Published:Updated:

உணவு யுத்தம்!

உணவு யுத்தம்!

உணவு யுத்தம்!

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ரயில்களில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பவன் என்ற முறையிலும் இந்தியாவின் 16 ரயில்வே மண்டலங்களிலும் பயணம் செய்திருப்பவன் என்ற முறையிலும் நெடுநாட்களாக எனக்குள்ளே இருக்கும் தீராக்குறை, ரயிலில் தரப்படும் உணவு.

ரயில் பயணிகளுக்கு என்றே மோசமான உணவுகளைத் தயாரிக்கிறார்கள் போலும். இட்லி வாங்கினால் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாது. சட்னி, ஒரே உப்பாக இருக்கும். நாற்றம் அடிக்கும். தோசை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உணவு யுத்தம்!

என்றால் அது வளைந்து நெளிந்து உருண்டை போலாகியிருக்கும். காகிதம் போல சுவையே இல்லாமலிருக்கும். பூரியைப் பிய்த்துத் தின்பதை உடற்பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும். சாப்பாடு என்றால் அதற்கு தரப்படும் சோறு, சாம்பார், கூட்டு- பொறியல் வகைகள் வாயில் வைக்க முடியாது.

இவ்வளவு ஏன் ஒரு தேநீர் கூட சர்க்கரை பாகு போன்ற ஒன்றைத்தான் தருவார்கள். இத்தனை லட்சம் மக்கள் பயணம் செய்யும் ரயிலில் இவ்வளவு மோசமான உணவு தரப்படுவது ஏன்? ஒவ்வொரு முறையும் யாரோ சிலர் புகார் செய்யத்தான் செய்கிறார்கள், நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே சொல்கிறது. ஆனால், ரயில்வே உணவின் தரம் ஆண்டுக்கு ஆண்டு மோசமாகிக் கொண்டுதான் போகிறது.

ரயிலில் தரப்படும் உணவு வகைகளைக் கண்காணிப்பதற்கு என சுகாதார அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியாது.

உங்கள் வாழ்க்கையில் என்றைக்காவது ஏதாவது ஒரு ரயிலில் மதிய உணவில் என்ன காய்கறிகள் தரப்படும். என்ன உணவு வகைகள் எப்போது தயாரிக்கப்பட்டன என்ற பட்டியல் தரப்பட்டிருக்கிறதா, ரயிலில் யார் சமைக்கிறார்கள் என்று எப்போதாவது பார்த்திருக்கிறோமா? என்ன மாவு பயன்படுத்துகிறார்கள், என்ன எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என ஏதாவது தெரியுமா?

உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் வாயில்தான் உணவு வகைகளை சொல்கிறார்கள். விலையும் அவர்கள் சொல்வதுதான். பழைய காகிதம் ஒன்றில் உணவை பேக் செய்து, கொண்டுவந்து நீட்டுகிறார்கள். அல்லது நசுங்கிப்போன அலுமினியம் ஃபாயிலில் அடைத்துத் தருகிறார்கள்.

பேன்டரி கார் உள்ள ரயிலில் 20 நிமிஷங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு உணவுப் பொருளை விற்கக் கொண்டு வருகிறார்கள். அந்த உணவாவது சூடாக இருக்க வேண்டும் அல்லவா? நாமே கிச்சனுக்குப் போய் ஏன் இப்படி உணவு சவசவத்துப் போயிருக்கிறது; சட்னி சரியில்லை; சாம்பார் சரியில்லை எனப் புகார் சொன்னால் அதை யாரும் காது கொடுத்துக் கேட்பது இல்லை.

இவ்வளவுக்கும் பல ஊர்களில் ரயில் நிலையங்களில் உள்ள கேன்டீன்களில் மிகச் சிறந்த சைவ உணவு வகைகள் கிடைப்பதை நான் ருசித்திருக்கிறேன். ரயில் நிலைய கேன்டீன்களில் தரமான உணவு கிடைக்கும்போது பயணிகளுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமை?

'அந்நியன்’ படத்தில் உணவு சரியில்லை என கான்ட்ராக்டரை கதாநாயகன் அடித்துக் கொல்லுவான். அந்தக் காட்சிக்கு தியேட்டரில் கிடைத்த கைதட்டு ரயில்வே மீது மக்கள் கொண்டுள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடே.

ஜூலை 23-ம் தேதி கொல்கத்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் உணவில் கரப்பான் பூச்சி இருந்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்துக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், சாப்பிட்டவர்கள் கதி? அப்பாவி மக்களுக்கு ஒரு நியாயமும் கிடையாது.

பஸ்ஸிம் எக்ஸ்பிரஸ், புஷ்பக் எக்ஸ்பிரஸ், மோதிஹரி எக்ஸ்பிரஸ், ஷிவ் கங்கா எக்ஸ்பிரஸ், கோல்டன் டெம்ப்பிள் மெயில், நேத்ராவதி எக்ஸ்பிரஸ், பஞ்சாப் மெயில், ஹெளரா அமிர்தசரஸ் மெயில், சண்டிகர் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் சோதனை நடத்தப்பட்டு... தரமற்ற, கெட்டுப்போன, சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதற்காக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறு தொடர்ந்து ஐந்து முறை கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் கேட்டரிங் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அறிவித்திருக்கிறது.

இந்தநாள் வரை மோசமான உணவைச் சாப்பிட்ட மக்களுக்கு என்ன நஷ்டஈடு தரப் போகிறார்கள்? ஐந்து முறை மோசமான உணவு பரிமாறப்படும் வரை கேட்டரிங் செய்பவர்களை எதற்காக அனுமதிக்க வேண்டும்? நஷ்டஈடாக பணம் அபராதம் விதிப்பதால் அவர்கள் செய்த தவறு சரியாகிவிடுமா? இது அப்பட்டமான கண்துடைப்பு நாடகம்.

