இந்திய மக்களின் தாராள மனப்போக்கைக் காட்டக்கூடியது. அதே நேரம் ஒவ்வாத உணவு வகைகளை இந்தியா ஒரு போதும் ஏற்றுக்கொள்வது இல்லை. பன்னாட்டு உணவு வகைகள் இந்தியாவுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படுகின்றன. சைவம் மட்டுமே சாப்பிடும் ஜெயின் இனத்தவர்களுக்காக ஜெயின் பீட்சா என சைவ உணவு விற்கப்படுவது இந்த மாற்றத்தின் அடையாளமே’ என்கிறார்

இந்திய உணவுச் சந்தையில் அதிகம் விற்பனையாகும் சமையல் புத்தகங்களை பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் அர்ஜுன் அப்பாதுரை, 'கடந்த 20 ஆண்டுகளாக சமையல் புத்தகங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் புதிய உணவு வகைகளை வீட்டில் எப்படி சமைப்பது என்ற தேடுதலே. குறிப்பாகப் பன்னாட்டு உணவகங்களில் விற்கப்படும் உணவுகளை வீட்டில் செய்யும் முறையை தெரிந்துகொள்ள பலரும் ஆசைப்படுகிறார்கள். முன்பு இது போன்ற தேடுதல் மேல்தட்டு வர்க்கத்தில் மட்டுமே காணப்படும், இன்று மத்தியதர வர்க்கமே சமையல் புத்தகங்களை அதிகம் வாங்குகிறார்கள். இது மாறிவரும் உணவுப் பண்பாட்டின் அடையாளமே’ என்கிறார்.

ஒரு பக்கம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போராடி உணவைப் பெறக்கூடிய ஏழ்மையான சூழ்நிலை. மறுபக்கம் பீட்சா சாப்பிடலாமா அல்லது பர்கரா என யோசிக்கும் நிலை. இந்த முரண்தான் இன்றைய இந்தியாவின் அடையாளம்.

உணவு யுத்தம்!