எனது பயணத்தில் இதுவரை ஒருமுறை கூட உணவு பரிசோதகர் ரயிலுக்கு வந்து உணவின் தரம் எப்படியிருக்கிறது என பயணிகளிடம் கேட்டது இல்லை. உணவு வகைகளை ருசி பார்த்ததில்லை. ஒரு பயணி குறைந்தபட்சம் ரயில் பயணத்தில் இருநூறு ரூபாய் உணவுக்குச் செலவு செய்கிறான். ஆனால், அதற்கான தகுதி அந்த உணவுக்கு கிடையாது. இதை நாம் சகித்துக்கொண்டு போவதுதான் ரயில்வே உணவின் தரம் மோசமானதற்கு முக்கியக் காரணம்.

1915-ம் ஆண்டு பெங்கால் நாக்பூர் ரயில்வே முதன்முறையாக மேற்கத்திய வகை உணவை ரயிலில் பயணிகளுக்காக வழங்க முன்வந்தது. அதற்கு முக்கியக் காரணம் வெள்ளைக்காரர்கள் ரயிலில் பயணம் செய்தது. அதுவே ரயிலில் உணவு வழங்குவதன் முதற்படி. அதைத் தொடர்ந்து 1920-களில் தென்னக ரயில்வே ரயில் பயணிகளுக்காக உணவு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது, 1954-ல் மத்திய அரசு அழகேசன் கமிட்டி என்ற குழுவை அமைத்து உணவின் தரம் மற்றும் விலை குறித்தது பரிசீலனை செய்து புதிய நடைமுறையை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டு ரயில்வே துறை கேட்டரிங் கமிட்டி ஒன்றை உருவாக்கி அதற்கு ஒரு சேர்மனையும் நியமித்தது.

1979-ல் இந்த உணவு வழங்கும் துறை தனி அமைப்பாக செயல்படும் என அறிவித்தது ரயில்வே. அதை ஒரு நபர் கமிட்டி வழிநடத்தும் என்றார்கள். அதன்படி தனியார்களுக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டு உணவு வழங்குவது நடைமுறைக்கு வந்தது.

ரயில்வேயின் உணவுகுறித்த மக்களின் கருத்துக்கணிப்பில்  குறிப்பிடப்படும் முக்கியப் பிரச்னைகள் ஐந்து. முதலாவது உணவு தரமாக இல்லை; இரண்டாவது சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுவது இல்லை; மூன்றாவது உணவு சூடாக இல்லை; நான்காவது பேக்கேஜிங் சரி இல்லை; ஐந்தாவது உணவு வழங்கும் பணியாளர்களின் அலட்சியப்போக்கு. இந்திய ரயில்வே உலகிலே பெரிய நிறுவனம் என தன்னை பெருமை சொல்லிக் கொள்கிறது. உணவு வழங்குவதில் அதுதான் உலகின் மிக மோசமான நிறுவனம். ஜப்பானிய ரயில்களில் அவர்கள் தரும் உணவும் அதன் தரமும் இணையற்றது.

ஜப்பானிய ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பென்டோ எனப்படும் வெளியில் சாப்பிடும் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.. ரயிலில் விற்கப்படும் எகிபென் எனப்படும் உணவுப் பொட்டலங்களை விதவிதமான அளவுகளில், உணவு வகைகளில் அட்டைப் பெட்டிகளில் சூடு தாங்கும் காகிதம் சுற்றி அழகாக பேக் செய்திருக்கிறார்கள். அதில் எப்போது அந்த உணவு தயாரிக்கப்பட்டது என்ற நேரம் அச்சிடப்பட்டிருக்கும். எத்தனை மணி வரை அதைச் சாப்பிடலாம் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் ருசியும் தரமும் நிகரற்றது. விலையும் குறைவு. நேரம் கடந்துபோனால் அந்த உணவு பேக்குகளை விற்பனைசெய்ய மாட்டார்கள். கழிவுத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள்.

ஐரோப்பிய ரயில்களில் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் ரொட்டிகளையும் பழங்களையும் கேக் வகைகளையும்தான் பயணிகள் அதிகம் சாப்பிடுகிறார்கள். ரயிலில் விற்கப்படும் உணவின் விலை அதிகம் என்பது ஒரு காரணம்.

ரயில்களில் உள்ள உணவே தேவலை என சொல்ல வைப்பவை விமானத்தில் தரப்படும் உணவு வகைகள். இவ்வளவுக்கும் அவை நட்சத்திர உணவகங்களில் தயாரிக்கப்படுபவை. இரவு பனிரெண்டரை மணிக்குக் கிளம்பும் இந்திய விமானங்களில் சூடாக உப்புமாவும் பிய்க்க முடியாத வடையும் தருவார்கள். நள்ளிரவில் யார் உப்புமா சாப்பிடுவார்கள்? யாருக்கு இந்த யோசனை வந்தது? காலை பசியோடு விமானத்தில் ஏறினால் ரொட்டியும் சாம்பார் சாதமும் கொடுப்பார்கள். யார் இந்த உணவு வகைகளை தேர்வு செய்கிறார்கள், எதன் அடிப்படையில் தருகிறார்கள், ஒருவரும் கேட்டுக் கொள்வது இல்லை. குறைந்த கட்டண விமானங்களில் தண்ணீர் தருவதோடு சரி. வேறு எல்லாமும் காசுக்குத்தான். அவர்கள் பயணிகளின் பசியைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை.

உணவு யுத்தம்!